கொக்காகி மகிழ்

******************
முயன்றுழைத்து வாணாளில் முன்னேறு வாரை
முதுகினிலே குத்துவதை முடிவாக்கிக் கொள்ளும்
வியக்குவகை செய்தொருவன் விண்தொட்டு விட்டால்
வேதனையை அவனிடத்தில் விருப்புடனே கொட்டும்
உயர்ந்தவனின் நெஞ்சமது உலைச்சலுற வேண்டி
உமிழ்ந்துவிடும் வார்த்தைவழி உயர்விசத்தைப் பீய்ச்சும்
தயக்கமின்றிச் சாதனைகள் தான்செய்யா போதும்
தான்றோன்றித் தனமாயே தரந்தாழ்த்திப் பேசும்
*
முன்னேற்றப் பாதையதன் முதற்படியில் அன்று
முடியாமல் கிடந்தவனின் முகம்பாரா தோரே
பின்நாளில் அவனுயர்ந்து பெரியவனா யானால்
பிழையாகச் சித்தரித்துப் பேசிமகிழ் வாரே
தன்னாலே ஆனதெலாம் தான்செய்த தாகத்
தற்பெருமை கொள்ளுவதில் தானுவகைக் கொள்ளும்
சின்னவரா யானோரைச் சீர்தூக்கிப் பார்த்தால்
சிந்தையிலா தாரென்று சீக்கிரத்தில் தோன்றும்
*
ஆக்கமொடு முன்செல்வார் அடியொட்டிச் சென்று
அவதூறு பரப்புகின்ற அடிமட்ட மானோர்
ஊக்கமொடு கைகொடுத்து உதவாத போதும்
ஊருக்குள் பேரெடுக்க ஊலையிடு வாரே
பாக்குவைத்து வெற்றிலையைப் பரிமாற்று தற்குள்
பந்தியிலே குந்திவிடும் பண்பாளர் போடும்
கூக்குரலைக் கேளாமல் கொள்கையுடன் வாழும்
குறிபார்த்துக் காத்திருக்கும் கொக்காதல் மகிழ்வே!
*
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Apr-25, 1:30 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 9

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே