போகுமிடம் வெகு தூரமில்லை
போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்பட கதையின் என் கவி வடிவம்
ஒட்டி உறவாடிய சொந்தங்களும்
எட்டி நின்று கலங்கி நிற்கையில்
தொட்டு தூக்க ஏதுவாக தினம்
முட்டும் வறுமை அமர்த்திய வேலையை ஒருவன் செய்து கொண்டிருந்தான்
அவன் வீட்டில் ஒரு விசேஷம்
சொல்லி கொண்டாட கடன் சுமை அவனை விடவில்லை
தாய்மை பாராட்ட நேரமும் இல்லை
கணவனின் தழுவலுக்கு அவள் ஏங்கவுமில்லை
பரபரப்புக்கு பஞ்சமில்லாத தலைநகர நெரிசலில் தலைதெரித்து துஞ்சினான் நெல்லை கிழவனொருவன்
பாத்தியதை பறைசாற்ற பகையொன்னு காத்திருக்க
பிணத்தை ஏற்றி கொண்டு பாவியவன் புறப்பட்டான்
அவன் வாழ்க்கை போலவே திக்கி
நகரும் அமரர் ஊர்தியில்
வழியில் ஏறினான் கூத்தாடி ஒருவன்
அவன் கடைசி காட்சிக்காக
வாழ்ந்து முடித்து செத்தவன் ஒருவன்
வாழ்க்கை போராட்டத்தில் செத்து கொண்டிருக்கும் ஒருவன்
தன் கலை போலவே கவனிப்பற்று கிடக்கும் ஒருவன்
அவற்றில் ஒருத்தனுக்கு மட்டுமே போய்சேரும் இலக்குண்டு
எஞ்சிய உயிரெண்டும் படிப்படியே பேசி பழக
வழியில் ஏறி கொண்டன
பதறிய கைகளும் பற்றிய மனங்களும்
காலம் காலமாக பிரிவினையை ஓழிப்பதாக ஏமாற்றி கொண்டிருக்கும்
அதே அரசியல் (காதல்) கதை
அதை தீர்வாகாமல் உறுதி செய்ய
எலும்பாலான கருவிகள் பின்தொடர
கூத்தாடி மற்றும் காப்பாற்ற நினைத்தான்
வெற்று மனிதனின் துணிச்சலுக்கு ஈடில்லை என்றுமே
பாவியவனும் மனமாறி ஒருசேர சண்டையிட
இருவரையும் உரிய கரையில் சேர்த்தனர் - கதையின் பாதியையும்
போராட்டமும் அவமானமும்
பழக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் உயர வைத்து வணங்கியது தாளாத மகிழ்ச்சி - விதி வலியதாயிற்றே
நீண்ட நேரம் நீடிக்கவில்லை
களைப்பாற சற்று ஒதுங்க கதைப்பேசி நேரம் கடக்க
கதை கருப்பொருள் கைமாறி போனது
முறைவாரிசு ஏவலாளி முறைசெய்ய கொண்டு போக
ஏவியவனுக்கு பதிலளிக்க பாவியவன் பரிதவிக்கிறான்
தலையில்லா இவ்வுலகில் எதற்கும் ஒரு மாற்று உண்டு - எதற்கும்!!
தன் முதலாளியின் யோசனைபடி ஒரு சடலத்தை தேடி அலைந்தான்
நேரமும் சூழலும் எதிரெதிரே சென்றது
மனைவியிடம் இருந்து வந்த பண குமுறலுக்கு மரணத்தை பதிலாக தந்து சாக துணிந்தான் - நளினம் காப்பாற்றியது
இறந்து பிறந்த இரண்டிற்கும் பின்
பிறக்குமா என்றிருக்கும் மூன்றாவதற்கும் மேல் தன் இணையவனின் அமைதிக்காக பொறுத்து கொண்டாள் தேவதை
இவளைத்தவிர வேறென்ன வேண்டும் இந்த பாவிக்கு
கூத்தாடிக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்க
இருவரும் நின்ற வண்டியை தள்ளி புறப்பட்டார்கள்
தீர்வு கிடைக்கபோகும் நிம்மதியில் அவன் சாந்தமடைய கூத்தாடியின் கதையை கேட்டான்
செத்துப்போன தன் தாயையும் கூத்தையும் சொல்லி புலம்பியதோடு தன் கடைசி நடிப்புக்கு தயாரானான்
முறைக்கு சென்ற சடலம் சத்தமில்லாமல் அடங்க தன்
உறவை நிரூபிக்க ஆரவாரமுடன் காத்திருந்தவனுக்கு மாற்று பிணமாய் சென்றான் இந்த கூத்தாடி
கூத்து பட்டறையில் உயிரைக் கொடுத்து நடித்தாலும் யாரும் காண்பாரில்லை என்றவனுக்கு இப்போது தாரை தப்பட்டை வெடி சத்தத்துடன் மரியாதை
தன் பங்கிற்கும் மரியாதை செய்துவிட்டு மனைவியை சென்று பார்த்தான்
தன் இரண்டு குழந்தையுடன் சேர்த்து அசைவற்ற சடலங்களை மட்டுமே தூக்கி பழக்கப்பட்டவனுக்கு அழுகிற குழந்தையை தூக்கி பிடிக்கையில்
மேலுமொரு தாளாத மகிழ்ச்சி
இதுவாவது நீடிக்கட்டும்