காகங்கள்

காகங்கள்

இருள்நிறப் பறவைகள்
கிளைகள் முழுதும்
நிறைந்திருந்தன.

கரிய அலகும்
கழுத்துச் சாம்பலுமாய்
தீட்டப்பட்ட
கருப்பு ஓவியங்கள்

ஓர் உயிர்மெய் எழுத்தின்
"குறில் நெடிலாய்" அவைகளின் மொத்த பாஷையும் முடிவடைந்துவிடுகிறது

அழைப்பாய் ஆனந்தமாய்
அறிவிப்பாய் காதலாய் சுகமாய் சோகமாய் அனைத்துமாய் 
கரைகின்றன காகங்கள்
அதன் ஒற்றை சொல்மொழியில்..

கண்டதும் உண்பதில்லை 
காகங்கள்
உயிர்களின் உணவு யுத்தத்தில்
கூடுகள்  தாண்டிய   ஆகாரப்பகிர்வு காகங்களுடையது.

தனிஒருவனுக்கு உணவு கிடைத்தவுடன்  சகத்தினை அழைக்கின்றன அவை.

சண்டை போடுகிற
காகங்கள் தென்படுவதில்லை எப்போதும்
சமாதானங்களுக்கும் நிறமாகிறது
கருப்பு இங்கு..

தலைமுறைகளாய் 
தொடர்கிறது
காகங்களோடு
மனிதர்களின் 
உறவு...

அம்மாவின் படையலிலும்
மூதாதிகளாய் வந்துவிடுகின்றன சில காகங்கள்...

சுத்தம் செய்யும்
காகங்கள் என்றும்
நம் சிநேகங்கள்...

விருந்து கண்டு
கரைகிற பறவைகள்
விருந்தினரின் வரவுக்காகவும் கரைகின்றன
வீடுகளின் கூரைகளில்

இருள் நிறப் பறவைகளின்
இதயம் முழுவதும் வெளிச்சங்கள்...

நிலாரவி.
(நன்றி பதிவுகள் மின்னிதழ்)

எழுதியவர் : நிலாரவி (4-Jun-17, 12:23 pm)
Tanglish : kaakaigal
பார்வை : 186

மேலே