தெய்வம் தொழல்

தெய்வம் தொழல்


தெய்வம்தொழ சென்றேன்
நெரிசல்களுக்கிடையில்.
நீண்ட வரிசையில் ஊர்ந்தேன்
நெடிய நடைப் பயணத்திற்குப் பின்
'விக்கிரகம்' தூரத்தில் தென்பட்டது

இறைவா !
என் பாவங்களை மன்னித்து விடு
இதுவரையிலும் நான் வாழ்கிறேன்,
அருள் புரிந்தமைக்கு நன்றி !

விபத்தில் சிக்கிய
எதிர்வீட்டு ஏழுமலை
விரைவில் குணம்பெற வேண்டும்
அருள் செய்.

வரும் வழியில் சவம் ஓன்று
தூக்கிச் செல்லப் பட்டது
யார் என்று தெரியாது பாவம்
அந்த குடும்பத்திற்கு
மன அமைதியும்
வாழ வலிமையையும் கொடு.

வேலையின்றித் தவிக்கும்
ஏழை நண்பனுக்கு
வேலை வாய்ப்பைக் கொடு

குடிப்பழக்கம் ஆட்கொண்டு
குடும்பம் துயரத்தில் தவிக்கும்
தெருக்கோடி குடிசைவாசி
திரவியத்திற்கு மனமாற்றம் கொடு.

நாட்டு மக்களெல்லாம்
அமைதியும், ஆனந்தமுடனும் வாழ
அருள் வழங்கு.

அங்குலம்...அங்குலமாய்
மெல்ல...மெல்ல நகர்ந்து
முன்னால் வந்து விட்டேன்
ஆ.....ஆண்டவன் முகம்
கை கூப்பினேன்.
கழுத்தில் ஒரு கை; ஒரே தள்ளு
'ஜர்கண்டி'...... ' ஜர்கண்டி '
விழாத குறையாக வெளியேற்றப்பட்டேன்
இறைவன் முகம் இமைகளுக்குள்;
வேண்டினேன்....

தன் பணியைச் செவ்வனே செய்யும்
என்னைப் பிடித்துத் தள்ளிய - இந்த
பணியாளர் குடும்பம்
நலமுடன் வாழ வேண்டும்
எண்ணியவாறு இடம் பெயர்ந்தேன்

பல்லாயிரக் கணக்கான
மக்கள் கூட்டம்
எனக்காகவும் யாராவது ஒருவர்
இறைவனிடத்தில் வேண்டுவார்
நம்பிக்கையுடன்
கோவில் வளாகம்விட்டு
வெளியேறினேன் !

எழுதியவர் : நெல்லை சுதன் (29-Jun-17, 4:46 pm)
சேர்த்தது : நெல்லை சுதன்
Tanglish : theivam thozhal
பார்வை : 199

மேலே