மீண்டுமாய் ஒரு காதல் சிறுகதை - அஜித்
இன்று, இந்த நிமிடம்
சில பயங்களும் தயக்கங்களுடன் நான் என் கைபேசியை எடுத்து டைப் செய்கிறேன்.
'என் கடந்த காலம் மறந்து உன்னுடன் என் இறுதி நாள் வரை பயணிக்க விரும்புகிறேன். உன் காதலில் மகிழ்ந்து கழிக்க விரும்புகிறேன். நீ...'
"நான் இத அனுப்ப போறது இல்ல. அனுப்பக்கூடாது. அது சரியும் இல்ல" என் குரல் என் மண்டைக்குள் கேட்கிறது.
"அனுப்பாத!" மிரட்டவும் செய்கிறது.
"அனுப்பு அருண். அவதான் உனக்கனவா. அவகூட தான் உன் வாழ்க்கை" இன்னொரு பெண் குரல். பிரியா, பிரியதர்ஷினி. அவளின் குரல். இன்னும் இனிமை மாறாது இருந்தது. என்னை சொக்கவைக்கிறது அந்த குரல். அது சொல்வதை அப்படியே செய்யவேண்டும் என்று தோன்றுகிறது
பயத்தில் விரல் நடுங்குகிறது.பயத்தை விட தயக்கமே அதிகமாய் இருக்கிறது.
"அவள் என்ன நினைப்பாள். அவள் பதில் என்னவாக இருக்கும்"
ஏதும் தோன்றவில்லை
நான் என்னைக்கும் பிரியாவால் என் வாழ்க்கைல விழுந்த முற்று புள்ளி அரைப்புள்ளியா மாறும்னு நெனைச்சு கூட பார்க்கல. ஆனா அந்த முற்றுப்புள்ளி ஒரு பக்கம் மெல்லமாய் கரைந்து அரைப்புள்ளியாய் மாறியது அவளை கண்ட அந்த நொடி
அவ பெயர்...
"ஆமா! உன் பெயர் என்ன?"
அவள் வேலையில் சேர்ந்த ரெண்டாவது நாள் இந்த கேள்வியை அவ கிட்ட கேட்டேன். கேள்வி கேட்ட நொடியோடு சரி அவ சொன்ன பதில் எதுவும் என் காதினில் ஏறவேயில்லை. அரை மணி நேரம் கடந்து இருந்தது. அவள் கண்கள் அவள் நெற்றி பொட்டு இதை தவிர வேறு எதுவும் என்னுள் இறங்கவில்லை
நான் எதுக்கு அவ கிட்ட மயங்கி போனேன்
எதுக்கு எனக்கு அவ கூட அதிக நேரம் செலவிடணும்னு தோணுது
எதுக்கு மூணு வருஷமா அடைக்கிவச்சிருக்கிற அழுகையை அவ மடியில அழுது தீர்க்கணும்னு தோணுது
எதுக்கு அவ கை என் தலையை வருடி விட வேண்டும் என்று தோன்றுகிறது
எனக்குள்ளேயே பல கேள்விகள் இந்த முறை எந்த கேள்விக்கும் பதில் இல்லை.
"நான் அவளை பாக்க கூடாது. நினைக்க கூடாது. பிரியா என்ன மன்னிக்க மாட்ட!"
"என்னால அவளை பாக்காம இருக்கமுடியல?"
"அவள் தலை முடி, நெற்றி போட்டு கண்கள் என்னை கட்டி இழுக்கிறது. அவள் பேச்சு மொழி வித்தியாசமாய் என் காதினுள் நுழைந்து மயக்கம் கொள்ள வைக்கிறது?"
ஒருநாள் அவளே என்னிடம் கேட்டாள்
"ஆமா நீங்க ஏன் எப்பவும் ஏதோ யோசனையிலே இருக்கேங்க?"
அவள் என் அருகில் அமர்ந்து இருந்தாள். நான் கம்ப்யூட்டரில் வேலை செய்வது போல் பாவனை செய்து கொண்டே,
"அமைதியா இருப்பது தப்புயில்லையே" என்றேன்
"அமைதியா இருக்குறது தப்பு இல்ல. யாரோடையும் பேசாம அமைதியா மட்டும் இருக்கிறது தப்புதானே"
ஆமாம் நான் என் நண்பர்களோடு பேசி 3 வருஷம் ஆகுது, பிரியா என்ன விட்டு போய் 3 வருஷம் ஆச்சு.
அவளோடான பேச்சுக்கள் தொடர்ந்தது . சில சமயம் அவள் மட்டும் பேசி கொன்டே இருந்தாள். கேள்விகளால் துளைத்து கொண்டு இருந்தாள். அவளுடைய எல்லா கேள்விக்கும் என்னிடம் பதில் இருந்தது.பலசமயம் மௌனத்தை மட்டும் பதிலாய் கொடுத்தேன்
"நீங்க ஏன் யார்கிட்டையும் சரியாய் பேசுறது இல்லை?" என்று கேட்டவாறு ஒரு கோப்பை தேனீரை வைத்தாள். "நான் தான் எப்போவும் உங்ககூட தனியா பேசிட்டு இருக்கேன். நீங்க எப்போ சகஜமா பேசுவீங்க?"
"பேசுவேனே"
ஒரு கோப்பை தேநீரில் பிறந்தது எங்கள் நட்பு!!!
"தனிமையா இருக்குனு நினைக்காதீங்க. நல்ல தூங்குங்க. முடிஞ்சது முடிச்சுருச்சி அவ்ளோதான்."
அவள் பேசி கொன்டே போவாள். எனக்கு பெண்களிடம் பேசத்தெரியாது. ஆனால் அவளை ஒவ்வொருநாளும் எதிர்பார்க்க தொடங்கினேன்.
உண்மையில், ஒரு முற்று புள்ளி அரை புள்ளியாய் மாறும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் என் நடை முன் ஒரு பெரும்முற்றுப்புள்ளி விழுந்தது.
"ஆமா பிரியா யாரு?" ஒரு முறை கேட்டாள்.
பிரியா. பிரியா
அவள் எனக்கு தனிமையை அறிமுகப்படுத்திவிட்டு போனவள். அவளால் நான் தனிமை பட்டுபோனேன். இல்ல என்னை நானே தனிமை படுத்திகொன்டேன். எனக்கு யாரும் தேவை படவில்லை. நான் வாழவிரும்பவில்லை. தற்கொலை செய்துகொள்ள பயமாய் இருக்கிறது, ரோட்டில் அழுத்துகொன்டே சென்றாலும் எனக்கு கேவலம் தெரியவில்லை. பெரும் கூட்டத்திற்கு மத்தியிலும் நான் தனிமையில் தான் இருந்தேன். பேச மறந்து போனேன், தூக்கம் மறந்து போனேன்.
"குடிக்க கூடாது மச்சி, அவளை நான் எதுக்கு மறக்கணும். சுயநினைவோடு அவளை நெனச்சி அழுத்திட்டயே இருக்கனும். நான் சாகுறவரை அழுதுகிட்டே இருக்கனும்" நான் குடிக்கவில்லை இப்பவும் .
"நான் தூங்க போறது இல்ல. தூங்காம சாகப்போறன். தூக்கம் என்ன கொல்லனும். அதுதான் எனக்கு வேணும். தூங்கமுடியாம நான் அவதி பட்டு சாகனும். நான் இனி தூங்கவே மாட்டேன்"
"நான் தூங்க மாட்டேன். தூங்காம இருக்கும்போது கண்ணெல்லாம் ஏறும் பாரு வலிக்கும், எனக்கு சொகமா இருக்கும். நான் தூக்கத்துனால சாகனும். சாவேன்"
"நீ நைட் வேலைக்கு வர வேண்டாம்னு சொன்ன எனக்கு வேலையா இல்ல நான் காலையிலும் வேல பாப்பான் நைட்யும் பார்ப்பேன் . உன்னால என்ன செய்ய முடியும்"
"இந்த போன் இருந்த தானே எல்லாரும் என்கிட்டே மாற்றி மாற்றி அட்வைஸ் பண்ணுவீங்க. யார் நினைச்சாலும் என்ன பிடிக்க முடியாது, போன்ஐ அடிச்சு சுக்கு நூறா உடைக்க போறேன் "
இன்னைக்கு நெறைய விஷயம் மாறிட்டு என் மனநிலை, சிந்தனைகள், சுற்றம் நட்பு, வழிபாட்டு முறை, நான் கும்பிடும் கடவுள் எல்லாரும் என் வாழ்க்கைல புதுசா இருகாங்க. தூக்கம், நான் நெனச்சாலும் நிம்மதியா இல்ல. நான் தூக்கத்தாலதான் சாவேன்
"ப்ளீஸ் சொல்லுங்க. பிரியா பத்தி பிரியா எப்படி இருப்பாங்க. பிரியா எங்க இப்போ. நான் கேட்ட சொல்லுவீங்களா மாட்டிங்களா?"
அன்று,
உண்மையில் ஆச்சரியங்களும் கேள்விகளுமாய் விரியும் ப்ரியாவின் கண்ணுகளுக்குள் விழுந்து கிடைத்தவரை நான் தனிமையை உணர்த்ததே இல்லை. பிரியா அளவாய் சிரிப்பாள், சிணுங்குவாள், சீண்டுவாள். அவள் செய்கைகளால் என்னை முழுதாய் ஆக்ரமிப்பாள். அவள் பேசும் வார்த்தைகளில் எப்பொழுதும் ஒரு தெளிவு இருக்கும். அதிகம் படித்தவள் மாதம் முக்கால் லட்சம் சம்பாதிப்பவள். நானோ சினிமா பைத்தியம் கனவிலும் நிஜத்திலும் வெவ்வேறுவிதமான வாழ்க்கையை வாழுபவன். என்னை விரும்பினாள் அவள்.முழுமையாக விரும்பினாள். என்னைவிட அதிகமாய் நான் அந்த அளவு அவளை விரும்பவில்லை. அவள் உதவியை பெற்று கொண்டவன் காதலாய், பணமாய்.
"ஹலோ! அருண் நான் பிரியா. பிரியதர்ஷினி"
"அருண் என் வாழ்க்கையை உன் கூட கழிக்க விரும்புறேன். கடைசிவரை உன்கூட நான் மட்டும். வேற யாரும் கிடையாது. நீ நான் அப்புறம் உன் வெற்றி கூடவே உன் அப்பா அம்மா தங்கை. உடனே பதில் சொல்ல வேண்டாம் அருண்"
அவ பிராமணத்தி நான் சாம்பன் தாழ்த்தப்பட்டவன். வேற பிரச்னை தேவையில்லை. நாங்க இணைந்தோம் கூடவே எங்க சமூகமும்.அவர்கள் பார்வையில் நான் தீண்டத்தகாதவன் எங்களை தொட்டால் அவர்கள் எரிந்து விடுவார்கள். அவள் இதழ் என் கன்னத்தில் 21 முறை பதிந்து உள்ளது அவள் சாம்பல் ஆகவில்லை. பிரியா எதை பற்றியும் கவலைப்படுபவள் இல்லை
"அம்மா! அப்பாவை ஜாதிய கட்டிட்டு அழ சொல்லுங்க. நான் அருணா விரும்புறேன் அவ்ளோதான். எங்க முன்னாடி நீங்களோ உங்க ஜாதியோ மதமோ எதுவும் நிற்கிறதா நான் விரும்பல."
"அம்மா இதுக்க மேலையும் நான் பொறுமையா இருக்க முடியாது. அப்பா என்ன வெட்டி போடுவாரா போடா சொல்லுங்க. நாங்க வாழுற இடத்துக்கு வந்து செய்ய சொல்லுங்க. என் வாழ்க்கைல அருண் தவிர வேற யாரும் கிடையாது"
"அம்மா நான் போறேன் . அவனுக்கு நான் தேவம்மா. அவன் நெறைய பண்ண வேண்டி இருக்கு. நான் இல்லாட்டி அவனால எதுவும் பண்ண முடியாது"
"அம்மா நான் கல்யாணம் பண்ண போறது இல்ல. சேர்ந்து வாழ போறது இல்ல. அப்பாவுக்கு பிள்ளையை இருக்க முடியாது அதான் நான் போறேன்"
"அருண் நான் இந்த ரூம்ல தானே இருக்கேன். தனியாத்தானே இருக்கேன். இங்க நீ மட்டும் தானே இருக்க. எனக்கு பயம் இல்ல. உன் கண்ணுல காதல் மட்டும் தான் இருக்கு. அதுக்காக தான் நான் வீட்டா விட்டு வெளிய வந்தேன், உனக்காக, உன் காதலுக்காக"
"அருண் நீ படம் பண்ணு. உன் கனவு நோக்கி வோடு நான் இருக்கேன்தானே?"
அவள் பேச்சில் எப்போதும் என் மேல் உள்ள காதலும் என் கனவு மீது உள்ள பூரிப்பும் இருக்கும்.
அந்த நாள்,
"அருண், மணி 11 இன்னும் தூக்கமா! நேற்றே உங்கிட்ட சொன்னேன் தானே ? நான் கிளம்புறேன் நீ வந்தா வா?" அவள் கத்தலை அசட்டை செய்தவனாய் பெட்ஷீட்டால் என் தலையை இழுத்து மூடினேன் குப்புற படுத்தேன்.
"அருண், இழுத்து முடியா தூங்குற. என்ன பாத்து பல்ல இளிச்சிட்டு இனி வராத சரியா. நான் தனியா போறேன்" என்று விறு விறு என கிளம்பியேவிட்டாள். எழும்பி அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்து கொன்டேன். எழ முடியாதவனாய் தூங்கி போனேன்.
நான் நிம்மதியாய் உறங்கிய கடைசி தூக்கம் அதுதான். விழி தூக்கத்தில் மயங்கிய போதும் பிரியா என் கண்களுக்குள் இருந்தாள். பிரியா அவள் தலை வகிடின் மீதும் நெற்றி பொட்டின் மீதும் எனக்கு ஒரு மோகம். அவளிடம் எனக்கு பிடித்தது அவள் தலை முடி தான். சிலசமயங்களில் அவள் தலை முடியை தடவியபடியே இருப்பேன்.
"என்கிட்டே உனக்கு என்ன பிடிக்கும்?" அடிக்கடி கேட்பாள்.
என்னிடம் இந்த கேள்விக்கு பதில் ஆயிரக்கணக்கில் இருந்தது. தினம் சொல்லும் வித விதமான பதிலுக்காவே அந்த கேள்வியை கேட்பாள்.
நான் அந்த தன்னிலை மறந்த தூக்கத்தை விட்டு எழும்பும்போது பிரியா என்னை விட்டு போயிருந்தாள். என் தூக்கத்தையும் சேர்த்து கடத்தி போயிருந்தாள். என் தூக்கம் தான் அவளை கொன்றதா? நான் அவளுடன் சென்றுஇருந்தால். அவள் இருந்திருப்பாள் நங்கள் வாழ்ந்துஇருப்போம் காதலுடன்.
இன்று வரை அவள் மரணம் குறித்து ஆயிரம் கேள்விகள் என்னுள் எழுகிறது.
எதோ ஒரு வண்டி வந்து இடிச்சித்தள்ளிட்டு போயிட்டு. இடிச்சது யாரு?. ஒரு சொட்டு ரத்தம் இல்ல ஹாஸ்பிடல் உள்ள கொண்டு போனாங்க எறந்துட்டான்னு சொன்னாங்க. சொல்ல அவங்க யாரு? அவங்க வீட்டுல வந்தாங்க உடனே எல்லாம் முடிஞ்சு. யாரு கண்ணுளையும் கண்ணீர் இல்ல?
எல்லா கேள்விக்கும் பதில் ஒன்றாகவே உள்ளது . என் தூக்கம் அவளை கொன்றது.
அவ வலி தங்க கூடிய பொண்ணு தான் ஆனா மரணம் ஏற்படும்போது உள்ள வலி . நான் தூங்கியிருக்க கூடாது. நான் இனி தூங்க மாட்டான். தூங்காம சாகனும்!
நினைவுக்கு வந்தேன்
அவள் மீண்டுமாய் கேட்டாள்.
"பிரியா யாரு உங்களுக்கு?"
பிரியா ஒருமுறை இதே கேள்வியை என்னிடம் கேட்டாள்.
"அருண் நான் யாரு உனக்கு" அவள் என் மடியில் படுத்து கிடந்தாள் நான் அவள் தலையை கோதியபடி
"நீயா! நீ ஒரு தேவதை"
"ம். என்ன?"
"இந்த முடி சொல்லுது, இந்த இமை சொல்லுது, இந்த நெற்றி சொல்லுது, இந்த சந்தன போட்டு சொல்லுது, உன் உதடு சொல்லுது. நீ ஒரு தேவதை"
"ப்ரியாவை உங்க வாழ்க்கைல யாருன்னு சொல்லுவேங்க?"
"அவ ஒரு தேவதை" அவள் என்னை பார்த்து கொன்டே அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
மாலை வாட்ஸ் அப் குறுந்செய்தி வந்தது
"பிரியா உங்க வாழ்க்கைல ஒரு தேவதை. நான் உங்க லைப் ல எந்த எடத்துல இருக்கேன்"
யோசித்தேன்
"நீயும் ஒரு தேவதை தான்"
இன்று,
"காதல் தந்த வலி ஆழ்மனதில் புதைந்து ரணமாய் இருந்தும்..
மீண்டுமாய் ஒரு முறை..
உன் தலை வகுடின் மீதும்..
நெற்றி பொட்டின் மீதும்
மீண்டுமாய் ஒரு முறை
காதலில் விழ துணிகிறேன்
என் முகம் உனக்கு பிடிக்கமால் போகலாம்
என் குணம் உனக்கு பிடிக்காமல் போகலாம்
என் கடந்த காலம் உனக்கு பிடிக்காமல் போகலாம்-ஆனால்
உன் முன் மண்டியிட்டு நான் உரக்க விரும்புவது எல்லாம் ஓன்று தான்
என் கடந்த காலம் மறந்து
எதிர்கால பயங்கள் அற்று
நிகழ் காலத்தில்
ஒரு நீண்ட நெடு பயணத்தை உன்னுடன் நடக்கவே விரும்புகிறேன்
அன்பே!"
போனில் தட்டச்சி செய்து முடிக்கிறேன்.
இது சரி இல்ல பிரியா. என்னால முடியாது. அவளுக்கு என்ன என் முகத்தை பிடிக்காது?
"எனக்கு உன்ன பிடிக்கலையா. அவளுக்கும் உன்ன பிடிக்கும்"
"உன் எடத்துல எப்படி இன்னொரு பொண்ணு?"
"நாம பாத்த ஆலிவர்'ஸ் ஸ்டோரி படம் நியாபகம் இருக்கா அருண். It takes someone very special to help you forget someone very special.அம்மாவோட இடத்தை அம்மா போல அன்பா இருக்கிற இன்னொருத்தங்களால தான் நிரப்ப முடியும். அப்பாவோட இடத்தை இன்னொரு அதே அக்கறை உள்ள இன்னொருத்தர் மூலம்தான் நிரப்ப முடியும். என் இடமும் அப்படி தான் அவ தான் நிரப்ப முடியும்னு நம்புறேன்"
தெளிந்தவனாய் குறுஞ்செய்தியை அனுப்ப முற்படும் பொழுது இன்னொரு குறுஞ்செய்தி என் போனிற்கு வந்து சேர்ந்தது. திறந்து படித்தேன்
"மச்சி! விஷயம் தெரியுமா உங்கிட்ட பேசிட்டு இருக்குமே அந்த பொன்னும் மஹேஷும் லவ் பண்ணுறங்கலாம் ட?"
இதழில் அசட்டு புன்னகை பரவியது
மண்டைக்குள் மீண்டும் ப்ரியாவின் குரல் கேட்டது
"ஏன் அனுப்பலையா?"
"நீ மட்டும் தான் என் தேவதை பிரியா?"
"ஐயோ! நீயே எதுக்கு முடிவு பண்ணுற. நீ அவ கிட்ட உன் காதலை சொல்லு"
"எப்படி அவ இன்னொருத்தி லவ் பண்ணிட்டு இருக்கும் பொது என் காதல் சொல்லனுமா? புரியல. சொல்லு இப்போ போய் நான் சொல்லவா?"
"மண்டைக்குள் சத்தம் ஏதும் கேட்கவில்லை.
அன்று ஒரு நாள்
"ஆமா, அருண் நீ எது வர என்ன காதலிப்ப?"
"நாம இருக்கிறவரை"
"திடீர்னு நான் எறந்துட்ட. ஒரு வேளை, எங்க அப்பா அவர் ஈகோ ல என்ன கொன்னுட்டா?"
"பிரியா, நான் இந்த மண்ணுல உயிரோடு இருக்கிறவரை உன்ன மட்டுமே நினைச்சிட்டு இருப்பான்"
என் கை நான் தட்டச்சி செய்த குறுந்செய்தியை அழித்து முடித்திருந்தது. இப்பொழுது மண்டைக்குள் ஒரு குரல் கேட்டது அது என் குரல்
"பிரியா என் தேவதை!!"
#AJITH
------------------------------------------