மீண்டும் பூ பூக்கிறது

செல்ஃபோன் சிணுங்கியது.அழைப்பை ஏற்று ஹலோ என்றேன்."சீக்கிரம் கிளம்புடா.9-10 இராகு காலமாம்;அதுக்குள்ள எங்க வீட்ட விட்டு கிளம்பிடனும்னு சொல்றாங்க” என்றான் எதிர்முனையில் நண்பன்.வழக்கமான வசனமான டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேனென்று அலைபேசியை துண்டித்து கிளம்பத் தயாரானேன்.கிளம்பி அவன் வீட்டை அடையும் போது நேரம் 9:45 ஆகியிருந்தது.அடுத்த ஐந்து நிமிடத்தில் அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெண்வீடு பார்க்க கிளம்பித் தயாராகி விட்டனர்.மாப்பிள்ளை பைக் ஓட்ட வேண்டாமென நிர்பந்திக்கப் பட்டதால் அவன் என்னுடைய பைக்லயே ஏறிக்கொண்டான்.
"பொண்ணு எந்த ஊருனு இப்போவாச்சம் சொல்லுடா" எனக் கேட்டதற்கு சஸ்பென்ஸ் என்ற அதே பதில்.அவன் வழி சொல்ல சொல்ல நான் பைக் ஓட்டிக் கொண்டிந்தேன்.வண்டி பக்கத்து ஊரினுள் பயணப்பட்டுக் கொண்டிருந்தது.அன்று குடிசைகளாக இருந்த வீடுகள் பல மாளிகைகளாக உருமாறியிருந்தன.அதற்கு அருகில் இருந்த மரங்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டு சடலங்கள் யாவும் மாளிகையினுள் மறைக்கப்பட்டிருந்தன.குறுக்கும் நெடுக்குமாய் நிறைய தெருக்கள் உருவாகி இருந்தன.அங்கிருந்த தாமரைக்குளம் மட்டும் இன்றோ நாளையோயென இழுத்துக் கொண்டிருக்கும் கிழவியைப் போல முக்கால்பங்கு வற்றிய நிலையில் தன் இருப்பை உறுதி செய்து கொண்டிருந்தது.
" ஊருலாம் ரொம்ப மாறிடிச்சில்ல" என்றேன்.
"ஆமான்டா . நீ கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்து.ச்சூச்சூ போய்ட்டு போகலாம் " என்றான். இது மட்டும் தான் இன்னும் மாறவில்லையென்றெண்ணியவாறே வண்டியை ஓரங்கட்டினேன்.
"இன்னும் எவ்ளோ தூரம்னாச்சும் சொல்றா" .
ரெண்டு கிலோமீட்டர் இருக்கும்டா என்று சொல்லிக்கொண்டே பின்சீட்டில் திரும்பவும் ஏறிக்கொண்டான்.
"அந்த பிள்ளையார் கோயில் கிட்ட லெஃட் எடு " என்றான்.
அந்தப் பாதை ரொம்ப பரீட்சையமானதாய் மனதில் பட்டது.அத்தெருவில் ஆரம்ப முனையில் இருந்த கொடிக்கம்பம் அதனை உறுதிப்படுத்தியது.சைக்கிள் மிதிக்கும் பதினாறு வயது சிறுவன் சட்டென்று கண்முன் தோன்றி மறைந்தான்.நினைவுகளின் வேகம் அதிகரித்தது.
"முன்னாடி வீட்ல வண்டியை நிறுத்திக்கோடா " என்றான்.
அதே சொரடு ஓடு வேய்ந்த வீடு; அதே திண்ணை; எதுவும் மாறவில்லை.
கண்கள் எதையோ தேடின. அப்போது தான் புரிந்தது அவன் சொன்ன சஸ்பென்ஸ் இதுதானென்று.அதிர்ச்சியோடு அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். அலைபேசியில் அழைப்பு; அங்க இருந்த சத்தத்தில் எதுவும் கேட்காதென்று வெளியில் வந்து அழைப்பை ஏற்றேன்.
" ஆக்ஸிஸ் பேங்க்ல இருந்து கால் பண்றோம் சார்; உங்களோட லாஸ்ட் இயர் டிரான்சேக்ஷன் பேஸ் பண்ணி லோன் ஆஃபர் பண்றோம்" என்று ஆம்னி பஸ் போல இடைவெளி நிறுத்தமில்லாமல் வேகமாக உச்சரித்துக் கொண்டிருந்தது ஒரு குரல்.
" இன்ட்ரஸ்ட் இல்ல " என்ற இரு வார்த்தைகளால் அந்த ஆம்னி பஸ் வேகத்திற்கு பிரேக் போட்டு அழைப்பை துண்டித்தபோது, "நல்லா இருக்கியா செந்தில்" னு ஒரு குரல்.
எங்கையோ கேட்ட குரலாச்சே என்றெண்ணியவாறே திரும்பினேன்.
ஆம்..........அதே குரல் தான். பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேட்கிறேன்.
"ம்ம் ..நல்லா இருக்கேன்; நீ எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன்; நீ ஆளு ரொம்பவே மாறிட்ட ".
நான் சொல்ல வேண்டியதை இவள் சொல்கிறாளே என்றெண்ணியவாறே சிறு புன்னகை உதிர்த்தேன்.இருவருக்குமிடையில் மௌனம் மையம் கொண்டது.அன்று அவளிடம் பேச ஆயிரம் கதைகள் இருந்தன.உரையாடலுக்காக வார்த்தைகள் வடம் பிடித்தன.இன்று அவைகள் மரணித்து விட்டன போலும்.
" வீட்ல வேல இருக்கு ; அப்புறம் பாக்கலாம் " என்று நிகழ்ந்து கொண்டிருந்த நீண்ட மௌனத்திற்கு முடிவுரை எழுதி வீட்டிற்குள் புறப்பட்டாள் .எங்களுக்கிடையேயான உரையாடலை எப்போதும் அவள்தான் தொடங்குவாள் . இனறும் அவள் தான் தொடங்கியிருக்கிறாள்.
அன்று அவள் அழகின் அருவி.அவளின் கடைக்கண் பார்வையால் பல இதயங்கள் காயம்பட்டிருக்கின்றன.தாவணி அணிந்து பலரின் தவம் கலைத்திருக்கிறாள் .மனதில் எந்தவொரு சஞ்சலமும் இல்லாமல் உதட்டோர புன்னகை வீசி பல உயிர்களை உருக்குலைத்திருக்கிறாள். அப்புன்னகைக்கு ஆளுக்கொரு அர்த்தம் கொண்டு கனவுலகில் தொலைந்தனர் பலர்.அப்புன்னகைக்கு அர்த்தம் இல்லை என்று அர்த்தம் அறிந்ததில் நான் மட்டும் பாக்கியசாலி.
இன்று அவள் குரலில் இருந்த வசீகரம் காணாமல் போயிருந்தது ;காந்த விழிகளில் ஒளி குன்றி இருந்தது;சிவப்பில் கொஞ்சம் சிதைந்திருந்தது;
உதட்டோரப் புன்னகையில் உயிர் இல்லை;அவ்வப்போது தோன்றும் வெட்கத்தின் சுவடு அறவே இல்லை.தேய்பிறையான பௌர்ணமி போல் அவள் இருந்தாள்.
அன்று அக்காவிடம் காதல் கடிதம் நீட்டிய கைகள் தங்கைக்கு தாலி கட்டத் தயாராகிக் கொண்டிருக்கிறது.அன்று அக்காவைப் பார்க்க மிதிவண்டியில் அழைத்து வந்த நான் தான் இன்று தங்கையைப் பார்க்க பைக்கில் அழைத்து வந்திருக்கிறேன்.
நாங்கள் மூவரும் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள்.அவள் தினமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தான் படித்துக் கொண்டிருப்பாள்.அவளின் தரிசனம் காண காலையும் மாலையும் அவள் வீட்டை வட்டமிட்டிருக்கிறோம்.என்னைப் பார்க்கத்தான் சாலையோரம் முகம் வைத்தவாறு படிப்பதைப்போல் பாசாங்கு செய்கிறாளெனறு நிறைய பேர் உரிமை கொண்டாடியிருக்கிறார்கள் :) .அவள் முதல் முறை புடவை அணிந்த ஊர்த்திருவிழாவென்று எங்களைப் பார்த்ததும் வெட்கப்பட்டு ஓடி ஒளிந்திருக்கிறாள். ஏதோ காலச்சூழ்நிலையில் அக்காதல் கைகூடாமல் போய்விட்டது.
நண்பனிடம் சென்று " என்னடா இது " என்று கேட்டேன்.
" இல்லடா ! என் ஜாதகத்துல நிறைய பிரச்சினை; எங்க தேடியும் பொண்ணு கிடைக்கல; இது ஒன்னு தான் செட் ஆச்சி; வீட்லயும் ரொம்ப பிடிச்சி போச்சி " என ஏதேதோ காரணங்களை அடுக்கினான் .இக்காதலுக்கு என்னைத் தவிர சாட்சிகள் இல்லையென எழுந்து நடக்க எத்தனித்த போது , அவர்கள் கைகோர்த்து நடந்த கால்தடங்கள்
காட்சிகளாய் ;
சாட்சிகளாய்;
கண்முன்னே.
------------ ------ ---முற்றும் --------------------------

எழுதியவர் : (8-Jul-17, 11:32 pm)
சேர்த்தது : Senthil Murugan2
பார்வை : 472

மேலே