கண்ட நாள் முதலாய்-பகுதி-13

.........கண்ட நாள் முதலாய்.........

பகுதி : 13

"ஹலோ துளசி" லைனில இருக்கீங்களா??அவனிடமிருந்து வந்த அடுத்தடுத்த ஹலோக்களில் தடுமாறிப் போனவள் மெல்லிய குரலில் அவனுக்கு பதிலளிக்கத் தொடங்கினாள்..."ஹலோ" சொல்லுங்க...

அவளது குரலில் சிறிது நேரம் தன்னை மறந்து இருந்தவன் அருகில் ஒலித்த குயிலின் கூவல் சத்தத்தில் விழித்துக் கொண்டான்..."ஒரு வழியா என் ஹலோக்கு பதில் ஹலோ சொல்லிட்டீங்க...நீங்க துளசினு எனக்குத் தெரியும்...நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா??"

அவனது கேள்விக்கு அவளிடமிருந்து ம்ம் என்ற முனகல் சத்தமே பதிலாகக் கிடைத்தது...துளசிக்கோ அவனோடு கதைக்கும் ஒவ்வொரு நொடியும் பல யுகமாகக் கழிந்து கொண்டிருக்க,அரவிந்தனோ அவளது ஒவ்வொரு வார்த்தைகளையும் ரசித்தவாறே புன்னகைத்துக் கொண்டிருந்தான்...அவளது ம்ம் என்ற முனகலையும் வெகுவாக ரசித்தவன் அவளைச் சீண்டும் முயற்சியில் இறங்கினான்...அவளோடு கதைக்கும் அந்த நிமிடங்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது...அந்த பேச்சினை அவன் அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்ள விரும்பவில்லை..."ம்ம்" னா??

தெரியும்னு சொன்னேன்..."இதுக்கு இப்படியொரு அர்த்தம் வேற இருக்கா??சரி தெரியும்னா நான் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்...?அவனது பெயரை அவளது வாயினூடாக கேட்க அவன் மிகவும் ஆவலாக இருந்தான்...ஆனால் துளசிக்கோ அந்த உரையாடல் எப்போது முடியுமென்று இருந்தது...

"அரவிந்தன்"...அவனது பெயரைக் கூட இவ்வளவு அழகாக உச்சரிக்க முடியுமென்பதை அவளின் வாய் வழியாகக் கேட்ட பின்னே உணர்ந்து கொண்டான் அரவிந்தன்...அதிலேயே மெய்மறந்து சிறிது நேரத்தை ஓட்டியவன் அடுத்து கேட்ட கேள்வியில் துளசி தான் தடுமாறிப் போனாள்..."இந்த அரவிந்தன் உங்களுக்கு யாரு??"

அவன் என்னவோ இலகுவாகக் கேட்டுவிட்டான்...அதற்கு என்ன பதிலைச் சொல்வதென்று தெரியாமல் தவித்துப் போனதென்னவோ துளசிதான்...அவளின் அந்த தடுமாற்றம் கூட அரவிந்துக்கு பிடித்திருந்தது...முகத்தினை பார்க்காமலேயே அவளது முகம் காட்டும் உணர்வுகளை அவளது மூச்சுக்காற்றின் வழியே அறிந்து கொண்டான் அவன்..

அவள் சொல்லப் போகும் பதிலுக்காக இனிய அவஸ்தையோடு அவன் காத்திருக்க அவளோ அந்த அழகிய இம்சைக்குள் சிக்கி முழித்துக் கொண்டிருந்தாள்...அந்த நேரம் துளசியைக் காப்பாற்றவென்றே வந்து சேர்ந்தாள் பவி..."ஏய் என்னடி ஏசிக்குள்ளேயும் உனக்கு இப்படி வியர்த்துக் கொட்டிட்டு இருக்கு..??

பவியைக் கண்டதும் தான் துளசியின் மூச்சே சீராக இயங்கத் தொடங்கியது...அதையே காரணமாகக் காட்டி அழைப்பினை முடித்துக் கொண்டாள் துளசி..."அரவிந்,நீங்க தப்பா நினைக்கலைனா நான் உங்க கூட அப்புறமா கதைக்கவா??என் ப்ரண்ட் வந்திருக்கா அதான்..."இதை அவனிடம் தயங்கி தயங்கியே ஒருவழியாக சொல்லி முடித்தாள் துளசி..

"ம்ம்...சரி துளசி...இப்போ என்கிட்ட இருந்து தப்பிட்டீங்க...ஆனாலும் என்னோட கேள்விக்கு பதில் வரும் வரைக்கும் உங்களை விடவே போறதில்லை...சரியா??"

"ம்ம்"

"இதுக்கும் ம்ம் தானா??அதை தவிர வேற எதுவும் சொல்ல மாட்டீங்களா துளசி...?அவனது குரலில் இருந்த எதுவோ ஒன்று துளசியை இனிய அவஸ்த்தைக்குள் தள்ளிக் கொண்டிருந்தது...அவன் கேட்ட எந்தக் கேள்விகளுக்குமே பதில் சொல்ல முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள் துளசி...அவளது தவிப்பை புரிந்து கொண்டவன் அவளது தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டு அவ் அழைப்பினை முடித்துக் கொண்டான்...

அவன் அழைப்பை முடித்ததும் தான் அவளால் ஒழுங்காக மூச்சே விடமுடிந்தது...இதுவரை நேரமும் அவள் கதைத்ததை வைத்தே அவள் யாரோடு கதைத்தாள் என்பதை ஊகித்துக் கொண்ட பவி அவளை பார்த்து கண்ணடித்தவாறே அருகில் சென்று அமர்ந்தாள்.....

"இப்போ எதுக்குடி கண்ணடிக்கிறாய்.?"

"வெளிய அம்மா சொன்னப்போ கூட நம்பல,ஆனால் இப்போ அது கன்போர்ம் ஆகிடிச்சு.."

"அப்படி என்னத்த அம்மா சொன்னாங்க..?"

"ம்ம்...நீ வயசுக்கு வந்திட்டியாமே....என்று மறுபடியும் கண்ணடித்து வைத்தாள் பவி.."

"நான் இருக்கிற கடுப்பில இப்போ ஏதாவது சொல்லிடப் போறன்,போயிடு பேசாம.."

"ஏன் சொல்ல மாட்டாய்,பிள்ளை முக்கியமா ஏதோ சொல்லனும்னு கோல் பண்ணிச்சேனு என் நித்தாவை தியாகம் பண்ணிட்டு ஓடோடி வந்தா...நீ என்னப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டாய் துளசி..என நாடக பாணியில் கதைத்து முடித்தவள்...வராத கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டாள்..."

"போதும்...போதும்...நிறுத்துடி...கும்பகர்ணி மாதிரி நல்லா தூங்கி எழுந்திட்டு...எனக்காக நித்திரையை தியாகம் பண்ணிட்டு வந்தாளாம்..."

"சரி..சரி...விடு...அதான் உனக்கு என்னைப்பத்தி தெரியுமே...நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்னு அம்மா சொல்லும் போதே அவங்க முகத்தில எவ்வளவு சந்தோசம் தெரியுமா??மொத்த குடும்பமுமே இன்ப வெள்ளத்தில மிதந்திட்டு இருக்காங்க...இது எல்லாமே உன்னால தான்...எனக்குத் தெரியும் இந்த முடிவை எடுக்க நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய்னு...கண்டிப்பா இனி உன் வாழ்க்கையில புன்னகை மட்டும் தான் இருக்கப் போகுது..."

"நான் இந்த முடிவை எடுக்கிறதுக்கு நீயும் ஒருவிதத்தில காரணம்தான் பவி....உன்னோட கதைச்சபிறகுதான் என் மனசு கொஞ்சம் தெளிவாச்சு..."

"எல்லாம் நன்மைக்கே...ஆனால் உன் கல்யாணத்துக்கு என்னால நிக்க முடியாது என்கிறதுதான் கவலையா இருக்கு.."

"என்னடி சொல்லுற,என் கல்யாணத்தை விட உனக்கு லண்டன் போறதுதான் இப்போ முக்கியமாச்சில்ல...என் கூட இனி பேசாத போடி..."

"ஏய் என்னடி,எனக்கு மட்டும் கவலையில்லையா...நான் என்னமோ லண்டனை சுத்திப்பார்க்க போற மாதிரி பேசிட்டு இருக்காய்...வகுப்புகள் தொடங்க முன்னமே நான் அங்க போயாகனும்....அதுக்கப்புறம் வேலைல வேற இன்னும் ஐந்து நாளில சேர்ந்தாகனும்......இது எல்லாமே உனக்கு முதலே தெரியும் தானே??உன் கல்யாணம் இவ்வளவு சீக்கிரமா நடக்கும்னு எனக்கு எப்பிடிடீ தெரியும்...?"

பவியுடைய நிலைமையும் துளசிக்கு புரியாமலில்லை....ஆனாலும் இத்தனை காலமும் ஒன்றாகவே சுற்றித்திரிந்தவர்கள்...இப்போது அவளது முக்கியமான நிகழ்வில் பவி இருக்கமாட்டாள் என நினைக்கும் போது துளசிக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது...சிறிது நேரம் இதையே நினைத்து மௌனமாக இருந்தவள்...அவள் கேட்ட இறுதிக் கேள்வியில் முழித்துக் கொண்டாள்...

"என்னடி சொல்லுறாய் இவ்வளவு சீக்கிரமாவா....எப்படியும் ஒரு மாசத்துக்கு மேலையாவது ஆகும்தானே...??நீ போயிட்டாவது திரும்பி வா...."

"சரியாப் போச்சு போ....உனக்கு விசயமே தெரியாதா??உன் கல்யாணம் ஒரு மாதத்துக்கு அப்புறம் இல்லை மா....இன்னும் பத்து நாளிலையாம்..."

"என்ன...?"


தொடரும்.....

எழுதியவர் : அன்புடன் சகி (9-Jul-17, 7:53 am)
பார்வை : 654

மேலே