கண்மணியே கேளாய்

போக்கிரிப் பெண்ணே! போதை தந்து போகாதே!
பேக்கரிக்கடை மிட்டாய் போல பேதலிக்க வைக்காதே!
மிட்டாய் மேல ஈயைப் போல உன்னை மொய்க்கும் என் பார்வை,
கட்டாயம் என் வாழ்வில் பாவை நீ மட்டுமே தேவை,
ஏக்கம் தணிப்பாயோ? ஏமாற்றம் தருவாயோ?
ஊக்கம் அளிப்பாயோ? ஊரார் போல கடப்பாயோ?
கன்னி உன் நினைவில் கற்பனை கோடி வளர்ந்தேன்,
உன்னிடம் எதை முதலில் தயங்காமல் செப்பிடுவேன்?
செண்பகமே! கேளாய் என் மனதில் வளர்ந்தவை.

புண்படும்படுமோ உன் மனம் என்றெண்ணி எத்தனையோ,
பண்சோற்களை உன்னிடம் சொல்லாது விட்டோழித்த,
கோழை நான் இப்போது தைரியம் பெற்றிருந்தாலும்
ஏழை என்னை ஏற்பாயோ என்றெண்ணியே கூனிகுறுகுகிறேன்,
பதிலேதும் சொல்வாயோ என் மனம் ஆறுதலடைய?
செதில் செதிலாக வெட்டும் வார்த்தை கொண்டு கொல்வாயோ?
கேள்விகள் கோடி என் மனதை தோட்டாக்களாக துளைக்க,
வேள்வித்தீ சாட்சியாக உன்கரம் பிடித்து மணம் முடிப்பது எப்போது?
பெண்ணே! கேளாய் உன்னை வட்டமிடும் அந்த நினைவுகளை.

கள்ளப்பார்வை வீசி, கீச்சுக் குரலில் பேசி,
உள்ளத்தில் குடிவந்தாயே, என் இரவில் தூக்கம் தொலைய,
உள்ளூர புகுந்து தென்றல்காற்று சொல்லுது உன்பெயரை,
வெள்ளூர நடித்தேன், உன்னைக் காணாது தவிர்த்தேன்,
இப்போதோ தோற்றேன், சேர்த்து வைத்த உன் நினைவு,
எப்போதோ சொல்லியிருக்க வேண்டும், சொல்லாமல்
விட்ட கதை உன்னை என்னை சேராது செய்திடுமோ?
சொட்டு சொட்டாய் வடியும் கண்ணீர் எனதன்பைச் சொல்லிடுமோ?
கண்மணியே! கேளாய் நாளும் மலரும் நம் காதல் பூந்தோட்டம்.

கோடி பணம் கொடுத்தாலும் உன் மடி தலை சாயும் சுகத்திற்கு ஈடாமோ?
மாடியிலே கண்டேன், உன் அருகே தாவி வரும் எண்ணம் கொண்டேன்,
மாலைப் பொழுது ஆனாலே, கால்கள் தன்னாலே படிகள் ஏறிமே,
காலை விடிந்தாலே, உன் கோலம் காண மனம் ஏக்கமுறுது இந்நாளிலே,
நான் வரும்போது நீயில்லை, நீயிருக்கையில் நான் வரவில்லை,
பொன்முடியாய் உனருமை அறிந்த பின்னே, கண்கெட்ட பின்னே
சூரிய நமஸ்காரம் போலே, இப்போதே பேசத் துடிக்கிறதே என் மனம்?
உரிய பரிகாரம் சோல்வாயோ உன் வாய்திறந்து உள்ளம் மலர்ந்து,
தூயமணியே! கேளாய் என் நெஞ்சில் ஆர்ப்பரிக்கும் நினைவுக்காடே!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Mar-25, 2:50 am)
Tanglish : kanmaniye keylaay
பார்வை : 173

மேலே