பிறையாண்
அழகனே,
 கவின் ஊற்றால் உன்னை கன்னியென கவி பாடினாரோ ?
 மதியே,
 மாலை நேர மஞ்சுவிடம் - நீ 
 மறைந்து கொஞ்சும் மறைப்பொருள்
 நங்கையின் நாண நாடகமானதால்
 நறுமுகை என்று நவிழ்ந்தனரோ?.
நில்லாய் நீ 
நிழல் தேடும் நிலாவே!
சொல்லாய் ஒரு செய்தி
 சொக்கனவன் தலை மீதேறியதை!
திங்களே 
தினம் குறுகினாலும் 
ஒளி குன்றாது  மிளிரும் உன்னை 
உவமிக்க பூவுலகில் 
உவமை உள்ளதென்றால் – அது
தன் உடம்பு குறுகினாலும் 
வீட்டொளி குன்றாது காக்கும் – ஆண்மகனே!
ஏய் அம்புலியே!
புலித்தோல் போர்த்தி 
 புரியாத புதிராய் 
திங்களுக்கொருமுறை  செல்வதெங்கே?
புரவிமேல் ஏறி வரும் பகலவனிடம் 
தண் போர் புரியவோ – வீரனே!
வட்ட நிலா நீ 
தேய்ந்து வளர்வதால் தானோ?
 தேவதைகள் வலம் வருகின்றனர் 
உன் பின்னால்!
 எத்தனை மனைவிகள் உனக்கு – இன்னும்
 போதவில்லையா உன் கணக்கு 
திரையிடும் திருமுகம் கண்டே
 திரள்சூளும் கன்னிகள்,
திரையற்ற முழுமதி - தினம் கண்டால் 
மொழியற்று போவர் போலும்!
வெண்ணாடை உடுத்தி பெண்ணை மயக்கும் 
சந்தப்பிழையற்ற சந்திரனே - நீ 
அறுபொழுதும் அரவணைக்க காத்திருக்கும் கண்களுக்கு 
ஆண்மை ஆர்ப்பரிக்கும் குறையற்ற  பிறையாண்!
 
                    

 
                                