பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 2 ஆ
......................................................................................
பெண் மனது ஆழமென்று ..... பாகம் 2 ஆ
......................................................................................
சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...
திவாகரைப் போலவே என் ஆடையைக் கலைத்தும் போர்த்தியும் கதை பேசிய காற்றை கடிந்து கொண்டேன்.. தென்றலும் திவாகரும் ஒன்றுதான் போலும்..
கோயமுத்தூரில் என் மாமியார் வீட்டில் மாடியறை ஒன்றை எங்களுக்கான படுக்கையறையாக்கி இருந்தார்கள். பூ பழம் சகிதம் என் மாமியாருக்கு மாமியார் உடுத்திய பழைய பட்டுப் புடவையை உடுத்தி- ராசியான புடவையாம் - என்னை உள்ளே அனுப்பினார்கள்..
இந்தத் தென்றலைப் போலத்தான் - ஆடையை அகற்றாமல் வெறுமனே கலைத்தும் போர்த்தியும் தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்லில் வடிக்க எண்ணி காதோடு இரைகிறதே- இந்தத் தென்றலைப் போலத்தான் அவரும் அவசரப்படாமல்..
அது எனக்குப் பிடித்திருந்தது...!
அப்பாவும் அண்ணனும் மெனக்கெட்டதில் சென்னையிலிருந்து கோவை காதி கிராமயோத் பவனுக்கு மாற்றலாகி வந்து விட்டேன்.. இந்த வாரம் முழுவதும் வேலைக்குப் போய்விட்டு பிறகு ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்..
ஆடி மாதம் வரவில்லையென்றாலும் காற்று பிய்த்துக் கொண்டு போனது..
திவாகருக்கு அலுவலக நிமித்தமாக ஊட்டி செல்ல வேண்டியிருந்தது. அப்படியே தேனிலவும் கொண்டாடி விடலாம் என்று ஊட்டி சிம்ப்பிள் டிம்ப்பிள் ஹோட்டலில் டபுள் ரூம் புக் செய்தார் அவர். நான்கு நாட்கள் ஊட்டியில் தங்கியபின் நான் ஆடிக்காக பிறந்தகம் புறப்பட்டாக வேண்டிய சடங்கு... ஊட்டியிலிருந்தே என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று விடலாம் என்று இரு வீட்டாரும் பேசியிருந்தனர். அப்பாவும் அம்மாவும் நேராக ஊட்டிக்கு வந்து என்னை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு..
திவாகருக்கு ஊட்டியில் அலுவலக வேலையே நான்கு நாட்கள் கழித்துதான் ஆரம்பிக்கும். அதாவது நான் புறப்பட்டவுடன்..! அப்படித்தான் நாள் பார்த்து ரூம் புக் செய்யச் சொல்லியிருந்தார் அவர். ஊட்டியில் செலவு கம்பெனியுடையது – திவாகருக்குக் கல்யாணப் பரிசாக..! வீட்டில் அவருக்கு மூடு வரவில்லையாம்..! பழைய பர்னிச்சர், பழைய பட்டுப் புடவையில் தும்மல்தான் வருகிறதே தவிர மூடு எங்கிருந்து வர?
ஊட்டி சிம்ப்பிள் டிம்ப்பிள் ஹோட்டலின் வெளிச்சம் கம்மியான வரவேற்பரை. “ மிஸ்டர் அண்ட் மிஸஸ் திவாகர் ?? ” என்றாள் பஞ்சு மிட்டாய் நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிய ஒடிசலான ரிஷப்சனிஸ்ட்.. “ ரூம் நம்பர் 11 ”. சாவி கொடுத்தாள்.
அறைக்குள் நுழைந்து நிமிர்ந்து பார்த்தால் கூரையில் புசுபுசுவென்று பஞ்சுப் பொதியாய் புறப்பட்டு கலக்கும் வெண்மேகமும் கருமேகமுமாய் ஆடி மாத வானம் சித்திரமாய் தீட்டியிருந்தது. நடுவில் உறுத்தாத ஜொலிப்பில் எண்ணி இரண்டே நட்சத்திரங்கள்..
மிகப் பெரிய மென்மையான படுக்கை..!
படுக்கை விரிப்பிலும் அதே வானம் சித்திரமாக விரிந்திருந்தது..
மல்லாக்கப் படுத்தால் வானத்தில் மேகக் கூட்டங்களின் மேல் சஞ்சரிப்பதைப் போல சுகம்..
சில்லென்ற குளிரில் சட்டென்று ஊடுருவும் மென்மையான வெம்மை..
சூழலுக்குத் தகுந்தாற் போல் மெல்...ல்லிய இசை..
திவாகர் என் கையைப் பற்றியிழுத்து மெத்தையில் தள்ளியபோது உடம்பெல்லாம் சிலிர்த்தது..
திவாகர் நல்ல ரசிகர்தான்..
ஒரு நொடி கூட வீணாகக் கூடாது என்று நினைத்திருந்ததைப் போல இயங்கினார் திவாகர்.அது மட்டுமல்ல, என்னைப் படுக்கையில் சாய வைத்து, சோபாவில் அமர வைத்து என்று விதவிதமாக அலைபேசி காமெராவில் போட்டோ பிடித்தார் அவர்.. நிறைய செல்ஃபியும் எடுத்துத் தள்ளினார்.
வீட்டுக்குக் கூட ஃபோன் செய்ய விடவில்லை..
நான்கு நாட்கள் நான்கு நொடிகளாக ஓடின..
நாலு நாள் பத்தவே இல்ல என்று எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி முணுமுணுத்தார் திவாகர்.. என் அம்மாவும் அப்பாவும் நாசுக்காக எங்கேயோ பார்த்தனர்.
திவாகரை விட்டுப் பிரிந்து எப்படி இருப்பது? ஆச்சரியம்தான்..! இருபது வருடங்களுக்கு மேல் வளர்த்த பெற்றோரைப் புறந்தள்ளும் உறவு.. சதைக்கலப்பை மீறிய உயிர்க் கலப்பாக..!
நல்ல நேரம் பார்த்து ஹோட்டலை விட்டு வெளியில் வந்தோம்..
கால்மணி நேரம் கூட ஆகியிருக்காது.. திவாகரிடமிருந்து அலைபேசி..
“ ஹேய் ச்சீஸ்.. ஓ மை ச்சீஸ்..! ஐ லவ் யூ.. ஐ மிஸ் யூ... ” மொச்சு மொச்சுவென்று முத்தங்கள்..
“ ஐயோ.. ” அவசரமாக அலைபேசியை தூரப் பிடித்தேன்.. என் கன்னத்து சிவப்பே விவரம் சொல்லியது..
என் தாயின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு..!
ரயில் பயணம் நெடுகிலும் எக்கசக்க அழைப்புகள்..!
இரவில் வந்த சேதிதான் வித்தியாசமானது..
இவர் ஒருத்தர்தானே தங்கியிருக்கிறார்.. எதற்கு டபுள் பெட்ரூம்? சிங்கிள் ரூமுக்கு மாற்றிக் கொள்ள ஹோட்டல் மானேஜர் வற்புறுத்துவதாக ஃபோன் செய்தார். டபுள் பெட்ரூம் கேட்டு நிறைய ஜோடிகள் காத்திருப்பதாகவும் சண்டை போடுவதாகவும் மானேஜர் அழுத்தம் கொடுக்கிறாராம்.. மரியாதை இல்லாமல் பேசுகிறாராம்..
அங்கே தங்கியிருக்கிற உதய் என்கிற யாரோ ஒருவருக்கும் இதே பிரச்சினையாம். ஊட்டியில் சீசன் நன்றாக இருக்கும்போது எந்த ஓட்டலிலும் அறை கிடைக்காது.. இருப்பதில் தங்கித்தான் ஆக வேண்டுமென்ற அகங்காரம்.. அந்த உதய் நண்பராகி விட்டாராம். ஹோட்டலே வேண்டாமென்று இருவரும் ஒரு பங்களாவில் தங்க உத்தேசித்திருக்கிறார்களாம்.. கரோலின் பங்களா..!
கரோலின் பங்களாவில் தங்கியிருந்த அறையை வர்ணித்து இன்னொரு ஃபோன்.. உதய் நகைச்சுவைக்கு சொன்ன கட்டுக் கதைகளைச் சொல்லி வேறொரு ஃபோன்.. இந்த பங்களாவில்தான் கரோலின் மகள் ஜெனிதா தூக்கு மாட்டிக் கொண்டாளாம்.. வெள்ளைப் புடவை கட்டி மல்லிகைப்பூ வைத்து ஒரு பெண் உருவத்தில் ஜெனிதாவின் ஆவி அலைகிறதாம்.. ஜெனிதா ஆங்கிலோ இந்தியப் பெண்.. அவள் உயிரோடு இருந்தபோது ஃப்ராக் மட்டும்தான் போடுவாளாம்.. செத்த பிறகு வெள்ளைப் புடவையையும் மல்லிகைப் பூவையையும் எந்த கடை சப்ளை பண்ணியது என்கிறாராம் உதய்.
இந்தச் செய்தியை அலைபேசியில் அவர் சொன்னபோது மணி இரவு ஒன்பது நாற்பத்தைந்து.
அதன் பிறகு அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு இல்லை..
சரி, தூங்கியிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்..
அடுத்த நாளும் அவரிடமிருந்து அழைப்பு இல்லை.. நான் ஃபோன் செய்தால் அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.
என் அடிவயிற்றில் பீதி உண்டானது.
அப்பாதான் அலுவலகத்தில் என்ன வேலையோ, என்னமோ இன்னும் ஒரு நாள் பார்க்கலாம் என்றார்.
அதற்கடுத்த நாளும் அலைபேசி அழைப்பு வரவில்லை..
மூன்றாம் நாள் மாமியார் ஃபோன் செய்தார்.
திவாகர் ஊட்டியிலிருந்து வந்து விட்டதாகவும் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருப்பதாகவும் நான் கோயமுத்தூருக்கு வர முடியுமா என்றும் கேட்டார்.
உடனே அப்பாவும் நானும் புறப்பட்டோம்.
திவாகர் புத்துணர்ச்சியோடு தெரிந்தாலும் மனதளவில் களைப்பாக இருந்தார். கிடைத்த இடைவெளியில் ஏன் ஃபோன் பண்ணல என்று கேட்டேன்.
“ என்ன விளையாடறியா ? ” என்றார் குறும்பாகச் சிரித்தபடி.. “ ஒரு நிமிசம் கூட கேப் விடாம ஒட்டி உறவாடி எல்லாத்தையும் முடிச்ச பிறகு ஏன் ஃபோன் பண்ணலன்னு கேட்டா என்ன அர்த்தம்? ” என்றார். அந்த ‘எல்லாத்தையும்’ என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும்போது அவர் கண்கள் அரை வட்டமடித்தன.
ஒன்றும் புரியாமல் நின்றேன்.. அந்த நான்கு நாட்களை குறிப்பிடுகிறாரா? நான்கு நாட்களில் ‘எல்லாம்’ முடியவில்லையே?
இரண்டு நாள் பிரிவின் தாக்கம் திவாகரிடம் துளிக்கூட இல்லை. ஒரு தள்ளாட்டம் இருந்தது. மறதி, குழப்பமெல்லாம் இருந்தது. ஏதோ உள்ளூர் விடுமுறை நாள் என்பதால் அலுவலகம் போகவில்லை. இருப்பினும் லேப்டாப்பில் அலுவலக வேலை எதிலோ கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
மதியம் நன்றாகத் தூங்கினார்.
அன்றிரவு இரவுச் சாப்பாடு சாப்பிடுவதற்காக அவரை அழைத்து வரப் போனேன். அவர் பாத்ரூமில் இருந்தார். படுக்கை நசநசத்தது. ஏதோ நாற்றம்..! சிறுநீர் நாற்றம்.. ! சந்தேகமில்லாமல் சிறுநீர் தான்.
படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறாரா?
ஒரு வளர்ந்த ஆண் பிள்ளை படுக்கையில் எப்படி..??? ஒரு வேளை புதிதாகக் கல்யாணமானால் இது போன்ற பிரச்சினை ஆண்களுக்கு வருமோ?
நான் குழப்பமாக, பேச வாயெடுத்தேன். அவர் கீழே சென்று விட்டார்.
பாதி சாப்பாட்டில் வாந்தி எடுத்தார். பாலி கிளினிக்குக்கு அழைத்துச் சென்றோம். நல்ல கூட்டம்.. சில பரிசோதனைகளை செய்யச் சொன்னார்கள். லேசான மஞ்சட்காமாலை என்றார் டாக்டர். அங்கேயே ஒரு குளுக்கோஸ் டிரிப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.
திவாகர் எதுவும் பேசவில்லை. ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்றுதான் நாங்கள் எல்லோரும் நினைத்தோம்.
படுக்கையில் படுத்ததும் அவர் தூங்கி விட்டார். நான் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன். மனதில் நிறைய கேள்விகள்.. குழப்பங்கள்... இனம் தெரியாத பயம் ஏற்பட்டது.. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை; என்னையறியாமல் தூங்கி விட்டேன்.
அதிகாலை மூன்றரை மணியிருக்கும்..
வெள்ளைச் சேலை, மல்லிகைப் பூவை சூடிய ஒருத்தி திவாகரை விரட்டிக் கொண்டே வருகிறாள்.
திவாகர் அலறி ஓடுகிறார்..
நான் உலுக்கப்பட்டேன்.. “ சளப் “ ஏதோ சப்தம்..! திடுக்கிட்டு விழித்தேன். சே.. என்ன கெட்ட கனவு..!
நான் சுதாரிப்பதற்குள் அறைக்கதவை விரியத் திறந்து திவாகர் வெளியே பாய்ந்தார்...! அவரைப் பிடிப்பதற்காக நானும் பாய்ந்தேன். தரையில் உருண்டிருந்த அலாரம் கடிகாரம் காலில் தட்டியது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கீழே விழுந்திருந்தது. அந்த சப்தத்தைதான் நான் கேட்டிருக்கிறேன். பாட்டிலின் மூடி கழண்டு வழிந்தோடிய தண்ணீரில் திவாகரைப் போலவே நானும் கால் பதித்து ஓடினேன்.
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திவாகர் பால்கனி சுற்றுச்சுவர் மேல் ஏறி நின்றார். “ஏங்க நில்லுங்க; என்ன பண்றீங்க?? “ நான் கத்தக் கத்த கீழே குதித்தார். “ ஏங்க...! “ என்று அலறினேன். கீழே இருட்டாக இருந்தது. பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அப்பா டார்ச் லைட் சகிதம் ஓடோடி வந்தார்..
நான் கீழே ஓடினேன்.
மாமியாரும் மாமனாரும் கீழறையில் படுத்திருந்ததால் முன்னறையில் யாருமில்லை. நானும் அப்பாவுடன் வீட்டுக்கு வெளியே ஓடினேன்.. எங்கிருந்தாவது என்ன என்ன என்று கேட்டுக்கொண்டே திவாகர் வந்து விடக்கூடாதா என்று மனம் மருண்டது..
பால்கனிக்கு கீழே சற்றுத் தள்ளி...
மண்டை சிதறிய நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தது....
திவாகர்தான்...! ! ! ! !