கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்

......கொஞ்சம் இஷ்டம்
கொஞ்சம் கஷ்டம்.....

இதோடு நூறாவது முறையாக பார்த்தீபனிடமிருந்து கோல் வந்துவிட்டது விதுசாவிற்கு...என்ன தான் அவள் போனை சைலன்ட் மோடில் போட்டிருந்தாலும் அவனிடமிருந்து ஒவ்வொரு அழைப்புகள் வரும் போதும் அவள் கண்கள் அதையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன...

"ஹலோ மேடம்...ஒன்னு வேலைய பாரு...இல்லைனா பார்த்தீபனோட கோலையாவது அட்டெண்ட் பண்ணு...இரண்டுமில்லாம எதுக்கு அங்கேயும் இங்கேயுமா பார்த்திட்டு இருக்காய்...?"

"பச்...நான் என்னடி பண்ண...என்னதான் அவன் கூட சண்டை போட்டாலும்...இந்த மனசு அவனை மட்டுமே தேடிட்டு இருக்கு...மறுபடியும் மறுபடியும் அவன் தான் வேணும்னு அடம் பிடிக்குது....உலகத்தில எத்தனையோ பசங்க இருக்கிறப்போ நான் ஏன்டி அவனைப்போய் லவ் பண்ணினேன்..."

"ஹா...ஹா..."

"சிரிக்காதடி...எனக்கு செம கடுப்பாகுது.."

"ஆனாலும் நானே சில நேரத்தில யோசிப்பேன்...உனக்கும் அவனுக்கும் எப்படித்தான் செட் ஆச்சென்டு...நீயோ கலகலப்பான ஆளு...அவனோ எப்பப் பார்த்தாலும் சிடுசிடுன்னு இருப்பான்...எப்படிடீ அவன் மேல லவ் வந்திச்சு உனக்கு??.."

"அவன் ஒன்னும் சிடுசிடு இல்லை...போடி.."

"பார்ரா கோபத்தை..."

"நீ இல்லை...எல்லாருமே அவனை ஒரு சிடுமூஞ்சினுதான் நினைச்சிட்டு இருக்காங்க...ஏன் நான் கூட ஆரம்பத்தில அவன் கூட பழக முதல் அப்படித்தான் நினைச்சன்...ஆனால் பழகின பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன்...என்னதான் அவன் வெளியில சிடுசிடுன்னு இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு குழந்தை மாதிரின்னு.."

"அப்போ உன் ஆளு பலாப்பழம் மாதிரின்னு சொல்லு..."

"என்கிட்ட இப்போ அடிதான்டி வாங்கப் போறாய்...நான் எவ்வளவு பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்...நீ அவனை கேலி பண்ணிட்டு இருக்காய்...இன்னொரு தடவை அவனை ஏதாவது சொன்னாய் கன்போர்மா அடிதான்..."

"ரொம்பத்தான் போடி...உன்கிட்ட அடிவாங்கி சாகிறதுக்கு,நான் வீட்டை கிளம்புற வழிய பார்க்கலாம்...நீ இங்கேயே இருந்து உன் டீரிம்ஸை கன்டினீயூ பண்ணு...ஆள விடு சாமி"...என்றவாறே அபி அங்கிருந்து கிளம்பிவிட்டாள்....

அபி கிளம்பியதும் போனை எடுத்துப் பார்த்தவள் அவன் மீண்டும் மீண்டும் அழைப்பதைக் கண்டு மனம் கொஞ்சம் இரங்கினாலும் அவன் இறுதியாக பேசிய வார்த்தைகள் அவளது கோபத்தை இன்னும் அதிகரிக்க போனை சுவிட் ஆப் செய்தவள்,அவள் முடிக்க வேண்டிய சில வேலைகளை முடித்துவிட்டு அவளும் வங்கியிலிருந்து கிளம்பியவள்...சிறிது நேரப் பயணத்தின் பின் அவள் தங்கியிருந்த ப்ளாட்டுக்கு வந்து சேர்ந்தாள்....

வெளியூரில் பணி புரிவதால் ஆரம்பத்தில் லேடீஸ் ஹொஸ்டலில் தங்கியிருந்தவள்,அதன் பின் தனியாக பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறாள்....உடை மாற்றிவிட்டு வந்து டீவி பார்க்கத் தொடங்கியவள்,சிறிது நேரத்தில் அப்படியே தூங்கியும் போனாள்...கண்களை மூடியதுதான் தாமதம் கனவு முழுதும் பார்த்தீபனின் உருவமே சுழன்றடிக்கத் தொடங்கியது விதுசாவிற்கு....

அன்றுதான் அவள் அந்த வங்கிக்கு மாற்றலாகி வந்திருந்தாள்...புது இடம் புதிய ஆட்கள் என அவளுக்கு உள்ளூரக் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது...அவளை முதலில் புன்னகையோடு வரவேற்றது அபிதான்...அதன் பின் வந்த நாட்களில் அபியே அவளுடைய நெருங்கிய தோழியாகவும் மாறிப் போயிருந்தாள்....விதுசாவிற்கு முதலில் இருந்த தயக்கம் பயம் அனைத்தும் நாட்கள் செல்லச் செல்லச் காணாமலே போயிருந்தது...அவளும் அவர்களுக்குள் ஒருத்தியாக ஐக்கியமாகிப் போயிருந்தாள்...

அவள் அந்த வங்கிக்கு வந்து ஒரு மாதத்தின் பின்னே பார்த்தீபனை முதன் முதலாக சந்தித்தாள்....மெடிக்கல் லீவில் இருந்தவன் அன்றே வங்கிக்கு வந்திருந்தான்...அவனை அவள் அன்றுதான் பார்த்திருந்தாலும் அவனைப் பற்றிய தகவல்களை ஏற்கனவே அனைவர் வாய்மூலமாகவும் அறிந்து வைத்திருந்தாள்...அந்த வங்கியின் மேனஜராக பணிபுரியும் அவனுக்கு அங்கே வேலை செய்யும் அனைவரும் ஒன்றிணைந்து வைத்த பெயர் "சிடுமூஞ்சி கிட்லர்"...அவனைப்பற்றி அனைவரும் சொன்னதைக் கேட்டு லேசாக உள்ளே பயந்திருந்தவள்...முதல் சந்திப்பிலேயே அவனிடம் நன்றாக வாங்கியும் கட்டிக் கொண்டாள்...

அதன் பின் அவனிடம் திட்டு வாங்கக் கூடாதென்பதற்காவே ஒருதரத்திற்கு இருமுறை அனைத்தையும் சரிபார்த்தே அவனிடம் கையொப்பம் வாங்க வேண்டிய பேப்பர்ஸை கொண்டு செல்வாள்....ஆனாலும் அதற்கு அவனிடமிருந்து கிடைக்கும் ஒரே பதில் "குட் வோர்க்"...அதற்கு மேல் வேறெதுவுமே சொல்லமாட்டான்....அதையுமே முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டே சொல்வான்....ஒரு போட்டோக்காவது இவன் சிரிப்பானா சிரிக்கமாட்டானா என விதுசா அடிக்கடி மனதில் நினைத்துக் கொள்வதுமுண்டு...

இப்படியே சென்று கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் மழை நாளொன்றில்தான் அவளுக்கும் அவனுக்குமிடையே காதல் துளிர்விடத் தொடங்கியது ...அன்று அவள் முடிக்க வேண்டிய வேலைகள் அதிகமாய் இருந்ததால் அனைத்தையும் முடித்துக் கிளம்ப இரவு எட்டு மணியாகிவிட்டது...

வெளியில் வந்து பார்த்தவளுக்கு மழை கொட்டோ கொட்டோன்னு கொட்டிக் கொண்டிருந்ததில்,எப்படி வீட்டிற்குப் போவதென்று அறியாமல் நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள்...அப்போதுதான் பார்த்தீபனும் அவனது வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பத் தயாராக வந்தான்...அவள் அங்கே தனியாக நிற்பதைக் கண்டு அவள் அருகே வந்தவன்...

"ஹேய் நீ இன்னும் கிளம்பலையா??இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்காய்..."

அவன் இவ்வளவு நீளமாக அவளிடம் வந்து பேசியதில் அவனையே ஆவென்று சிறிது நேரம் நோக்கியவள்,அவனது கேள்வி உறைக்க அவனையும் மழையையும் மாறிப் மாறிப் பார்த்தாள்...அவளது பார்வை சென்றதை வைத்தே அவளது காரணத்தை ஊகித்துக் கொண்டவன் தானே டிரோப் பண்ணுவதாகச் சொன்னான்...

"சரி வா...நானே உன்னை உன் ப்ளாட்டில டிரோப் பண்ணிறன்..."

"இல்லை வேண்டாம்...உங்களுக்கு எதுக்கு சிரமம்...நான் பைக்லதான் வந்தேன்..மழை கொஞ்சம் குறைஞ்சதும் நானே போய்க்கிறேன்..."

"லூசா நீ...மழை இப்படி பெஞ்சிட்டு இருக்கு,இதில போனனா புள்ளா நனைஞ்சிட வேண்டியதுதான்...இது இப்போ குறையுற மாதிரியும் இல்லை...உன் பைக்கை பூட்டி பார்க்கிங்ல விட்டிட்டு வா...நானே உன்னை விட்டுறேன்..."

அவன் அவளை லூசு என்றதில் லேசாக கோபம் வந்தாலும்...அவன் அவளது நல்லதிற்குத்தானே சொல்கிறான் என்பதால் அவன் சொன்னவாறே பைக்கை பார்க்கிங்கில் விட்டு பூட்டிவிட்டு வந்தாள்...ஆனாலும் அவனுக்கு கஷ்டம் கொடுக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை...அதனால்..

"உங்களுக்கு எதுக்கு வீண் அலைச்சல்...நீங்க என்னை பஸ் ஸ்டான்டில விட்டாலும் ஓகே...நான் போய்க்கிறேன்..."

"எனக்கு ஒன்னும் கஷ்டமில்லை...என் கார்தான் உன்னை சுமக்க போகுது...நானில்லை...என் வீட்டுக்கு போற வழியில்தான் உன் ப்ளாட்டும்...சோ எனக்கொன்னும் ப்ரொபிளம் இல்லை..."என்று சொல்லும் போதே அவனது குரல் முன்னைவிட சற்று உயர்ந்தே இருந்தது...

அவன் இவ்வளவு இறங்கிப் பேசுவதே அதிசயம்...இதில் எதற்கு அவனோடு இன்னும் வாக்குவாதம் பண்ணுவான் என்று யோசித்தவள்,அவனுடனேயே கிளம்பத் தயாரானாள்...கிளம்புவதற்கு முன் செக்ரியூட்டியை அழைத்து ஏதோ சொன்னவன்...அவள் ஏறுவதற்காக காரின் கதவையும் திறந்துவிட்டான்...அது ஏனோ விதுசாவிற்கு மிகவும் பிடித்திருந்தது...அவனைப்பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும்...வங்கியில் வேலை செய்யும் எந்தப் பெண்களிடமுமே அவன் இந்தளவுக்கு பேசிக் கண்டதில்லை அவள்...ஏன் அவளிடமே இன்றுதானே இந்தளவுக்கு பேசியிருக்கிறான்...அப்படிப்பட்டவன் அவளுக்காக கார் கதவை திறந்துவிட்டதில் உள்ளூரக் கொஞ்சம் பூரித்துத்தான் போனாள்...அதையே அவள் ஆராய்ந்து கொண்டிருக்கு கார் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது...
அவளது யோசனையிலிருந்து அவளை மீண்டும் முழிப்புக்கு கொண்டு வந்தது அவனது குரல்தான்...

"உன்னோட ப்ளாட் டோலர் காலணியில ஏ பிளாக்கில தானே இருக்கு..."

"ஆஆஆ ஆமா.."என்று தடக்கி தடக்கி சொன்னவள்,இவனுக்கு எப்படி நம்ம பிளாட் தெரியும்னு யோசிக்காமலுமில்லை..

"என்ன...இவனுக்கு எப்படி இது தெரியும்னு யோசிக்கிறியா..??"

அவள் மனதில் நினைத்ததை அவன் நேரடியாகக் கேட்டதும் திகைத்து விழித்தவள்,
இல்லை...ஆமா...என்று மாறி மாறி உளறிக்கொட்டினாள்...அவளது தடுமாற்றத்தைக் கண்டு பெரிதாகச் சிரித்தவன்,அவள் அதையும் கண்ணை விரித்துப் பார்ப்பதைக் கண்டு இன்னும் நன்றாக சிரித்தான்...

"என்ன...என்னையே பார்த்திட்டு இருக்காய்..?"

அவனது கேள்வியில் தன் நிலையை உணர்ந்தவளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது...அந்த ஏசியிலும் அவளுக்கு வியர்க்கத் தொடங்கியது...

"ஓகே...ஓகே...கூல் விதுசா...எதுக்கு இவ்வளவு பதற்றம்...நான் யஸ்ட் சும்மாதான் கேட்டேன்..."

"உன் ப்ளாட்டுக்கு கொஞ்சம் தள்ளித்தான் என் வீடும் இருக்கு...ஒருதடவை நீ அதில திரும்பிப் போனப்போ பார்த்தன்...அதை வச்சுதான் நீ அங்கேதான் தங்கியிருக்காய்னு தெரியும்...இப்போ உன் சந்தேகம் தீர்ந்திச்சா..??"

அவனது விளக்கத்திற்கு ம்ம் என்று முணுமுணுத்து வைத்தவள் ப்ளாட் வந்து சேரும் வரை அவனது பக்கமே திரும்பவில்லை அவள்...

"இப்பவாச்சும் உன் கழுத்தை திருப்பி பாரு...உன் ப்ளாட் வந்திருச்சு.."

"ஓஓ...ரொம்ப தாங்ஸ்..."என்று சொல்லிவிட்டு இறங்க முயற்சித்தவளை அவனது குரல் மீண்டும் தடுத்து நிறுத்தியது...

"ஹேய் இரு...இந்தக் குடையை பிடிச்சிட்டுப் போ..."

இப்போது இந்தக் குடையை வாங்க மறுத்தால் அதற்கும் ஏதாவது சொல்வான் என்பதால் அதை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டாள்..

"தாங்ஸ் சேர்..."

"பார்த்துப் போ...எல்லா இடமும் ஒரே தண்ணியா இருக்கு...குட் நைட்.."

"ம்ம்...குட் நைட் சேர்.."என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றால் போதுமென்று இறங்கி விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினாள் விதுசா...

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு முதன் முதலாக அவளுடனான சந்திப்பு நினைவில் தோன்றி அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது...அன்று அவன் திட்டியதும் படபடத்த அவள் கண்கள் அவளது கண்ணாடி வழியே அவனுக்கு நன்றாகவே தெரிந்தது...அதன் பின் வந்த நாட்களில் அவனை அறியாமலேயே அவளைப் பார்க்கத் தொடங்கியிருந்தான்...அவளது குழந்தைத்தனமான நடவடிக்கைகளை ரசிப்பதே அவனது முழுநேரத் தொழிலாகவும் மாறிப்போனது...தனக்குள் நிகழும் புது மாற்றங்களை எண்ணி வியந்தவன் காரை ஸ்டாட் செய்து வீடு நோக்கிப் புறப்பட்டான்....

அவளது ப்ளாட்டை வந்தடைந்ததும்தான் விதுசாவின் இதயத்துடிப்பு சீராக இயங்கத் தொடங்கியதென்றே சொல்லலாம்...குளித்து உடைமாற்றிவிட்டு வந்து கட்டிலில் விழுந்தவளுக்கு அவனது ஞாபகமே மீண்டும் மீண்டும் வந்து அவளை இம்சைப்படுத்திக் கொண்டிருந்தது...அவன் என்னதான் சிடுசிடு என்று இருந்தாலும் அவனது குணத்தால் அவள் என்றோ அவன்பால் கவரப்பட்டிருந்தாள்...அவளை அறியாமலேயே அவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையொன்று அவளுள் உருவாகியிருந்தது...அது தந்த தையிரியத்தில்தான் அவன் டிரோப் பண்ணக் கேட்டதுமே சரியென்று தலையாட்டிவிட்டாள்...இன்று அவன் அவளிடம் பேசிய அனைத்தையும் நினைத்து நினைத்து பார்த்துச் சிரித்தவள் அப்படியே உறங்கிப் போனாள்...

அதன் பின் வந்த நாட்களில் அவன் அவளிடம் சகஜமாகவே பேசிப் பழகத் தொடங்கினான்...ஆரம்பத்தில் அவனிடம் பேச கொஞ்சம் சங்கடப்பட்டாலும் போகப் போக அவளும் அவனுடன் நன்றாகவே கதைக்கத் தொடங்கினாள்...இப்படியே அவர்களுக்கிடையே நல்ல நட்போடு இணைந்து காதலும் வளரத் தொடங்கியிருந்தது...லஞ்சிற்கு ஒன்றாக இணைந்து சாப்பிடுவதிலிருந்து அவனுடனேயே வங்கிக்கு வருவதையும் போவதையும் பழக்கப்படுத்திக் கொண்டாள் விதுசா...அவனோடு இருக்கும் நிமிடங்கள் அத்தனையையும் அவள் மிகவும் விரும்பினாள்...அவளைப் போல்தான் அவனுக்குமென்று அவனது பேச்சுக்களிலும் பார்வைகளிலும் புரிந்து கொண்டவள்,அவன் காதலைச் சொல்லப் போகும் அந்த ஒரு நிமிடத்திற்காய் காத்திருக்கத் தொடங்கினாள்....

இவர்களுக்கிடையேயான நெருக்கத்தை பார்த்து முதலில் வங்கியில் வேலை பார்த்த அனைவரும் வாயைப் பிளந்தாலும்...அதன்பின் அவளை அடிக்கடி கேலி செய்து ஒருவழி பண்ணத் தொடங்கினர்...அபி அவளை பிடிபிடின்னே பிடித்துவிட்டாள்...

"அடி கள்ளி...இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ட ரேஞ்சில இருந்தியேடி,உனக்குள்ளேயும் இப்படியொரு காதல்மன்னி இருக்கிறது எனக்குத் தெரியாமப் போச்சே..."

"ஹி...ஹி.."

"சிரிக்காத...என்கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்டல்ல..."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லைடி....எனக்கே அவன் மேல எப்போ காதல் வந்திச்சின்னு தெரியவே இல்லைடி...இன்னும் அவன்கிட்ட என் காதலைச் சொல்லல,அவனும் சொல்லல...ஆனாலும் நாங்க இரண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் அவ்வளவு காதலிக்கிறோம்..."

"இதை என்னை நம்பச் சொல்றியாக்கும்??காதலைச் சொல்லாமலா நீயும் அவனும் எப்பவுமே ஒன்னா சுத்திட்டு இருக்கீங்க..?"

"மனசுக்குள்ள இருக்கிற காதலை வார்த்தைகளில சொல்லனும்னு அவசியமில்லைடி...ஆனாலும் அவன் அவனோட காதலை என்கிட்டயும்...நான் என்னோட காதலை அவன்கிட்டயும் முதன் முதலா சொல்லுற அந்த நிமிசம் வாழ்க்கையில ஒருதடவைதான் வரும்...அது ரொம்ப அற்புதமான தருணம்...அந்த ஒரு நாளுக்காகத்தான் நான் இப்போ காத்திட்டு இருக்கேன்...."

"மேடம் சேரை ரொம்ப லவ் பண்றீங்க போல...நீ கதைக்கும் போதே அவன் மேல நீ வச்சிருக்கிற காதல் உன் கண்ணில தெரியுது...எது எப்படியிருந்தாலும் நீங்க இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோசப்படுற முத ஆள் நானாத்தான் இருப்பேன்..."என்றவாறே விதுசாவை அணைத்து தன் வாழ்த்தைச் சொன்னாள் அபி...

காதலைச் சொல்லாமலே ஒருவருக்கொருவர் காதலை வளர்த்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் பார்த்தீபனுக்கான பணி இடமாற்றமும் வந்தது....அதே இடத்தில் வேறு ஒரு கிளைக்கு மாற்றப்பட்டிருந்தான்...இதுவே அவர்களுக்கிடையேயான முதல் விரிசலுக்கு பிள்ளையார் சுழி போட்டது என்று சொல்லலாம்...ஒரே வங்கியில் பணிபுரியும் போது ஒன்றாகவே இணைந்திருந்தவர்கள் வேறு வேறு இடமென்றான பின் சந்தித்துக் கொள்வதென்பதே அரிதாகிப்போனது...வருட இறுதி என்பதால் அவர்கள் இருவருக்குமே வங்கியில் அதிக வேலையிருந்தது...அதிலும் விதுசாவிற்கு அங்கிருந்தே நகரவே முடியாத அளவிற்கு வேலைகள் குவிந்து போய்க்கிடந்தன...அவனோடு பேசும் நேரங்களே குறைந்து போயின...

எப்போதும் அவள் தன்னுடனேயே இருக்க வேண்டுமென்று எண்ணிய பார்த்தீபனால் இந்தப் பிரிவை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தே நான்கு வாரங்கள் ஆயிருந்தன....கோல் எடுத்தாலும் அவள் ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டாள்...இதனால் அடிக்கடி அவன் அவள் மேல் கோபித்துக் கொள்வதும் அவள் அவனை சமாதானப்படுத்துவதுமென்று அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது...

இப்படிக் காதலும் மோதலுமாய் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் பெரிய குண்டொன்றையே தூக்கிப் போட்டார் விதுசாவின் அம்மா இந்திராணி...அவரது அண்ணாவின் மகன் கௌதமிற்கும் அவளுக்குமான திருமணம் பற்றிய செய்தியே அவள் காதல் கனவுகளில் புயல் வீசக் காரணமாக அமைந்தது...ஏற்கனவே அவளுக்கும் அவனுக்குமான இடைவெளி அதிகரித்திருந்த நிலையில்,இதை சொன்னதும்தான் தாமதம் அவன் அவளை வார்த்தைகளாலேயே கொன்று புதைத்துவிட்டான்...

"ஓஓ...அப்போ மேடம் புதுப் பொண்ணாயிட்டீங்கன்னு சொல்லுங்க...எங்களை உங்க கல்யாணத்துக்காவது கூப்பிடுவீங்களா...இல்லை??..."

"ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க பார்த்தி,எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு..வீட்டில முடிவு பண்ணி இருக்காங்க என்டுதான் சொன்னேன்...என் மனசுல அவன் இருக்கான்னா சொன்னேன்..?"

"அடுத்தது அதை தானே சொல்லப்போறாய்...கொஞ்ச நாளா நீ என்கிட்ட டிஸ்டென்ட் மெயின்டேன் பண்ணும் போதே யோசிச்சிருக்கனும்டி...உனக்கு சுத்துறத்துக்கு ஒரு ஆளு...கல்யாணம் பண்றதுக்கு ஒரு ஆளு... நடுவில நான் தான் பைத்தியக்காரன் ல..."

"பார்த்தி...பிளீஸ் இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க...அது எதையும் தாங்கிற சக்தி எனக்கில்லை..."

"நல்லாத்தான் நடிக்கிறாய்...ஆனால் இன்னும் உன் நடிப்பை பார்த்து ஏமாற நான் ஒன்னும் இளிச்சவாயன் இல்லைடி...உன்னைப் போல ஒருத்தியபோய் காதலிச்சு தொலைச்சன் பாரு...என்னை நினைக்க எனக்கே வெறுப்பா இருக்கு..."

தன்னை அவன் காதலிப்பதாக சொல்லும் நிமிடம் எவ்வளவு அழகாக இருக்க வேண்டுமென்று நினைத்தாள்....இப்படி அவன் வெறுப்போடு சொல்வதைக் கேட்கவா அவள் அவனை உருகி உருகிக் காதலித்தாள்...

"அப்போ என்னை மோசமானவன்னே கன்போர்ம் பண்ணீட்டீங்க...ரொம்ப சந்தோசம் மிஸ்டர் பார்த்தீபன்...இதுவரைக்கும் பண்ண எல்லாத்துக்கும் ரொம்ப தேங்ஸ்...இனிமே என் வாழ்க்கையில உங்களை நான் பார்க்கவே கூடாது...குட் பை..."என்றவாறே கோலைக் கட் செய்தவள்,சிறிது நேரம் போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்....

"என்னவெல்லாம் சொல்லிவிட்டான்..."அவனது வார்த்தைகளையே நினைத்து நினைத்து அன்று முழுதும் அழுதழுதே உறங்கிப் போனாள்....காலையில் கண்விழித்து போனை பார்த்தவளுக்கு அவனிடமிருந்து 1000 அழைப்புகளுக்கு மேல் வந்திருந்ததை பார்த்து கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான் போனாள்...

ஏற்கனவே ஏற்பட்டிருந்த இடைவெளியில் எங்கே அவள் அவனை விட்டுப் போயிடுவாளோ என உள்ளூரக் கொஞ்சம் பயந்திருந்தவன்,அவள் கௌதம்பற்றிச் சொன்னதும் அவனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ....அனைத்தையும் அவள் மீதே கொட்டித் தீர்த்துவிட்டான்...ஆனால் அவள் இறுதியாக அழுதழுது குட்பை என்று சொல்லிவிட்டு போனைக் கட் செய்ததும்தான் அவனுக்கு அவனது தவறே உறைத்தது...அவனை நினைக்க அவனுக்கே வெறுப்பாக இருந்தது...இரவு முழுதும் அவளுக்கு விடாது அழைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தவன்...அவள் அழைப்பை எடுக்காமலிருந்ததில் பயந்து போய் அவளது ப்ளாட்டிற்கு கிளம்பத் தயாரானவன்....அவளது முகத்தில் எப்படி முழிப்பதென்று தெரியாமல் தாமதித்தான்.....இரவு முழுதுமே ஒரு பைத்தியக்காரன் போல அறைக்குள் அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தவன்,காலையிலிருந்து அவளுக்கு விடாது அழைப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்...

அவளுக்கும் அவனுக்குமிடையேயான அனைத்தும் ஓர் படம் போலே ஓடி மறைய தீடீரென்று கண்விழித்துப் பார்த்தாள் விதுசா...காலையில் அவனிடமிருந்து வந்திருந்த 1000 அழைப்புகளை பார்த்ததுமே அவளது கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது...ஆனாலும் அவன் நேரில் வரட்டுமென்றே காலையிலிருந்து அவனது கோல் ஒன்றையும் அட்டென்ட் பண்ணாமலிருந்தாள்...ஆனால் அவன் அவளைத் தேடி வரவில்லையென்றதும் அவளுக்கு மிகவும் ஏமாற்றமாகவும் கவலையாகவும் இருந்தது...தன் மனதை நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொண்டவள் போனை ஆன் செய்தாள்...

இந்த முறை அவனிடமிருந்து அழைப்புகளிற்கு பதில் வொய்ஸ் மெசெஜ்கள் குவிந்துபோய்க் கிடந்தன...அதை ஒவ்வொன்றாய் அழுத்திக் கேட்கத் தொடங்கினாள்...

சிறிது நேரம் ஒன்றுமே கேட்கவில்லை... அமைதியாகவே இருந்தது...அதன் பின் அவன்தான் பேசத் தொடங்கினான்...அவனது குரலில் இருந்தே அவனும் அழுதிருக்கிறான் என்பதை உணர்ந்தவளுக்கு அவன் மீதான கோபம் இருந்த இடம் தெரியாமல் காணாமற் போனது...அதன் பின் அவன் சொன்ன அனைத்தையும் கேட்டவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை...

"நான் நேத்து பேசின எல்லாத்துக்கும் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை போதுமான்னு தெரியல விது...ஆனால் அதை தவிர வேற எதுவும் இருக்கான்னும் தெரியல...நான் பேசின வார்த்தைகள் உன்னை எந்தளவுக்கு காயப்படுத்தியிருக்கும்னு என்னால உணர முடியுது...அந்த வார்த்தைகளை எல்லாம் என்னால திருப்பி எடுத்துக் முடிமான்னு தெரியல...ஆனால் உன்னோட காயங்களுக்கெல்லாம் மருந்தா என்னால எப்பவுமே இருக்க முடியும்..."

"நான் அதிகமாய் நேசிச்ச யாருமே என்கூட அதிக நாட்கள் இருந்ததில்லை....அம்மா...அப்பாவில ஆரம்பிச்சு என் உயிர் நண்பன் குமரன் வரை எல்லோரையுமே ரொம்ப சீக்கிரமா இழந்திட்டன்...அதனாலேயே நான் யார் மேலேயும் அதிக அன்பு வைக்கக் கூடாதின்னு நினைச்சன்...அப்படி வைச்சா அவங்க என்னைவிட்டு போயிருவாங்க என்ற பயம் எனக்குள்ள ஆழமாய் பதிஞ்சு போச்சு.."

"உன்னை முதன் முதலா பார்த்தப் போ...உன்னோட அந்தக் கண்களுக்குள்ள நான் கைதாகனும்னு தோனிச்சு...உன்னோட குழந்தைத்தனத்தை பார்த்தப் போ,உன் மடியில நானும் ஒரு குழந்தையா தூங்கனும்னு தோனிச்சு...என்னை அறியாமலேயே நான் உன்னை நேசிக்க ஆரம்பிச்சேன்...எப்பவும் நான் உன் பக்கத்திலேயே இருக்கனும்னு நினைச்சன்...இதுவரையில எனக்கு கிடைக்காத அன்பு மொத்தமும் உன்கிட்டயிருந்து மட்டுமே கிடைக்கனும்னு நினைச்சன்..."

"நீ மட்டுமே போதும்...உன்னை வாழ்க்கை பூரா உனக்காக மட்டுமே காதல் பண்ணணும்...உன் கையை என்னோட இறுதி நிமிடம் வரைக்கும் எனக்குள்ளேயே வைச்சு பாதுகாக்கணும்னு ஆயிரம் கனவுகள் எனக்குள்ள உலாவிட்டு இருந்தப்போதான் நமக்குள்ள பெரிய இடைவெளி ஒன்னும் உருவாகத் தொடங்கிச்சு....உன்கூடவே இருக்கிறவரைக்கும் காணாம போயிருந்த என்னோட பயம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொல்லாமல் கொல்லத்தொடங்கிச்சு..."

"நான் நானாகவேயில்லாம தவிச்சிட்டு இருந்தப்போதான் நீ கௌதம் பத்தி சொன்னாய்....என்னால என்னையே கொன்ரோல் பண்ண முடியல...நீயும் கடைசில என்னை விட்டிட்டு போயிட்டதாவே என் மனசு எண்ணத் தொடங்கிற்று....அந்தக் கோபம்,வலி இதை எல்லாம் எங்க காட்டுறன்னு தெரியாம உன்னையே காயப்படுத்தி சாகடிச்சுட்டேன்....நீ கடைசியா போனைக் கட் பண்ணதும்தான் நான் எவ்வளவு முட்டாள்தனமா என்னோட விதுகிட்ட பேசியிருக்கேன் என்டதே புரிஞ்சிது..."

"இது எல்லாத்தையும் உன் முன்னாடி மண்டியிட்டு,உன் மடியில சாய்ஞ்சு சொல்லிச் சொல்லி என் கண்ணீர் மொத்தத்தையும் கரைக்கனும்னு தோனுது...ஆனால் உன்னை பார்க்கனும்னு நினைச்சாலே என் மேலேயே எனக்கு கோபம் கோபமாய் வருது...உன்னை எப்படி என்னால நேருக்க நேராய் பார்க்க முடியும்...இது எல்லாத்தையும் சொல்லி என்னோட தப்பை நான் நியாயப்படுத்த விரும்பல...நான் பண்ணிணது உன்னால மன்னிக்க முடியலைன்னாலும் பரவால...ஆனால் என்னை எப்பவுமே வெறுத்திடாத விது....உன்னால நான் காதலிக்கப்படல என்டத கூட தாங்கிக்குவேன்...ஆனால் உன்னால நான் வெறுக்கப்படுறேன் என்டத என்னால தாங்கிக்கவே முடியாதுடி....."

"இதுக்கு மேல என்ன சொல்றதுன்னே தெரியல...உனக்கு எப்போ என்னை மன்னிக்கனும்னு தோனுதோ அதுவரைக்கும் உனக்காகா நான் என்னோட காதலோட எப்பவுமே காத்திட்டிருப்பேன்...ஐ லவ் யூ விது...ஐ லவ் யூ சோ மச்...."என்று அழுகையோடே முடித்திருந்தான்.....

அனைத்தையும் கேட்ட விதுசாவால் அழாமல் எப்படி இருக்க முடியும்??அவளது கண்கள் அவளைக் கேட்காமலேயே கண்ணீரைப் பொழியத் தொடங்கிவிட்டன...இதுவரையில் அவன் அவனது குடும்பம்பற்றிச் சொன்னதில்லை..அவளும் அவனாகவே சொல்லட்டுமென்று அதைப்பற்றிக் கேட்டதுமில்லை...இப்போது அனைத்தையும் தெரிந்து கொண்டவளுக்கு அவன் மீதான காதல் இன்னும் அதிகரித்தது...அவன் பேசிய அந்த வார்த்தைகள் அனைத்துமே மறந்து போனது...அவன் மட்டுமே அவளது கண்களுக்குள் நின்றான்...அவனை இப்போதே ஓடிச்சென்று உனக்கு நானிருக்கிறேன் என்று சொல்லி அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது...சிறிதும் யோசிக்காமல் அவளது பைக்கை எடுத்துக் கொண்டு அவனது வீட்டை நோக்கி புறப்பட்டுவிட்டாள் விதுசா...

அவனது வீட்டை வந்தடைந்ததும்தான் தான் நைட் ரெஸ்ஸோடு நடுராத்திரியில் கிளம்பி வந்ததே அவளுக்கு உறைத்தது...

"ஆனாலும் உனக்கு ஓவர் தைரியம்தான்டி விது...இந்த நேரத்தில இந்தக் கோலத்தில எப்பிடிடீ அவன் முன்னாடி போவாய்.."என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டு தன்னைத்தானே மேலிருந்து கீழ்வரை அளந்து கொண்டாள்...நல்ல வேளை அன்று பாவாடை சட்டைதான் போட்டிருந்தாள்...அதுவே கொஞ்சம் மனதிற்கு ஆறுதலளிக்க சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவன் வீட்டிற்குள் எவ்வாறு நுழைவதென்று யோசிக்கத் தொடங்கினாள்...

அவன் அந்த மாடி வீட்டில் தனியாக இருப்பது அவளுக்கு அன்று வசதியாகிப்போனது...அதிலும் அவன் நாய் போன்ற மிருகங்களை வளர்க்காதது இன்னும் வசதியாகிப் போனது அவளுக்கு...கேட் பூட்டியிருப்பதைப் பார்த்தவள்,மதிலேறிக் குதிப்பதென்றே முடிவு செய்து கொண்டாள்...அவளது பைக்கை மதிலோரமாக நிறுத்தியவள் அதற்கு மேலே ஏறி மதிலைத்தாண்டி உள்ளே சென்றாள்..."நல்ல வேளைடி விது இது நடுராத்திரியாப் போச்சு...இல்லைனா உன்பாடு கோவிந்தா தான்...."

உள்ளே வந்ததுமே அவளுக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது...இதில் அவனது அறை வேறு மாடியில் என்று யோசித்தவளுக்கு...உயிரே போய்விடும் போலிருந்தது...அவளது கஸ்டத்தை குறைக்கவென்றே அவள் கண்களில் ஏணியொன்று பட அதை வைத்தே மேல் மாடியைச் சென்றடைந்தாள்...அவனது அறையின் வெளிக் கதவு திறந்திருந்ததைக் கண்டவள் சத்தமின்றி உள்நுழைந்தாள்..

அங்கே அவன் அவளது போட்டோவை கையில் வைத்தவாறே தூங்கியிருந்தான்...நித்திரையிலும் அவன் முகத்தில் தெரிந்த சோகம் அவள் மனதை உலுக்க அவன் தலையை எடுத்து தன் மடிமேல் சாய்த்துக் கொண்டவள்...அவன் தூங்கும் அழகை ரசிக்கத் தொடங்கினாள்...

தீடிரென்று ஏதோ கனவிலிருந்து எழுபவன் போல் விழித்துக்கொண்டவன்,அருகில் அவளைக் கண்டதும் கனவென்றே முடிவு செய்து கொண்டான்...அவனது முழியிலிருந்தே அவன் மனதிலோடுவதை உணர்ந்து கொண்டவள்...அவன் தொடையில் கிள்ளினாள்...

"ஆஆஆஆ....அப்போ இது கனவில்லையா...விது நீ உண்மையாவே என் பக்கத்திலதான் இருக்கியா..??"

"ம்ம்....சேருக்கு ஒருதடவை கிள்ளினது பத்தாது போல இருக்கே..என்று குறும்பாகச் சிரித்தவள்...அவன் எதிர்பாராத வேளை அவன் கன்னத்தில் முத்தமிட்டு இது கனவல்ல நிஜமென்பதை உணர்த்தினாள்..."

அவள் முத்தமிட்டதும் அவன் வேறு உலகிற்கே சென்று வந்தவன் அவள் கண்களில் தெரிந்த அளவில்லா காதலில் தன்னை மறந்தவன்,அவளை இறுக்கமாய் இழுத்து அணைத்துக் கொண்டான்...அவனை விட இறுக்கமாய் அவளது கரங்கள் அவனைப்பற்றிக் கொண்டது...வார்த்தைகளில் சொல்லிட முடியா காதலை அவர்களது அணைப்பு இருவருக்குமே உணர்த்தியது...

தம்மை மறந்த நிலையில் ஒருவர் அணைப்பில் ஒருவர் ஐக்கியமாகிப் போயிருந்தவர்கள்...மெதுவாக விடுபட்டு விழிகளோடு விழிகளை மோதவிட்டார்கள்..

"உன்னால என்னை எப்பிடிடீ மன்னிக்க முடிஞ்சிது..?"அவனது குரலில் இருந்த சோகம் அவளை ஏதோ செய்ய...அவனது உதட்டில் தன் விரல்களை வைத்து அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தவள்...

"அதை மறந்திடுங்க பார்த்தி...அதைபத்தி இனிமே பேச வேணாம்...."

"உன்னால அதை மறக்கமுடியுமா??.."

"அதை மறந்ததாலதானே இப்போ உங்களைத் தேடி வந்திருக்கேன்...அதைபத்தி மறுபடியும் மறுபடியும் பேசிறதால நம்ம இரண்டு பேருக்கும் தான் கஸ்டம்...உங்களோட காதல் மட்டும் தான் இப்போ என் மனசு பூரா நிறைஞ்சிருக்கு...என் வாழ்க்கை முழுதும் அது ஒன்னே போதும்..."

"அப்போ என் காதல் மட்டும் போதுமா??நான் வேண்டாமா விது??என்று கண்ணடித்துச் சிரித்தவன்...வெட்கத்தில் சிவந்த அவள் கன்னங்களை வெகுவாக ரசித்தான்...

"ஹேய்...வெட்கப்பட்டது போதும்...என் கேள்விக்கு பதிலைச் சொல்லு...நான் உனக்கு வேண்டாமா??என்று அவன் தன் கேள்வியிலேயே நின்றான்..."

"ம்ம்...வேண்டாம் போடா..."என்றவள் வெளியில் ஓடிவந்து நின்று கொண்டாள்...

அவளையே துரத்திக் கொண்டு ஓடி வந்தவன்...அப்போதுதான் அவளது ஆடையையும் நேரத்தையும் கவனித்தான்...

"ஹேய்...இப்போ நடுராத்திரியா...நீ எப்பிடி வந்தாய்..."

அவனது தீடீர் ஞானத்தில் வாய்விட்டுச் சிரித்தவள்...

"ம்ம்....சேர் சூப்பர் மேன் மாதிரி என்னைத் தேடி வந்திருக்கனும்...வரல...வேற வழி நானே சூப்பர் வுமனா மாறி மதில் ஏறிப்பாஞ்சு வரவேண்டியதாப் போச்சு..."

அவள் அதை நக்கலாக சொன்னாலும் அந்த நேரத்தில் தன்னைப் பார்க்க இவ்வளவு கஸ்டப்பட்டு வந்திருக்கிறாள் என நினைக்கும் போது அவன் மீதான அவளது காதலை நினைத்து அவனுக்கு கர்வமாக இருந்தது...

"இந்த சூப்பர்வுமனுக்கு என்னை அவ்வளவு பிடிச்சிருக்கா...?"

"விடையைத் தெரிஞ்சுக்கிட்டே கேள்வி கேட்டா என்ன பண்றதாம்.."

"அந்த பதில அவங்க வாயாலேயே கேட்கணும்னு அவர் விரும்புறார்னு நினைச்சுக்க வேண்டியதாம்..."

அவனது குறும்புத்தனமான பதிலில் புன்னகைத்தவள்...அவனை நெருங்கி அவனது கரங்களை இறுக்கமாய் பிடித்துக் கொண்டே,அவனது கண்களை நேருக்கு நேராய் பார்த்தவாறு அவனுக்கான பதிலைச் சொல்லத் தொடங்கினாள்...

"உன்னை எனக்கு எவ்வளவு பிடிச்சிருக்கென்டு சொல்லனும்னா அதுக்கு என்னோட வாழ்க்கை முழுதுமே போதாது.....உன்னை ஏன் பிடிச்சிருக்கென்டு சொல்லனும்னா அதுக்கு உலகத்தில இருக்கிற வார்த்தைகள் காணாது....இது எல்லாத்துக்கும் உனக்கு பதில் கிடைக்கனும்னா என்னோட இந்தக் கரங்களை கடைசி வரைக்கும் இப்படியே இறுக்கமாய் பிடிச்சுகிட்டே என் கூட வா...என்னோட நீ வாழப்போற ஒவ்வொரு மணித்துளியும் என்னோட காதலை உன்கிட்ட சொல்லிட்டே இருக்கும் நான் இறந்த பின்னாடியும் கூட..."என சொல்லி முடித்தவள் அவன் மார்போடு சாய்ந்து அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்...

அவளது பதிலில் கண்கள் கலங்க நின்றவன்...அவளை விடவும் இறுக்கமாய் அவளை அவனோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்...அப்போது அவர்களை இணைத்து வைத்த மழை அவர்களை வாழ்த்த சோவென்ற சத்தத்தோடு பெய்யத் தொடங்கியது....மழையைக் கண்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்....


இனி எல்லாம் வசந்தமே.....

எழுதியவர் : அன்புடன் சகி (12-Aug-17, 1:33 pm)
பார்வை : 1158

மேலே