இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் பங்கு
இளைய சமுதாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதற்கேற்ப இன்றைய இளைஞர்கள் தங்களது சக்தியை நல் வழியில் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டுபாட்டுடன் வளர்த்தால் நல்ல ஒரு இளைஞர் சமுதாயம் உருவாகும். குழந்தை பருவத்திலே அவர்களை நல்வழிப்படுத்தி வருதலில் பெற்றோர்களின் பங்கு அதிகம் உள்ளது. இளைஞர் சமுதாயத்தை நல்ல முறையில் 'டியூன்' செய்தால், இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
இன்றைய இளைஞர் சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பு எப்படி உள்ளது, சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்களா, சுயநலத்துடன், எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்களா என்ற கேள்விகளுக்கு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரி மாணவிகள் தங்களுக்குள் ஒரு கலந்துரையாடலையே நடத்தினர்.
இதோ அவர்களின் அலசல் ...
வாழ்க்கையே வாட்ஸ் ஆப், பேஸ் புக் ...
சங்கீதா: இன்றைய இளைஞர்களிடம் சமூக அக்கறை இல்லை. அவர்களது வாழ்க்கையே வாட்ஸ் ஆப், பேஸ் புக் என்றாகி விட்டது. வரதட்சணை கொடுமை போன்ற செயல்கள் தான் அடிக்கடி நடக்கின்றன. இவற்றின் பின்னால் இளைஞர் சமுதாயம் உள்ளது. ஒருவர் தப்பு செய்யும் போது ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயத்தை இது பாதிக்கிறது. இளைமையிலே குடி பழக்கத்திற்கு அடிமை ஆவதால் அவர்களால் சமுதாயம் சார்ந்த அக்கறைகளில் ஈடுபட முடியாமல் போகிறது. இதை ஒவ்வொரு இளைஞர்களும் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தாலே போதும், அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில் என்பது புரியும்.
தாழ்வு மனப்பான்மையால்...
சுகந்தி: தாழ்வு மனப்பான்மை இளைஞர்களை சமுதாய அக்கறையில் ஈடுபட முடியாமல் செய்கிறது. படிக்கிற காலத்தில் பெற்றோர் , ஆசிரியர்கள் திட்டும் போது தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குடும்ப பொருளாதார நிலைமையால், அவர்களது தோற்றம், நடை, உடை போன்ற பல விஷயங்களில் ஒவ்வொரு இளைஞனும் தாழ்வு மனப்பான்மையால் சுருங்கி போகிறான். தாழ்வு மனப்பான்மை போன்ற காரணிகளை தவிர்த்து, இளைஞர் சமுதாயத்தை சமூக அக்கறை கொண்டவனாக மாற்ற வேண்டும்.
சமுதாய அக்கறை அதிகமே
துர்கா தேவி: இன்றைய இளைஞர்களிடம் சமுதாய அக்கறை அதிகம் உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் போதே என்.எஸ்.எஸ்., என்.சி.சி., களில் சேர்ந்து சமுதாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறான். இதன் மூலம் அவன் மனதில் சமூக அக்கறை ஏற்படுகிறது. கல்லுாரி காலத்தில் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம், ஆறு, கண்மாய் போன்றவைகளில் துார் வாரும் பணிகளில் ஈடுபட்டு சமுதாய அக்கறையில் பங்கு பெறுகிறான்.
ஜாதி, மத பேதமின்றி உதவி
சவீதா: இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையை அதிகம் கொண்டுள்ளனர்.
நுாற்றுக்கு 50 சதவீதம் உதவும் மனப்பான்மை இருக்கும் என்றால், மீதமுள்ள 50 சதவீதம் உதவா எண்ணம் இருந்தால் யாராது சொல் கேட்டு உதவி செய்யாமல் இருப்பர்.
சென்னையில் நடந்த இயற்கை பேரிடர் நேரத்தில் இளைஞர்கள் சமுதாயம் தானாக முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாதி,
மத பேதமின்றி உதவி செய்துள்ளதை குறிப்பிடலாம்.
நாடு முன்னேற துடிப்பு வேண்டும்
லஷ்மி பிரியா: சமுகத்தில் என்ன நடக்கிறது, நாம் எப்படி சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் இன்றைய இளைஞர் சமுதாயம் உள்ளது. நாட்டு நடப்புகளை ஊடகங்கள், நாளிதழ்களை பார்த்து அப்டேட்' செய்து கொள்ள வேண்டும். சமுகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உள்ளனர்.
சமூகத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு அதை முன்னேற்று வதற்கான வழிமுறைகளை தேட வேண்டும். நாடு முன்னேற வேண்டுமானால், இளைஞர் சமுதாயத்தினர் துடிப்புடன் செயல்பட வேண்டும்.
ரத்த தானம் செய்வதில் ஆர்வம்
ஷர்மிளா: இன்றைய இளைஞர்கள் சமுதாய அக்கறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். உயிர் காப்பு பணிகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். விபத்து காலங்களில் இளைஞர்கள் ரத்த தானம் செய்கின்றனர். கல்லுாரியில் படிக்கும் காலத்தில் ரத்த தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளனர். தாய் நாட்டின் மீது உள்ள அக்கறையால் தான் ஆண்கள், பெண்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.
உறுப்பு தானங்களில் இளைஞர்கள்
கவுசல்யா: உடல் உறுப்பு தானங்களில்
இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும் விபத்து நடந்து உயிர் இழந்த இளைஞனின் உடல் பாகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தப்
பட்டுள்ளதாக செய்திகளில் அடிக்கடி பார்க்கிறோம்.
கல்லுாரிகளில் சமூக நற்பணி மன்றங்கள் அமைத்து பொதுமக்களுக்கு சமுதாய் தொண்டாற்றி
வருகின்றனர்.
சாதிக்கும் உணர்வை விதைப்போம்
பாண்டி செல்வி: இன்ளைய இளைஞர்களிடத்தில் ஜாதிய உணர்வு அதிகம் உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் மூலம் இது ஓரளவு தடுக்கப்படுகிறது என்றாலும், இதுஒரு 'ஸ்லோ பாயிசன்' மாதிரி இளைஞர்களிடத்தில் பரவி மெதுவாக சமுதாயத்தை அழிக்க கூடியது. நம்முடைய துரதிஸ்டம், இதை வளர்த்து விடத்தான் ஆட்கள் இருக்கிறார்களே தவிர, இதை ஒழித்து நல்ல இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. இவற்றையெல்லம் கடந்து தான் இளைஞர் சமுதாயம் நல்ல முறையில் வந்து கொண்டிருக்கிறது. 'சாதியை சான்றிதழில் மட்டும் வைத்து விட்டு, சாதிக்கும் உணர்வை மட்டும் மனதில் விதைப்போம் .இளைஞர்களே டாக்டர், ஆசிரியர், இன்ஜினியர் என எது வேண்மானாலும் ஆகுங்கள். மனிதனாய் இருங்கள்.'
நம்நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டும்
காயத்திரி: இன்றைய இளைஞர்களிடம் சாதிக்கும் உணர்வு அதிகமாக உள்ளது. படித்துமுடித்த உடன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். தாய் நாட்டில் வேலை பார்த்து நம்நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டும். சமூக அக்கறை என்பது முதலில் தேர்தல் காலங்களில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவது தான். இதை பெரும்பாலான இளைஞர்கள் செய்வது இல்லை. தானும் வாக்களித்து, மற்றவர்களையும் வாக்களிக்க செய்வது தான் உண்மையான சமூக அக்கறை. இதை ஒவ்வொரு இளைஞனும் செய்ய வேண்டும்.