அமெரிக்க ஜனாதிபதி-----அமெரிக்க ஜனாதிபதி ---------- கலாநிதி கேரீகணேசலிங்கம் கட்டுரை ----யாழ் பல்கலைக்கழகம்

உலக அரசியலில் அமெரிக்காவின் முக்கியத்துவம் கடந்த நூற்றாண்டு முழுவதும் மிகச் சிறப்பான இடத்தை பெற்றிருந்தது. அதற்கு பின்னால் உள்ள பிரதான காரணம் அந்த நாட்டின் தலைவர்கள் மிகச் சிறந்த ஆளுமையுடன் செயற்படுவதேயாகும். அந்த வரிசையில் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதிஆட்சியதிகாரத்திலிருந்து அமெரிக்காவின் தனித்துவமும் பலவீனமாக மாறுகிறதா? அல்லது இயல்பாகவே அமெரிக்கர்கள் இவ்வாறு தானா? என்ற கேள்விகள் உலகம் முழுவதுமுள்ள ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் இன் அரசியலை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் அதிக முரண்பாடான தீர்மானங்களை எடுப்பதும் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிப்பதும் அதற்கான கண்டனங்களும், யதார்த்தமான அரசியலுக்கு முரணானவராக கருத்துக்களும் சாதாரணமாகவே அமைந்துவருகின்றன. அது மட்டுமல்லாது அமெரிக்க மரபுகளையும், பின்பற்ற வேண்டிய நியமங்களையும் உடைத்துவரும் ஒருவராகவும் விளங்குகிறார்.குறிப்பாக கௌரவ விழாக்கள் அதிதி உரைகள் அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் அம்சங்கள் என்பனவற்றில் கலந்து கொள்ளாது தவிர்ப்பது மட்டுமன்றி ஊடகங்கள் மீதாக இவரது தாக்குதல் மிக உச்சளவில் விளங்குகிறது.

ட்ரம்ப் இன் அரசியல் பிரவேசம் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஆச்சரியமான ஒன்றாகும். உலகமயமாக்கத்தின் அசல் மனிதனான காட்சியளிக்கும் ட்ரம்ப் அதன் பிரதிகளால் ஆன ஒரு வர்த்தக முதலாளித்துவத்தின் எஜமானாக காணப்படுகிறார். அமெரிக்க அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரது பண்பும், ஒழுக்கமும், சமூக உணர்வும் அவசியமானதுடன், முழுஉலகத்திற்குமான பதிலீடாக காட்சியளிப்பவர் ஜனாதிபதி என்ற நியமம் இது வரை பேணப்பட்டது. அதனை எல்லாம் கடைபிடித்தவர்களே கடந்த கால ஜனாதிபதி வேட்பாளர்கள். இளவயதில் செய்யும் ஒழுக்கமின்மை கூட ஜனாதிபதி அதிகாரத்திற்கான போட்டியிலிருந்து ஒருவரை துரத்திய வரலாறுகள் அமெரிக்காவில் உண்டு.

அப்படியான மரபும், தொடர்ச்சியும் ட்ரம்ப் இனால் மீறப்பட்டது எனக் குறிப்பிடுவதை விட உலகமயப்படுத்தலின் பிரதிபலிப்பு அத்தகைய வேட்பாளரை ஏற்க வைத்து விட்டது எனலாம். அது தேர்தல் முறைகேடாக அமையலாம். அல்லது அவரது ஜனாதிபதி போட்டியின் வெற்றியாக அமையலாம். எதுவானாலும் அமெரிக்க மக்களின் மனங்களில் ஏற்பட்ட மாறுதலாகவே கொள்ளமுடியும்.

அத்தகைய மாறுதல் உலகமயமாக்கத்தின் கொடுமைகளால் நிராகரிக்கப்பட்டதாக அமையலாம். அல்லது அதிலிருந்து தம்மை மாற்றிக் கொள்ளாது தீவிர பின்பற்றுதல் உத்தேசமாக காணப்படலாம். ஏனெனில் உலகமயமாக்கத்தின் பிரதிபலிப்புக்களால் அனைத்து தேக்கங்களின் வாழ்விட மையமாக அமெரிக்கா மாறியதென்பது தவிர்க்க முடியாதது. அதனால் ட்ரம்ப் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமானதாக இருந்ததோடு தனிமனித ஆளுமையின் வெளிப்பாடுகளில் அல்லது விழுமியங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதென்பதேயாகும்.

அமெரிக்க தேசியமும் வெள்ளையின வெறியும் கொண்ட அரசியல் அமெரிக்கருக்கு அவசியமெனின் ஆச்சரியமான பதிலாகவே உள்ளது என்ற முடிவுக்கு வரலாம். காரணம் உலகமயமாக்கலின் பிரதிநிதி அதனை பிடிங்கி எறிய முயலும் முரணிய இயல்பின் ஒருவராகவே அமெரிக்க ஜனாதிபதி காட்சியளிக்கிறார்.

அவரது உள்நாட்டு முரணிய தன்மைகள் கட்சி அரசியலா அல்லது நெருக்கடியின் பிரதிபலிப்பா எனக் கண்டு கொள்வது கடினம். அமெரிக்க பொருளாதாரம் பலவீனமாகவே அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பாதுகாப்பு செலவீனத்தை கட்டுப்படுத்தி வங்கியின் இருப்புக்களை பாதுகாக்கும் மீள் எழுச்சி திட்டங்களை அமுல்படுத்தினார். அவற்றை ட்ரம்ப் நிராகரித்தார். ஒபாமாவின் சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தினை ட்ரம்ப் நிராகரித்தார்.

இஸ்லாமிய குடியேற்றங்கள் பற்றிய ட்ரம்பின் நடைமுறை உள்நாட்டில் அதிக குழப்பத்தினை ஏற்படுத்தியது. மேலும் புலனாய்வு தலைமைகளில் மாற்றங்களை செய்தமை, தேர்தல் முரண்பாட்டு விசாரணைக்குழுக்களின் தலைமைகளை குழப்பத்திற்குள்ளாக்குவதும், பேச்சாளர் முதல் வெள்ளை மாளிகையின் பணியாளர் வரை முன் பின் முரணான தீர்மானங்களை ஏற்படுத்துவதென ஏகப்பட்ட குழப்பம் உள் நாட்டில் நிலவுகிறது.

இரண்டாவது முக்கியமானதும் அமெரிக்கா உலக வல்லரசு எனக் கோருவதற்கான காரணியான அதன் வெளிவிவகாரம் பாரிய சிக்கலைத் தந்துள்ளது ட்ரம்பின் தலைமையில்.

குறிப்பாக கியூபா, மெஸ்சிக்கோ பொறுத்த ட்ரம்பின் கொள்கைகள் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மெஸ்சிக்கோவுடனான எல்லையில் சுவர் எழுப்புவதென்பது உலக அரசியலில பழைய தேசியவாதத்தை நோக்கி நகரும் இயல்பாகும். நாடுகளுக்கோ அல்லது தேசிய அரசுகளுக்கோ எல்லையில்லை என்ற கொள்கை வலுப்பட்டிருக்கின்ற போது சுவரெழுப்புவதென்பது சுதேச உணர்வின் பிரதிபலிப்பாகவே அமையும். போர்லின் சுவர் தகர்ப்பு புதிய உலகமும் மீள தரப் போகின்றதா என்பதே தற்போதைய கேள்வியாகும்.

கியூபா தொடர்பின் ஒபாமா மிகச்சிறந்த உபாயத்தை வகுத்து உறவை பலப்படுத்த முயன்றதை ட்ரம்ப் தகர்த்தெறிந்தமை அமெரிக்காவின் போக்கின் பலவீனத்தைக் காட்டியது.

அவ்வாறே வடகொரியா சில சாதனைகளை எட்டினாலும் உலகளாவிய ரீதியில் மீண்டுமொரு வியட்னாமை நோக்கி அமெரிக்க நகர்த்தப்படுகிறதா என எழும் கேள்வி இயல்பானதாகும். இதனால் வடகொரியா ஒரு பெரும் அரசுக்கு சமமாக வளர்ந்திருப்பதுடன் உலக வல்லரசுகள் இத்தகைய சிறிய நாடுகளிடம் மண்டியிடும் உலகம் ஒன்றுக்குள் பிரவேசிப்பதை உணர முடிகிறது. ட்ரம்பின் விவேகமற்ற நகர்வு சிரியாவில், ஈரானில், கட்டாரில், வடகொரியாவில் மிகத் துலாம்பரமாக தெரிகிறது. அவர் புதிதாக பாகிஸ்தானில் ஒரு யுத்தகளத்தை திறக்க முயலுகின்றார்.

முழுமையான அமெரிக்காவின் போக்கு உலகிலுள்ள சிறிய நாடுகளையும் ஐஎஸ் போன்ற குழுக்களையும் நிபந்தனையின்றி வளர்த்தெடுப்பதேயாகும். அவை அணுவாயுத வல்லமையுடன் வளரும் நாடுகளாக மாறுகின்றன. வடகொரியாவின் வளர்ச்சி போன்று ஈரானும், பாகிஸ்தானும் அமையும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இது அணுவாயுத உலகமாக்க முயலும் நடைமுறையாகும்.

உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றும் சமமானவை என்ற எடுகோள் நிராகரிக்கப்படும் வரை சிறிய அரசுகளின் எழுச்சி தவிர்க்க முடியாததாகும்.

உலகில் மிகப் பலமான வர்த்தக கூட்டாளியான சீனாவை கையாளத் தெரியாதவராக அமெரிக்க ஜனாதிபதி விளங்குவதாக குறை கூறப்படுகிறது. அரசுகளை வெல்வது இராஜதந்திரப் போரினாலேயே கடந்த காலம் முழுவதும் அமெரிக்க தலைவர்கள் செய்துவந்தனர். ட்ரம்ப்பைப் பொறுத்தவரை இராஜதந்திரமாக பேச வேண்டியதை உடைத்து நிராகரிப்பு வாதங்களையும், உணர்ச்சிவசப்பட்ட அபிப்பிராயங்களையும் வெளியிடும் ஆட்சியாளராக உள்ளார். இவரது வெளிப்படுத்தலால் உலகம் தினம் தினம் திண்டாடிக் கொண்டு இயங்குகிறது.

இவரது டுவிட்டர் பக்கத்தில் வரும் கருத்துக்கள் எதுவும் தந்திரமானவையாக இல்லை. இவரது உணர்வுகளின் தொனிப்பாகவே அரசியல் பதிவுகள் உள்ளன. அரசியலை நன்கு தெரிந்து கொள்ளாதவர், அமெரிக்காவின் முக்கியத்துவம் உணராதவர் என்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்கின்றார்.

இலாபத்தை மட்டும் அடைவதே அரசியல் என்கிறார். இது மிக அபத்தமானது. அரசுகளின் பிரதான அம்சம் தேசிய நலன் என்பது, அது தவிர்க்க முடியாதது. ஆனால் அதனை அடையும் போது பிரதேசங்களையும், அவற்றின் நலன்களையும் தகர்க்காது பயணிப்பது தான் வல்லரசுகளின் அரசியல். அதனை வெற்றி கொள்ள வைப்பது தலைமைகளின் தந்திரங்களும், உத்திகளுமாகும். அதற்காகவே பெரும் தேசங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றுச் செயல்ப்படுகின்றனர். ஒருவரது வர்த்தக நிறுவனம் அல்ல நாடு. இது அமெரிக்க ஜனாதிபதிக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் பொருந்தும். தேசம் என்பது பல தேசியங்களால் கட்டப்பட்டது. அதனை எதிர் கொள்வதும் வெல்வதும் அதன் இயல்பூக்கங்களினால் ஆகும். அவை ஒவ்வொன்றின் இரத்தமும், தசையுமே தேசம்.

தேசத்தை ஏதோ ஒரு அடையாளத்தால் வெல்ல முடியாது. மாறாக தோற்றுப் போகும் தேசமாக வேண்டுமானால் மாறிவிடலாம்.

ட்ரம்ப் அப்படியான ஒரு உலகத்தின் தோற்றப்பாட்டை நோக்கியே நகர்கிறார். அவரது இராஜதந்திரமற்ற உத்திகள் அரசியலை மிக மோசமான கட்புல செவிப்புல சாதனமாக்கி வருகிறது. இதனை அரசியல் என்றோ அரசியலின் விம்பமென்றோ கணிக்க முடியாது. மிகப் போலிகளின் பிரதிபலிப்பை உண்மையென உரைக்க முயல்வதேயாகும். உலகத்தை குழப்பத்திற்குள்ளாக்குவதன் மூலம் அமெரிக்காவின் குழப்பம் தீருமென கருதுவது அபாயமானது. இவை எதுவும் அரசியல் உத்தியற்ற அரசியலாகும்

எழுதியவர் : (30-Aug-17, 5:55 pm)
பார்வை : 155

சிறந்த கட்டுரைகள்

மேலே