தமிழே

நான் எங்கே தவமிருந்தேன் தமிழே!
நான் எப்ப வரங்கேட்டேன் தமிழே!
நான் எதற்கு உனைக்கற்றேன் தமிழே!
நான் உன்னை நெருங்கினேனா தமிழே!

எனக்கெந்த அறிவாளி பாடம் சொன்னார்?
என்ஊரில் கவியரசர் எவர் இருந்தார்?
இணக்கமுடன் நீதானே வந்து சேர்ந்தாய்!
இறுக்கமுடன் நீதானே பின்னிக் கொண்டாய்.

நான்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
நான்பாடு விளையாடிக் கொண்டிருந்தேன்.
தேன்கூடு கலைந்தீக்கள் வருவதுபோல்
திசையெங்கும் சொற்கூட்டம் என்னைமொய்க்க
வான்கூடு கலைந்துமழை வருவதைப்போல்
வார்த்தைக்குள் துளித்துளியாய் கருத்துச்சேர
வீண்பாடு படாமல் வந்து சேர்ந்தாய்!
விரல் சொடுக்க நானழைத்தேன் கவிதை ஆனாய்!

ஊரெல்லாம் உனைக் கற்றோர் பலர்இருக்க
ஊரெல்லாம் உனைஆய்ந்தோர் சிலர்இருக்க
தேரெல்லாம் விட்டுவிட்டு தெய்வமே நீ
சிறுகுடிசை வாசலுக்கு வந்தாயம்மா
நாரைப்போய் பூமணக்க வைத்தாய் அம்மா
நானென்ன புண்ணியந்தான் செய்தேன் அம்மா.

யார்யாரோ உருகித்தான் உன்னைப் பற்ற
அட போடா என்றுதான் உதறிவிட்டாய்.
நீர்மோராய் இல்லாமல் தயிராய் வந்தாய்
நெடுங்காலம் வாழ்கின்ற உயிராய் வந்தாய்.

தார்ச்சாலை தெரிகின்ற கானல் போல
தள்ளித்தான் போகாமல் ஆறாய் வந்தாய்!
கூர்முள்ளாய் குத்தாமல் ரோஜா ஆனாய்!
குறுக்குச்சால் ஒட்டாமல் நேராய் வந்தாய்!
வேர்விட்டு கிளைவிட்டு இலையும் விட்டு
விதைவிட்ட கனியாக வந்தாய் அம்மா!

யார்தொட்டும் திறக்காத சில சுரங்கம்
யான்தொட்டுத் திறக்கவைத்த தமிழே – உந்தன்
கால்தொட்டு வணங்குகிறேன் கனவுதாசன்
கவிகொட்டி முழங்கவைப்பாய் தமிழே! தாயே!

எழுதியவர் : கனவுதாசன் (9-Sep-17, 4:28 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 131

மேலே