நமது நாட்டை அரிக்கும் மதவாதம்

சமூக, பொருளாதார ரீதியாக எழும் ஒவ்வொரு சிக்கலையும் மதவாதப் பிரச்சனையாக்கி நமது சுமூகமான சமூக வாழ்வில் பிளவை ஏற்படுத்தும் ஒரு அரசியல் போக்கு சமீப காலமாக அபாயகரமான அளவிற்கு தலைதூக்கி வருகிறது.

சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்னரும் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவைகள் எதுவும் இப்படி முற்றிலுமாக வேறு பார்வையுடன் திரிக்கப்பட்டு பிரச்சனையாக்கப்பட்டதில்லை.

இதற்கு முன்னரும் மத ரீதியான சிக்கல்களை நமது நாடு சந்தித்துள்ளது.

1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக நமது நாட்டில் ஒரு மாபெரும் மதக் கலவரத்திற்கு வித்திடப்பட்டு, அதன் காரணமாக பல ஆயிரம் உயிர்கள் பலியாகி, நாட்டின் பல பகுதிகள் இரத்தக் களமாயின.

அதன் காரணமாக ஏற்பட்ட சமூகப் பிளவு அரசியலில் பிரதிபலித்தது. மதக் கோட்பாட்டை மையக் கொள்கையாக கொண்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கட்சி தேச அளவில் வளர்ந்து பிறகு (கூட்டணி அமைத்து) ஆட்சியையும் பிடித்தது.

அந்தக் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததால் அதனால் தனது வெளிப்படையான எந்த ஒரு மதவாத திட்டத்தையும் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்டுவது உட்பட - நிறைவேற்ற முடியவில்லை.

ஆனால் அன்று பற்றவைக்கப்பட்ட அந்தத் தீ பல இடங்களில் தனது கோர நாக்கை நீட்டிட, அதன் காரணமாக ஆங்காங்கு பல மத வன்முறைகள் வெடித்தன. கோத்ரா இரயில் எரிப்பும், அதனைத் தொடர்ந்து நடந்த மதக் கலவரமும் 2,000 அப்பாவி மக்களின் உயிரைக் குடித்தன.

இப்படி மதவாத கண்ணோட்டத்தோடு தூண்டிவிடப்பட்டு பெரும் பிரச்சனையாக்கப்பட்டு அதன் காரணமாக கலவரம் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது அரசியல் ரீதியான பலனை - ஆட்சியைப் பிடிக்க வகை செய்யும் வாக்கு வங்கியை - உருவாக்கியதால் அதனையே ஒரு அரசியல் வழிமுறையாக இந்து மதவாத சக்திகள் மட்டுமின்றி, மற்ற மதவாத சக்திகளும் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால் நமது நாட்டின் சுதந்திரத்திற்கும், சமூக கட்டமைப்பிற்கும், அரசியல் போக்கிற்கும் ஒரு பெரும் ஆபத்தை விளைவிக்கக் காத்திருக்கிறது.

அமர்நாத் நில ஒதுக்கீடு விவகாரம்!

மிக மிகச் சாதாரண பிரச்சனை இது, ஆனால் மதவாத சக்திகளால் பெரும் பிரச்சனையாக்கப்பட்டு இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அப்படி என்ன ஒரு உரிமைப் பிரச்சனை ஏற்பட்டது என்று புரியவில்லை. இமய மலைப் பகுதியில் உள்ள புனித அமர்நாத் கோயிற்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாகத் தங்கி, இளைப்பாறிச் செல்ல பால்டால் என்ற இடத்தில் அவர்களுக்கு தற்காலிகமாக தங்குமிடங்களை அமைக்க (கட்டிக்கொள்வதற்கு அல்ல) ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு 40 ஹெக்டேர் நிலத்தை ஜம்மு-காஷ்மீர் அரசு ஒதுக்கியது. இது தற்காலிகமான ஒதுக்கீடு என்று அறிவித்தே அரசு உத்தரவும் பிறப்பித்தது.

ஆனால் அதற்கு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு மதவாத-அரசியல் அமைப்புகளான ஹூரியாத் மாநாட்டின் இரண்டு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீரத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி என்று கூறினர். இந்த எதிர்ப்பு சாதாரண அளவிற்குத்தான் இருந்தது. காரணம் ஹூரியாத் மாநாட்டில் இருந்த பெரும்பாலான இயக்கங்கள் மதவாத - பாகிஸ்தான் சார்புடையவையே. இவைகளு‌க்கு காஷ்மீர் மக்களிடத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை.

எழுதியவர் : (27-Sep-17, 3:12 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 137

சிறந்த கட்டுரைகள்

மேலே