மாளுமா சாதிவெறி மீளுமா சமூகநீதி

மத்திய ஆசியத்தின் குடியேறி ஆரியம்
வித்தகமாய் புகுத்திய பிரிவினை வாதம்
சமயமாய் உருபெற்று வேதமாய் வலுபெற்று
சாதிக்கு வித்திட்டு சமத்துவத்தில் தீயிட்டது

பிராமணன் சத்திரியன் வைஷ்ணவன் சூத்திரனென
பிறப்பால் தொழிலாகி நாற்றிசையாய் சிதைத்தது
உயர்குல நானூலுக்கிது சாதகமானது
உழைத்து உருகுலைந்தோர்க்கு அநீதியானது

ஆதிக்கவாதிகள் படைத்த சாதிய அரக்கன்
அபராதியாகி கொடூரமாய் மனிதநேயத்தைக் கொன்றான்
ஆலகாலவிசமாகி அரசியலுக்கு சாதகமாகி
அணுவிலும் ஊடுருவி சமூக ஆணிவேரைத் தின்றான்

இட்டார் இடாதார் வேறில்லை சாதியென
இடித்துரைத்த அவ்வைக்கு ஏது சாதி?
வழிபறிக் கள்வன் வால்மீகி இராமகாதையை
கவிவடித்த கம்பனுக்கும் ஏது சாதி?

சாதிகள் இல்லையடிப் பாப்பாயென
சாடிய பாரதி மகாகவியானான்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென
சாற்றிய வள்ளுவன் தெய்வப்புலவனானான்

வீதிப் பெயர்பலகையில் சாதியை நீக்கினோம்
கல்விச் சான்றிதழில் விடாது சாதியை இணைத்தோம்
அரசுப்பணி முதல் அரசியல் ஒதுக்கீடு வரை
சாதி அடிப்படையிலேயே சதவீதமிட்டு பிரித்தோம்

சமாதிகளிலும் சாதிவாரியாய் பகுப்பு
சன்னதியிலும் உயர்சாதிக்கே உள்ளனுமதிப்பு
பாமரன் திறமைக்கு என்றும் மறுதலிப்பு
படைப்புலகம் எங்கிலும் இதன் எதிரொலிப்பு

சாதி சாக்கடையை சுத்திகரித்தப் பெரியாரும்
தீண்டாமையை பாவமென சபித்த காந்தியும்
மாற்றங்களைத் தந்தாலும் மாளவில்லை சாதிவெறி
நூற்றாண்டுப் பல கடந்தாலும் மீளுமா சமூகநீதி?

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (11-Nov-17, 2:08 pm)
பார்வை : 59

மேலே