சுவற்றில் விதைத்த செடிகள்

வயது ஏறி ஏறி
மூப்பு தட்ட தொடங்குகிறது!

உடல் மட்டுமே களைப்பாற்றி,
உள்ளமென்றொன்று இருந்ததை,
உள்வாங்க தவறிய உள்ளத்தோடே -
உழன்று கொண்டிருந்த விசுவாசி நான்!

திடீரனென்று திருவையாறு
சென்னையில் புலம் பெயர்ந்துள்ளதை
புண்ணியவதி புரியவைத்தும்,
முன்பதிவிட்டும் முனைப்பு காட்டினாள்.

கன்னடம் போல்,
கர்நாடக சங்கீதமும் புரியாதென்றாலும் -
பிடிக்கும்!

ஆகவே கச்சேரிக்கு
தயாரானேன்.
சொந்த காரில் செல்வதை விட,
ராஜா போல் பல்லக்கில் செல்ல
உபேரை அழைத்தேன்.

நேரத்திற்கு வந்து,
தூக்கிக் கொண்டார்.
நகர்வளத்தில் நெரிசலோ நெரிசல்.

ஊர்ந்து ஊர்ந்து உள்ளே
செல்வதற்குள்,
பத்மஸ்ரீ பாடகி வாய்ப்பாட்டை
ஆரம்பித்திருந்தார்.

இருக்கையை தேடி,
அமர்ந்து அப்பாடாவென சாய்ந்தேன்!

சற்று நேரம் ஒன்றுமே
புரியவில்லை.

புரியாதென்றாலும் பிடிக்கணுமே ?
குழப்பத்தில் குழம்பியே
கவனித்தேன்.

கவனிக்க கவனிக்க,
குழப்பம் மனவுளைச்சலாய்
மாறியது.

பிறகு, உளைச்சல்
வலி போல் குத்தியது!

குத்திக் குத்தி
பிரசவ வலி போல் தோன்றிற்று...!

பாடகி பாடுவதை நிறுத்தி,
சுக்கு தண்ணீர் குடிக்கிறார்.

மிருதங்க வித்துவானும்,
மோர்சிங் கலைஞரும்
போட்டி போட்டு இசைவிக்கிறபோது,
என் வலியை அது கூடிக்கொண்டே
இருந்தது.

உள்ளமும், மனமும் ஏற்கனவே
ஏதேதோ தேவையற்ற எண்ணங்களில்
திக்கு முக்காடி கிடைப்பதனால்!
இந்த வலி எதனால் என்பது கூட ஆராய,
உருப்பேதும் இல்லா பிண்டமாய்
உணர்ந்துகொண்டிருக்கையில்.....

ஸ்ரீ ரஞ்சனி ராகம் பாடக் கேட்டேன்!
ஆரோகணம் பாட பாட,
ஷாத் ஷாத் மஹாலக்ஷ்மியே பாடுவதாய்
உணர்ந்து பூரித்து போனேன்.

எங்கோ தொலைந்து போன என் உள்ளம்,
என் உடலை தேடுவது புரிந்தது.

மரண வலி, இன்ப வலி போல் தோனின்று,
உடலில் ஒரு துள்ளளும்,
ஊற்றெடுக்கும் உற்சாகமும் பீறிட்டது.

தியாகராஜ ஸ்வாமிகள் இந்த ராகத்தில்
ராமரிடம் எப்படி வேண்டினார் என்பதுபோல்
ஒரு பிரமையை காண்பித்தது.

நானும்
என் உடலோடு,
என் உள்ளதை ஓட்ட வைக்க
வேண்டுகிறேன்..

நேரம் போக போக
தனம், மோஹனம், ஹிந்தோளம், சுத்த சவேரி
மற்றும் மத்யமாவதி ராகங்களை
மிருதங்கத்தில் வாசித்தது வேறொரு
உலகத்திற்கு கூட்டிச் சென்று சேர்த்தது.

உடலோடு உள்ளமும் ஒட்டிய சந்தோஷத்தில்,
மனம் திடுக்கிட்டு கண்விழித்துக்
கொண்டது.

இயங்கக் கற்ற மனதை
மகிழ்விக்க - கன்னட ராகத்தில்,
ஆதி தாளத்தில்,
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றிய
அலைபாயுதே கண்ணா பாடிய போது -
ஆனந்த மோகத்தில் கூத்தாடியது.

இதே போல்,
துன்பம் நேர்கையில்,
ப்ரஹம் ஒக்கடே,
காற்றினிலே வரும் கீதம்,
என்று விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக
பாட பாட, நான் வாழும் தருணத்தை
நியாப்படுத்தியது.

கண்களில் நீர் குமிழிகள்,
இதயத்தில் பனித் துளிகள்,
இசை வடிவில் இறைவன் இருப்பதை
இரட்டிப்பாகியது.

என்னைப்போல்,
கான்க்ரீட் (கார்ப்பரேட்) காட்டுக்குள்,
சுவற்றில் பதித்த செடிகளில்,
சூரியனுக்கு பதில் சோலார் விளக்குகள் பாய்ச்சி,
செடி முழுதும் ஒயர்களும், சென்சார்களும் பொருத்தி,
தேவையறிந்ததாய் நினைத்துக்கொண்டு,
தேவையில்லாமல் தானியங்கி மூலம்
தண்ணீர் விட்டு விட்டு,

வாழவும் முடியாமல்,
வளரவும் முடியாமல்,
சாகவும் விடாமல்.
மலர்ச்சியாய் - முகத்தில் சிரிப்பை ஏந்தி,
உள்ளுக்குள் மரண வலியை
தாங்கிக்கொண்டே,
தொங்கிக்கொண்டிருக்கும் -
சுவற்று செடிகளுக்கு,
என்றாவது ஒரு நாள்
நிஜ சூரியனை,
நிஜ வெளிச்சத்தை,
நிஜ தண்ணீரை,
நிஜக் காற்றை
சுவாசிக்க விட வைக்க வேண்டுமென்று
தோன்றியது!

எழுதியவர் : கணேஷ்குமார் பாலு (24-Dec-17, 4:53 pm)
பார்வை : 449

மேலே