பாரதியின் தொழில் புரட்சி

முகவுரை:

வெள்ளையர் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைப் போராட்டமானது மிதவாதம், தீவிரவாதம் என்ற இருவேறு களங்களில் இயங்கின. இவ்விரு இயக்கங்களும் விடுதலைப் போரின் இரு கண்களாக இயங்கின. மிதவாதிகள் அகிம்சை முறையிலும் தீவிரவாதிகள் ஆயுதமேந்தியும் போராடி விடுதலையைப் பெற எண்ணினர். இவ்விருவேறு களங்களுள் தேசியக் கவி பாரதி தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்திருந்தார். வீரம் நிறைந்த இனமாகத் தன் நாட்டார் அனைவரும் மாறவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய படைப்பின் வழியாக தீவிரவாதச் சிந்தனையை எடுத்து வழங்கினார். போர் குணம் கொண்டவராக விளங்கிய பாரதியாரின் பாடல்கள் சில நேரங்களில் மிதவாதம் சார்ந்தவர்களையுமே வெகுண்டெழச் செய்தது. இத்தீவிரவாதம் பற்றிய பாரதியாரின் அணுகுமுறைகளையும், மிதவாதம் பற்றிய எதிர் நிலை அணுகுமுறைகளையும், தீவிரவாத உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டிய பாங்கினையும் இக்கட்டுரை ஆராய்கிறது.தீவிரவாதத்தின் தோற்றமும், பாரதியின் உடன்பாடும்:

தீவிரவாதத்தைப் பாரதிய கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு முன் தீவிரவாதம் தோன்றிய சூழலையும் பாரதிக்கு வெள்ளையர்பால் ஏற்பட்ட எதிர்ப்புணர்ச்சியும் நாம் அணுகவேண்டியது இன்றியமையாததாகின்றது. தொழில் புரட்சியில் ஏர்ப்பட்ட பல்வேறு மாறுதல்களாலும், வேலை வாய்ப்பின்மை காரணமாக நடுத்தர மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வினாலும், கர்சன் ஏற்றிய கல்விச் சட்டத்தின் விளைவாகவும், வங்காளப் பிரிவினைச் சட்டத்தின் விளைவாகவும் இவை போன்ற இன்னபிற காரணங்களாலும் தீவிரவாதம் இந்தியாவில் வலுப்பெறத் தொடங்கியது. எனவே, தீவிரவாதத்தின் கால்கோள் 1890 லேயே உருவெடுத்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளை திரு கோ. கேசவன் பின் வருமாறு தொகுத்துக் கூறுகின்றார்.

“அ. ஏகாதிபத்தியத்தின் சில நிலைகளினால் வடமேற்கு மாகானத்தில் உள்ள குசராத்தி – பார்சி இனத் தரகு ஆலை முதலாளிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி இதனால் தரகு ஆலை முதலாளிகட்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான முரண்பாடு.

ஆ. ஏகாதிபத்திய அரசின் சில சட்டங்களால் சென்னை, பம்பாய், வங்காளம் ஆகிய மாகாணங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்பட்ட அதிருப்தி.

இ. ஏகாதிபத்தியத்துக்கும் பரந்துபட்ட மக்களான விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் ஆகியோர்க்கும் இடையே முரண்பாடு.”

– பாரதியும் அரசியலும் – கோ. கேசவன்இவையே அன்றி, படித்தோர் தொகை பெருகிக்கொண்டே போன அளவுக்குப் படித்தோர் வேலை வாய்ப்பு பெருகவில்லை. காவல்துறை, பொதுப்பணித்துறை, புகைவண்டி மற்றும் போக்குவரத்துத் துறை முதலான உயர் பதவிகளில் இந்தியர்கள் நியமிக்கப்படவில்லை. காவல்துறையின் உயர் பதவிகள் பிரிட்டனில் பிறந்தோர்க்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்டிருந்தது, முதலான இன்னபிற காரணங்களாலும் இந்திய மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் பலர் விடுதலை முழக்கத்தில் தீவிரம் காட்டினர்.

20.01.1905 அன்று உருஷியாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த அமைதியான ஊர்வலமானது உருஷிய எழுச்சி என்று அழைக்கப்பெற்றது. அவ்வூர்வலத்தில் ஜார் அரசு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது. அதனால் வெகுண்டெழுந்த தீவிரவாதிகள் வெடிகுண்டை வீசினர். இதன் எதிரொலியாக இந்தியாவில் தீவிரவாதம் தழைத்தோங்கியது. மிதவாதத்தைப் பின்பற்றிய பலர் திலகரின் தலைமையிலான தீவிரவாதத்திற்குக் கைகொடுத்தனர். கிருத்துவ சமய வளர்ப்பாளராக விளங்கிய ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடையே குறிப்பாக வங்காளியர்களிடையே சமயப் பூசலை ஏற்படுத்தி, அதன் மூலம் வங்கப் பிரிவினைக்கு வழிவகுத்தனர். எனவே, சுதேசி இயக்கமும், வங்கப் பிரிவினையும் தான் இந்தியாவில் தீவிரவாதம் தோன்றக் காரணங்களாயிற்று. இதன் விளைவாக 1905 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராக அன்னியப் பொருள் புறக்கணிப்பும், வங்கப் பிரிவினை எதிர்ப்பும் தோன்றலாயிற்று. இத்தகு பரந்துபட்ட பொருளாதார அரசியல் சூழ்நிலைகளில் பாரதி இந்திய அரசியலுக்குள் நுழைகின்றார். முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும், கலாச்சார மீட்புவாதக் கருத்துகளும் இவரைத் தீவிரவாதம் என்ற களத்தின் கீழ் இயங்க வைத்தது. அரசுக்கு எதிராக நடைபெற்ற வங்கப்பிரிவினை எதிர்ப்புக் கூட்டத்தில் “வங்கமே வாழிய” என்ற கவிதையைப் பாடி, மிதவாதத்திலிருந்து திலகர் கொள்கையால் கவரப்பட்டு தீவிரவாதியாகப் பரிணமித்தார். தொழில் புரட்சி காரணமாக தன் குடும்பமே வறுமை எய்திய சூழலும் பாரதியை தீவிரவாத இயக்கத்தில் சார்த்தியது. இதே காலகட்டத்தில் நடைபெற்ற சுதேசிய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொள்கிறார் பாரதி. சுதேசிய இயக்கமென்பது, வெள்ளையர் ஏகாதிபத்திய எதிர்ப்புகளுள் ஒன்றாகும்.

“அன்னியர் பொருள்கள் யாவற்றையும் நம் நாட்டவர் வாங்காது விலக்கி வைக்கவேண்டும். நமது தேவைகளை நாமே நிறைவு செய்துகொள்ளும் வகையில் நம்மை நாம் தயார் படுத்தி கதராடையைப் பயன் படுத்துவது சுதேசியமாகும்.”

பாரதியின் இந்தியா இதழும் இந்திய விடுதலைப் போராட்டமும் – மா. கிருபாகரன், பக்கம் 102.

பாரதி, சுதேசியம் தலைதூக்கும் இடங்களில் அவற்றை வாழ்த்தியும், சுதேசியத்தைக் குறைகூறுவோருக்குப் பதிலடி கொடுத்தும், சுதேசியத்தின் ஏற்றத்தை எடுத்தியம்பியும் பல கட்டுரைகள் எழுதி உள்ளார்,. எத்தனை இன்னல்கள், இடர்ப்பாடுகள் வந்தபோதும், சுதேசியத்தை விட்டுவிடல் கூடாது என்கிறார் பாரதி. “தூத்துக்குடி சுதேசிய ஸ்டீமர் கம்பெனி” என்ற தலைப்பிலான கட்டுரை இக்கருத்தினை உணர்த்துகிறது. பாரதிக்கு இருந்த விடுதலைப் பற்றும், தீவிரவாத குணமும், சுதேசியக் கொள்கையும் நன்கு வெளிப்படுகின்றது என்பதனையும் 1905 ஆம் ஆண்டு பாரதி தேசியக் கவியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார் என்பதனையும் அறிய முடிகின்றது.

தீவிரவாதமும் பாரதிய கண்ணோட்டமும்:

மேற்கூறிய சூழலில் விடுதலை முழக்கப் பாடல்களைப் புனையும் போர்க்களக் கவிஞராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பாரதி, விடுதலைப் போராட்ட உணர்ச்சியை மாணவர்களுக்கு ஊட்டத் தொடங்கினார். சென்னை கிறித்தவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி முதலான கல்லூரிகளில் பயிலும் மாணவர்களைக் கடற்கரையில் ஒன்று திரட்டி, அவர்களுக்குப் பல்வேறு அரசியல் கருத்துகள் வாயிலாகத் தீவிரவாதக் கொள்கைகளை மாணவர்களிடையே புகுத்த வழி வகுத்தார். இதற்கென திருவல்லிக்கேணி விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, காவல் துறையினர் அறியாமல் மறைமுகமாக அரசியல் கருத்துகளை மாணவர்களுக்கு வழங்கினார். புதுக்கட்சிக் கொள்கைகளால் கவரப்பெற்ற மாணவர்கள் பொது இடங்களில் ‘வந்தே மாதரம்’ என்று முழங்கினார். அது மட்டுமன்று. மாணவர்கள் அன்னியப் பொருள்களைப் புறக்கணித்ததோடு சென்னைப் பல்கலைக்கழக செனட் அறையில் வைக்கப்பட்ட அன்னியப் பொருள்கள் கண்காட்சியில் புகுந்து கலவரம் செய்தனர். இது போன்ற இன்ன பிற குறிப்புகளை எடுத்துக்காட்டி விடுதலை கிளர்ச்சிக்கு மாணவர்களைப் பயன்படுத்தினார் பாரதி என்று குறிப்பிடுகின்றார் கோ.கேசவன் அவர்கள். பாரதி ஏற்படுத்திய விடுதலைத் தீ பின்னாளில் தமிழ்நாட்டின் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுகளைச் சிந்தையில் கொண்டு,

‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு – தழல்

வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

பாரதியார் கவிதைகள் அக்கினிக்குஞ்சு

எனும் பாடலை உற்று நோக்கினால் செய்யுளின் பொருண்மை நன்கு புலனாகும்.

இனி, பாரதி தீவிரவாத வன்முறையை விரும்பினாரா? என்று ஆய்வோம். ‘வன்முறை என்பது ஓர் அரசியல் கோட்பாடு இல்லை. அது ஒரு கோட்பாட்டை அடைவதற்கான வழிமுறையாகும். வன்முறை என்பது விருப்பத்துக்கு மாறாகத் திணித்தலாகும். எல்லா அரசுகளும் வன்முறையின் மூலமாகவே மக்களை ஆட்சி செய்து வந்துள்ளன என்பதே சமூக வரலாறாகும். ஆரம்பக் காலத்தில், அமைதியான முறையில் நடைபெற்ற வெள்ளையர் ஆதிக்க எதிர்ப்புப் போரானது நாளடைவில் அவ்வரசுக்கு எதிராக வன்முறையாக உருவெடுத்தது. இதனைப் பாரதி தன் அளவில் ஏற்றுக் கொள்கிறார் என்று தெரிய வருகிறது.

‘அரசின் வன்முறைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்த பொழுது அதை ஊக்கப்படுத்துகின்றார். பாரதி, பாலபாரத சங்கம், சென்னை ஜன சங்கம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டிருந்தார்.’

– ( பாரதியும் அரசியலும் பக்கம் 102)

சென்னை ஜனசங்கம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாரதி ‘இந்தியா’ இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் ‘சரீரப் பயிற்சியும் கூடியவரை ஆயுதப் பயிற்சியும் இந்நாட்டிலே விருத்தியடையுமாறு பிரயத்தனப்படுவோமாக’ (பாரதியின் இந்தியா இதழ் 13-10-1906) என்று குறிப்பிடுவதன் மூலம் ஆயுதம் தாங்கிய வன்முறையில் அவருக்கிருந்த உடன்பாடு வெளிப்படுகிறது. ஆனால், தனிநபர் கொலையில் பாரதிக்கு உடன்பாடில்லை என்பதனை ஸ்பெயின் மன்னரின் திருமணத்தின் போது நடைபெற்ற வெடிகுண்டு கலாச்சாரத்தினைப் பற்றி 1906 மே மாதம், வெளிவந்த சக்கரவர்த்தினி இதழின் கட்டுரையொன்றில் ‘இவர்களுடைய நினைப்பு ஒரு வேளை நியாயமிருந்த போதிலும் இவர்களது செய்கை மிருகத்தனமானது என்பதில் தடையில்லை’ (பாரதியும் அரசியலும் பக்கம் 102) என்று குறிப்பிடுவதன் மூலம் மேற்கண்ட உண்மை நன்கு புலப்படும்.

சுத்தானந்த பாரதியாரின் ‘விஜய பாரதம்’ என்ற இதழில் எழுதிய கட்டுரை ஒன்றையும் ‘வ.உ.சி.க்கு வாழ்த்து’ என்ற கவிதையில் உள்ள ‘கேளாத கதையினை விரைவில் கேட்பாய்’ என்ற கருத்தியலோடு ஆஷ் கொலையைத் தொடர்பு படுத்தியும் பாரதிக்கு வன்முறையில் ஈடுபாடுண்டு என்பார் திரு.தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள். இவருடைய கூற்றினைத் திரு. கோ.கேசவன் மறுக்கின்றார். ஆஷ் கொலையினை ஏற்பாடு செய்த பாரத மாதா சங்கம் திரு.வ.வே.சு.ஐயரின் மேற்பார்வையில் இயங்கி வந்தது என்பதும் இச்சங்கத்தில் பாரதி உறுப்பினராக இல்லை என்பதும் அவர் குறிப்பின் மூலம் தெரிய வருகின்றது. எனவே, மேற்கண்ட தொடருக்கு ஆஷ் கொலையைத் தொடர்புபடுத்துவது பொருத்தமுடையது அன்று. மேலும், பாரதி தன் கட்டுரையில் வன்முறைக்கு எதிரான சில கருத்தியல்களை அவ்வப்போது வெளியிட்டு இருப்பதனையும் சுட்டிக்காட்டி தம் கருத்தியலுக்கு வலு சேர்க்கிறார் திரு.கோ.கேசவன் அவர்கள். அப்பகுதிகள் பின்வருமாறு:

அ) ‘நாம் அமைதியாகவும் சட்டபூர்வமாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கூட தடுத்து நிறுத்த வேண்டும் என அரசு சபதம் மேற்கொண்டுள்ளது. நாம் காட்டிய வழி, மக்களுக்கு நன்மை பயப்பதோடு மட்டுமின்றி, அரசுக்கும் ஆபத்தாக இல்லை. எனினும் ஆங்கில அதிகாரிகள் எவ்வித அறிவும் இன்றி நம்மை நசுக்க நினைக்கின்றனர்.’

ஆ) ‘சகோதரர்களே! ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறிக் கொள்கிறேன். நான் மீண்டும் உங்களிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிட்டுமா என்று சந்தேகமுள்ளது. எனவே, நாள் உங்கள் இதயம் ஏற்குமாறு சொல்கிறேன். எது நடந்தாலும் அதைரியம் அடையாதீர்கள். நம் அன்னையை மறவாதீர்கள். சட்ட விரோமான செயல் எதையும் செய்யாதீர்கள்.’

இ) ‘துணிவும் உறுதியும் நம்மைக் காப்பாற்றும் நியாயமான சட்டங்களைப் புறக்கணிக்காதீர்கள். நம் உடம்பில் உயிர் உள்ளவரை சுதேசிய சபதம் மேற்கொள்வோம். மானத்தைப் பெரிதாக மதிப்போம். விடுதலையை எப்பொழுதும் நினைப்போம். வந்தே மாதரம்’ (13-2-1920 சூரியோதயம் – கோ.கேசவன்) இதன் மூலம் பாரதிக்குத் தீவிரவாதக் கொள்கைகளில் உடன்பாடு இருப்பினும் தனிமனித வன்முறை சார்ந்த தீவிரவாதத்தில் உடன்பாடில்லை என்பதனையும் பாரதியம் சார்ந்த விடுதலைப் போராட்டமானது, அறம் சார்ந்ததாக இருந்தது என்பதனையும் நம்மால் உய்த்துணர முடிகின்றது.

பாரதியின் நோக்கில் தீவிரவாதப் போர்:

பாரதி தீவிரவாதம் தோற்றுவித்த அரசியலில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்டவர். அவர் முற்போக்குக் கொள்கைகளை ஆதரித்து சமூக அநீதிகளையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தவர். தன் எதிர்ப்பைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி, மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அறப்போர் நடத்தியவர். பாரதியின் தேசியப் பாடல்களை நோக்கும் போது அவர் கண்ட போர்க்களமானது மும்முனைப்போரை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிய வருகின்றது. ஆம், ஆங்கிலேய ஆதிக்க எதிர்ப்புப் போரை ஒரு முனையாகவும், மக்களின் அறியாமைப் போக்கைக் கண்டிப்பதனை மற்றொரு முனையாகவும் கொள்ளலாம். விடுதலைப்போராட்ட இயக்கத்தில் மிதவாதமும் தீவிரவாதமும் இரு கண்களாகச் செயல்பட்டதால் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு, பாரதி தீவிரவாத முனையில் நின்று தேசிய எழுச்சியூட்டும் பாடல்களைப் பல பாடினார். அவற்றுள், ஆங்கிலேயருக்கு எதிரான கருத்தியல்கள் பல புதைந்து கிடக்கின்றன. தேசியம் என்பதனைப் பாரத நாடு முழுமைக்கும் பொதுமைப்படுத்துகின்றார் என்பதனை,

‘முப்பது கோடி முகமுடை யாளுயிர்

மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்

செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்

சிந்தனை யொன்றுடை யாள்’

பாரதியார் கவிதைகள் – எங்கள் தாய்

எனும் பாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே, வெள்ளையர்க்கு எதிராக தேசிய உணர்வையூட்ட திண்ணிய நெஞ்சம் வாய்ந்த வீரர்களை அழைக்கிறார். இதனை ‘திண்ணிய நெஞ்சம் வேண்டுமென்று’, மாகாளிக்கு விண்ணப்பமாகவும் வைக்கிறார். போருக்குத் தேவையான வீரர்களைத் தெரிவு செய்யும்போது,

‘ஆரியர் இருமின்! ஆண்கள் இங்கு இருமின்

வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்’

எனும் பாடலின் மூலம் ஆரியரும், ஆண்களும் வீரியம் மிகுந்த மேன்மையாரும், மானமே போதுமெனக் கருதுவோரும், ஈனத்தைப் பெறா இயல்பினரும், தாய்நாட்டின் குருத்தினைப் போன்றவரும், களை போன்று மிலேச்சரைக் கடிபவரும், உடலினைப் பெரிதெனப் போற்றாத உத்தமரும், முதலான இன்ன பிற குணங்களுமுடைய வீரர் யாவரும் இப்போர்க் களத்தினைச் சார்ந்து இருமின் என்று குறிப்பிடுகின்றார். தீவிரவாதம் சார்ந்திருப்போர் அச்சந் தன்னைக் கைவிட வேண்டும் என்பதனை உணர்த்த ‘அச்சம் தவிர்’ என்கிறார். மேலும் வெள்ளையரை நோக்கி,

‘பச்சையூ னியைந்த வேற் படைகள்வந்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

என்று குறிப்பிடுகின்றார். அச்சத்தை அறவே அகற்றிய நெஞ்சத்தினரின் கூற்றாக,

‘முப்பது கோடியும் வாழ்வோம் – வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’

என்று குறிப்பிட்டு வீர உணர்ச்சியைத் தூண்டுகிறார். மேலும்,

‘சொந்த நாட்டிற் பிரர்க்கடிமை செய்தே

துஞ்சிடோம் – இனி – அஞ்சிடோம்;

எந்த நாட்டினு மிந்த அநீதிகள்

ஏற்குமோ? – தெய்வம் – பார்க்குமோ?

வந்தே மாதர மென்றுயிர் போம்வரை

வாழ்த்துவோம் – முடி – தாழ்த்துவோம்;

எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்

ஈனமோ? – அவ – மானமோ?

பொழுதெல்லாமெங்கள் செல்வங்கொள்ளை கொண்டு

போகவோ? – நாங்கள் – சாகவோ?

அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள்

அல்லமோ? – உயிர் – வெல்லமோ?

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்

நாய்களோ – பன்றிச் – சேய்களோ?

நீங்கள் மட்டும் மனிதர்களோவிது

நீதமோ? – பிடி – வாதமோ?

பாரதத்திடை யன்பு செலுத்துதல்

பாபமோ? – மனஸ் – தாபமோ?

கூறு மெங்கள் மிடிமையைத் தீர்ப்பது

குற்றமோ – இதிற் – செற்றமோ?

ஒற்றுமைவழி யொன்றே வழியென்ப

தோர்ந்திட்டோம் – நன்கு – தேர்ந்திட்டோம்

மற்று நீங்கள்செய் யுங்கொடு மைக்கெலாம்

மலைவுறோம் – சித்தம் – கலைவுறோம்

சதையைத் துண்டுதுண் டாக்கினு முன்னெண்ணம்

சாயுமோ? – ஜீவன் – ஓயுமோ?

இதயத் துள்ளே யிலங்கு மஹாபக்தி

யேகுமோ? – நெஞ்சம் – வேகுமோ?

எனும் பாரதியின் போர்க்குரல் வெள்ளையருக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியர்களின் குரலாகவே ஒலிப்பதனை உணரலாம்.

மக்களின் அறியாமை எதிர்ப்புணர்வு

பாரதியார் காலத்தில் மக்கள் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்தனர். அவர்களை அவ்விருளிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாரதி தீவிரம் காட்டினார் என்பதனை அவர் பாடல்கள் வாயிலாக அறிகின்றோம். வெள்ளையரைக் கண்டு அஞ்சி வாழ்ந்த மக்களைக் கண்ட பாரதி,

‘அஞ்சி அஞ்சி சாவார் – இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே’

என்று குறிப்பிட்டு மக்கள் எதனை எல்லாம் கண்டு அஞ்சினார் என்பதனை,

‘சிப்பாயைக் கண்டஞ்சுவார் – ஊர்ச்

சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்

துப்பாக்கி கொண்டொருவன் – வெகு

தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்

அப்பா லெவனோ செல்வான் – அவன்

ஆடையைக் கண்டு பயந்தெழுந்து நிற்பார்

எப்போதும் கைகட்டுவார் – இவர்

யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்’

என்று பாடலில் படம் பிடித்துக் காட்டும் பாரதி அச்சம் கொண்டு வாழும் மக்களை நோக்கி ‘கீழோர்க்கு அஞ்சேல்’, ‘சாவதற்கு அஞ்சேல்’ முதலான இன்ன பிற சொற்களையும் கூறி மக்களின் அச்ச உணர்வைக் கடிகின்றார். பாரதி தம் பாடல்களில் ‘கொளுத்துவோம், தீக்கிரையாக்குவோம், எரித்துவிடு, மிதித்து விடு, உமிழ்ந்து விடு’ போன்ற சொற்களின் மூலம் தன் தார்மிக கோபத்தினை வெளிப்படுத்துகின்றார். இதனை மேம்போக்காகப் பார்த்தால் தீவிரவாதத்தின் உச்சமாகவே கொள்ளலாம். ஆனால் இச்சொற்களைக் கையாளும் இடங்களில் பாரதி அறம் பிறழாதவராகவே நமக்குக் காட்சி தருகின்றார். அன்றியும் இச்சொற்களை அறியாமைக்கு எதிரான கருத்தியல் போரில் பயன்படுத்தியிருப்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். பெண்களை அடிமையாக நடத்திய சமூகத்தை நோக்கி ‘தையலை உயர்வு செய்’ என்கிறார். அவரது சொல்லை மக்கள் கேளாத நிலையில்,

‘மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்’

என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார். மக்கள் அறியாமையை அறவே களைய வேண்டுமானால் மக்களுக்குக் கல்வி இன்றியமையாததாக வேண்டுமென்பதனை வலியுறுத்தி,

‘வீடு தோறும் கலையின் விளக்கம்

வீதி தோறும் இரண்டொரு பள்ளி

நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்

நகர்கள் எங்கும் பலபல பள்ளி’

என்று பாடுகின்றார்.

‘கோயில் இலாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. ஆனால் கல்வியில்லாத ஊரினை அழித்து விடுவதே பாரதி கண்ட புதுநெறி. இக்கூற்றினை,

‘தேடு கல்வியி லாத்தொ ரூரைத்

தீயி னுக்கிரை யாக மடுத்தல்

கேடு தீர்க்கும் அமுதென அன்னை

கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்’

எனும் வரிகளின் மூலம் அறிய முடிகின்றது. மேலும்

‘பாதகம் செய்பவரைக் கண்டால் – நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’

எனும் பாடலிலும் பாரதி அறம் சார்ந்த போக்கினையே கடைபிடித்திருப்பதும் ஈண்டு உணரத்தக்கதாகும்.

மிதவாத எதிர்ப்புணர்வு:

தீவிரவாதப் போரில் பாரதி கண்ட மூன்றாவது முனை மிதவாதிகளுக்கு எதிரானதாகும். மிதவாதிகள் விடுதலையுணர்வைப் பெற்றிருந்தாலும் அவர்களது போக்கானது அமைதியான முறையில் விடுதலை பெற வேண்டும் என்பதாம். ஆனால் இந்தியாவின் விடுதலை என்பது வெறும் கூக்குரலாலும், விண்ணப்பங்களாலும் எளிதில் கிடைத்து விடக்கூடிய ஒன்று இல்லை. அதனை, நம்மை ஆள்கின்றோரான ஆங்கிலேயருக்குத் தகுந்த வழிகளில் எதிர்ப்பைக் காட்டியே பெற முடியும் என்று கொள்கையில் பாரதி அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராகத் திகழ்ந்தார். இப்போக்கினைக் கடைபிடிக்காத மிதவாதிகளுக்கு எதிராக ‘இந்தியா’ பத்திரிகையில் அவ்வப்போது கட்டுரைகள் பல எழுதி வந்தார். அதன் ஒரு பகுதி பின்வருமாறு:

‘கவர்மெண்டாரிடம் பிச்சை கேட்பது போல் மனு செய்தும், செஞ்சியும், காலைப் பிடித்தும், நாடறியத் தாங்கியும், முகமன் கூறியும் கேட்கும் கேள்விகளை ஒருவரும் கவனிக்க மாட்டார்கள். அவ்வாறு தலைகுனிந்து கேட்பது இந்தியருக்கே பெரிதும் அவமானமும் ஆண்மையற்றதுமான செயலாயிருக்கின்றது. அதனால் இந்த இழிந்த வழக்கத்தினை விட்டுவிட்டு நமக்கு நாமே துணை என்ற நம்பிக்கையோடு ஸ்வதந்திரங்களை நாமே பிறர் உதவியின்றிப் பெறக்கூடிய முறைகளை அனுசரிக்க வேண்டுமென்று புதுக்கட்சியர் சொல்லி வருகின்றனர். ஆனால் பழைய கட்சியர் இவ்வாறு கவர்மெண்டாரை அலட்சியம் செய்வது தகாதென்றும் கவர்மெண்டார் நமக்கு எப்பொழுதேனும் இருக்கால் நமக்குரிய ஸ்வதந்திரங்களைக் கொடுத்து தான் செல்வார்களென்றும் சொல்கிறார்கள்.’

புதிய கட்சித் தலைவரான திரு. பாலகங்காதர திலகரைப் போற்றுவதும் (தீவிரவாதம்) அவரைக் குறை கூறுவோர்களுக்குத் தாமே பதிலடி கொடுக்கும் வகையிலும்,

‘வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!

நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!

ஏலு மனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே

எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே!

கல்வி யென்னும் வலிமை கொண்ட

கோட்டை கட்டினான் – நல்ல

கருத்தினா லதனைச்

சூழ்ந்தொ ரகழி வெட்டினான்

சொல்விளக்க மென்ற தனிடைக்

கோயிலாக்கிளான்

ஸ்வாதந் தர்ய மென்றதன்மேற்

கொடியைத் தூக்கினான்

துன்ப மென்னுங் கடலைக் கடக்குந்

தோணி யவன்பெயர்

சோர்வென்னும் பேயை யோட்டுஞ்

சூழ்ச்சியவன் பெயர்

அன்பெனுந்தே னூறித் ததும்பும்

புதுமலர் அவன்பேர்

ஆண்மை யென்னும் பொருளைக் காட்டும்

அறிகுறியவன்பேர்’

என்று பாடல் அமைந்துள்ளது.

மேலும் தான் திலகர் தலைமையின் கீழ் இயங்கும் தீவிரவாதத்தைப் போற்றுபவர் என்பதனை,

‘மன்னிய புகழ்ப் பாரத தேவி

தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன்

இலகு பெருங்குணம் யாவைக்கு மெல்லையாம்

திலக முனிக்கொத்த அடிமைக் காரன்’

எனும் பாடலில் விளக்குகின்றார்.

மேற்கூறிய கருத்துகளின் வாயிலாக பாரதி மிதவாதிகளுக்கு எதிரானவர் என்பது திண்ணம் எனினும், அவர் மிதவாதிகளின் போக்கினைக் கண்டித்தாரேயன்றி கொள்கையளவில் மிதவாதத்தை ஏற்றுக்கொள்ளாதவர் அல்லர். மிதவாதிகளின் தலைமை காந்தியடிகளின் கீழ் வந்த போது அது ஒத்துழையாமை இயக்கமாக மாறுகின்றது. பாரதி தன்னளவில் இப்போக்கினை ஏற்கிறார் என்பதனை அவர் பாடிய காந்தி பஞ்சகமே நமக்குப் பறையறைந்து கூறும். எனினும், பிற சான்றுகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

‘தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும்’ எனுமி யற்கை

மருமத்தை நம்மாலே யுலகங் கற்கும்

வழிதேடி விதியிந்த செய்கை செய்தான்

கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று

கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்

தருமத்தை யப்போது வெல்லக் காண்போம்.

இப்பாடல் பாரதிக்கு மிதவாதத்தின் மீதிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. மேலும் ‘வெற்றி கூறுமின் வெண்சங் கூதுமின்’ எனும் பாடலில் காந்தியின் தலைமையையும் இரவீந்திரநாத் தாகூரின் சொல்வன்மையையும் பின்பற்ற வேண்டுமென்று குறிப்பிடுகின்றார் என்பதினின்றும் பாரதிக்கு மிதவாதத்தின் மீது எவ்விதக் காழ்ப்பும் இல்லை என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

முற்றுரை:

காந்தி விதைத்த விதை நாமக்கல் கவிஞராகவும், திலகர் விதைத்த விதை பாரதியாகவும் முளைத்தெழுந்தது என்பார் இராஜாஜி. இதுகாறும் கூறியவற்றால் தீவிரவாதம் தோன்றிய அரசியல் பொருளாதாரச் சூழலும், அதனால் அக்காலத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினையும் அந்த அரசியல் சூழல் பாரதியைத் தீவிரவாத போக்கில் ஆற்றுப்படுத்தியதையும், பாரதியின் தீவிரவாத உணர்ச்சியையும் தார்மீக கோபத்தினையும் அவர் நடத்திய மும்முனைப் போரினையும் ஒருவாறு உய்த்துணர்ந்தோம். தீவிரவாத கட்சியைச் சார்ந்த கவிஞரான பாரதியார் கொள்கையளவில் மிதவாதத்தினை ஏற்றுக்கொண்ட போதிலும், காலச்சூழல் காரணமாகவே மிதவாதிகளைத் தாக்கித் தம் படைப்புகளில் எழுதினார் என்பதே இக்கட்டுரையின் மூலம் பெறப்படும் செய்தியாகும்.

எழுதியவர் : (17-Jan-18, 1:59 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 1248

புதிய படைப்புகள்

மேலே