அணு உலை பாதுகாப்பானது
தமிழகத்திலே உள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ள 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி, செயல்பட தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் அணுசக்தியைப்பற்றியும், அதன் விளைவுகளைப்பற்றியும் நாட்டில் சில விவாதம் நடந்து வரும் இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின் நன்மைகளைப்பற்றியும், இயற்கைச்சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப்பற்றியும், அணுஉலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களை அறிவார்ந்த முறையில் அணுகி, அதைப்பற்றி ஒரு தெளிவான கருத்தை என் அனுபவத்தோடு, உலக அனுபவத்துடன் ஆராய்ந்து அதை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அறிவார்ந்த மக்கள், அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கே படித்து, அங்கிருந்து மட்டுமல்லாமல் உலகின் அனைத்து பகுதிகளிக்கும் சென்று தங்களது அறிவாற்றாலால் அனைத்து மக்களையும், நாட்டையும் வளப்படுத்தும் மக்கள் தான் திருநெல்வேலியை சேர்ந்த மக்கள். அதைப்போலவே தமிழகம் இன்றைக்கு ஒரு அறிவார்ந்த நிலையில் வளர்ந்து, மாநிலத்தை வளப்படுத்தி, நாட்டை வளப்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு திறமைகளில் சிறப்பான ஒரு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் திகழ வேண்டிய வளர்ச்சிப்பாதையில் உள்ளது. அப்படிப்பட்ட தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற ஏதுவான சூழ்நிலை நிலவுகிறது. அதற்கு முக்கிய அவசியமான கட்டமைப்பு என்ன. அதுதான் மின்சாரம், மின்சாரம், மின்சாரம். எப்படிப்பட்ட மின்சாரம், மக்களை பாதிக்காத, ஆபத்தில்லாத அணுமின்சார உற்பத்தி தான் அதன் முக்கிய லட்சியம். இந்தியாவிலேயே ஒரே இடத்திலே 2000 மெகாவாட் மின்உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி அணுமின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு அரும் பெரும் செய்தி, இந்தியாவில் இது முதன் முறையாக நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ20,000 கோடி முதலீடு திருநெல்வேலி மாவட்டதிற்கு வர வாய்ப்பு உள்ளது. அது உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீகித மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. எனவே வளமான திருநெல்வேலி மாவட்டம், வளமான கூடங்குளம் பகுதி, வலிமையான தமிழகத்தை நாம் அடையவேண்டும். . அப்படிப்பட்ட லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் போது, ஜனநாயக நாட்டில் அணுசக்தி மின்சார உற்பத்தி பற்றி இயற்கையாக பலகருத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதாவது அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று விதமாக பார்க்கலாம். ஒன்று கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கே ஏற்பட்டுள்ள உண்மையான கேள்விகள், இரண்டாவது பூகோள - அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளந்த விளைவு ( Dynamics of Geo-political and Market forces), “நாமல்ல நாடுதான் நம்மை விட முக்கியம்” என்ற ஒரு அரிய கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கம். . முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம். மக்களின் மற்றும் மக்களின் கருத்தால் எதிரொலிக்கும் கேள்விகள் தெளிவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது இரண்டாவது முக்கியம். இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத, வளர்ச்சியை பிடிக்காதவர்களின் முயற்சியை பற்றியும், அவர்களின் அவதூறு பிரச்சாரங்களைப்பற்றியும் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே முதலில் மக்களின் கேள்விகள் என்ன? அவர்களின் நியாயமான பயம் என்ன? என்பதை பார்போம்.
1. ஜப்பான் புக்குஸிமா அணுஉலை எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சுனாமியால் கடல் நீர் சென்றதால், ஏற்பட்ட மின்சார தடையால் நிகழ்ந்த விபத்தை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கு நியாயமாக ஏற்பட்ட பயம் தான் முதல் காரணம்.
2. இயற்கை சீற்றங்களினால் அணுஉலை விபத்து ஏற்பட்டால், அதனால் கதிரியக்க வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், மலட்டுத்தன்மை போன்றவைகள் வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
3. அணு சக்தி கழிவுகளை சேமித்து வைப்பது ஆபத்து, அணுசக்தி கழிவுகளை கடலில் கலக்கப்போகிறார்கள், அணுசக்தியால் உருவாகும் வெப்பத்தினால் உருவாகும் நீராவியினாலும், அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன் படும் நீரை மீண்டும் கடலில் கலந்தால் அதனால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும். 500 மீட்டருக்கு மீன் பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்ற பயம் நிலவுகிறது.
4. அணு உலையில் எரிபொருள் மாதிரியை இரவில் நிரப்பும் பொழுது வழக்கமாக ஏற்படும் சத்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு விட்டது.
5. அணு உலையில் இயற்கைச் சீற்றத்தாலோ, கசிவாலோ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அப்பகுதி மக்கள், 90 கிலோ மீட்டர் தூரம் 2 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்படவேண்டும் என்று சொல்கிறார்கள், சோதனை ஒட்டம் செய்து பார்க்கும் போது மக்களை உடனடியாக வெளியேற சொன்னதினால் மக்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை விபத்து நேர்ந்தால், சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் , மக்கள் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை, மக்கள் எப்படி தப்ப முடியும்.
6. 10000 பேருக்கு வேலை வாய்ப்பு செய்து தரப்படும் என்று கூறினார்கள், ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 35 பேருக்குதான் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது, ஏன் வேலை வாய்ப்பை அளிக்கவில்லை
7. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் என்று சொன்னார்கள், கடல் நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள், இரண்டும் கிடைக்கவில்லை.
இது போன்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது, சரியான கேள்விகளும் உண்டு, மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளும் உண்டு ஆனால் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மக்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்திவிட்டு எவ்வித விஞ்ஞான முன்னேற்றத்தையும் மக்களுக்கான முன்னேற்றத்திற்கான வழியாக ஏறெடுத்துச்செல்ல முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
அணுசக்தி துறையோடு எனக்கு இருந்த 20 வருட அனுபவத்தின் காரணமாகவும், அணுசக்தி விஞ்ஞானிகளோடு எனக்கு இருந்த நெருக்கமான தொடர்பாலும், சமீப காலங்களில் இந்தியாவிலும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அணுசக்தி, துறையை சேர்ந்த ஆராய்ச்சி நிலையங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுடனும், தொழில் நுட்ப வல்லுனர்களுடனும் கலந்துரையாடிய அனுபவத்தாலும், கடந்த 4 வருடங்களாக இந்திய கடற்கரை ஒரம் அமைந்துள்ள எல்லா அணுசக்தி உற்பத்தி நிலையங்களுக்கும் சென்று, அந்த அணுசக்தி நிலையங்களின் உற்பத்தி செயல் திறனை பற்றியும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றி மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளேன். அதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் பார்வையிட்டு அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பல்வேறு காரணிகளைப்பற்றி அதாவது கடலோரத்தில் உள்ள இந்திய அணுமின் சக்தி நிலையங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் என்ன வித்தியாசம், அதன் ஸ்திர தன்மை, பாதுகாப்பு தன்மை பற்றியும், இயற்க்கை பேரிடர் மற்றும் மனித தவறின் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எப்படி சரி செய்ய முடியும் அதன் தாக்கத்தை சமன் செய்யவும் செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் பற்றியும், செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளேன்.
அத்துடன் என்னுடைய இருபதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போதும், ஆராய்சி நிலையங்களிலும், கல்வி போதிக்கும் என்னுடைய பணி மூலமாகவும் செய்த ஆராய்சிகளின் விளைவாகவும், அணுசக்தியைப்பற்றியும், எரிசக்தி சுதந்திரத்தைப்பற்றிய அறிவியல் சார்ந்த விளக்கங்களயும் ஆராய்ச்சி விளக்கங்களை விரிவாக விவாதித்தோம். அதன் விளைவாக நான் எனது நண்பர் v. பொன்ராஜ் அவர்களுடன் சேர்ந்து இந்தியா 2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவிற்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்சி செய்ததின் பயனாக இந்த ஆராய்ச்சி கட்டுரையை ஆய்வின் முடிவுகளின் விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்த ஆய்வின் முடிவுகளையும், என்னுடைய கருத்தையும் பார்ப்பதற்கு முன்பாக உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அதாவது, கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லனை கிடையாது. காட்டாற்று வெள்ளமென வரும் அகண்ட காவிரியை தடுத்து நிறுத்த அந்தகாலத்து தொழில் நுட்பத்தை பயன் படுத்தி முதல் நூற்றாண்டில் (1 Century AD) கல்லனை கட்டினானே கரிகாலன். எப்படி முடிந்தது அவனால், வெள்ளமென வரும் காவிரியால் கல்லனையை உடைந்து மக்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும் என்று நினைத்திருந்தாலோ, பூகம்பத்தால் அணை உடைந்து விடும் என்று கரிகாலன் நினைத்திருந்தால் கல்லனை கட்டியிருக்க முடியாது.
ஆயிரம் ஆண்டுகளாகியும் நம் கண்முன்னே சாட்சியாக இருக்கிறதே ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில். சுனாமியினால் கடல் கொண்டு அழிந்த பூம்புகார் போன்று, பூகம்பத்தின் காரணமாக, பெரிய கோவில் அழிந்து விடும் என்று நினைத்திருந்தால், தமிழர்களின் மாபெரும் கட்டிட கலையை உலகிற்கே பறைசாற்றும் விதமாக, எடுத்துக்காட்டாக இருக்கும் பெரிய கோவில் நமக்கு கிடைத்திருக்குமா.
ஹோமி பாபா முடியாது என்று நினைத்திருந்தால், கதிரியக்கம் மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைத்திருந்தால், இன்றைக்கு 40 ஆண்டுகளாக பாதுகாப்பான அணுமின்சாரத்தை 4700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியாது, மருத்துவதுறையிலே கேன்சர் நோயால் அவதிப்படும் மக்களுக்கு ஹீமோதிரெபி அளித்திருக்க முடியாது, விவசாயத்தின் விளைபொருளின் உற்பத்தியை பெருக்கி இருக்க முடியாது. உலக நாடுகளே இந்தியாவை மதிக்கும் வண்ணம் அணுசக்தி கொண்ட ஒரு வலிமையான நாடாக மாற்றியிருக்க முடியாது. எனவே முடியாது என்று நினைத்திருந்தால், ஆபத்து என்று பயந்திருந்தால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.
ஏன் கதிரியக்கத்தை முதன் முதலாக பிட்ச் பிளன்ட் (two uranium minerals, pitchblende and torbernite (also known as chalcolite).) என்ற உலோகத்தை தன் தலையில் சுமந்து அதை பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாரே மேடம் மேரி க்யூரி. தனக்கே ஆபத்து அதனால் வரும் என்று தெரிந்தும் ஆராய்ச்சியின் நல்ல பயன் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து முதன் முதலாக கதிர்வீச்சிற்கு வேதியலிலும், கதிர்இயக்கத்திற்கு இயற்பியலிலும் 2 நோபல் பரிசைப்பெற்று, அந்த கதிரியக்கத்தாலேயே தன் இன்னுயிரை இழந்தாரே. அதுவல்லவா தியாகம். தன்னுயிரை இழந்து மண்ணுயிரை காத்த அன்னையல்லவா மேடம் க்யூரி. இன்றைக்கு அந்த கதிரியக்கத்தால் எத்தனை கேன்சர் நோயாளிகள் ஹீமோதெரபி மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள், விவசாயத்திற்கு தேவையான விதைகளை கதிரியக்கத்தினை பயன்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க முடிகிறதே. இன்றைக்கு அணுசக்தியினால் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதே. அதே போல் அணுசக்தியில் யாருக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்று சாதித்து காட்டினோமே, அந்த வழியில் நண்பர்களே முடியாது என்று எதுவும் இல்லை.
முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட இயலாதவர்களின் கூட்டத்தால், உபதேசத்தால் வரலாறு படைக்கப்பட வில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது, மாற்றம் இந்த உலகிலே வந்திருக்கிறது.
இந்தியா வல்லரசாகும் என்று தவறான கருத்து பரப்ப படுகிறது, வல்லரசு என்ற சித்தாந்தம் என்றோ போய்விட்டது. 2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது தான் நம் மக்களின் லட்சியம். எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 60 கோடி இளைஞர்கள் தான், இந்தியா 2020க்குள் வளர்ந்த நாடாக உழைக்க முடியும், 2030க்குள் இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை அடைய உழைக்க முடியும். என்னால் முடியும் என்றால், நம்மால் முடியும், நம்மால் முடியும் என்றால் இந்தியாவால் முடியும்.
உறக்கதிலே வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. எனவே அந்த கனவோடு, அந்த நம்பிக்கையோடு நாம் உழைத்தால் தான் எண்ணிய இலக்கை அடைய முடியும். அதில் பல வெற்றிகளும் உண்டு, பிரச்சனைகளும் உண்டு, அதை சமாளிக்கும் திறமையும் இந்தியாவிற்கு உண்டு. எனவே ஒவ்வொரு பிரச்சனையும், நமக்கு படிப்பினையும், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தையும், மிகுந்த தன்னிறைவையும், ஆராய்ச்சியில் மேம்பாடும், நாட்டிற்கு பெருமையையும், மக்களுக்கு நன்மையையும், பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதாகத்தான் அமைந்துள்ளது.
இந்த உணர்வோடு, நாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையும், மக்களின் நியாயமான கேள்விகளையும், உண்மையான பயத்தையும் போக்கும் வகையில் ஒவ்வொன்றாக பார்ப்போம். அதாவது ஒரு அணுமின் நிலையத்தைப்பற்றியும் அதன் பாதுகாப்பை பற்றி நாம் முக்கியமாக பார்த்தோமேயானால், நான்கு பாதுகாப்பு விஷயங்கள் முக்கியமானவை.
1. Nuclear Criticality Safety - நீடித்த தொடர் அணுசக்தி கதிர்வீச்சினால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தால் அதில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய தொழில் நுட்பம்
2. Radiation Safety - அணுக்கதிர் வீச்சுள்ள எரிபொருள்களை எப்படி கையாளுவது என்பது பற்றியும், உலக தரத்திற்கேற்ப அதை எப்படி எந்த முறையில் பாதுகாப்பாக உபயோகிப்பது என்பது பற்றிய வழிமுறை
3. Thermal Hydraulic safety - அணுஉலையில் எரிபொருளை குளிர்விக்கும் அமைப்பு மின்சார தடையால் இயங்கவில்லை என்றால், அதை எப்படி மின்சாரம் இல்லாமலேயே இயங்க வைத்து மாற்று மின்சாரம் வரும் வரை உருகி வெப்பநிலை கூடி வெடிக்காமல் தடுக்கும் அமைப்பை எப்படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் இயக்குவது.
4. Structural integrity Safety – அணுஉலையும் அது தொடர்பான மற்ற அமைப்புகளின் கட்டமைப்பையும், அது அமைக்கப்பெறும் இடத்தின் வலிமையையும், இயற்கைப்பேரிடர் நேர்ந்தாலும் அதை எப்படி நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை
இந்த நான்கு அமைப்புகளும் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா, தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கவேண்டும். கூடங்குளம் அணுஉலை பற்றிய எங்களது முக்கியமான முதல் ஆய்வின் படி இந்த நான்கு பாதுகாப்பு விதிமுறைகளும், சரியான விதத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது, அது சோதித்தும் பார்க்கப்பட்டிருக்கிறது, பரிசோதனையில் அது நன்றாக செயல்படுகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. 3வது பாதுகாப்பு கூடங்குளத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பாகும். எனவே கூடங்குளம் மக்களுக்கு அணுஉலையின் பாதுகாப்பை பற்றி நானோ அளவு கூட சந்தேகம் வேண்டாம். பாதுகாப்பை பற்றிய விரிவான விளக்கத்தை பின்னால் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முறையான பாதுகாப்பு அனுமதியுடன் கூடக்குளம் அணுமின் நிலையம்
ஒரு அணுஉலையை நிறுவுவதற்கு இடத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக மிக கடுமையான தேர்வு முறை பின் பற்றப்படுகிறது. அந்த இடத்தில், அதாவது பூகம்பத்தின் விளைவுகள் எப்படி இருக்கும், அது எவ்வித பூகம்ப வரையரைக்குள் வரும், அதன் பூகோளத்தன்மை, அடிப்படை அமைப்பு, பூகம்பம் வந்தால் ஏதேனும் பாதிப்பு நிகழுமா இல்லையா, பாறைகளின் தன்மை எப்படி இருக்கிறது, சுனாமி வர வாய்ப்பு உண்டா, அப்படி வந்தால் அது எப்படி பட்ட தன்மையானதாக இருக்கும், வெள்ளம், மழை, பக்கத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்தால் அதனால் பாதிப்பு ஏற்படுமா, விமான நிலையம் பக்கத்தில் இருக்கிறதா இல்லையா, நச்சு மற்றும் வெடிக்கும் தன்மையுள்ள பொருள்கள பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க இடம் இருக்கிறதா இல்லையா, இராணுவ அமைப்புகள் அருகில் உள்ளனவா, அந்த பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு எவ்விதம் அமைந்துள்ளது, கடல் உயிரனங்களின் வாழ்வாதாரம், தேவையான பரந்த நிலப்பரப்பு, தண்ணீர், மின்சாரத்தேவை இருக்கிறதா இல்லையா போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தான் அணுஉலை அமைக்க ஒரு இடத்தை அரசு தேர்வு செய்கிறது. இதில் ஏதாவது ஒன்று குறை இருந்தால் கூட அந்த இடம் அணு மின்சார உற்பத்திக்கு ஏதுவான இடம் இல்லை என்ற முடிவுக்கு வந்து, அதற்கான அங்கீகாரம் கிடைக்காது.
எனவே அணுஉலை அமைக்கும் முன்பாகவே இத்தகைய அம்சத்தையும் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்த பின்புதான் கூடம்குளம் இடம் அணுஉலை அமைப்பிற்கான Environmental Impact Assessment (EIA), அதாவது இந்த அணு உலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றத்தைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அதன் தொடர்புடையோர் கருத்தரிந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் 2006 ம் ஆண்டின் வழிமுறைப்படி தேவையான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதற்கான AERB Code of Practice on Safety in Nuclear Power Plant Sitting வழிமுறைப்படி, இடம் தேர்வுக்கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டு அரசு அதற்கு முறைப்படி அனுமதி கொடுத்துள்ளது. எனவே, அணுஉலை சம்மந்தமாக செய்யப்படும் எந்த ஒரு அனுமதியும் எவ்வித சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் அரசு மிக கடினமான வரைமுறைகளுடன் நிறைவேற்றி இருக்கிறது. ஜப்பான் புக்குஸிமா விபத்திற்கு பிறகு பூகம்பமும், சுனாமியும் ஒன்று சேர்ந்து வந்தாலும் கூட கூடங்குளம் அணு உலை தாங்கும்.
தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பகுதி பற்றிய அச்சம் தேவையற்றது (Exclusion and sterilization zone)
அணுஉலையை சுற்றி 1.5 கிலோமீட்டர் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான பகுதி, அங்கு தான் குடியிருப்பு தடைசெய்யப்பட்ட பகுதி, அந்த பகுதி அணுஉலைக்கான இடத்திற்குள்ளேயே வருவதால், அதற்கு வெளியே குடியிறுக்கும் மக்களை வெளியேற்றுவது என்ற கேள்விக்கு இடமில்லை. இதற்கடுத்தாற்போல், வரக்கூடிய பகுதி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்கள் எப்பொழுதும் போல் இருக்க, அந்த மக்கள் தொகை பெருக்கம் இயற்கையாக வளர எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி அந்த பகுதியில் அதிகமான மக்கள் புதிதாக குடியேறுவது, அந்த 5 கிலோமீட்டர் பகுதிக்குள் புதிய தொழிற்சாலைகள் போன்றவை உருவாவது தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அதனால் அதிக மக்கள் குடியிருப்பு, அதாவது 20000 மக்கள் தொகைக்கும் மேல், அந்த பகுதியில் ஏற்படுத்தப்படக்கூடாது என்பது ஒரு வழிகாட்டு நெறிமுறை தானே தவிர, கட்டாயம் இல்லை.
அணுஉலையின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம்
ஆனால் கூடங்குளம் அணுஉலை மிகவும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளோடு, 3ம் தலைமுறையை சேர்ந்த பாதுகாப்பு வசதிகள் இந்தியாவின் வலியுறுத்தலின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது Passive Heat Removal System (PHRS) என்பது ஏற்படுத்தப்பட்டுள்ளது, ஒரு வேளை சிக்கலான சூழ்நிலையில் மின்சாரம் தடைபட்டாலோ, குளிர்விக்கப்பட்ட நீர் கிடைக்க தடை ஏற்பட்டாலோகூட, உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாத்து வைக்க ஏதுவான வகையில் PHRS செயல்படும். அதாவது “thermo siphon effect” மூலம் பம்ப் செய்யாமலேயே, மின்சாரம் இல்லாமலேயே தண்ணீரை மேலே செலுத்தி குளிர்ஊட்டக்கூடிய வகையில் கூடங்குளத்திலே முதன் முறையாக இந்தியாவின் வலியுறுத்தலின் பேரில் இந்த தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும், அணுமின் நிலையத்தின் எரிபொருளான மேம்படுத்தப்பட்ட யுரேனியம், சுற்றச்சூழலில் கதிர்வீச்சை வெளிப்படுத்தி விடாமல் இருக்கவும், உருகிவிடமால் தடுக்கவும், உருகும் தாதுக்களால் அணுஉலைக்குள்ளேயே ஏற்படும் கதிர்வீச்சையும் தடுக்கும் வகையிலும், கடும் விபத்து அணுஉலையில் ஏற்பட்டு அணு உலை எரிபொருள் உருகும் நிலை ஏற்பட்டால் கூட அதைத்தடுக்கும் வகையில் கோர் கேட்சர் “core catcher” என்ற தொழில் நுட்ப வசதியை கூடங்குளத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள். எரிபொருள் உருகி அணுஉலையின் அழுத்தக்கலனை (Reactor pressure vessel), மீறி வெளியேறினால், நீயுட்ரானை உறிஞ்சும் பொருளான (Boron) போரான் அதிக அளவில் உள்ள Matrix மேட்ரிக்ஸில் வந்து விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. போரானுடன், எரிபொருளில் இருந்து கசியும் நீயுட்டரான் சேரும் பொழுது, அணுசக்தி தொடர் கதிரியக்க சக்தி செயல் இழந்துவிடும். இப்படிப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கொண்ட அணுமின் உலைதான் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதை நான் என் கண்கூடாக கண்டு, விஞ்ஞானிகளுடன் விவாதித்து, உணர்ந்துள்ளேன்.
அதாவது 1.20 மீட்டர் கனமுள்ள சிமிண்டால் ஆன கான்கீரீட் வளையம் அமைக்கப்பட்டிருக்கிறது. விபத்து ஏற்பட்டாலும் கூட, வெளிப்புற சுற்றுச்சூழலில் கதிர்வீச்சை கசிய விடாமல் இருக்கும் படி, இந்த தடிமனான கான்கீரீட் வளையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பாராத சம்பவம் ஏதும் நிகழ்ந்து விட்டாலும் கூட, அணுஉலையைக் குளிர்விக்க ஒவ்வொரு அணுமின் நிலைய உலை கட்டித்திலும் மிகப் பெரிய ரசாயணக் கலவை கொண்ட 12 நீர் தேக்கக்
தொட்டிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. மின் சப்ளை துண்டிக்கப்பட்டு விட்டால், அதை எதிர் கொள்ள 6 மெகாவாட் மின் சக்தி கொண்ட 4 டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருவேளை ஏதிர்பாராத காரணத்தால் எரிபொருள் உருகி வழிந்தாலும், அதை உள்வாங்கிக்கொள்ள வசதியாக பல லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டிகள் அணுமின் உலைக்கட்டிடத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர ஹைட்ரஜனை ஈர்த்துக்கொள்ள வசதியாக இரு அணுஉலைக்கட்டிடங்களிலும், தலா 154 ஹைட்ரஜன் ரீகம்பெய்னர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே அணுஉலைக்குள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியை மீறி எவ்வித ஆபத்தும் மக்கள் வசிக்கும் பகுதிக்கு பரவாமல் தடுக்கக்கூடிய வகையில் தான் கூடங்குளம் அணுஉலை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது இன்றைக்கு உலகிலேயே இருக்கும் மேம்பட்ட பாதுகாப்பு வசதியை விட பன்மடங்கு பாதுகாப்பு மற்றும் தடுப்பாற்றல் கொண்ட அம்சம், எனவே பாதுகாப்பைப்பற்றிய அச்சம் மக்களுக்கு வேண்டாம். அதைப்பற்றிய கவலையை விட்டு விடுங்கள், அதைப்பற்றிய பயம் கூடங்குளம் பகுதி மக்களுக்கு வேண்டாம்.
பூகம்பத்தையும் தாங்கும் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் பாதுகாப்பு கட்டிடம்
உபயோகப்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை பாதுகாத்து வைக்கும் சேம்பருக்கு 400 சதவிகிதம் மாற்று மின்சக்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதுமட்டுமல்ல, மின்சாரம் தடைபடும் பட்சத்தில் டீஸல் மூலம் தொடர்ந்து நாட்கணக்கில், மாதக்கணக்கில் செயல்பட ஏதுவாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அணுஉலைக்கு உள்ளே பூமிக்கு கீழே 20 அடி ஆழத்தில், Spent Fuel Storage Pond (SFSP) கட்டப்பட்டுள்ளது, எனவே ஒவ்வொரு வருடமும் அதில் 54 எரிபொருள் கட்டமைப்புகள் அதன் உபயோகம் முடிந்த நிலையில் அணுஉலையில் இருந்து பிரிக்கப்பட்டு, அதில் புதிய எரிபொருள் கட்டமைப்புகள் அணுஉலையில் வைக்கப்படும். இந்த கட்டமைப்பு, 582 ஏரிபொருள் கட்டமைப்புகளை 8 வருடங்கள் வரை பாதுகாத்து வைக்க ஏதுவான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நமது இந்திய யுரேனியத்தை 75 சதவிகிதம் மறுசுழற்சி முறையில் பயன் படுத்த கூடிய மேம்படுத்தப்பட்ட இந்திய தொழில் நுட்பம் நமது அணுமின் நிலையங்களில் உள்ளது. எனவே இதன் மூலம் 75 சதவீகிதம் நாம் மறு சுழற்சி மூலம் திரும்பவும் பயன்படுத்த இயலும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்த உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் வைக்கும் கட்டிடம் 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ள பூகம்பத்தை தாங்கும் சக்தி படைத்தது, அப்படியே பூகம்பம் ஏற்பட்டால் கூட இது தானாக பாதுகாப்பாக நின்றுவிடக்கூடிய வல்லமை பொருந்தியது. ஆனால் பூகம்ப வாய்ப்பு மிக குறைவுள்ள 2 ம் பகுதியான கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவு.
அணுக்கழிவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது.
அணுஉலையில் உபயோகப்படுத்தப்படும் திடக்கழிவுகள் அதாவது காட்டன், கையுறைகள், மெயின்டன்ன்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ்கள், ரெஸின்கள் மற்றும் வென்டிலேஸனுக்கு அதாவது காற்றோற்றத்திற்கு தேவையான பைபர்கள். இந்த கழிவுகளை ஒருவேளை கதிர்வீச்சு தாக்கியிருந்தால் அதை மறுசுழற்சி செய்து அதை சிமிண்ட் உடன் கலந்து ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் ட்ரம்களில் அடைத்து அதை திட கழிவு வைப்பு கட்டிடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த கழிவைப்ப பாதுகாத்து வைக்கும் கட்டிடத்தில் 7 வருடங்களுக்கு பாதுகாத்து வைக்க இயலும். அதற்கு பின் மறு சுழற்சி செய்து அதை திரும்ப பயன்படுத்த இயலும். திரவக்கழிவுகளை திடக்கழிவுகளாக மாற்றி, மேற்கூறிய முறையில் பாதுகாக்க இயலும். எனவே அணுஉலைக்கழிவு என்பது கதிர்வீச்சை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் அல்ல, அணுஉலையில் உபயோகப்படுத்தக்கூடிய மற்ற பொருள்கள் சார்ந்த கழிவுகள் என்பது தான். எனவே அணுக்ககழிவுகள் கடலில் கழக்கப்பட வில்லை.
சுற்றுச்சூழலில் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் உண்டா?
கடந்த 40 வருட அணுஉலை அமைப்பில் இந்தியாவின் அனுபவத்தில், சுற்றுச்சூழலில் அணுக்கதிர்வீச்சு அணுஉலை அமைந்த இடத்திலோ, அதைச்சுற்றியுள்ள 30 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பகுதியிலோ, சுற்றுச்சூழலில் எப்பொழுதும் இருக்கும் இயற்கையான கதிர்வீச்சின் அளவை விட மிகுதியானதில்லை. அதன் அளவை தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருவது அணுமின் நிலையத்தின் வேலையில் ஒரு பகுதியாகும். எனவே கடந்த கால வரலாற்றில் கதிர்வீச்சின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் குறைந்து தான் காணப்பட்டிருக்கிறது. கூடங்குளத்தை பொருத்தவரை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் அமைக்கப்பட்டு இருப்பதால் சுற்றுச்சூழல் கதிர் வீச்சிற்கு உள்ளாகும் என்ற கேள்விக்கே இடமில்லை.
மீன்வளத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை
அணுமின் நிலையத்தில் குளிர்ந்த தண்ணீர் தேவை என்பது தெரிந்த ஒன்றுதான். அணுஉலையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு நீராவி வேண்டும், அதற்கு தண்ணீர் தேவை. நீராவியை திரும்பவும் குளிரூட்டவும் தண்ணீர் தேவை. இந்த உபயோகத்திற்கு பின், அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கடல் நீரின் வெப்பத்தைவிட 5 டிகிரி சென்டிகிரேட் கூடுதலாக இருக்கும், இது வரையறுக்கப்பட்ட அளவான 7 டிகிரி சென்டிகிரேடுக்கும் கீழ் தான் இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதனால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படாது, கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இந்த சோதனையை 7 பல்கலைக்கழகங்கள், National Institute of Oceanography (NIO), Central Electro Chemical Research Institute (CECRI) போன்றவைகள் சோதனை செய்து, கடலில் கலக்கும் அணுஉலையின் நீரால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறது. இதுவரை தாரப்பூர், கல்பாக்கம் அணுஉலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது, அதனால் மீன் வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. எனவே அணுமின் நிலையத்தின் நீர் கழிவுகளால் எவ்வித வெப்ப மாறுபாட்டாலோ எவ்வித பாதிப்பும் மீன்வளத்திற்கு ஏற்பட வாயப்பில்லை. கடலோரத்தில் உள்ள அனைத்து அணுஉலகளின் ஆய்வின் படி மீன் வளம்பாதித்தாகவோ, அதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றோ ஆய்வறிக்கை சொல்லவில்லை. மீன் வளம் குறையாமல் இருக்க பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்தி தான் கடலில் கலக்கவேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.
பூகம்பம் மற்றும் சுனாமி
அடுத்ததாக கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம், பூகம்பம் வர வாய்ப்புள்ள இடம் என்ற வாதம் வைக்கப்படுகிறது. பூகம்ப அதிர்வுகள் அந்த பகுதியில் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் பூகம்பப்பகுதி என்று சொல்லப்படுகிற Earthquake Zone 2ல் வருகிறது கூடங்குளம். இதுவரை உலக வரலாற்றில் Earthquake Zone 4க்கும், அதற்கும் மேம்பட்ட பூகம்ப பகுதிகளில்தான் பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 6க்கும் அதற்கும் மேல் வந்து அழிவுகள் ஏற்பட்டிருக்கிறது. Earthquake Zone 2ல் பூகம்பம் வந்து அதனால் பேரழிவுகள் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கான வரலாறு இல்லை. அதனுடைய லேசான அதிர்வுகளின் தாக்கம், பூகம்பத்தின் விளைவுகளால் உணரப்படுமே தவிர மிகப் பெரிய பூகம்பம் வந்து கூடங்குளத்தை அழித்து விடும் என்ற கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை. இந்தியாவிலே Earthquake Zone 4க்கும் மேற்பட்ட பகுதிகளில் தான் பூகம்பம் வந்துள்ளது.
இன்றைக்கு இந்தியாவிலே Earthquake Zone 4லே இருக்கக்கூடிய பகுதிகளிலே பூகம்பம் வந்தால் மிகப்பெரிய அடுக்குமாடி வீடுகள், கட்டிடங்கள் அந்த பூகம்ப கோட்டிலே இருந்தால் அவைகள் பூகம்பத்தால் பாதிக்காதவகையில் எழுப்பப்படும் கட்டிடம் என்ற வரையறைக்குள் கட்டப்பட வில்லை என்றால், அது பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. அதைப் பாதுகாக்க எவ்வித வழிமுறையும் இந்தியாவில் இல்லை. அது தான் உண்மை. ஆனால் தமிழ் நாட்டிலே அமைந்துள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணுஉலைகள், Earthquake Zone 2ல் வருவதாலும், பூகம்பத்தால் பாதிக்காதவகையில் எழுப்பப்படும் அடிப்படை கட்டமைப்பு என்ற வரையறைக்குள் கட்டப்பட்டுள்ளதாலும், 6 ரிக்டர் ஸ்கேல் மற்றும் அதிகப்படியான (0.15g Acceleration) வரை உள்ள பூகம்பத்தையே தாங்கும் வலிமையுடன் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டமைப்பு அமைந்துள்ளது. இந்த பரிசோதனை பண்புகளின் அடிப்படையில், இதை பரிசோதனை செய்து பார்த்ததில் கூடங்குளம் அதற்கு மேல் அதிர்வை கூட தாங்கும் வல்லமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கூடங்குளத்தில் இருந்து 88 கிமீ க்கு அப்பால் உள்ள திருவனந்தபுரத்திற்கு அருகில் 4.3 ரிக்டர் ஸ்கேல் வரை 2 தடவை பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது, இது தான் அதிகப்படியான நிகழ்வு. இது வழக்கமான ஒன்றுதான். எனவே பூகம்பத்தால் Earthquake Zone 2ல் உள்ள கூடங்குளம் அணுஉலை பாதிப்புக்குள்ளாகும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தில் சுத்தமாக வலுவில்லை.
தமிழகத்தை 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமி போன்ற இயற்கை பேரிடர் தனியாக வந்தாலோ, ஜப்பான் போன்று பூகம்பமும், சுனாமியோ சேர்ந்து வந்தாலோ, அப்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற கருத்து, ஜப்பான் புக்குஸிமா டெயிச்சி அணுமின் நிலைய விபத்திற்கு பின் பரவலாக காணப்படுகிறது. அதாவது ஜப்பான் புக்குஸிமா டெயிச்சி அணுஉலை முதல் தலைமுறையை சேர்ந்த 40 ஆண்டு கால பழமை வாய்ந்த அணுஉலை. இக்கால சூழ்நிலைக்கேற்ப, அதன் பாதுகாப்பை மேம்படுத்தாதாலும் , பூகம்பம் அடிக்கடி ஏற்படும் ஜப்பானில், சுனாமியும் சேர்ந்து வந்ததால், 8 மணி நேரத்திற்குள் மாற்று மின் சக்தியை, சுனாமியினால் ஏற்பட்ட குழப்பத்தால், போக்குவரத்து தடையின் காரணமாக, அந்த குறிபிட்ட காலகட்டத்திற்குள் கொடுக்க இயலாத சூழ்நிலையினால் அந்த விபத்து ஏற்பட்டது. கூடங்குளத்தை போன்று, நான் மேலே குறிப்பிட்ட படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட தேவையில்லை, சுலபமாக உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் சேமித்து வைக்கப்பட்ட அந்த நிலையத்தை குளிர்வூட்ட போதுமான மின்சாரத்தை தடையில்லாமல் கிடைக்கக்கூடிய வசதியை செய்திருந்தாலே, அந்த புக்குஸிமா எரிபொருள் சேமிப்பு கிடங்கு விபத்தில் இருந்து தப்பியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். 1986ல் செர்னோபில்லில் நடைபெற்ற விபத்திற்கும், 2011ல் ஜப்பானில் நடைபெற்ற புக்குஸிமா விபத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம். அதில் இருந்த வெளிப்பட்ட கதிர்வீச்சு, செர்னோபிலில் வெளிப்பட்ட கதிர்வீச்சைக்காட்டிலும் 0.4சதவிகிதம் குறைவு, அது எவ்வித கதிர்வீச்சு சார்ந்த பாதிப்பையும் மக்களுக்கு ஏற்படுத்த வில்லை. எனவே தான், 11 மார்ச் 2011 ல் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் ஏற்பட்ட இயற்கை பேரழிவில், கதிர்வீச்சினால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை.
எனவே முதல் தலைமுறையை சேர்ந்த ஜப்பான் புக்குஸிமா வையும், அதைவிட பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்ட 3ம் தலைமுறையைச் சேர்ந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் ஒப்பீடு செய்வது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மக்களின் விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி என்பது இந்தியாவிற்கு புதிதல்ல. பல்வேறு ஏவுகணைக்காகவும், செயற்கைக்கோள் ஏவுவதற்கும், சுனாமி, பூகம்பம், தீ விபத்து போன்ற வற்றில் இருந்து எப்படி மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற பயிற்சி கண்டிப்பாக வேண்டும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு வெளிப்படுத்துவது இன்றியமையாதது, அதையே மக்களை பயமுறுத்தும் ஆயுதமாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது. எப்படி, தீவிபத்திலிருந்து மீள்வது, என்பதற்கு என்றென்றும் பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.
2004 ல் ஏற்பட்ட சுனாமி 1300 கிலோமீட்டருக்கு மேல் நாகபட்டினத்திற்கு கிழக்கே (SUNDA ARC) சுந்தா ஆர்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. எனவே தான் நாகபட்டினத்தை, சென்னையை, கல்பாக்கத்தை நேரடியாக தாக்கிய சுனாமி, கன்னியாகுமரியையோ, கூடங்குளத்தையோ, இராமேஸ்வரத்தையோ தாக்கவில்லை. அதன் தாக்கம் வீரியம் குறைந்ததால் மிகுந்த சேதத்தை விளைவிக்கவில்லை. அப்படியே தாக்கினாலும், கல்பாக்கம் அணுஉலை பாதுகாப்பிற்கு எந்த பங்கமும் வரவில்லை, அது பாதுகாக்கப்பட்டது என்பது நாம் கண்கூடாக கண்ட உண்மை.
கூடங்குளத்தை பொருத்தவரை, அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி கிட்டத்தட்ட சுனாமிஜெனிக் பால்ட் (tsunamigenic fault)என்று சொல்லப்படுகிற சுனாமியை எழுப்பக்கூடிய பூமி பிளவு ஏற்படக்கூடிய பூகம்ப பகுதி 1500 கிலோமீட்டர்க்கு அப்பால் சாகோஸ் ரிட்ஜ் (Chagos Ridge) என்று கன்னியாகுமரிக்கு கீழே தென் மேற்கே அமைந்துள்ளது. எனவே கூடங்குளத்தை நேரடியாக சுனாமி தாக்க வாய்ப்பு என்பது பூகோள ரீதியாகவும் இல்லை, அறிவியல் சார்ந்தாகவும் அமைய வில்லை.
அப்படி சுனாமி ஏற்படும் பட்சத்தில், கூடங்குளத்திற்கு அதன் பக்க அலைகள் தான் வலுவிழந்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஜப்பானில் ஏற்பட்டது போன்ற இராட்சத அலைகள் வந்து கூடங்குளத்தை தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை. நேரடியாக தாக்கவேண்டுமானால், கூடங்குளத்திற்கு கிழக்கே உள்ள 1300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள SUNDA ARC பகுதியில் பூகம்பம் ஏற்பட்டு, இலங்கை இடையே இருப்பதால் கூடங்குளம் சுனாமியால் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால் கூட ஒருவேளை அதையும் மீறி சுனாமி வந்தால் 2004 சுனாமி போல் இல்லை அதை விட அதிக சக்தி வாய்ந்த சுனாமி வந்தாலும், அதன் அலையின் தாக்கம் அதிகபட்சமாக 5.44 மீட்டர் வரை எழும்பும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையமோ, நீர் மட்டத்தில் இருந்து 7.65 மீட்டருக்கு மேல் தான் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உயரத்தில் 6 பம்ப் ஹவுஸூம், 8.1 மீட்டர் உயரத்தில் டர்பனும், 8.7 மீட்டர் உயரத்திற்கு மேல் அணு உலையும், 9.3 மீட்டர் உயரத்திற்கும் மேல் ஜெனரேட்டர்களும், 13 மீட்டர் உயரத்திற்கு மேல் ஸ்விட்ச் யார்டும் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் சுனாமியால் பாதிக்கப்படும் நிலை உண்டாக வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை.
எனவே, பூகம்பமோ, சுனாமியோ, அல்லது ஜப்பானில் நடந்தது போல் சுனாமியும், பூகம்பமும் சேர்ந்து வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், அப்படியே வந்தாலும், கூடங்குளம் அணுஉலை பாதிப்படையவோ, விபத்து ஏற்படவோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பது தான் உண்மை.
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது, அச்சம் வேண்டாம்
எனவே கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலை மிகவும் பாதுகாப்பான இடத்தில் அமைந்துள்ளது, 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ள பூகம்பம் Earthquake Zone 2ல் வர வாய்ப்பில்லை என்றாலும் கூட, ஒருவேளை அப்படி வந்தாலும், அது 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ளதாகவும், 0.6ஜி அதிர்வுள்ளதாக இருந்தாலும் தாங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது, ஒருவேளை பூகம்பமோ, சுனாமியோ ஏற்பட்டால் கூட 3 நிமிடங்களுக்குள் மொத்த அணுஉலையும் நிறுத்தப்பட்டு விடும் திறன் கொண்டது, மின்சாரம் தடைபட்டாலும் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளை குளிர்விக்கும் கண்டெய்னர்களுக்கு 400% மாற்று மின்சார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அவை சுனாமி வந்தாலும் பாதிக்காத உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, பல்வேறு வகைகளில் மின்சாரம் தடைபட்டாலும், தொடர்ந்து இயற்க்கையாக குளிர்விக்கும் வகையில் Passive Heat Removal System (PHRS) அமைக்கப்பட்டுள்ளது, ஒருவேளை கசிவு ஏற்பட்டாலும் கூட கோர் கேட்சர் அவற்றை அணுஉலைக்குள்ளேயே போரான் மூலம் செயலிழக்கச்செய்து விடும். எனவே கதிர்வீச்சு அணுஉலையை விட்டு வெளியே வரும் என்றோ, செர்னோபில் போல் அணுஉலை கசியும் என்றோ, புக்குஸிமா போல் விபத்து நிகழும் என்றோ கவலை இல்லை. அதனால் சுற்றுச்சூழலில் கதிர்வீச்சு பரவும் அபாயம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கூடங்குளம் அணுஉலை உலகத்திலேயே ஒரு மேம்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அணுஉலை. எனவே அறிவார்ந்த முறையில் ஆய்வு செய்த பொழுது, மக்கள் மனதில் எழும்பிய நிஜமான பயம், அணுவிஞ்ஞானிகளாலும், இன்றும் பல ஆராய்ச்சியாளர்களாலும் ஆராயப்பட்டு அந்த பயங்களுக்கு சிறு நூலிலை இடம் கூட கொடுக்காமல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அணுஉலையின் மூலம் மின்சார உற்பத்தியை பற்றி எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். கூடங்குளத்தினால் எவ்வித பயமும், ஆபத்தும் இல்லை. எனவே மக்கள் எள்ளளவும் பயப்பட வேண்டாம்.
உலகமயமாக்கலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும்.
நண்பர்களே, உலகமயமாக்கலினால் ஒவ்வொரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி திட்டமிட்டு வளர்ச்சி பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. கோல்டு மேன் சாச் அறிக்கையின் படி BRIC (BRAZIL, RUSSIA, INDIA, CHINA) பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீன நாடுகள் 2018ம் ஆண்டில் அமெரிக்காவை பொருளாதார வளர்ச்சியில் மிஞ்சி நிற்கும் என்று தற்பொழுது வெளிவந்துள்ள அறிக்கை தெளிவாக கூறுகிறது. இந்தியாவும், ரஷ்யாவும் ஸ்பெயினையும், கனடாவையும், இத்தாலியையும் விட 2020க்குள் தனியாக பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக மாறும். 21ம் நூற்றாண்டின் முதல் 10 வருடத்தில், உலக பொருளாதாரத்தில் 36.3 சதவீதம் BRIC நாடுகள் தனது பங்களிப்பாக்கியிருக்கிறது.
2020க்குள், BRIC நாடுகள், உலக பொருளாதாரத்தில் (in PPP terms) 3 வது பெரிய பொருளாதார சக்தியாக மாறி உலக பொருளாதாரத்தில் 49 சதவீகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மத்திய தர வர்க்கத்தினர் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவிலும், சீனாவிலும் அதிகரிப்பார்கள் என்றும், மத்த நாடுகளைக்காட்டிலும் இந்தியாவிலும், சீனாவிலும் வர்த்தக தேவை அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்களுக்கு தேவையான பொருள்களுக்கும், கனிம மற்றும் மற்ற வளத்திற்குமான தேவை அதிகரித்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு அதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக எரிசக்தி மற்றும் மின்சாரத்தேவை மிகவும் அதிகமாகும்.
இந்தியாவைப் பொருத்தவரை, 75 கோடி மக்களுக்கும் அதிகமாக 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள், அவர்களது வாழ்வாதரம் உயர அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படவேண்டும். இந்திய கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு பொருளாதாரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைய ஏதுவாக அமையும். 2008ம் ஆண்டு இந்திய பொருளாதாரம், $1 ட்ரில்லியன் டாலர் எல்லையை எட்டிவிட்டது. அதாவது ரூ 5 இலட்சம் கோடியாக இந்திய பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியில் தொய்வில்லாமல், இடையூறு இல்லாமல், நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி நடை போட்டால். 2016க்குள் இந்திய பொருளாதாரம் $2 ட்ரில்லியன் டாலர் எல்லையை எட்டும் என்றும், 2025க்குள் $4 ட்ரில்லியன் டாலர் எல்லையை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் 2020க்குள் இந்தியா பொருளாதரத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக மாறும், ஏழ்மை, வறுமை இல்லாதா நாடாக, மேடு பள்ளம் இல்லாத, ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமத்துவ சமுதாயமாக, வளமையான நாடாக, அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு நாடாக, தீவிரவாதம் இல்லாத நாடாக, அமைதியான நாடாக மாறும் என்பது திண்ணம்.
அப்படிப்பட்ட நாடாக மாறவேண்டுமானால், அதற்கேற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவேண்டும், கிராமப்புறத்தில் நகர்புறத்திற்கேற்ற வசதிகள் கிடைக்கவேண்டும், கிராமப்புறங்கள் நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சியை அடையவேண்டும், விவசாயத்தின் வளர்ச்சி 10 சதவீகிதத்தை அடையவேண்டும், தொழிற்துறை தொடர்ந்த வளர்ச்சியை அடையவேண்டும், சேவைத்துறையும் தொடர்ந்த வளர்ச்சியை பெறவேண்டும். எனவே இந்த வளர்ச்சியை இந்தியா பெறவேண்டுமானால், மின்சார உற்பத்தி மிகவும் அத்தியாவசிய தேவையாகிறது. இந்தியா இப்பொழுது 150,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது, உலக உற்பத்தியில் இது 3 சதவீகிதம் தான். உலக பொருளாதார வல்லுனர்களின் எதிர்பார்ப்பின்படி 2020க்குள் 400,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டும். 2030க்குள் 950,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தாக வேண்டும், இது கூட அமரிக்காவின் தனிமனித எரிசக்தி இருப்பைக் காட்டிலும் 4ல் 1 பங்குக்கு குறைவாகத்தான் உள்ளது. 2050க்குள் மின்சாரத்தேவை அதற்கு மேலும் அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு 2050ல் ரஷ்யா மற்றும், பிரான்ஸ் நாடுகளைப்போல் இந்தியாவின் தனி மனித மின்சார தேவை இந்தியாவில் 6000 வாட்டாக இருக்கும்.
2030க்குள் எரிசக்தி சுதந்திரம்
இந்தியா 2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெறவேண்டும்,(Energy Security to Energy Independence) என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படியே, எவ்வித தடையும் இல்லாமல், இடைஞ்சல், போராட்டங்கள் இல்லாமல்கூட நாம் சாதித்துக்காட்டினால் கூட ஆண்டுக்கு 5 சதவிகித வளர்ச்சியை நாம் எட்டினால் கூட 2030க்குள்ளாக 400,000 மெகா வாட்தான் உற்பத்தி செய்ய இயலும். இன்றைக்கு மொத்த மின்சார உற்பத்தியில் 89 சதவீகிதம் மின்சார உற்பத்தி நமது நாட்டில் உள்ள இயற்கை வளத்தில் இருந்து தான் நாம் பூர்த்தி செய்கிறோம். நிலக்கரியில் இருந்து 56%, நீர் மின்சாரம் 25%, அணுமின்சாரம் 3%, காற்று மூலம் 5%, சோலார் மூலம் 0.2% மின்சாரம் கிடைக்கிறது. 12% தான் எண்ணை மூலமாகவும், இயற்கை எரிவாயு மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த முறையில் சரியான கொள்கைகள் மூலமாகவும், சிந்தாமல், சிதறமால் நாம் மின்சார உற்பத்தி சதவிகிதத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தினோம் என்றால் தான், நமது குறைந்த பட்ச இலக்கான 400,000 மெகாவாட் உற்பத்தி இலக்கை அடையமுடியும். எனவே அந்த வழியில் நாம் பார்த்தோமேயானால், நிலக்கரி மூலம் – சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரி மூலமாக 80,000 MWல் இருந்து 200,000 MW உற்பத்தியும், நீர்மின்சாரம் மூலம் கூடுதலாக 50,000 MW உற்பத்தியும், காற்றாலை மூலமாக கூடுதலாக 64000 MW உற்பத்தியும், சூரிய எரிசக்தி மூலம் 55000 MW உற்பத்தியும், மற்ற மரபு சார எரிசக்திகள் மூலம் 51000 MW உற்பத்தியும் செய்தால் கூட மீதமுள்ள 50,000 MW அணுமின் உலைமூலம் உற்பத்தி செய்தாக வேண்டும். இந்த மின்சார உற்பத்தியை அடைய மத்திய, மாநில் அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு, இந்த மின்சார உற்பத்தி திட்டங்களை, வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு இணைந்து செயல்பட்டால் மட்டுமே, இந்த வளர்ச்சியை நாம் அடையமுடியும்.
அணுமின்சார உற்பத்தியும் அதன் பாதுகாப்பும்
இன்றைக்கு நம் அணுசக்தியின் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 5000 மெகாவாட் மட்டுமே. இதில் இருந்து 50,000 MW அணுமின் உலைமூலம் உற்பத்தி செய்யதாக வேண்டும். இன்றைக்கு இந்தியாவில் கடந்த 40 வருடங்களாக 20 அணுஉலைகள் மூலமாக சுத்தமான, சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வரை அணுமின்சாரத்தின் மூலம் இந்தியாவில் எவ்வித மக்களை பாதிக்கும் வகையில் பெரியதொரு விபத்து என்று எதுவும் இல்லாத சுத்தமான வரலாறு உள்ளது. இதுவரை 16 நடந்த சிறு விபத்துக்கள் கூட தண்ணீர் கசிவு போன்ற சிறு நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட கதிர்வீச்சால் மட்டுமே தான். ஆனால் இதுவரை உயிர் சேதங்களோ, கதிர் வீச்சு பிரச்சனைகளோ, ஏற்படவில்லை. 2004 சுனாமி ஏற்பட்ட போது, கல்பாக்கம் நிலையம் தானாகவே செயலிழந்தது. ஆனாலும் கதிரியக்க வெப்பம் தொடர்ந்து நிகழ்ந்தாலும், அதையும் சமாளித்து உலையைக் குளிரூட்டி, ஜப்பான் புக்குஸிமா டெய்ச்சி அணுஉலை போல் எவ்வித விபத்தும் நிகழாமல், கல்பாக்கம் காக்கப்பட்ட வரலாறு இந்தியாவின் அணுஉலை பாதுகாப்புக்கு அம்சத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. அணுமின் நிலையங்களை விட, மற்ற மின் நிலையங்களில்தான் அதிக பாதிப்பு என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது என்றால். அணுஉலைகளில் பாதுகாப்பு முறைகளுக்கு கொடுக்கும் உயரிய முக்கியத்துவம் தான் அங்கு விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மக்களை பாதிக்காதவகையிலும், கதிர்வீச்சு பரவாமல் தடுக்க்கூடிய வகையிலும் மிகுந்த மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட வேண்டும் என்ற சர்வ சேத தர நிர்ணயம் தான் இவ்வித பாதுகாப்பை அணுஉலைகளுக்கு ஏற்படுத்தி தருகிறது. எனவே அணுஉலையால் ஏற்படும் விபத்தால் பல தலைமுறைகள் பாதிக்கப்படும் என்றும், அதனால் ஏற்படும் கதிரியக்க வீச்சு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், போன்றவைகள் வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்துவதில் எவ்வித உண்மையும் இல்லை, அந்த வாதத்தில் எவ்வித வலிமையும் இல்லை.
அதாவது அணுகுண்டினால் ஏற்படும் கட்டுப்படுத்தப்படாத அணு கதிர் வீச்சு செயின் ரியாக்ஸனுக்கும், அணுஉலையினால் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் பாதுகாக்கப்பட்ட அணுஉலையில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி நிகழும் கதிர்வீச்சு நிகழ்வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. 1945ல் ஜப்பான் ஹிரோஸிமா, நாகசாகியில் அமெரிக்கா போட்ட அணுகுண்டினால் ஏற்பட்ட அழிவிற்கு பின்பு நடைபெற்ற 60 ஆண்டுகால தொடர் ஆராய்ச்சியில் Atomic Bombing Casualty Commission (ABCC) மற்றும் Radiation Effects Research Foundation (RERF) என்ற அமைப்புகள் அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் கண்டரியப்பட்ட உண்மை என்ன வென்றால், கதிர்வீச்சு பாதிப்பு அந்த கதிர்வீச்சை அணுகுண்டு வெடிப்பினால் நேரடியாக ஏற்று பாதிக்கப்பட்டவர்களை மட்டும் தான் பாதித்து இருக்கிறதே தவிர, ஜெனிட்டிக் எபெக்ட் என்று சொல்லப்படுகிற மரபணுவை பாதித்து அது அடுத்த தலைமுறையையும் பாதிக்கவில்லை என்ற உண்மையை கண்டறிந்துள்ளார்கள். கட்டுப்படுத்தப்படாத அணுகதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு என்பது உண்மைதான் அது பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் என்ற கருத்து உண்மைதான், ஆனால் அதுவே தலைமுறை தலைமுறையாக பாதிக்கும் என்ற கருத்தில் உண்மையில்லை, அது அறிவியல் பூர்வமாக நீரூபிக்க படவும் இல்லை. எனவே அப்படிப்பட்ட விளைவைத்தரும் அணுகதிர்வீச்சு அணுஉலையால் ஏற்பட வாய்ப்பில்லை.
உலகநாடுகளின் அணுமின்சார உற்பத்தியும், அதன் தேவையும்
எனவே இன்றைக்கு 2011லே உலகிலே, 29 நாடுகள், 529 அணுஉலைகள் மூலம் கிட்டத்தட்ட 3,78,910 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. அணுமின் உலையின் மூலம் மின்சார உற்பத்தியில் # 14000 வருட அணுஉலை முன் அனுபவம் உள்ளது. (#அதாவது உலகத்தில் எப்பொழுது அணுமின்சாரம் உற்பத்தி செய்ப்பட்டதோ அப்போது இருந்து இன்று வரை எத்தன மனித நாட்கள் அதில் ஆராய்சி, பாதுகாப்பு மற்றும் உற்பத்தியில் அனுபவப்பட்டுள்ளதோ அத்தனை முன் அனுபவம்) எவ்வித ஆபத்தையும் சமாளிக்கும் திறன் உள்ளது. உலகஅளவில் பிரான்ஸ் 74 % மும், ஸ்லோவேக்யா 51%மும், பெல்ஜியம் 51% மும், சுவீடன் 39 % மும், ஜப்பான் 29 % மும், ஜெர்மனி 28% மும், அமெரிக்கா 19 % மும், இந்தியா 2.85 % மும் தான் அணுமின் சார உற்பத்தி செய்கிறது. மற்ற வளர்ந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்தியா அப்படியில்லை நமக்கு தேவையான மின்சாரம் உற்பத்தி இலக்கை இன்னும் நாம் எட்டவில்லை. மற்ற நாடுகள் தங்களது மினரல் வளத்திற்கேற்றார் போல் எரிசக்தி உற்பத்தியில் தண்ணிறைவை அடைந்துள்ளார்கள். குறிப்பாக ஜெர்மனி அணுஉலையை மூடப்போகிறது என்று கூறப்படுகிறது.
ஏன் ஜெர்மனி 2022க்குள் அணுமின் உலையை நிறுத்த முடிவுசெய்தது?
ஏற்கனவே ஜெர்மனி ஒரு வளர்ந்த நாடு, இதில் 2022 க்குள் ஜெர்மனி அதனுடைய அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் இருந்து வெளியில் வரும் முடிவு என்பது, அந்த நாட்டில் இருக்கும் யுரேனியத்தின் அளவு 2022க்குள் முடிந்துவிடும் என்ற இயற்கையான காரணத்தினாலே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதாவது, 2006 முதல் 2008 வரை மொத்த தேவையான 3332 டன் யுரேனியத்திற்கு பதிலாக, மொத்தமே 68 டன் யுரேனியம் தான் ஜெர்மனியில் இருந்து எடுக்க முடிந்தது, மீதி பற்றாக்குறைக்கு அது இறக்குமதியை நம்பி இருந்தது. எனவே இனிமேல் இறக்குமதி செய்தால் அது விலை அதிகமாகும் எனவே மரபு சார எரிசக்தி முறையில் அதிகம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அதற்கு அந்த நாட்டிலேயே அதன் தொழில் நுட்பம் கிடைப்பதாலும், உற்பத்தி செலவு குறைவு என்பதாலும், அதன் தேவைக்கு அதிகமாக மின்சார உற்பத்தி நடக்கும் என்ற தொலைநோக்கின் காரணத்தினாலும் மற்ற வகையில் மின் உற்பத்தி செய்யவோம் என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளது. இனிமேல் அது விபத்து ஏற்படும் என்ற பயத்தாலோ, அல்ல கதிர்வீச்சினால் பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தாலோ ஏற்படுத்தப்பட்ட முடிவல்ல.
எனவே அணுமின் சக்தி ஜெர்மனியின் எரிசக்தி சுதந்திரத்திற்கு தேவையற்றதாகி விட்ட காரணத்தினால் தானே தவிர, ஜப்பானிலே ஏற்பட்ட விபத்தை பார்த்து பயந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. மற்ற நாடுகளும் தங்களது எரிபொருள் இருப்புக்கு ஏற்ப, பொருளாதார நிலைப்பட்டிற்கு ஏற்ப, தொழில் நுட்பத்திற்கு ஏற்ப, தங்களது மின்சார தேவைக்கு ஏற்பத்தான் மின்சார உற்பத்தியை பற்றிய முடிவை எடுக்கிறார்கள். எனவே அவர்கள் மூடப்போகிறார்கள், அதைப்போல் இந்தியாவும் மூட வேண்டும் என்ற கருத்தில் வலு இல்லை, அப்படிப்பட்ட நிலைப்பாடு இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ற கொள்கையாக இருக்காது.
அணுமின் சக்தி மனித குலத்திற்கு எதிரானதா?
இன்றைக்கு அணுசக்தியே மனித குலத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. நமது முன்பே உள்ள பல்வேறு வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும், அதைக்கொண்டு நமது நாட்டின் வளத்தையும், நமது தொழில் நுட்ப திறனையும், நமது தேவையும் கருத்தில் கொண்டுதான் நாம் நமது கொள்கையை வகுக்க வேண்டும். சூரிய சக்தி மூலமும், காற்றாழைகள் மூலமும் கிடைக்கும் மின்சாரம் தான் மிகவும் சுத்தமான, சுற்றுசூழலுக்கு எவ்வித மாசும் ஏற்படுத்தாத மின்சாரம் ஆகும். இந்தியாவில் சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் சூழ்நிலையும், அதிகமான காற்று கிடைக்கும் சூழ்நிலையும் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும் 100 சதவீகிதம் அதனை உற்பத்தி செய்ய இயலாத நிலை இருக்கிறது, ஏனென்றால், சூரிய ஒளியின் தாக்கம், அளவு போன்றவை மற்றும் சோலார் செல் செயல்படும் தன்மையின் சதவிகிதம், அதன் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்துகிறது மட்டுமல்லாமல் அதன் உற்பத்தி விலையும் அதிகமாக இருக்கிறது.
எனவே அதற்கேற்ற முறையில் நாம் சூரிய ஒளி மின்சாரத்தையும், மற்றும் ஒரு உற்பத்திசார்ந்த பொருளையும் அதனுடன் இணைத்து உற்பத்தி செய்யும் கொள்கையை வகுப்போமேயானால், அதாவது எடுத்துக்காட்டாக சூரிய ஒளி மின்சாரத்தையும், கடல் மற்றும் உப்புத்தண்ணீரை சுத்திகரித்து நல்ல குடிதண்ணீராக மாற்றி அதை தண்ணீராக மாற்றினால் அது பொருளாதார முறையில் ஏற்புடையதாக, செலவு குறைவானதாக இருக்கும், அதே போல் காற்றாலை மின்சார உற்பத்தியும் காற்றின் தன்மையை சார்ந்ததாக இருப்பதினால் அதன் முழு உற்பத்தி திறனையும் நம்மால் பெற இயலவில்லை. எனவே இந்த முறையில் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட அளவு மின்தாரத்தை நாம் உற்பத்தி செய்தாக வேண்டும். அதற்கான கொள்கைகளை மத்திய மாநில அரசுகள் வழிவகுத்து செயல் படுத்திக்கொண்டு வருகிறது. எனவே சூரிய ஒளி மற்றும் காற்றைலை மின்சார உற்பத்தியை நாம் கண்டிப்பாக ஊக்குவித்து, அதன் முழு திறனையும் அடைக்கூடிய தொழில் நுட்பத்தையும், அதன் பொருளாதாரத்தையும் ஒப்பிட்டு அதன் மூலம் மின்சார உற்பத்திக்கு நாம் வழி வகை செய்தாக வேண்டும்.
ஒரு ஒப்பீட்டிற்காக நாம் பார்ப்போமேயானால், மின்சார உற்பத்தி செலவு சூரிய ஒளிமூலம் Rs 20/kWh, காற்றைலை மூலம் Rs 10/kWh அது 30 முதல் 50 சதவீகிதம் தான் நமக்கு கிடைக்கிறது. இந்திய அணுசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தாராப்பூரில் இருந்து Rs 1/kWh க்கும், கைகாவில் இருந்து Rs 3/kWh க்கும், கூடங்குளத்தில் இருந்து Rs 3/kWh க்கும் குறைவாக கிடைக்கும். நீர் மின்சாரமும் பருவ மழையை பொருத்துதான் அமைகிறது. இந்திய நதிகளை இணைக்காமல், நீர் வழிச்சாலைகளை மாநிலங்கள் உருவாக்காமல் அதன் முழுபயணையும் நாம் பெற முடியாது. நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இன்னும் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும், மக்கிய எரிபொருள் மற்றும் எண்ணை வளம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் கிடைக்கும்,
உலக தட்ப வெப்ப மாற்றம் ஏன்? அதன் விளைவு என்ன?
ஒவ்வொரு வருடமும், மக்கள் 30 பில்லியன் டன் GHGs (Green House Gases) சுற்றுச்சூழலுக்கு எதிரான வாயுக்களை வெளியேற்றுகிறது. IPCC யின் கணிப்பின்படி இந்த வாயுக்களில் 26% மின்சார உற்பத்தியினால் உருவாகிறது, வாகன புகைகளும், நிலக்கரி, மற்றும் எண்ணையை உபயோகப்படுத்துவதால், அதன் மூலம் ஏற்படும் மாசுவை, நாம் அண்ட வெளியில் விடுவதால் அது புற உதா கதிர்களின் கதிர்வீச்சு பூமியில் விழாமல் தடுக்கும் ஒசோன் படலத்தை ஒட்டையாக்கி, அதன் மூலம் பூமியின் தட்ப வெப்ப நிலையை உயர்த்துகிறது. இதன் உபயோகத்தால் ஏற்படும் விளைவு சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்ல, மழைக்காலம் மாறுகிறது, தட்பவெப்ப மாறு பாடு அதன் காரணமாக பூமியின் வெப்பநிலை உயர்கிறது, அதன் விளைவாக பணிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரவும், கடலோர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் கூடிய பக்க விளைவுகள் ஏராளம்.
உலக சுகாதார அமைப்பான WHOவின் சர்வேயின்படி, கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் சுற்றுசூழலினால் ஏற்படும் மாசுவின் காரணமாக வியாதியினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என்றும், 1,40,000 மக்கள் தட்பவெப்ப மாறுபாடின் காரணமாகவும் உயிரிழக்கிறார்கள் என்றும் கணித்திருக்கிறது. எனவே மின்சார உற்பத்தியின் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினால் ஒவ்வொரு வருடமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உயிரிழக்கும் மக்கள் தொகை 5,50,000 ஆக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதை ஒப்பிடும் போது, மிகவும் மோசமான அணுமின் கசிவு விபத்து என்று சொல்லப்படுகிற 1986ல் நடைபெற்ற செர்னோபில் அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் கேன்சரினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 4000 பேர்கள் என்றும், நேரடியாக இறந்தவர்கள் 57 பேர்கள் என்றும் UNSCEAR என்ற அமைப்பு கணித்திருக்கிறது. எனவே எப்படிப்பார்த்தாலும், இன்றைக்கு நிலக்கரி, எண்ணை மூலம் உருவாகும் மின்சாரத்திற்கும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட, அணுஉலையினால் பக்க விளைவுகள் இல்லாத மின்சார உற்பத்தி மிகவும் சாத்தியம். அது மட்டுமில்லை அணுஉலை பாதுகாப்பில் அதிக கவனத்துடன் இருப்பதால், அதன் உற்பத்திக்கு மிகவும் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் அமுல் படுத்தப்படுகிறது.
அணுமின்சாரம் பாதுகாப்பானது, சுத்தமானது (CO2 Free) நாட்டின் எரிசக்தி சுதந்திரத்திற்கு முக்கியமானது
அதுமட்டுமில்லை, மாறிவரும் தட்ப வெப்ப சூழ்நிலையால், அதை சாமாளிப்பதற்கு $300 பில்லியன் டாலர் செலவளிக்க வேண்டிய சூழ்நிலை உலகநாடுகளுக்கு உருவாகி அதனால் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இப்படிப்பட்ட விளைவுகளை குறைந்த பட்சம் சாமாளிக்கவும், அதைக்குறைக்கவும், இந்த தலைமுறை எரிபொருளான தற்போது கிடைக்கும் யுரேனியம் – 235, புளுடோனியம் – 239 மூலம் அணுமின் உற்பத்தியும், அடுத்த தலைமுறை அணுசக்தி எரி பொருளான தோரியம் – யுரேனியம் 233 மூலமும் தான், ஒரு பாதுகாப்பான, மின்சார உற்பத்தி சாத்தியம்.
இன்றைக்கு இந்தியாவின் 40 ஆண்டுகால வரலாற்றில் அணுஉலை மிகவும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டு எவ்வித அழிவும், கதிர்வீச்சு பாதிப்பும் இல்லாமல் அமைக்கப்பட்டு 5000 மெகாவாட் மின்சார உற்பத்தியை 20 அணுஉலைகள் மூலம் இந்தியா உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது. பூகம்பம், சுனாமியால் கூட பாதிக்காதவண்ணம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் எவ்வித விபத்திற்கும் வாய்ப்பில்லாமல், கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலையால் 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது, இன்றைக்கு 2000 மெகாவாட் உற்பத்தி செய்ய தயார் நிலையில் இருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவிற்கு கிடைக்கும் யுரேனியத்தை பயன்படுத்தி 2030க்குள் நமது இலக்கான அணுமின் சக்தியை 50,000 மெகாவாட்டாக உற்பத்தி செய்ய கண்டிப்பாக முடியும்.
அணுமின்சாரம் அவசியம் அதற்கு நம் வளத்தை சார்ந்த அணு ஆராய்ச்சியும் அவசியம்
இன்னும் ஒரு 10 முதல் 20 ஆண்டுகளில் தோரியம் என்ற தாது உற்பத்தியில் உலகிலேயே ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து 2வது மிகப் பெரிய நாடான இந்தியா, தோரியம் மூலமும், யுரேனியம் மூலமும் அணுமின் சக்தியை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தில் தன்னிறைவை ஆராய்ச்சியில் எட்டி விடும் தூரத்தில் இருக்கிறது. அணுசக்தி தொழில் நுட்பத்தை இந்தியாவிற்கு தராமல் மேலை நாடுகள் தொழில் நுட்ப தடை விதித்ததையும் மீறி இன்றைக்கு இந்திய அணுசக்தி தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. இனிமேலும் இந்தியாவை ஒதுக்கி விட்டு அணுசக்தி துறையில் சர்வசேத வளர்ச்சி சாத்தியப்படாது என்ற காரணத்தால் தான் மேலை நாடுகள், நமக்கு யுரேனியத்தை தர ஒப்புக்கொண்டு, நமது அணுஆயுத கொள்கையில், முதல் தடவை நாங்கள் அணுஆயுதம் பிரயோகிக்கமாட்டோம் என்ற கொள்கையையும் ஏற்றுக்கொண்டு இந்தியாவை மதித்து அணுசக்தி ஒப்பந்தம் மற்று அணுசக்தி நாடுகளுடன் ஏற்பட்டது.
எனவே அணுசக்தி ஆராய்ச்சியில் அதன் தொடர் பயன்பாட்டில், மின்சார உற்பத்தியில், ஆராய்ச்சியில் நாம் தொடர்ந்து ஈடுபட்டால் தான், இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தை உபயோகித்து யுரேனியத்தின் மூலமும் புளுடோனித்தின் மூலமும் ஒரு சுத்தமான, கதிரியக்கம் குறைந்த, யுரேனியத்தைக்காட்டிலும் 15 சதவிகதம் வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்ட தோரியத்தைக்கொண்டு, யுரேனியம் டை ஆக்ஸைடைக்காட்டிலும் 500 டிகிரி அதிகமான வெப்பத்தில் உருகும் தன்மை கொண்ட தோரியத்தை, குறைந்த அளவு கதிரியக்க கழிவை கொடுக்கும் தோரியத்தை, அணுஆயுதம் செய்ய இயலாத தோரியத்தை வைத்து, அமைதிப்பாதையில் இந்தியா அணுசக்தி துறையில் மின்சாரத்துறையில் தன்னிறைவை அடைய முடியும். அப்படி நடந்தால், இந்தியா 2030க்குள் அணுசக்தி துறையிலும் உலகத்திலேயே மிகுந்த பாதுகாப்பான அணுமின்சாரத்தை உருவாக்கும் நாடுகளில் முதல் நாடாக மாறும், 2030க்குள் எரிசக்தி சுதந்திரத்தில் இந்தியா அடைய வேண்டிய இலக்கை சுலபமாக அடையமுடியும். அதனால் இந்திய பொருளாதாரம் மிகுந்த வளர்ச்சியை அடைய பல்வேறு காரணிகளில் அணுசக்தியும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். 2020க்குள் பொருளாதார சக்திவாய்ந்த நாடாக இருக்கும் முதல் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறும். இந்த ஆராய்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். அந்த ஆராய்ச்சிக்கு யுரேனியமும் தேவை, புளுடோனியமும் தேவை, தோரியமும் தேவை, அதற்கேற்ற தொழில் நுட்பம், உலகில் எங்கும் இல்லை. அந்த நிலையை அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே அணுசக்தி மூலம் மின்சாரம் வேண்டாம் என்று பல காரணங்களை அறிவார்ந்த சிந்தனைக்கு ஒவ்வாத கருத்துக்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கும், அதன் தேசபாதுகாப்புக்கும் எதிரான கருத்துக்களாத்தான் அமையும். எனவே அணுசக்தி துறையில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், முன்பு நடைபெற்ற ஒரு சில விபத்துக்களினால் அணுமின்சாரமே வேண்டாம் என்று முடிவு எடுக்க முடியாது.
ஏன் முடியாது? என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும்.
என்னால் முடியும் என்றால், நம்மால் முடியும், நம்மால் முடியும் என்றால் இந்தியாவால் முடியும். ஒவ்வொரு பிரச்சனையும் நமக்கு படிப்பினையும், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தையும், மிகுந்த தன்னிறைவையும், ஆராய்ச்சியில் மேம்பாடும், நாட்டிற்கு பெருமையையும், மக்களுக்கு நன்மையையும், பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதாகத்தான் அமைந்துள்ளது.
இயற்கைப்பேரழிவும் இந்தியாவும்
பூகம்பமும், சுனாமியும் பேரழிவை உண்டாக்கும் என்று மக்களை பயமுறுத்தப்படுகிறார்கள். ஆமாம் உண்டாக்கும்தான், பூகம்பத்தையும் நாம் பார்த்திருக்கிறோம், சுனாமியையும் 2004லே நாம் பார்த்திருக்கிறோம். கடந்த 1000 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கொண்டேமேயானால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், தஞ்சாவூர் ராஜ ராஜ சோழன் கட்டிய பெரிய கோபுரமும் காலம் கடந்து பூகம்பத்தால் பாதிக்கப்படாமல் நம் கண்முன்னே சாட்சியாக நிற்கிறதே. பலநூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டிய பல கோவில்கள் பூகம்பத்தால் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பாதிக்கப்பட வில்லையே.
ஏன் தமிழகம் பூகம்ப அதிர்வை இது வரை காணவில்லையா, பூமி என்று இருந்தால் அதிர்வுகள் சாத்தியம் தான். அதைத்தான் ஆராய்ச்சியின் மூலமாக, எப்பகுதி பூகம்பத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள பகுதி, எப்பகுதி குறைவான வாய்ப்புள்ள பகுதி, என்று பகுத்தாராய்ந்து இருக்கிறார்கள். தமிழகமும் சரி, கூடங்குளமும் சரி பூகம்பத்தால் பாதிக்காத பகுதி என்று பகுத்தாராய்ந்து தான் அதை அணுஉலைக்கு ஏற்ற இடம் என்று முடிவு செய்யதுள்ளார்கள். கடந்த 400 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கொண்டேமேயானாலும், பூகம்ப பகுதி 4 என்று கண்டறியப்பட்ட டெல்லியில் கட்டப்பட்ட சிவப்பு கோட்டை (Red Fort) அழியவில்லையே, புரான கிலா என்று சொல்லப்படும் பழைய காலத்து கோட்டை இன்றும் நம் கண்முன்னே சாட்சியாக நிற்கிறதே, உலக அதிசியமான தாஜ்மகாலும், அக்பர் கட்டிய அக்பர் போர்ட் எனப்படும் கோட்டையும் நம் கண்முன்னே கம்பீரமாக ஆக்ராவில் நிற்கிறதே. இப்படி அழிவை சந்திக்கவில்லை என்றாலும் கூட ஏன் அங்கு அணு உலை நிறுவப்பட வில்லை. அது பூகம்ப பகுதி 4 ல் அமைந்துள்ள காரணத்தாலும், மற்றும் கடல் நீர் இல்லாததன் காரணமாகவும் கூடத்தான். தூத்துக்குடி துறைமுகம் கடந்த 1000 கால வரலாற்றில் அழிவை சந்தித்திருக்கிறதா? பூம்புகார் கடல் கொண்டதால் அழிந்ததே, தனுஷ்கோடி புயலால் அழிந்ததே, ஏன் சுனாமி கூடங்குளத்தை பாதிக்காது என்ற கேள்வி எழலாம். நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள காவேரி பூம்பட்டினம் என்ற பூம்புகார், வரலாற்று பெருமை கொண்ட ஊர், சோழர் காலத்திற்கு பின்பு கடல் கொண்டாதால் அழிவைச்சந்தித்தது. 2004ல் அதே மாதிரி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை தோற்றுவித்து அதே நாகபட்டினத்தில்தான் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தியது. சென்னையிலும், கல்பாக்கத்திலும், கன்னியாகுமரியிலும் அதன் தாக்கம் வலிமை குறைந்தது, இராமேஸ்வரத்தை தாக்கவில்லை, தூத்துக்குடியை தாக்கவில்லை. ஏன் அப்படி நடந்தது.
2004 ல் ஏற்பட்ட சுனாமி 1300 கிலோமீட்டருக்கு மேல் நாகபட்டினத்திற்கு கிழக்கே (SUNDA ARC) சுந்தா ஆர்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அதாவது அது பசிபிக் ரிங்க ஆப் பயர் என்று சொல்லப்படுகிற பூகம்பகத்தை ஏற்படுத்தும் பிளவின் கோட்டின் மேற்கே அமைந்திருக்கிறது. அந்த பசிபிக் ரிங் ஆப் பயர் தான் இந்தோனோஷியா, ஜப்பான், அமெரிக்கா, பெரு, சிலி நாடுகளை சுற்றி அமைந்துள்ளது. அதனால் தான் இந்த பகுதிகளில் அடிக்கடி பூகம்பமும், சுனாமியும் ஏற்படுகிறது. நாம் பார்க்காத நாட்களில் அழிந்த பூம்புகாருக்கு பின், நாம் கண்ட 2004 சுனாமி நாகபட்டினத்தை தாக்கியதும், இந்த சுந்தா ஆர்க் என்ற பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் தான்.
கூடங்குளத்தை பொருத்தவரை, அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி கிட்டத்தட்ட சுனாமிஜெனிக் பால்ட் (tsunamigenic fault)என்று சொல்லப்படுகிற சுனாமியை எழுப்பக்கூடிய பூமி பிளவு ஏற்படக்கூடிய பூகம்ப பகுதி 1500 கிலோமீட்டர்க்கு அப்பால் சாகோஸ் ரிட்ஜ் (Chagos Ridge) என்று கன்னியாகுமரிக்கு கீழே தென் மேற்கே அமைந்துள்ளது. எனவே மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிற திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள கூடங்குளத்தில் சுனாமியால் பாதிப்பு ஏற்படும் என்ற கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.
எனவே இயற்கை சீற்றங்களை பார்த்து மனிதகுலம் பயந்திருந்தால், இந்த மனித இனம்இந்த வளர்ச்சியை அடைந்திருக்காது. . இயற்கை சீற்றத்தை எதிர்த்து மனிதன், அழிவிலிருந்து மீண்டு, பிறகு மீண்டு வந்து, தனது அறிவால், செயலால், தைரியத்தால், புதிய சிந்தனையால், கற்பனைத்திறத்தால், லட்சித்தியத்தால், ஒவ்வொரு காலகட்டத்திலும், அறிவியலாலும், தொழில்நுட்பத்தாலும் மனித இனத்தை வளப்படுத்தியதால் தான் இன்றைக்கு இப்படிப்பட்ட பூமியை நம் சந்ததியினருக்கு கொடுத்திருக்கிறான். எவ்வித புது கண்டுபிடிப்பும், இந்த பூமியில் எதிர்ப்பை சந்திக்காமல் வளர்ச்சியடையவில்லை. புதுமையான கண்டுபிடிப்பு மக்களை வளப்படுத்துமென்றால், அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்றால் எப்படிப்பட்ட எதிர்ப்பையும் மீறித்தான் அது வெற்றி பெற்றிருக்கிறது என்பது வரலாறு.
எனவே அணுசக்தி என்பது இறைவன் மனித குலத்திற்கு கொடுத்த வரம், அதை வரமாக்குவதும், சாபமாக்குவதும் மனித குலத்தின் கையில் தான் உள்ளது. எனவே கூடங்குளத்தின் மூலமும், இந்தியாவின் மற்ற பகுதிகளின் உள்ள அணுமின் உலைகள் மூலம், பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யும், சுத்தமான, சுற்றுச்சூழல் மாசில்லாத அணுமின் மின்சாரம் முழுமையாக நமக்கு கண்டிப்பாக தேவை. அணுசக்தி மின்சாரம் மூலம் 50,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது என்பது நாம் 2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற தேவையான காரணிகளில் முக்கியமான ஒன்று. எனவே, அந்த இலக்கை அடைவதற்கு திட்டங்கள் தீட்டினால் மட்டும் போதாது. அந்த திட்டங்கள் சிறப்பாக குறித்த காலத்திற்குள் நடைபெறவேண்டுமானால், முதன் முறையாக அந்த திட்டப்பகுதியிலும், அதை சுற்றியுள்ள கிராம பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படைத்தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும், போதுமான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவேண்டும், கல்வி, சுகாதாரம், மருத்துவம், தொழில்சாலைகள், மற்றும் தொழில்கள் மூலமாக வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், அந்த பகுதியே வளர்ச்சி பகுதியாக மாறவேண்டும். மக்களை இந்த வளர்ச்சியில் பங்கு தாராக சேர்க்க வேண்டும்.
எனவே கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கு முதலில் அப்பகுதி மக்களுக்கு அணுமின்சாரத்தின் பாதுகாப்பைப்பற்றியும், அவர்களது நியாயமான அச்சத்தை போக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் அமைத்துள்ள ஆய்வுக்குழுக்கள் நாட்டின் நலனைக்கருத்தில் கொண்டு விவாதித்து, கூடங்குளத்தையும் அதனைச்சார்ந்த பகுதிகளின் வளர்ச்சியைப்பற்றி தீர விவாதித்து மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு வரவேண்டும். எனவே என்னுடைய பரிந்துரை என்ன வென்றால் கூடங்குளத்திற்கு ஒரு தொலைநோக்கு திட்டம் உடனடி தேவை.
முடிவுரை : கூடங்குளத்திற்கான தொலைநோக்குத்திட்டம்
2015 க்குள் மத்திய அரசு கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், அப்பகுதி கடல்கரையோரம் உள்ள கிராமப்புர மக்களை உள்ளடக்கிய, கிட்டத்தட்ட 50 – 60 கிராமங்களை ஒருங்கிணைத்த, குறைந்தது 1 லட்சம் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, ஒரு சிறப்புத்திட்டத்தை, கூடங்குளம் புரா திட்டத்தை [Koodankulam PURA (Providing Urban Amenities in Rural Areas)] ரூ200 கோடியில் மதிப்பீட்டில் அமுல் படுத்த வேண்டும். அந்த சிறப்பு திட்டத்தின் மூலம், கீழ்கண்ட வளர்ச்சி திட்டங்களை அமுல்படுத்தலாம்.
1. கூடங்குளத்தில் இருந்தும் மற்றும் 30 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிராமங்களிலில் இருந்தும் திருநெல்வேலிக்கும், கன்னியாகுமரிக்கும், மதுரைக்கும் செல்லும் 4 வழிச்சாலைக்கு செல்ல 4 வழித்தடம் கொண்ட சாலைகள் அமைக்கவேண்டும்.
2. 10000 மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் சுற்றளவில் அமைக்கபட வேண்டும். இளைஞர்களுக்கு வங்கி கடன் வசதி ஏற்பாடு செய்து, 25 சதவீகிதம் மானியத்துடன் சுய தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. கூடங்குளம் பகுதி கடற்கரையோரம் உள்ள மக்களுக்கு தேவையான பசுமை வீடுகள், அடுக்கு மாடி வீடுகள், சமூக கூடம், விளையாட்டு திடல் மற்றும் அதற்கு தேவையான அனைத்து வசதிகள் கொண்ட குடியிருப்பு உருவாக்கப்படவேண்டும். மீனவ மக்களுக்கு தேவையான விசைப்படகுகள், சிறு ஜெட்டீஸ், மற்றும் மீன்களை பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிடங்கு போன்றவைகளை அமைத்து தரவேண்டும்.
4. ஒரு நாளைக்கு 1 மில்லியன் லிட்டர் நல்ல தண்ணீரை கடல் தண்ணீரில் இருந்து சுத்திகரித்து நல்ல குடி தண்ணீரை அங்கு வாழும் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
5. விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. அந்த பகுதியில் 500 படுக்கை கொண்ட உலக தரம் வாயந்த மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் தொலைத்தொடரபு மருத்துவ மனைகளும், 2 மொபைல் மெடிக்கல் டயகனாஸ்டிக் வசதி கொண்ட நடமாடும் மருத்துவமனையை ஏற்படுத்தவேண்டும்.
7. CBSE மற்றும் தமிழகஅரசின் பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள் ஐந்தை அங்கே தரமான கல்வியை கொடுக்கும் வகையில், விடுதி வசதியுடன் அமைக்க வேண்டும்.
8. எல்லா கிராமங்களுக்கும், பிராட்பேண்ட் இன்டெர்நெட் வசதி செய்து தரப்படவேண்டும்.
9. மக்களுக்கு உடனடியாக பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை நிலையம் ஒன்றை ஏற்பாடு செய்து தரவேண்டும். அங்கு அனைந்து பாதுகாப்பு விழிப்புணர்வும், பேறிடர் மேலாண்மையைப்பற்றிய பயிற்சியையும் செய்து தர வழி வகை செய்ய வேண்டும். மக்களுக்கும் அணுமின் நிலையத்திற்குமான தொடர்பை ஏற்படுத்த மக்கள் குழுக்களை அமைத்து, அவர்கள் மூலமாக ஒரு சமூக நல்லிணக்கத்தையும், பொருளாதார மேம்பாட்டை அடையவும், அமைதியை ஏற்படுத்தவும், பேரிடர் காலங்களில் செயல்படும் வழிமுறைகளை செய்யவும், பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக கிடைக்கச்செய்யவும் அந்த குழுக்கள் மூலம் ஆலோசனை பெற்று செயல் படுத்தவேண்டும்.
10. ஓவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, மேற்படிப்பு படிக்க வைத்து அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.
இந்த 10 அம்ச திட்டங்களும், மேற்கொண்டு மக்களுக்கு தேவையான திட்டங்களும் மக்களுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கு ஏற்ற முறையில் உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் மக்களின் பயத்தை முறையாக போக்கி, அவர்களது அச்சத்தை தவிர்த்து, அவர்களுக்கு தேவையான தகவல்களை முறைப்படி வழங்கி, அவர்களின் பூரண ஒத்துழைப்போடு இந்தியாவின் அணுமின்சார உற்பத்தியை, உலகிலேயே பாதுகாப்பான முறையில், சுத்தமான 1000 மெகாவாட் மின்சாரத்தை, குறைந்த விலையில் தமிழ்நாட்டுக்கு வழங்கி, இந்தியாவும் பயன் பெறும் வகையில் குறித்த காலத்தில் அணுமின்சார உற்பத்தியை தொடங்க மத்திய அரசு, மாநில அரசோடு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.