பதிலாக வேண்டும்
நிலவோடு விளையாடி நிசிவானில் உறவாடி
நிசமான கதைபேச வேண்டும்
புலர்காலை பொழுதோடு புகழ்பாடும் ஒளிக்காதில்
புதிதான இசையாக வேண்டும்
மலரோடு மலராக மலர்கின்ற பனியோடு
மனம்தோய்த்து மணம்வீச வேண்டும்
சிலநேரம் அலைசெய்து சிரிக்கின்றக் குமிழாகிச்
சிறுகாற்றில் உடைந்தோட வேண்டும்
*
குறையேது மில்லாத குயில்பாடும் கவியாகிக்
குளிர்காலம் பொழிவிக்க வேண்டும்
முறையான எழிலூற்றும் முகிலாகி வயலோடு
முளைக்கின்ற வேர்க்கூட்ட வேண்டும்
உறைகின்ற பனியோடு உறைந்தொன்றி வெயில்பட்டு
ஒழுகுகிறத் துளியாக வேண்டும்
பிறைநிலவு வளர்ந்தோங்கிப் பெரிதான தொருநாளின்
பிரகாச மெனவாக வேண்டும்
*
கரையோர நண்டோடு கலந்தாடும் அலையாகிக்
களிகொள்ளும் பொழுதாக வேண்டும்
தரைமீது தவழ்கின்றத் தமிழ்த்தென்ற லெனவாகித்
தலைகோதி விடவேத்தான் வேண்டும்
இரைதேடும் பறவைக்கு இலக்கான மரமாகி
இனிக்கின்ற கனிதாங்க வேண்டும்
விரைந்தோடும் வாணாளில் விடைகாணாக் கேள்விக்கு
விரிவானப் பதிலாக வேண்டும்
*