வறுமையின் நிறம் கருப்பு

எனக்கு ஆறு வயது. பள்ளியில் சேர்ந்து ஒரு மாதமே முழுமையடைந்திருந்தது. அப்பா டீச்சரிடம் என்ன சொல்லி அனுமதி வாங்கினார் என்று தெரியவில்லை. மதியமே என்னை பள்ளியிலிருந்து கூட்டிப்போய், புது கால்சட்டையும், மேல் சட்டையும் அப்பா வாங்கி தந்தார். சைக்கிளில் ஏறி, வீட்டுக்கு திரும்புகையில், கதிரவன் மேற்கே ஒழிய ஓடிக்கொண்டிருந்தான்.

அப்பாவின் சைக்கிளில் பின்புறம் நான் அமர்ந்திருந்தேன். விமானம் வரை ஏறி பறந்த பின்னும், அப்பாவின் சைக்கிளை போன்ற பாதுகாப்பான பயணம் ஏதுமில்லை. இதுவரையில் ஒரு நாள் கூட, சிறு கலக்கம் இருந்ததில்லை. சில நேரங்களில், நான், அண்ணன் மற்றும் அம்மா என மூவரையும் வைத்து ஓட்டி செல்வார். அப்பா எப்பொழுதும் மெதுவாகத் தான் சைக்கிள் ஓட்டுவார். ஏதோ தியானத்தில் இருப்பதை போல - மெல்ல அவரது காலிரண்டும் அந்த மிதிகட்டைகளோடு சேர்ந்து மேலும் கீழும் சென்று வரும்.
அப்பாவின் சைக்கிளில் முன்னே அமர்ந்து வருவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவ்வாறான நேரங்களில் "அப்பா, நான் பெல் அடிக்கிறேன் பா" என்று கேட்டு வாங்கிக் கொள்வேன்.

"என்னய்யா, சட்ட புடிச்சிருக்கா?" என்று கேட்டார் அப்பா.
'அய்யா' - இப்படித்தான் அப்பா எங்கள் இருவரையும் அழைப்பார். ஒருமுறை கூட பெயர் சொல்லி அழைத்ததாக எனக்கு நினைவில் இல்லை.

"ம்ம்" என்றேன். மெட்ரிகுலேஷன் படிக்கும் குழந்தைகளைப் போல 'தேங்க் யு டேடி' என்று சொல்லத் தெரியாது.

எதற்காக இப்போது எனக்கு புது சட்டை என்று யோசிக்கலானேன். தீபாவளியோ, பொங்கலோ பக்கம் இல்லை. ஊர் அம்மன் கோவில் திருவிழா கூட இரண்டு மாதம் முன்பு தான் முடிந்தது. அப்பாவை கேட்கலாமா? என்று யோசித்து, "பா, அண்ணனுக்கும், அக்காக்கும்?" என்று பாதியில் நிறுத்தினேன்.

“நாளைக்கு உனக்கு பொறந்த நாள் அய்யா” என்றார் அப்பா.

இன்று ஜூலை 4. அப்போ நாளை ஜூலை 5. வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக நாள்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளவேண்டுமென முடிவு செய்தேன். அம்மாவிடம் பல நாள் கேட்டும், அவளால் ஆங்கில தேதி சொல்ல முடியவில்லை. ஆனி 21 என்று தமிழ் தேதி மட்டுமே சொல்லியிருந்தாள். பள்ளிக்கூட நண்பர்கள் யாவருக்கும் சொல்ல வேண்டும். மைக்ரோ டிக் பேணா கொடுத்த பெஞ்ச் தோழிக்கு சொல்ல வேண்டும். அம்மா காசு கொடுத்தால், அவளுக்கு மட்டுமாவது இலந்தைப்பழ மிட்டாய் வாங்கித்தர வேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

"அய்யா, அந்த ஹோட்டல்ல ஒரு காபி சாப்பிட்டு போலாமா?" என்று கடைத்தெருவில் நடுவே உள்ள தேநீர்க் கடையை அப்பா கை காட்டினார். இது வரை ஒரு நாளும் நான் கடைகளில் காபி சாப்பிட்டதில்லை. வீட்டில் எப்பொழுதும் கருப்பட்டி காபி மாட்டும் தான். அப்பாவின் நண்பர் வீட்டிலிருந்து கருப்பட்டி வரும்.
“No peon, No water” என்று அம்பேத்கர் சொல்வது போல “No கருப்பட்டி, No காபி“என்பது எங்கள் அம்மாவின் வாக்கு.

கடையில் காபி குடிக்கப் போகும் மகிழ்ச்சியில் "சரிப்பா" என்றேன்.

தேநீர் கடையின் முன்புறமாக சைக்கிளை நிறுத்தினர் அப்பா. நான் இறங்க முடியாமல் தவித்தபடியினால், அப்பாவே இறக்கி விட்டார்.

"மாஸ்டர், ரெண்டு காபி" என்றார் அப்பா.

வடை, போண்டா, சுஷ்யம் என கடையில் வரிசையாக அடுக்கப் பட்டிருந்தது. அப்பாவிடம் சுஷ்யம் வாங்கித் தர கேட்கலாமா என யோசித்துக் கொண்டு அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதற்குள் காபி வந்துவிடவே, அப்பா ஒன்றை தான் எடுத்துக்கொண்டு, மற்றொரு குவளையை என்னிடம் தந்தார்.

காபியை பார்த்த மாத்திரத்தில் எனக்கு பேரதிர்ச்சி. இது வரை நான் பார்த்த காபி யாவுமே கருப்பு நிறத்தில் மட்டுமே இருந்திருக்கின்றது. ஆனால், இங்கே வெள்ளையுமின்றி , காக்கியுமின்றி இரண்டுக்கும் நடுவே ஏதோ ஒரு நிறத்தில் இருந்தது.

அதிர்ச்சியை அடக்க இயலாமல், அப்பாவிடம் "அப்பா, காபி ஏன்பா இந்த கலர்ல இருக்குது? நம்ம வீட்ல கருப்பு கலர்ல தானே இருக்கும்" என்றேன்.

இதை கேட்டதும் அப்பா பெரிதாய் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கோ ஏதும் புரியாததால் அமைதியாய் நின்றேன். சிரிப்பினூடே, "வறுமையின் நிறம் கருப்பு அய்யா " என்று சொல்லி மேலும் பெரிதாய் சிரிக்கத் தொடங்கினார்.


“வறுமை” எனும் வார்த்தைக்கு அன்று அர்த்தம் தெரியாதமையால், அப்பாவுடன் சேர்ந்து நானும் சிறிதாய் நகைத்திட்டேன்.

எழுதியவர் : (24-Jan-18, 9:06 am)
பார்வை : 1106

மேலே