மரமாபிமானம்-2

அது ஒரு அடர்ந்த காடு. பட்சிகளும் காட்டு விலங்குகளும் சத்தமிட்டு வானம் என்ற அலுவலகத்தில் கடமையை செய்ய கதிரவனை எழுப்பிகொண்டிருந்தன. கதிரவன் மெல்ல கண்திறந்து மெல்லிய ஒளிவீச இரவெல்லாம் கண்விழித்து பணிபுரிந்த சோர்வில் மங்கிய கண்களால் மங்கலாய் ஒளி வீசிகொண்டிருந்த சந்திரனும் மகிழ்ச்சியுடன் விடை பெற்று மெல்ல மறைந்தான்.

அங்கே ஒரு உயரமான மரத்தின் மேலே அழகான சிறு மர வீடு அமைக்கப்பட்டிருந்தது. மரவீட்டை அடைவதற்கு கட்டையாலான ஏணிப்படிகளும் இருந்தன. தன் தூக்கத்தை கெடுத்த பறவைகளையும் காட்டு விலங்குகளையும் வெப்பத்தால் சுட்டெரிக்க கதிரவன் மெல்ல மெல்ல தன் நெற்றிகண்ணை திறந்தான். சூட்டின் தாக்கம் அந்த மரவீட்டில் பட்டபோது அது மெல்ல அசைந்தது பிறகு உள்ளே இருந்து நரி ஊளையிடுவதை போல் ஒரு ஓசை வந்தது. கொட்டாவி விட்ட வண்ணம் மரநேசன் அந்த வீட்டில் இருந்து வெளியில் வந்தான்.

வெளியில் வந்த மரநேசன் மெல்ல தன் கண்கள் திறந்து கதிரவனை காண முயற்சித்த வேளையில் பாவம் செய்தவன் கடவுளை கண்டதைபோல் கண்கள் கூசி வேறு பக்கம் திரும்பிகொண்டான். மரத்தில் இருந்து கீழே இறங்க தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே கீழே குனிந்து காட்டை பார்த்தான். உயரமான மரங்கள் கதிரவனின் ஒளியை தடுத்துகொண்டிருந்ததால் அங்கே இன்னும் இருளாகத்தான் இருந்தது. பிறகு மெல்ல மரத்தில் இருந்து கீழே இறங்கிய மரநேசன் தன் வாயில் ஒரு மரகுச்சியை திணித்துகொண்டு பற்களை தேய்த்த வண்ணம் காட்டில் நடந்து போனான்.

அரவுகள் கூட அஞ்சி நடுங்கும் அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே அவன் சர்வ சாதரணமாக நடந்து சென்றுகொண்டிருந்தான். காட்டிலே உள்ள விலங்குகளுக்கு கூட தெரியாத வழிகள் தனக்கு தெரியும் என்ற கர்வம் அவன் நடையின் வேகத்தில் இருந்தது. அவன் நடந்துகொண்டிருந்தபோது தூரத்தில் இருந்து ஒரு இரைச்சல் ஓசை வந்தது அருகே செல்ல செல்ல அந்த ஓசை அதிகமானது. அவன் அருகே ஒரு சிங்கம் கர்ஜித்தாலும் கூட கர்ஜனை சத்தம் கேட்காது என்ற அளவிற்கு அந்த இரைச்சல் ஓசை இருந்தது. இறுதியில் அவன் அந்த இரைச்சல் ஓசை வரும் இடத்தை அடைந்தான். மண்ணில் சொர்க்கம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் அந்த இடம்தான். அது ஒரு அழகான அருவி சுற்றிலும் பல்வேறு வண்ணங்களில் செடி கொடி மரங்கள். இயற்க்கை அழகை ரசித்துகொண்டே ஈரத்துணியை பிழிவதுபோல் தன் உடலை பிழிந்து சோம்பல் முறித்தான். பின் தன் ஆடைகளை களைந்து ஏற்கனவே அந்த ஓடையின் ஆழம் அறிந்தவன் போல் சடாரென்று தாவி ஓடையில் ஈட்டியைப்போல் சர்ரென்று குதித்தான். நீரில் நீச்சல் அடித்த வண்ணம் அருவியை நோக்கி சென்றான். சிறிது நேரம் அருவியில் குளித்தபின் ஆடைகளை அணிந்துகொண்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பினான்.

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (30-Jan-18, 2:10 am)
பார்வை : 73

மேலே