மரமாபிமானம் -1
கருமேகங்களை போர்வையாக்கி இழுத்துப் போர்த்திக்கொண்டிருந்தது பயத்தில் வானம். இன்னும் சில நேரங்களில் துணையாய் சூரியன் வராவிட்டால் அழுதுவிடும் நிலையில் தவித்துக் கொண்டிருந்தது அதன் முகம்.
மழை வருவதற்கு முன் வானத்தில் ஏற்படும் இறுக்கத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டு உடல் தளர்ந்து நின்றுகொண்டிருந்தான் மரநேசன். விண்ணில் இருக்கவேண்டிய கதிரவனை தன் இரு கண்களில் ஏந்திக்கொண்டு கோபக்கனலை கக்கிக்கொண்டிருந்தான் சரபேஸ்வரன்.
கோபத்தில் சரபேஸ்வரனும்… கவலையில் மரநேசனும்… பயத்தில் வானமும்… அடுத்த என்ன நடக்குமோ என்று அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் தவித்துக்கொண்டிருந்தனர். திடீரென ஒரு காலால் மரநேசனின் மார்பில் எட்டி உதைத்தான் சரபேஸ்வரன். நிலைதடுமாறி கிடைமட்டமாக நிலத்தில் விழும் நேரத்தில் “அம்மா” என விண்ணை நோக்கி அவன் அழைத்த அதே நேரத்தில் பயத்தின் உச்சத்திலிருந்த வானமும் இடி ஓசையால் தன் பயத்தின் உச்சத்தை வெளிக்காட்டியது. எதிர்பார்ப்பின் ஏமாற்றம் மரநேசனின் கண்களில் கண்ணீராய் காட்சியளித்தது, அதே நேரத்தில் பயத்தின் உச்சம் உடைந்து வானம் அழத்துவங்கியும் விட்டது மழையாய்…
மரநேசனை புதைக்க சரபேஸ்வரன் தன் அடியாட்களிடம் குழி தோண்டுமாறு ஆணையிட்டான். பிறகு ஏதோ சிந்தித்தவன், தன் அடியாள் ஒருவனை அழைத்து அவன் காதில் ஏதோ முணுமுணுத்தான். அந்த அடியாள் ஓடிச்சென்று சரபேஸ்வரனின் மகிழுந்திலிருந்து ஒரு பெரிய வரைபடத்தை கொண்டுவந்து சரபேஸ்வரனிடம் கொடுத்தான். அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்த அவன் தன் அடியாட்களை வேறு ஒரு இடத்தில் மரநேசனை புதைக்க குழிதோண்ட ஆணையிட்டான்.
ஓயாமல் அழுதுகொண்டிருந்த வானத்தின் கண்ணீர் மழையால் மரநேசனின் கண்ணீர் துளிகளின் தடம் தடயமற்று போனது. யார் இந்த மரநேசன்...? ஏன் இவனுக்கு இந்த நிலை...?....இவன் இறக்கும் முன் இவனின் இறந்தகாலத்தில் சற்று பின் நோக்கி பயணித்து விடை தேடுவோம்.....