நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-13-இறுதி அத்தியாயம்

.....நெஞ்சோடு கலந்திடு.....

அத்தியாயம் : 13
(இறுதி அத்தியாயம்)

அன்று அவன் தந்த முதல் முத்தத்தின் ஸ்பரிசத்தில் இன்றும் என் மேனி சிலிர்த்துக் கொண்டது...அந்த அணைப்பின் பின்பு அவன் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை...என் அழுகை தீரும் வரை அவனது அணைப்பிலேயே என்னை வைத்திருந்தவன்...அதே அணைப்போடே என்னை வீடு வரை வந்து விட்டுச் சென்றான்...

அன்றைய நாள் என் வாழ்க்கையிலேயே அதிக சந்தோசங்களைக் கொட்டிக் கொடுத்த நாள் என்றுதான் சொல்ல வேண்டும்...அது போன்றதொரு நாள் இனியும் என் வாழ்க்கையில் வருமா என்று தெரியவில்லை...அப்படி ஒரு நாள் வந்தாலுமே அந்நாளைப் போல் எந்நாளும் அமைந்துவிடாதென்பது நிச்சயமே...

மறுநாள் அவனிடம் என் மனதைத் திறந்து அனைத்தையும் சொல்லி விடப் போகும் நினைவில் அன்று என்னை இந்த உலகமே சேர்ந்து தட்டாமாலை சுற்றுவது போலிருந்தது...அன்றைய இரவில் அவ்வளவு பூரிப்பு எனக்குள்...

நேரம் போனதே தெரியாமல் அவனது நினைவுகளிலேயே மூழ்கிக் கொண்டிருந்தேன்...மறுநாள் விடிந்ததுதான் தாமதம் ஒரு விநாடியைக் கூட நான் வீண் செய்யவில்லை...உடனேயே தயாராகி அவனுக்காக நான் பார்த்துப் பார்த்து தயார் செய்திருந்த பரிசுகளோடும்...என் காதலோடும் கடற்கரையை நோக்கி ஓடினேன்...

மூச்சிரைக்க கடற்கரையை வந்தடைந்த நான்...கடிகாரத்தைச் சுழல விட்டவாறே அவனுக்காக காத்திருக்கத் தொடங்கினேன்...ஆனால் நிமிடங்கள் பல கடந்தும் அவன் மட்டும் அன்று வரவேயில்லை...நான் அவனிற்காய் காத்திருப்பேன் என்று தெரிந்தும்,"அவன் ஏன் வரவில்லை...??.."என்ற கேள்வியே எனக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தது...

மறுபடியும் என்னோடு ஏதும் விளையாடிப் பார்க்கிறானா என்ற எண்ணம் வந்த வேகத்திலேயே மறைந்தது...கடிகாரத்தைப் பார்ப்பதும் பாதையைப் பார்ப்பதுமாகவே என் விழிகள் அவனது வருகைக்காய் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்க...அவனிற்குப் பதில் அலைபேசி அழைப்புத்தான் என்னைத் தேடி வந்தது...

ஆனால் அதுவுமே அவனிடத்திலிருந்து வரவில்லை...தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தது மட்டும்தான் என் ஞாபகத்தில் உள்ளது....அதன் பின் எப்படி அந்த வைத்தியசாலையை வந்தடைந்தேன் என்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்...

ஆனால் என் வாழ்க்கையில்தான் அந்த கடவுள் கூட கருணை காட்டவில்லையே...ஆவலோடு அலைபேசியை எடுத்த எனக்கு கிடைத்த தகவல் பேரிடியாக அல்லவா வந்து விழுந்தது...அந்த நொடியிலேயே என் பாதி உயிர் என்னை விட்டுப் போய்விட்டது...மீதியாய் இருந்த உயிரோட்டத்தில்தான் மனதை சமாதானம் செய்து கொண்டு அந்த வைத்தியசாலைக்குள் நுழைந்தேன்...

உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டவாறே லிப்டில் ஏறினேன்...கண்ணீர் அதன் போக்கில் என்னை நனைத்துக் கொண்டிருந்தது...மனமோ அதன் போக்கில் அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதென்ற வேண்டுதலைத் தொடர்ந்து கொண்டிருந்தது...

"...அவன் விபத்துக்குள்ளாகிவிட்டான்..."என்ற செய்தியைக் கேட்டதிலிருந்தே என் உணர்வுகள் அத்தனையும் மொத்தமாக வடிந்து துடித்துக் கொண்டிருந்தது..."வருண் என்னைத் தவிக்க விட்டுவிட்டுப் போயிடாதடா.."என்பது மட்டுமே என் உதடுகளில் இருந்து கண்ணீரோடு விழுந்து கொண்டிருந்தது...

லிப்டை விட்டு வெளியேறியதுமே என் கண்ணில் பட்டது எனது தந்தைதான்...அவரது அந்த ஓய்ந்து போன தோற்றத்தைப் பார்த்ததுமே என் நம்பிக்கை மொத்தமும் கொஞ்சம் கொஞ்சமாய் உடைய ஆரம்பித்தது...அவர் அப்படி அழுது நான் என்றுமே பார்த்ததில்லை...அப்படியென்றால்...அப்படியென்றால்...அதற்கு மேலும் எதையும் யோசித்துப் பார்க்க நான் விரும்பவில்லை...

அதே இடத்திலேயே கால்கள் நகர மறுக்க..அப்படியே பிரம்மை பிடித்தவள் போல் நின்றேன்...உடல் முழுதும் படபடப்பில் நடுங்க ஆரம்பித்தது...என்ன நடக்கிறதென்றே புரியாமல்,நடப்பதனைத்தையும் நம்பிக் கொள்ளவும் முடியாமல் அழுகை என்னை அடைத்துக் கொள்ள அப்படியே அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தேன் நான்...

என் கண்களைத் திறந்து பார்த்த போது..என் அப்பாதான் என்னை "நித்தியா...நித்தியா..."என்று அழைத்துக் கொண்டிருந்தார்...ஆனால் என் நினைவு முழுதும் வருணைப் பற்றியதாக மட்டுமே இருந்தது...

"அப்பா...அப்பா...வருண்...வருண்..."அதற்கு மேலும் என்னால் எதுவும் கேட்க முடியவில்லை...வருண் என்ற பெயரைக் கேட்டதுமே அப்பா குலுங்கி குலுங்கி அழத் தொடங்கிவிட்டார்...அவரது அந்த அழுகையைக் கண்டதும் மீண்டும் என்னைப் பதற்றம் தொற்றிக் கொள்ள,

"என்னாச்சு பா...வருணுக்கு..வருணுக்கு...ஒன்னும் ஆகலதானே பா...அவன்...அவன் நல்லாதானே இருக்கான்..."

"சொல்லுங்க பா...என் வருணுக்கு ஒன்னுமில்லைன்னு சொல்லுங்க பா...அவன் நல்லாயிருக்கான்னு சொல்லுங்க பா....சொல்லுங்க பா..."என்று அவரை உலுக்கத் தொடங்கினேன்...என் கதறலில் இன்னும் அதிகமாய் உடைந்து அழத் தொடங்கியவர்...நான் கேட்க விரும்பாத வார்த்தைகளை என்னிடம் சொன்னார்...

"நம்ம வருண்...வருண்...நம்மளை எல்லாம் விட்டிட்டுப் போயிட்டான் மா...."என்று அவர் சொன்ன வார்த்தைகளை என் மனம் ஏற்க மறுத்தது...

"அது எப்படி அவன் என்னை விட்டு விட்டுப் போவான்...??அவனுடைய நித்தியாவை எப்படி அவன் தவிக்கவிட்டு விட்டுப் போவான்...இல்லை அப்படி ஒன்றும் என் வருண் செய்ய மாட்டான்...அவன் என்னை விட்டு ஒன்றும் போக மாட்டான்..."என்று என் வாய் அதன் கட்டுப்பாட்டை இழந்து உளறத் தொடங்கியது...

"..அப்பா ஏதோ சும்மா சொல்கிறார்...என் வருணைப்பற்றி எனக்குத் தெரியும்...அவன் எப்போதுமே என்னை விட்டுச் செல்ல மாட்டான்...செல்ல மாட்டான்..."என்று என் உளறல் தொடர்ந்து கொண்டே போனதில் பதறிப்போன என் தந்தை,

"நித்தியா...நித்தியா....என்னாச்சு மா...என்னைப் பாருடா..."

"வருண்...வருண்...அவனை நான் பார்க்கனும் பா..."

"இல்லை மா...இந்த நிலைமையில நீ அவனைப் பார்க்க வேண்டாம்மா..உன்னால தாங்கிக்க முடியாதுடா..."

"இல்லை அவனுக்கு ஒன்னும் ஆகாது பா...அவனை நான் என்னை விட்டு போக விட மாட்டேன்...போக விட மாட்டேன்..."என்று கதறியவாறே எழுந்த நான் எதிரே அவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டேன்...

அங்கே அவன்...என் வருண்...என்னைக் கண்டதுமே ஓடி வருபவன்...கட்டிலின் மேலே அசைவற்றுக் கிடந்தான்...என்னைப் பார்வைகளாலேயே வசியம் செய்பவன் விழிகளை மூடிக் கிடந்தான்...என்னிடம் வாய் ஓயாமல் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுபவன்...பேச்சு மூச்சற்றுக் கிடந்தான்...

"வருண்..."என்று கத்தியவாறே அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறியழ ஆரம்பித்தேன்...

"வருண் என்னைப் பாருடா....உன்னோட நித்தியா வந்திருக்கேன் கண்ணைத் திறந்து பாருடா...உன்னோட நித்தியாவைப் பாரு வருண்..."

எப்போதுமே நான் அழும் போது வெளிவராமல் அடம் பிடித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அன்று மட்டும் விழிநீரோடு வந்து விழுந்தது...

"அன்னைக்கு நீ என் கையைப் பிடிச்சு கேட்டப்போ...விட்டிருன்னு சொன்னனே...இப்போ உன்னோட கையைப் பிடிச்சிருக்கேன் வருண்...என்னோட கையை விட்டிடாத வருண்...என்னை விட்டிட்டுப் போயிடாதடா வருண்"

"முழிச்சுக்கோ வருண்....முழிச்சு என்னைப் பாரு வருண்...எழுந்து என்கிட்டப் பேசு வருண்..."

"ஒரு வார்த்தை சொல்லுவியான்னு கேட்டியே...இன்னைக்கு உன்கிட்ட சொல்ல மனசுபூரா வார்த்தைகளைச் சேமிச்சுக்கிட்டு வந்திருக்கேன் வருண்...என்னோட காதலைக் கேட்க எழுந்திரிச்சு வரமாட்டியா...??.."

"என்னோட நித்தியா என்னைக்குமே அழக்கூடாதுன்னு சொல்லுவியேடா...இன்னைக்கு உன் முன்னால உன்னோட நித்தியா அழுதிட்டு இருக்காளே அவளோட கண்ணீரைத் துடைச்சுவிட வர மாட்டியா வருண்..."

"ஏதாச்சும் பேசு வருண்....என்னோட சண்டையாவது போடு வருண்...இப்படி இருக்காதடா...என்கிட்ட வந்திரு வருண்...உன்னோட நித்தியாகிட்ட வந்திரு வருண்..."

என்னை எப்போதும் பேசச் சொல்லிக் கேட்பவன்,என்னை இன்று மொத்தமாகப் பேச வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.......என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடு என்று கெஞ்சுபவன்..இன்று என்னிடம் ஓர் வார்த்தை கூட பேசாது அசைவற்றுக் கிடந்தான்...

அவனை அப்படியே அணைத்துக் கொண்டு அவன் மேல் விழுந்து கதறத் தொடங்கினேன்...ஆனால் எப்போதும் என்னைத் தாங்கிப் பிடிப்பவன் இன்று என்னை அரவணைத்துக் கொள்ளவில்லை...

அவன் இறந்துவிட்டானா...??என் வருண் என்னைத் தனியே விட்டுச் சென்றுவிட்டானா...??அவனது நித்தியாவை விட்டு அவன் சென்றுவிட்டானா...??அனைத்தும் பொய்யாகிவிடக் கூடாதா,நடப்பவை எல்லாமே கனவாக இருந்துவிடக் கூடாதா என்றுதான் மனம் ஏங்கியது...ஆனால் காலமோ என் கேள்விகள் அனைத்திற்கும் "ஆம்"என்ற பதிலைச் சொல்லி என்னை என் வருணை என்னிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டது....

அவனை அப்படியே அள்ளிக் கொண்ட நான்..."வருண்"என்று கதறினேன்...என் கதறலில் அன்று வைத்தியசாலை மட்டும் கதிகலங்கிப் போகவில்லை...இன்று நான் அமர்ந்திருந்த எங்கள் காதலின் கடற்கரையும்தான் என் கதறலில் கதிகலங்கிப் போனது...என் கண்ணீரைக் கட்டுப்படுத்தி என்னை நானே சமாதானம் செய்து கொள்ளவே சில மணி நேரங்கள் தேவைப்பட்டது எனக்கு...

இந்த வலி ஒன்றும் எனக்குப் புதிதானதல்ல...ஒரு வருடத்திற்கு முன்பு நான் அனுபவித்த வேதனையை விட...பன்மடங்கு வலியினை இந்த ஒரு வருட காலமாக அனுபவித்துக் கொண்டுதான் வருகின்றேன்...அவன் உயிரோடு இல்லையென்பதை என்னால் அன்றும் சரி...இன்றும் சரி ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...

அவன் இருந்த போதும் எனக்குள்தான் வாழ்ந்து கொண்டிருந்தான்...இப்போதும் அவன் எனக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்...என் ஒவ்வொரு நாளும் இந்தக் கடற்கரைக்கு வராமல் கடந்து போனதில்லை...அதிலும் இன்றைய நாள் என் வாழ்க்கையையே மொத்தமாய் புரட்டிப் போட்ட நாள் அல்லவா...??

ஆம்,இன்றுதான் அவனது நினைவுநாள்...அவனது பிறந்தநாளும் கூட...என்னைப் பொறுத்த வரையில் அவன் என் அருகிலேயேதான் இருக்கிறான்...என்றுமே அவன் என்னுடனேயேதான் இருப்பான்...ஆனால் என்ன என் கண்களிற்கு அகப்படாமல் இப்போது அவன் என்னோடு கண்ணாம்மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறான்...

ஆனால் அவன் நிச்சயமாய் ஒரு நாள் என்னைத் தேடி வருவான்...என்னை அவனுடனேயே அழைத்துச் செல்வான்...என் வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடிகளுமே அவனுக்கானது...என் வருணுக்கானது...நான் அவன் மேல் வைத்த காதலும்...அவன் என் மேல் வைத்த காதலும் நிச்சயம் அவனுள் என்னைக் கலந்திடச் செய்யும்....

அந்தத் தருணத்திற்காய் நானும் என் காதலும் என் இறுதி மூச்சு வரை காத்துக் கொண்டேயிருப்போம்...அதன் பின்புதான் நான் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையே...நான்தான் அப்போது என் வருணோடு சேர்ந்திருப்பேனே...என் வருணுக்குள் ஒருத்தியாக கலந்திருப்பேனே...

அதுவரையிலும் அவனுக்காக...நித்தியாவின் வருணுக்காக...என்றுமே என் காதல்...இந்த நித்தியாவின் காதல் காத்திருப்போடு தொடரும்...

"...உன் கரம் பிடித்து வந்தேனடா
இறுதி வரையிலும் உன் கரம்
பிடித்திடவே துடித்தேனடா..
இன்று உன்னுள் உனக்குள்
ஒருத்தியாக கலந்திடவே
தவியாய் தவிக்கிறேனடா...

என் காதல் கொண்டு சென்றவனே
இனியும் வேண்டாமே-உன்
கண்ணாம்மூச்சி விளையாட்டு
விரைவில் வந்துவிடு...என்னோடு
என் நெஞ்சோடு கலந்துவிடு..."


....சகி....

எழுதியவர் : அன்புடன் சகி (29-Jan-18, 7:47 pm)
பார்வை : 585

மேலே