மரமாபிமானம் -3

வெகுதூர பயனித்திற்கு பின்பு ஒரு வழியாய் மரநேசன் தன் சொந்த ஊரை அடைந்தான். பார்ப்பதற்கு பிச்சைக்காரன் போல் தோற்றமளித்தாலும் அவனுக்கென்று சொந்தமாக காணி நிலத்தில் ஒரு மாந்தோப்பு இருந்தது அந்த ஊரில். சிறு வயதிலியே பெற்றோரை இழந்த அவனுக்கு இறுதியில் மிஞ்சியது இந்த தோப்பு மட்டும் தான். ஊரின் எல்லையில் சுற்றிலும் விவசாய நிலங்கள் புடை சூழ அவனுடைய மாந்தோப்பு கம்பீரமாய் அங்கே வீற்றிருந்தது. மரநேசன் அந்த தோப்பை சுற்றிலும் முள்வேலி அமைத்திருந்தான்.

முள்ளாலான வேலியின் கதவை திறந்து மரநேசன் அந்த தோப்பினுள் நடந்தான். அங்கே தோப்பின் மத்தியில் இரு அழகான வேப்பமரங்கள் கணவன் மனைவி போல் அருகருகே வீற்றிருந்தன. ஆம், அவை கிட்டத்தட்ட கணவன் மனைவி மாதிரிதான். மரநேசனின் தாய் தந்தையினரின் சடலங்களின் மேல் தான் அந்த மரங்கள் நின்று கொண்டிருக்கின்றன. மரநேசனின் பார்வையில் அவை வெறும் மரங்கள் அல்ல, அவை அவனுடைய பெற்றோர்கள்தான். அது மட்டும் அல்லாமால் அவன் அந்த தோப்பில் உள்ள மரங்களையும் தன் குடும்ப உறவுகள் போலேயும் மற்ற மரங்கள் எல்லாவற்றையும் அவனுடைய உறவினர்களாகவும் தன் மனதில் பதிந்துவிட்டான். ஆகவேதான் குழைந்தைகள் விடுமுறை நாட்களில் உறவினர் வீட்டிற்கு செல்வது போல்..அவனும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் காட்டிற்குள் சென்று அங்கு தன் உறவினராக கருதும் மரங்களுடன் சிறிது நாட்கள் கழித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவது வழக்கம்.

அந்த ஊரில் வசிப்பவர்கள் பார்வையில் மரநேசன் ஒரு பைத்தியம். ஆம், மரத்தை வெட்டி அந்த இடத்தில் வீட்டை கட்டி, பின் கட்டிய வீட்டுக்குள்ளே அதே இறந்த மரத்தை நாற்காலியாய் செய்து அதில் அமர்ந்து நாட்டு நடப்பை அலசுபவர் பார்வையில் அவன் பைத்தியக்காரன்தான். ஒரு சிறைகதவின் இரு பக்கமும் நிற்பவர்களை பார்த்தால் யார் உண்மையான கைதி என்று தெரிவதில்லை. மரநேசன் பார்வையில் அந்த ஊர் மக்கள் எல்லாம் மரத்தை வெட்டும் குற்றவாளிகள் போல் தெரிகின்றனர். ஊர் மக்கள் பார்வையில் மரநேசன் பைத்தியக்காரன் போல் தென்படுகின்றான். ஆனால் அந்த சிறைக்கதவிற்கு தெரியும் யார் பைத்தியம் என்று.
தன் பெற்றோரை அதாவது அந்த இரண்டு வேப்ப மரங்களை வணங்கிவிட்டு மரநேசன் அந்த தோப்பின் மூலையில் இருந்த தன் சிறு குடிசையின் கதவைத் திறந்தான்.

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (30-Jan-18, 2:12 am)
பார்வை : 61

மேலே