மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 4

மூர்ச்சையற்ற பொழுதுகள்_௪

கல்வெட்டுகள் காலத்தின் சூழ்ச்சியால் சுமைதாங்கி கற்களாய் மாறி போகுமென்று யாரும் உணர்ந்திருக்கவில்லை..
அவள் வெண்மதியின் அழகை மிகைத்திருந்தாள்.அந்த அழகிய நிலவின் பிம்பம் பண்ணீர் ஓடையில் மிதந்து கொண்டிருந்தது.
நீர் அருந்த சென்ற ஊர் குருவியொன்று அதன் அழகில் மயங்கி அதை தொட முற்பட்டு,
தவறி விழுந்து அண்ணார்ந்து பார்த்த போதுதான் அந்த நிலவு எட்டவே முடியாத தொலைவில் அதை பார்த்து கேலியாய் சிரித்து கொண்டிருப்பதை உணர்ந்தது.
மீண்டெழுந்து வானத்தை நோக்கி மேலே மேலே பறந்தது.
அந்த ஊர் குருவி பருந்தின் கண்களில் சிக்குமா அல்லது வானத்து நிலவை அடையுமா என்பதை காலம்தான் கைரேகை பார்த்து சொல்லும்.

அவளின் பெயர் மாலதி...

அந்த பெயரில் எந்த ஈர்ப்பும் இதற்க்கு முன் இல்லை,ஆனால் மனசுக்குள் காதல் வந்த பின்பு,அவள் பெயரை சொல்லி உள்ளூர ஒரு பைத்தியம் அவ்வப்போது தொண்டை தண்ணீர் வற்ற கத்தி கொண்டிருந்தது அவனுக்கு உரைத்தது.
எழுதும் பொருட்கள் எதை வாங்கினாலும் அதை கொண்டு கிறுக்கும் முதல் வார்த்தை அவள் பெயராகதான் இருந்தது.
இதுவரையிலும் அவள் பெயரை உச்சரித்து அவளை அழைத்தது இல்லை,ஆனால் அவள் பெயரை மட்டும்தான் வாழ்நாளில் எண்ணிக்கை கொள்ள முடியாத அளவிற்க்கு தன் மனசுக்குள் உச்சரித்து இருக்கிறான்.
எல்லோருக்கும் காதலித்த பெண்ணின் முதல் சந்திப்பு மறக்க முடியாததான் இருக்கும். ஏனென்றால் ரணங்களை அவ்வளவு எளிதில் மறப்பது கடினம்தானே.
அவன் காதலியாக நினைத்து அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் முன்னரே சக வகுப்பு தோழியாய் அறிமுகமாகி இருந்தாள்.

அப்போது அவன் பள்ளி படிப்பை இடைநிறுத்தம் செய்து இருந்ததால் மூன்று வருடம் முன்பு அதே வகுப்பில் சேர்ந்து இருந்தான்.
முன்பு அவன் அமர்ந்த அதே முதல் பெஞ்சின் முதல் இருக்கைதான்,அதே ஆசிரியர்கள்தான் ஆனால் சக தோழர்கள் மற்றும் தோழியர்கள்தான் மாறி இருந்தனர்.

அன்று சூன் இரண்டாம் தேதி முதல் நாள் வகுப்பு,
பழைய வகுப்பிலிருந்து புது வகுப்பிற்க்கு மாறுவதற்காக மாணவ,மாணவியர் காத்திருந்தனர்.அவன் மட்டும் காத்திருக்காமல் எல்லோருக்கும் முன்பாகவே அவன் போய் அமர்ந்து கொண்டான்.
எல்லோருக்கும் அவன் மட்டும்தான் புதியவன். ஒவ்வொருவராய் அகர வரிசைப்படி வகுப்பில் நுழைந்தனர்.
உள்ளே நுழைந்த ஒவ்வொருவரும் கார்த்திக்கை குறுகுறுவென்று பார்த்து கொண்டு அவரவர்க்கு பிடித்த இடத்தை தேர்வு செய்து அமர ஆரம்பித்தனர்.
ஒரு வித தயக்கத்துடனே எல்லோரின் பார்வைக்கும் பதிலீடு கொடுத்து கொண்டிருந்தான்,.
எல்லோரும் வந்தாயிற்று.

மாலதியும் வந்தாள் எல்லோர் மத்தியிலும் தனித்து தெரிந்தாள்..
பூ போட்ட பச்சை கலர் சட்டை கழுத்தில் பாசி கோர்த்த கழுத்து மாலை அழகை அழகினும் அழகாக்கி இருந்தது ..மை தீட்டிய புருவமும் கண் இமையும் மார்பை குத்தி கிழிக்கும் வில்லும் அம்பும் போல காட்சி அளித்தது...
கார்த்திக்கின் இதயத்தில் தீடீரென ஒரு ஜோடி பட்டாம்பூச்சி விர்ரென கிளம்பி அவளை நோக்கி சிறகடித்து பறக்க தொடங்கியது ..
அவளின் மீது மையல் கொண்ட அவன் இதயத்தின் ஓசை அவனுக்கே முதன் முறையாய் கேட்டு பின் ஓசை அடங்கியது..அவனை போலவே அந்த பட்டாம்பூச்சியும் அவளை தீண்டிய மயக்கத்தில் மூர்ச்சியற்று நின்றது ...

காதல் கடலில் மூழ்கி விட்டான் ..
முத்தும் கிடைக்கலாம் இல்லை
மோட்சமும் கிடைக்கலாம் ..

காதல் பாடம் நாளை ஆரம்பம்......

எழுதியவர் : சையது சேக் (4-Feb-18, 7:18 pm)
பார்வை : 208

மேலே