ராஜராஜ சோழன்

மும்முடிச் சோழன் என புகழப்பெறும் ராஜராஜ சோழனின் வரலாற்றினை சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழனுக்கும் அவன் பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்தான் அருண்மொழிவர்மன்.

இது "சதய நாள் விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன்"
என்ற கலிங்கத்துபாரணி அடிகளால் பெறப்படுகிறது.

திருவாலங்காட்டு செப்பேடுகள் இவன் கைகளில் சங்கு,சக்கர ரேகைகள் இடம் பெற்று இருந்தன என்று குறிப்பிடுகின்றன.

சுந்தர சோழனுக்கு மூன்று பெரிய தந்தைகள் இருந்தனர்.ஆகையால் சுந்தர சோழன் ஆட்சி பீடம் ஏறமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர்.ஆனால் முதலாம் பராந்தகனின் புதல்வன் உத்தமசீலி என்பான் பாண்டிய நாட்டு போரில் உயிர் துறந்தான்.அது போலவே முதல் பராந்தகனின் முதல் புதல்வனும் மிக பெரும் வீரனுமாகிய ராசாதித்தன் ராட்டிடகூட போரில் ஆனை மேலமர்ந்த படியே வீரசொர்க்கம் எய்தினான்.

முதலாம் பராந்தகனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார் அவரது இரண்டாம் புதல்வர் கண்டராதித்தர்.கண்டராதித்தனின் புதல்வன் சிறிய குழந்தை என்பதால் அவருக்கு பின்னர் அவனது இளவலும் சுந்தர சோழனின் தந்தையுமாகிய அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்தான்.சில திங்களில் அவனும் காலமானதால் அவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தக சோழனாகிய சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.

சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்.முதலாமவன் பெரும் வீரனாகிய ஆதித்ய கரிகாலன்.அவனுக்கடுத்து குந்தவை என்னும் பெண் பிறந்தாள்.இவர்களுக்கு பின்னர் கடைக்குட்டியாக பிறந்தவன் தான் அருண்மொழிவர்மன்.

குந்தவி பிராட்டியார் வல்லவரையன் வந்தியத்தேவன் என்னும் கீழை சாளுக்கிய மன்னனை மணந்தார்.

அந்நாளில் பாண்டிய நாடு சோழரின் ஆதிக்கத்திற்கு உட்படாததால் பாண்டிய நாட்டின் மீது படையெடுப்பது இன்றியமையாததாகி விட்டது.கி.பி.966 இல் சுந்தர சோழனின் புதல்வன் ஆதித்ய கரிகாலன், கொடும்பாளூர் பூதி விக்கிரமகேசரி, தொண்டை நாட்டு சிற்றரசன் பார்த்திபேந்திரவர்மன் ஆகியோர் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தனர். அப்போரில் வீரபாண்டியனை கொன்று ஆதித்ய கரிகாலன் அப்போரில் பெரும் வெற்றி பெற்றான்.

"வீரபாண்டியனை தலை கொண்ட கோப்பரகேசரிவர்மன்"
என்றே ஆதித்ய கரிகாலன் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்பிடப்படுகிறான்.இவனது பெரும் ஆற்றலை கண்ட சுந்தர சோழன் இவனுக்கு கி.பி.966இல் இளவரசு பட்டம் சூட்டினான்.இத்துணை பெரிய ஆற்றலை உடைய இவன் கி.பி-969இல் சோழ நாட்டிலேயே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான்.போர்க்களத்தில் எதிரிகளின் வாளுக்கு மடியாத கரிகாலன் சதிவலையில் வீழ்ந்து மடிந்தான்.

திருவாலங்காடு கல்வெட்டு,
"வானுலகை பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான்.உலகில் கலி என்னும் இருள் சூழ்ந்தது."
என்கின்றது.

ஆதித்த கரிகாலன் போன்றதொரு வீரனை அது நாள் வரை கண்டிராத சோழ நாடு அவனது மறைவால் சோகத்தில் ஆழ்ந்தது.ஆதித்தனின் மறைவை தாங்க இயலாத சுந்தர சோழன் சில திங்களில் வானுலகம் எய்தினான்.சுந்தர சோழனின் மறைவுக்கு பின்னர் சோழ நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிகழ்ந்தது.சோழ நாட்டின் கீழ் இருந்த சிற்றரசர்களில் ஒரு சாரார் கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்றும் மற்றொரு சாரர் அருண்மொழி வர்மனே ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்றும் தங்களுக்குள் பிரிந்தனர்.

சங்கு சக்கர ரேகைகளை உடைய அருண்மொழிவர்மனுக்கு மக்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது.இந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி எதிரிகள் மீண்டும் சோழ நாட்டின் மீது படைஎடுக்க கூடாது என்று நினைத்த அருண்மொழிவர்மன் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஆட்சி பீடத்தின் மீதான தனது உரிமையை கண்டராதித்தரின் புதல்வனான உத்தம சோழனுக்கு விட்டுகொடுத்தார்.
மிக பெரும் தொன்மை வாய்ந்த சோழ நாட்டின் அரசுரிமையை தனது சிறியதந்தைகாக விட்டு கொடுத்தது அருன்மொழிவர்மனின் தயாள குணத்தை காட்டுகிறது.

உத்தம சோழனின் பதினைந்து ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் கி.பி-985இல் அரசு கட்டில் ஏறினான் ராசகேசரி அருண்மொழிவர்மன்.தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில்(கி.பி-988) சேரனையும் பாண்டியனையும் கந்தாளூர் சாலை போரில் வென்றான்.இப்போருக்கு பிறகே அரசருக்கேலாம் அரசர் என்று பொருள் படும் "ராஜராஜன்" என்னும் அபிஷேக பெயரை சூடினான்.அதுவே அவனது பெயராக பின்னாளில் மாறி போனது.

விசயாலய சோழனால் அடிகோலப்பட்ட பிற்கால சோழ அரசு மகோன்னதம் அடைந்தது இவனது ஆட்சியிலே தான்.அது நாள் வரை தேங்கி இருந்த சோழரின் ஆற்றலை அனைத்து துறைகளிலும் வெளிக்கொண்டு வந்து சோழர் பரம்பரையை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் பேச செய்தவன் இவனே.இவன் இயற்கைலேயே நுண்ணறிவும்,பெரும் ஆற்றலும்,மக்களின் செல்வாக்கும்,இறைவனின் ஆசியும் உடையவனாய் இருந்து இருக்க வேண்டும்.இவனது முப்பது ஆண்டு கால நீண்ட ஆட்சியும் இவனது சாதனைகளுக்கு பெருந்துணை புரிந்துள்ளது.

அது நாள் வரை எந்த தமிழ் மன்னரும் செய்திராத ஒன்றை ராசராசன் செய்தார்.தனது ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அனைவரும் நன்குணரும் பொருட்டு அவற்றை விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழில் அகவற்பாவில் அமைத்து தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை தொடங்கினான்.மன்னனது ஆட்சி வளர வளர மெய்க்கீர்த்தியும் வளர்ந்து கொண்டே போகும்.மெய்க்கீர்த்திகளில் இருப்பனவெல்லாம் கற்பனை அல்ல.அவை அனைத்தும் அந்த மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களே.

இறுதி காலங்களில் கிடைத்த ராசராசனின் மெய்க்கீர்த்தி,

"திருமகள் போல பெருநில செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனங்கொளக்கருதி
காந்தளூர் சாலை கலமறுத்தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழிற் சிங்களரீழமண்டலமும்
இரட்டை பாடி எழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரமும்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
எழில் வளர் ஊழியுளெல்லா யாண்டும்
தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
தேசுகொள் கோ ராசா கேசரி வர்மரான
உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்..."

இந்தமெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை ராசராசன் கைப்பற்றி இருந்தான் என்பது இதன் மூலம் பெரபடுகிறது.பாண்டி மண்டலமும்,சேர மண்டலமும் அடங்கிய ராசராச தென்மண்டலமும், தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலமும்,கங்க மண்டலமும்,கொங்கு மண்டலமும்,நுளம்பாடி மண்டலமும்,கலிங்க மண்டலமும்,ஈழமாகிய மும்முடி சோழ மண்டலமும் இவனது ஆட்சியில் சோழ நாட்டிற்க்கு உட்பட்டு இருந்தது என்பது பெறப்படுகிறது.

வளர்ந்து கொண்டே வநத சோழ சாம்ராஜ்யத்தின் நிதிநிலையை சமாளிக்க அது வரையில் யாரும் யோசிக்காத வண்ணம் தனது சாம்ராஜ்யத்தை அளக்க உத்தரவிட்டான் ராஜராஜன்.இப்பெரும் பணியை மிககுறுகிய காலத்தில் செய்து முடித்தவன் சேனாதிபதி குரவன் உலகளந்தானான ராசராச மாராயன்.எவ்வளவு நன்செய் நிலங்கள்,புன்செய் நிலங்கள்,காடுகள்,விளைநிலங்கள் என்பதை புலப்படுத்தி அவற்றுள் விளைநிலங்களுக்கு மட்டும் வரி விதிக்குமாறு பரிந்துரைத்தான்.

இவ்வாறு பலத்துறைகளில் சிறப்புற்று விளங்கிய ராஜராஜனுக்கு பல்வேறு அபிஷேக பெயர்கள் இருந்தன.
ஷத்திரிய சிகாமணி,ராசேந்திர சிங்கன்,உய்யக்கொண்டான்,
பாண்டிய குலாசினி,கேரளாந்தகன்,நித்த வினோதன்,ராசாசிரையன்,
சிவபாதசேகரன்,சநநாதன்,சிங்களாந்தகன்,சயங்கோண்டசோழன்,
மும்முடி சோழன்,ரவிகுல மாணிக்கம்,நிகரிலி சோழன்,
சோழேந்திர சிங்கன்,சோழமார்த்தாண்டன்,ராசா மார்த்தாண்டன்,
தெலுங்குகுல காலன்,கீர்த்தி பராக்கிரமன் என்பன ஆகும்.

மன்னர்கள் கோயில் கட்டுவது என்பது புதிது அன்று.எதையும் புதிதாக முயற்சி செய்யும் ராஜராஜன் இதிலும் தனது புதுமையை கட்டினார்.அதாவது அதுவரை தென்னாட்டில் எங்குமே இல்லாத பரிமாணத்தில் 793 அடி நீளத்தில் 397 அடி அகலத்தில் 216 அடி உயரத்தில் ராஜராஜேச்வரம் என்னும் கோயிலை கட்டினான்,இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து தமிழரின் கட்டிட கலையை உலகிற்கு உணர்த்துவது திண்ணம்.

இவ்வாறாக பலத்துறைகளில் சோழர்களின் முத்திரையை பதித்த ராசராசன் கி,பி-1012இல் தனது புதல்வனாகிய, பின்னாளில் ராசேந்திரசோழன் என்னும் அபிஷேக பெயரை அடைந்த இளங்கோ மதுராந்தகருக்கு இளவரசு பட்டம் சூட்டினான்.

வாழ்க ராஜராஜ சோழர்! வளர்க அவர் கீர்த்தி!

எழுதியவர் : (9-Feb-18, 12:24 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : raajaraaja sozhan
பார்வை : 6444

மேலே