தூண்டில் புழு

தூண்டில் புழு
கருமை தீட்டிய இருள், மேகங்களை வெட்டி வெளிவர துடிக்கும் மின்னல், கொட்டி தீர்க்கும் இந்த மழையின் நடுவே ஓர் நீண்ட நெடிய இரயில் பாலம், அதன் மேலே எங்கோ தூரத்தில் வரும் இரயிலின் ஓசை, பாலத்திற்கு கீழே கட்டுக்கடங்காமல் ஓடும் இந்த ஆறு, திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சிக்கு ஏற்ற இடம். இதுவும் இறுதிக்கட்டம்தான் என் வாழ்வின் இறுதி கட்டம். ஆம் இன்னும் சிறிது நேரத்தில் என் மரணத்தை தழுவப்போகிறேன். நான் மண்டியிட்டு இருக்கும் இந்த இரயில் பாதையில் வர இருக்கும் இரயில், இல்லை இந்த பாலத்திற்கு கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று வெள்ளம், இவை அனைத்திற்கும் மேல் என் நெற்றிக்கு நேரே இருக்கும் துப்பாக்கி. இவைதான் நான் இறக்க என்னிடத்தில் உள்ள மூன்று வழிகள், நீங்கள் நினைக்கலாம் இது ஒரு தற்கொலையென்று. ஆனால் இது தற்கொலை அல்ல, என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர் நிகழ்த்தப்போகும் கொலை. கொலை என்பதை விட இதற்கு இந்த சமுதாயத்தில் தனித்ததோர் அழகான பெயரும் அங்கீகாரமும் உண்டு.
இந்த கொலையை நிகழ்த்தப்போவது யார்? என்று நீங்கள் சிந்திக்க தொடங்கி இருப்பீர்கள், ஆனால் “யார்” என்பதில் இந்த கொலைக்கான காரணமோ நானோ கிடைக்க போவதில்லை, ஒரு வேலை “ஏன்” என்பதில் தேடினால் கிடைக்கும். ஏனென்றால் நான் ஒரு பெண். ஒரு பெண் ஏன் கொல்லப்படவேண்டும்? சிறிது சிந்தித்து பாருங்கள். வறுமை, நடத்தை, காதல், கௌரவம் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஆனால் காரணம் மிக எளிமையானது. அது பெண்களை கொல்ல பெரிய காரணங்களோ, நியாயங்களோ தேவையில்லை அவளை கொன்றுவிட்டு ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கினால் போதும் அதை இந்த உலகம் நியாயப்படுத்திக்கொள்ளும்.
“உங்க அம்மா எவனோ ஒருத்தன் கூட ஓடிபோவ இருந்தா, நல்லவேல உங்க அப்பந்தான் பெரிய மனசு பண்ணி அவள ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டான்” இப்படித்தான் எனக்கு காதல் அறிமுகம் ஆனது. ஆம் காதல் என்பதை “ஓடிபோகுதல்” என்றுதான் எங்கள் ஊரில் அழைப்போம். பெண்கள் சுயமாக தன் துணைவனை தேர்ந்தெடுப்பது கௌரவ குறைவாகவும், ஆண்கள் தனது கௌரவத்திற்கு ஏற்றவாறு இரண்டு மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்வதெல்லாம் பெருமையானதாகவும் கருதும் கட்டமைப்பு. இப்படித்தான் என் அம்மாவின் நடத்தையையும், என் அப்பாவின் தியாகத்தையும் என் பாட்டியால் பலமுறைகள் சொல்லப்பட்டு வளர்க்கப்பட்டவள் நான்.
எதனை கொண்டு மனதை சுற்றி கோட்டை கட்டினாலும் பருவம் வந்தவுடன் கூட்டை உடைத்து வெளியே பறக்கும் பட்டாம்பூச்சிக்கு யார் தடையிட முடியும். அவரை முதன்முதலில் என் கல்லூரியில் நடந்த ஒரு கவிதை போட்டியில் தான் சந்தித்தேன்.
“விண்ணவன் போற்றும் மூவேந்தனை வென்றவன்
பெண்ணவள் வீசிய வேல்விழியினில் வீழ்ந்தேன்
ஓர் வரம் கொடு கண்மணி உன்
கால் தொடுமிடத்தில் கல்லாய் நின்றிட”
அந்த கவிதையின் முடிவில் என் காதல் தொடங்கியது. ஆனால் எங்களுக்கு இடையே பெரும் தடையாக அமைந்தது நாங்கள் இருவேறுப்பட்ட மதத்தில் பிறந்தவர்கள். “உலகத்துல இருக்குற எல்லா ஆம்பளைங்களும் அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி மதங்கள உருவாக்கினாங்க, ஆனா எல்லா மதத்திலயும் ஒரே மாதிரித்தான் பொண்ணுங்கள அடிமபடுத்தினாங்க” நீ காதலிக்கிறவன் எந்த மதமா இருந்தாலும் பரவாயில்ல, மனுஷனா இருந்தா போதும்” என் அம்மாவுடைய வார்த்தைகள். இதுக்குமேல எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது அவருடைய உறுதிமொழிதான். “எனக்குத்தேவ உன்னுடைய காதல் மட்டும்தான், அத தவிர நீ எனக்காக வேற எதையும் விட்டுத்தரவேண்டாம்”
இதோ நா இப்ப இருக்குற இதே பாலத்தின்மேல்தான் எங்கள் காதல் பயணம் தொடங்கியதும், முடியப்போவதும். இப்போ அவருக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன். அவர்தான் என்னோட இறுதி நம்பிக்கை. மூவேந்தர்களையும் வென்றவராயிற்றே, எனக்காக அவருடைய அப்பாவையும், தம்பியும் வென்று என்னை காப்பாத்தமாட்டாரா என்ன? நீ நினைக்கிறது சரிதான் என் நெத்தில துப்பாக்கி வெச்சிக்கிட்டு இருக்கறது அவருடைய தம்பி, பக்கத்துல இருக்கறது அவருடைய அப்பா, சுத்தி இருக்குற மீதி எல்லாம் அவருடைய சொந்தம்தான்.
எங்களோட காதலை பற்றி வீட்ல தெரியவந்தப்போ என் அப்பா பெரிசா எதுவும் கோவப்படல, இரண்டாம் தாரத்துக்கு பொறந்த பொண்ணுதானன்னு என் மேல அக்கறை இல்லாம இருக்குறது ஒருவகையில எனக்கு சாதகமா இருந்தது. கொஞ்சநாள்ல என்னோட கல்யாணத்துமேல ரொம்ப அக்கறை காட்ட ஆரம்பிச்சாரு. அவருடைய குணங்களுக்கு எதிர்மாறான அந்த அன்புக்குள்ள இருந்த வணிகத்தன்மையை உணரும்போதுதான் மனிதர்களுடைய மற்றொரு கொடூரமான பக்கத்த பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். மதமெனும் வணிக சந்தையில் நான் ஒரு தூண்டில் புழுவாக பயன்படுத்தப்பட்டேன், அவரை நான் சார்ந்த மதத்திற்குள் இழுக்க என் மதம் போட்ட தூண்டிலில் நான் தூண்டில் புழு. அவர் பல முறை மதம் மாற நிர்பந்திக்கப்பட்டார், பல முறை மிரட்டப்பட்டார். இந்த நொடியில் கணித்து இருப்பீர்கள் நீங்கள் சார்ந்த மதத்திற்கு எதிராக கருதப்படும் மதங்கள் இவ்வாறு இழிவாக நடந்து கொள்கிறது என்று. நான் அவ்வாறு ஒரு சிறு வட்டத்திற்குள் அடங்கிவிடமாட்டேன். நான் எனது பெயரை இதுவரை சொல்லாததன் காரணமே என் பெயரைக் கொண்டு என் மதத்தை கணித்து, இந்த மதத்தினர்தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் வந்திருப்பீர்கள், இல்லை என் மீது மதத்தை இழிவுபடுத்திவிட்டேன் என்று வழக்கு தொடுத்திருப்பீர்கள். இது ஒவ்வொரு மதமும் மற்றொரு மதத்தின் மீது நடத்தப்படும் வணிக போர். பெண்களை இரையென நினைத்து நடத்தப்படும் வணிகம், மதத்தின் வளர்ச்சி என்பது அதன் எண்ணிக்கையில்தான் உள்ளது என்று நினைக்கும் மூடர்கள் செய்யும் வணிகம். ஒரு மதத்தின் வளர்ச்சி என்பது எண்ணிக்கையில் இல்லை, அது உருவாக்கும் மனிதனில் உள்ளது என்பதை உணர்ந்தவள் நான். காதல் என்பது ஒருவரின் மனதிற்குள் மற்றொருவரை இழுப்பதுவே இன்றி, ஒருவரின் மதத்திற்குள் மற்றொருவரை இழுப்பதல்ல. இதனை உணர்ந்த கணத்தில் எங்கள் இருவீட்டினர்க்கும் தெரியாத அவருக்கு நம்பிக்கையான ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம், அப்பொழுதும் அவர் இல்லாத சமயங்களில் அவரின் உறவினர்களால் மதம் மாற்றம் என்மீது திணிக்கப்பட்டது. இந்த வணிகத்தின் கண்களில் இருந்து முழுமையாக மறைந்து வேறொரு இடத்தில் வாழும்போதுதான் அவர் இல்லாத சமயத்தில் இவர்களால் கடத்தப்பட்டு, இந்த இடத்தில் துப்பாக்கி முனையில் என் கதையை சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவர் என்னை காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையுடன்.
இதோ நான் நம்பியது போல் அவர் என் முன்னே வந்துவிட்டார். அவர் தயங்கிததயங்கி எதையோ என்னிடம் சொன்னார். அவர் சொன்னதை என்னால் சரியாக உணர முடியவில்லை, பொதுவாக சொற்களின் அர்த்தங்களை அறிவே தீர்மானிக்கிறது, ஆனால் நாம் நேசிப்பவர்கள் உதிர்க்கும் சொற்களை அறிவை கடந்து மனமே இறுதியாக தீர்மானிக்கிறது. அவர் உதிர்த்த வார்த்தைகள் என் அறிவுக்கு எட்டினாலும் மனம் அதை ஏற்கவில்லை, அன்னிச்சையாக மீண்டு “என்னவென்று” கேட்டேன் மீண்டும் அதே வார்த்தைகளை மிக கோவத்துடன் சொன்னார். ஏனோ அவர் என்னிடம் முதலில் சொன்னா கவிதை என் நினைவில் ஓடி மறைந்தது. அப்பொழுதுதான் எனக்கொன்று விளங்கியது “புனையப்படும் கவிதைகளில்தான் ஆண்கள் பெண்களுக்கு அடிமையாக காட்சிப்படுத்தப்படுவார்கள், ஆனால் உண்மையில் என்றென்றும் பெண்கள்தான் ஆண்களுக்கு அடிமையாக உள்ளோம்”. அவர் என் அருகே வந்து “நீ மதம் மாறினால் நான் உன்னை காப்பாற்றுகிறேன்” என்றார். உண்மையில் அவ்வாறு அவர் அதை உரைத்த கனத்திலே இறந்துவிட்டேன். இனி இந்த துப்பாக்கி துளைக்கப்போவதோ, இதோ என்னை நெருங்கிவிட்ட அந்த இரயில் மோதி சிதைக்கப்போவதோ, இந்த ஆற்றில் முழுகப்போவதோ நான் இல்லை என்னுடைய சடலம் மட்டுமே.
குளத்தில் போடப்படும் தூண்டிலில் ஒன்று வெல்வது தூண்டில் போட்டவன், இல்லையெனில் வலிமையான மீன் இடையில் இருக்கும் புழு எப்பொழுதும் பிழைக்கப்போவதில்லை. நான் ஒன்றும் பெரிய மதவாதி அல்ல, நான் இப்பொழுது சார்ந்துள்ள மதம் எனக்கு பிறப்பினால் பூட்டப்பட்டது, இதை நான் எளிமையாக விட்டெறிந்து என்னை காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால் விஷயம் நான் மதம் மாறுவதிலோ, மாறாமல் இருப்பதிலோ இல்லை. இன்று நான் பயத்தினால் மதம் மாறினால், நாளை நான் ஒரு அடிமை. “அடிமைக்கு விடுதலை உண்டு, அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு என்றைக்கும் விடுதலை இல்லை”.
-சே.கிருஷ்ணா

எழுதியவர் : சே.கிருஷ்ணா (23-Feb-18, 2:20 pm)
Tanglish : thoondil puzhu
பார்வை : 257

மேலே