அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 12

"என்ன எம்.ஜே., மிகவும் பதற்றமாக இருக்கிறாய்? ஏதும் சிரமமா? உறக்கம்? பசி? என்ன விஷயம் என்று சொல்" என்றபடியே நிலயத்தினுள் பிரவேசித்தார் கென்னடி.

"இல்லை மிஸ்டர் கென்னடி, எனது சந்தேகப்படி தான் நடந்திருக்கிறது, அலெக்ஸ் கேர் லாஸிலே ஸ்டேஷனில் இறங்கி கேர் காண்டியாக் போகும் ரயில் எண் முப்பதில் ஏறி சென்றிருக்கிறார். இரவு எட்டு மணி வாக்கில் ஏறி இருக்கிறார். அந்த ரயிலானது டெர்மினஸ் அங்கிறிஞன் நிலையம் வரை செல்லும் வண்டி, அதுமட்டும் இல்லாமல் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வந்திருப்பதால் அவர் வெறும் மூன்று மார்க்கத்தில் தான் சென்றிருக்க முடியும், ஏனென்றால் அந்த நிலையத்தில் இருந்து மூன்றே மூன்று கிழக்கு மார்க்கத்திற்கு தான் வண்டிகள் செல்கின்றன. ஒன்று ப்ரோஷர்ட் மார்க்கம், இரண்டு மாண்ட்ரியல் மார்க்கம், மூன்று ஷெரிங்க்டன் நேப்பியர்வில்லே மார்க்கம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அந்த கடைசி தொலைபேசி அழைப்பு தந்தை இறந்த செய்தியை சொல்லி இருக்க வேண்டும், அதனால் அலெக்ஸ் கோபத்தில் அந்த ரயில் நிலையத்தில் இருந்து திரும்பி வந்திருக்கவேண்டும், இங்கே நேப்பியர்வில்லே ஷெரிங்க்டன் மார்க்க ரயிலில் ஏறி இங்கே வந்து இந்த மூன்று பேரையும் கொன்றிருக்க வேண்டும்." என்றாள் எம்.ஜே.

கென்னடியால் இப்போது அலெக்ஸுக்கு சாதகமாக பேச முடியவில்லை, அவன் செய்திருக்க மாட்டான் என்ற நினைப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் தொற்றத்தொடங்கியது கென்னடிக்கு.

"இது சற்றே யோசிக்க வேண்டிய தகவல் தான் எம். ஜே. இப்போது நீ என்ன செய்யலாம் என நினைக்கிறாய்?" என்றார் கென்னடி.

"மிஸ்டர் கென்னடி, உங்களுக்கு தெரியாதது இல்லை, எனது அடுத்த படி அலெக்சின் புகைப்படத்தை அனைத்து கிழக்கு பிராந்திய நிலையங்களுக்கு அனுப்பி எங்கு பார்த்தாலும் உடனே கைது செய்ய சொல்லவேண்டும்" என்றாள் எம்.ஜே.

"இல்லை, நீ சொல்வது சரி, ஆனால் கைது செய்வது கூடாது, விசாரணைக்காக பிடிக்க வேண்டும்" என்றபடி தனது வாகி டாகியில் இருந்து அனைத்து கிழக்கு பிராந்திய நிலையங்களுக்கு அலெக்சின் புகைப்படத்தை அனுப்பி விசாரணைக்காக பிடித்து உடனே தகவல் தருமாறு தெரிவித்தார் கென்னடி.

"மிஸ்டர் கென்னடி, அலெக்ஸ் உங்கள் மகனின் தோழன் என்பதால் நீங்கள் அவனுக்கு சாதகமாக செய்வீர்கள் என நினைத்தேன், ஆனால் நீங்கள் உண்மையில் ஒரு கடமை தவறாத அதிகாரி தான்" என்றாள் எம்.ஜே.

"ஹா ஹா ஹா....யாராக இருந்தாலும் நேர்மை தான் எனது முதல் கவனம், எனது மகனின் தோழன் இல்லை, எனது மகனே இருந்தாலும் அது தான் செய்வேன், சரி வா, நீண்ட நேரமாக நீ சாப்பிடாமல் இருப்பாய். இன்னும் இரண்டொரு மணி நேரத்தில் நீ விடுமுறைக்கு செல்ல வேண்டும், முதலில் சாப்பிடலாம்" என்று எம்.ஜே.வை அழைத்தார் கென்னடி.

"மிஸ்டர் கென்னடி.....ஒன் பார் தி ரோட்" என்றாள் எம்.ஜே.

"ஓ தாராளமாக, சரி வா, செல்வோம்" என்றார் எம்.ஜே.

சற்று நேரத்தில் ஒரு நல்ல நட்சத்திர விடுதிக்கு சென்று பிளாக் லேபிள் குடித்துக்கொண்டே பல கேஸ்களை பற்றி பேசிக்கொண்டனர் எம்.ஜே. வும் கென்னடியும்.

மாண்ட்ரியலில்.....

"ஜொஹான், இந்த புத்தாண்டை நான் மறக்கவே மாட்டேன், இது ஒரு இனிய அனுபவம்" ஜொஹானின் நெஞ்சில் சாய்ந்து படுத்தபடியே சொன்னாள் மெர்சி.

"எனக்கும் அதே நினைப்பு தான் மெர்சி. அலெக்ஸ் இப்படி ஒரு பிரச்னையில் மாட்டவில்லை என்றால் இன்னும் சந்தோஷமாக இருப்பேன்" என்றான் ஜொஹான்.

மணி நான்கை தொட்டது, வெளியே ஏதோ கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது, "ஜொஹான், ஏதோ கார் வரும் சத்தம் கேட்கிறது, யார்?" என்றாள் மெர்சி.

"வேறு யார், எனது அருமை தங்கை ஆஷ்லே தான்" என்றபடி மெர்ஸியின் தலையை தடவினான் ஜொஹான்.

"சரி, அப்படி என்றால் கீழே போகலாமே, அவளை சந்திக்கலாம்" என்றபடி எழுந்தாள் மெர்சி.

எழுந்தவளை கையை பிடித்து இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டு இன்னும் ஒருமணி நேரம் கழித்து போகலாம், அம்மா கதவை திறந்து விடுவார்கள், மேலும் அவளிடம் ஒரு சாவி இருக்கிறது, அவளும் இந்நேரத்தில் யாரையும் தொந்தரவு செய்வதை விரும்ப மாட்டாள், முதலில் வந்து குளித்துவிட்டு அவளும் சற்று நேரம் உறங்கட்டும், அது மட்டும் இல்லை, தனது தோழியுடன் வந்திருக்கிறாள், அதனால் அங்கே வீட்டில் வெளியே தனியாக இருக்கும் அறையில் இருப்பாள், அந்த அரை தான் அவளுக்கு மிகவும் பிடித்த அறை" என்றான் ஜொஹான்.

"வரும்போதே கேட்கவேண்டும் என நினைத்தேன், அந்த தனி அறை வெளியே அவ்வளவு அழகாக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது, அது யாருடைய அறை?" என்றாள் மெர்சி.

"அதுவா, அது ஒரு பெரிய கதை, சின்ன வயதில் எனது தங்கைக்கு என்று எனது தந்தை ஒரு தனி அறை வடிவமைத்தார், அது தான் அந்த அறை, அதில் இருக்கும் அத்தனை அலங்காரங்களும் படங்களும் எனது தங்கையே செய்தது, அது மட்டும் அல்ல, அவளது தோழிகள் தோழர்கள் யார் வந்தாலும் அந்த அறையில் தான் தங்க வைத்துக்கொள்வாள், அந்த அறையில் இருக்கும் அலங்காரத்தை பார்த்து அவளை பாராட்டாதவர்கள் இல்லை, முக்கியமாக அவளது தோழி கரோலின் எப்போது வந்தாலும் அந்த அறையில் அவளோடு தான் தங்குவாள்" என்றான் ஜொஹான்.

"அனைத்தும் உன் தங்கையே வடிவமைத்ததா, ஆச்சர்யமாக உள்ளது" என்றாள் மெர்சி.

"ஏன் ஆச்சர்யம்?" என்றான் ஜொஹான்.

"இல்லை, உனக்கு இப்படி ஒரு திறமைசாலி தங்கையா என்று தான்" என்று சொல்லி சிரித்தாள் மெர்சி.

"நாட்டி, நானும் திறமைசாலி தான்" என்றான் ஜொஹான்.

"இதில் திறமைசாலி நீ?" என்று சிரித்தாள் மெர்சி.

"இதில் திறமைசாலி என்று காட்டுகிறேன்" என்று அவளை புரட்டிப்போட்டு போர்வையால் இருவரையும் சேர்த்து போர்த்திக்கொண்டான் ஜொஹான்.

"ஏய், ஜொஹான், நான் ஸ்டாப்பா பண்றதுல தான் உன் திறமை டா, விடு.....இது அதிகம்" என்றாள் மெர்சி.

இதற்கு மேல் மெர்சியால் பேசமுடியாதபடி உதட்டில் முத்தத்தால் சீல் வைத்தான் ஜொஹான்.

ஷெரிங்க்டன்னில்.....

"எம்.ஜே. , சரி நாம் கிளம்பலாம், நேரமாகிறது, நீ கிளம்பவேண்டும் அல்லவா" என்றபடி எழுந்தார் கென்னடி.

"ஆமாம் மிஸ்டர் கென்னடி, நேரமாகிறது. அதுமட்டும் இல்லை, நானே இரண்டு நாட்கள் விடுமுறையில் தான் செல்கிறேன், இப்போது நடக்கும் கேஸை பார்த்தால் எந்த நேரமும் திரும்பி வர நேரிடும் போல இருக்கிறது" என்றபடியே அவளும் எழுந்தாள்.

"இருவரும் பேசிக்கொண்டே நிலையத்தை நோக்கி வண்டியை செலுத்தினர்.

சர்ரேவில்......

"ஸ்கார்லெட், இந்த ஜொஹான், மெர்சி, அலெக்ஸ் என யாருமே நம்மை தொடர்பு கொள்ளவில்லை, நாம் வேறு அங்கே மாண்ட்ரியல் வருவதாக சொல்லி இருக்கிறோம், நமக்கு இன்னும் இறந்து மணி நேரத்தில் பிளைட், முதலில் மெர்ஸிக்கோ ஜொஹானுக்கோ கால் செய்து நம்மை மாண்ட்ரியல் ஏர்போர்ட்டில் வந்து பிக்கப் பண்ணிக்க சொல்" என்றபடி போர்டிங் பாசை கையில் எடுத்தான் மைக்கேல்.

"நான் ஏற்கனவே மெர்சிக்கு கால் செய்தேன், அவள் எடுக்கவில்லை, ஜொஹானும் எடுக்கவில்லை, அவர்கள் வாய்கள் பிசியாக இருக்கும் என்று நினைக்கிறேன், அதனால் மெசேஜ் போட்டிருக்கிறேன்" சிரித்தபடியே சொன்னாள் ஸ்கார்லெட்.

"சரி, இப்போது நாம் கேட் நம்பர் ஆறுக்கு போகவேண்டும், விடாமல் அவர்களுக்கு கால் செய்துகொண்டே இரு" என்றான் மைக்கேல்.

"சரி" என்றாள் ஸ்கார்லெட்.

பேசிக்கொண்டே மாண்ட்ரியல் விமானம் நிற்கும் கேட் நம்பர் ஆறை நோக்கி நடந்தனர் ஸ்கார்லெட்டும் மைக்கேலும்.

ஷெரிங்க்டன்னில்......

அந்த நேரத்தில் எம்.ஜே.வின் வாகி டாக்கி மீண்டும் ஒலித்தது.

"கேர் காண்டியாக் நிலைய அதிகாரி ஷெர்லின் ஹியர், ஷெரிங்க்டன் ட்ரைனி ஆபீசர் 445 எம்.ஜே., ப்ளீஸ் கம் ஆன் லைன்" என்றாள் கேர் காண்டியாக் நிலைய அதிகாரி ஷெர்லின்.

"எம்.ஜே. ஹியர், டெல் மீ" என்றாள் எம்.ஜே.

"நாங்கள் நீங்கள் அனுப்பிய புகைப்படத்தில் இருக்கும் நபரை இங்கே நிறுத்தி வைத்துள்ளோம், உங்களிடம் எங்கே எப்போது ஒப்படைக்க வேண்டும் என கேட்க வேண்டி தான் அழைத்தோம்" என்றாள் ஷெர்லின்.

"குட் ஜாப், இப்போதே நாங்கள் வருகிறோம், இன்னும் முக்கால் மணியில் இருந்து ஒருமணி நேரத்திற்குள் அங்கே இருப்போம்" என்றபடி இணைப்பை துண்டித்துவிட்டு, "மிஸ்டர் கென்னடி, அலெக்ஸை கைது செய்து........மன்னிக்கவும், விசாரணைக்காக பிடித்து வைத்திருக்கின்றனர் கேர் காண்டியாக் நிலையத்தில், நாம் உடனடியாக அங்கே சென்று அலெக்ஸை விசாரணைக்காக நாம் டேக் ஓவர் செய்துகொள்ளலாம்" என்றாள் எம்.ஜே.

"எம்.ஜே. நீ உனது விடுமுறைக்கு செல், நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார் கென்னடி.

"மிஸ்டர் கென்னடி, எனக்கு விடுமுறையை விட உங்களிடம் இருந்து வேலையே கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம் என்றாள் எம்.ஜே.

சிறிய உரையாடலுக்கு பிறகு கேர் காண்டியாக் நிலையம் நோக்கி அவர்களின் வண்டி பறந்தது.

திகில் தொடரும்.

பகுதி 12 முடிந்தது

எழுதியவர் : முபாரக் (23-Feb-18, 8:49 pm)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 248

மேலே