ஆண்-பெண் பெயரில் எழுதுவதை அனுமதிக்கலாமா

உலகம் முழுவதிலும் உள்ள சமுதாயங்களில் தங்களுக்கு மறுக்கப்பட்ட செயல்களைச் செய்வதற்கு பல நூற்றாண்டுகளாக பெண்கள், ஆண்களின் பெயர்களையும் அவர்களின் உடைகளையும் பயன்படுத்த வேண்டியதாய் இருந்தது என்பதை இன்னும் ஒரு புரியாத புதராக நாம் கருத வேண்டியதில்லை. அவ்வாறு செய்வதொன்றுதான், சமூகத்திலுள்ள பல துறைகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழிமுறையாகவும் அமைந்திருந்தது. இது இலக்கியத்திற்கும் பொருந்தும். அத்தகைய துணிவுடன் செயல்பட்டதால்தான் அவர்கள் உண்மையிலேயே நமது சமுதாயத்தை மாற்றியுள்ளனர். இது போன்ற நடத்தைக்காக அவர்களுக்கு பலமுறை மரணங்களே பரிசாக தரப்பட்டன. எனவேதான் இன்று பெண்களின் வரவானது வாழ்க்கையின் அனைத்துத்துறைகளிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் உள்ளது. இன்று பல சமுதாயங்களில் பெண்கள், ஆணாதிக்கத்தினால் திணிக்கப்பட்ட உடைகளை முற்றிலும் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறது. வரலாறோ இத்தகைய பெண்களின் இருப்பையே உண்மையில் மறுக்க முயன்றது. ஆனால், அவர்கள் இருப்போ வரலாற்றை தலைகீழாக்குகிறது.
இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால், பெண்கள் தங்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காகக் கைக்கொண்ட இந்த உத்தியை, இன்று ஆண்கள் பயன்படுத்தி நமது சாதனைகளை கீழ் அறுக்க நினைப்பதுதான். இன்று தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு போக்காக ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயரில் எழுதும் முறையானது, நமது இலக்கிய வெளிகளைக் கைப்பற்றுவதற்கு ஆணாதிக்கம் கையாளும் புதிய உத்தியா என்பது குறித்து தெளிவான அக்கறையுடன் நோக்க வேண்டும். ஆண்கள் இது போன்ற போக்குகளைக் கைக்கொண்டு, நமது சாதனைகளை தங்களின் சாதனைகள் போல் காட்டிய துறைகள் பல உண்டு. கலைத்துறையில் பெண்களால் எழுதப்பட்ட படைப்புகள், தீட்டப்பட்ட ஓவியங்கள் மற்றும் உருவாக்கப்பட்ட இசைக்கோளங்கள் பலவற்றை ஆண்கள் திருடிக்கொண்டு தாங்கள் தாம் அவற்றின் படைப்பாளர்களாக உரிமை கொண்டாடியதுண்டு. அதைப் போலவே தற்காலத்தில் மூலிகை மருந்துகள் தொடர்பான இனக்குழுப் பெண்களது அறிவைத் திருடி, தங்களது மருந்து தயாக்கும் நிறுவனங்களில் பெரும் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கலாம். இது போன்ற உதாரணங்கள் ஏராளம் உள்ளன.
தமிழ் எழுத்தாளர்கள் கையாளும் இந்த போக்கு, இன்று ஆணாதிக்கமுறை ஒரு புதுவழிமுறையைக் கைக்கொண்டு, இதுகாறும் பெண்கள் அரும்பாடுபட்டு பெற்ற அவர்களது பொது வெளியைவிட்டு அவர்களை துரத்துவதற்கான வேலையாய்த் தெரிகிறது. ஆகவே, இது ஒரு சிறிய பிரச்சினை அன்று. பெண்கள் தங்களின் இருப்புக்கான பொதுவெளியை இன்று சமுதாயத்தில் பெற்றிருப்பது, பல போராட்டங்களால் கிடைத்ததாகும். இன்னமும்கூட தங்களுக்கான சொந்த குரலுக்கான தேடலிலும் பெண்கள் எண்ணிக்கையற்ற பலத்தடைகளை எதிர்கொள்கிறார்கள். அது கலையானாலும் இலக்கியமானாலும் அரசியல் அல்லது அறிவியலானாலும் எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரி. நமக்காக ஆண்களின் செயலால் விளைந்த விளைவை நாம் பார்த்துள்ளோம்.
வன்முறை, வறுமை, இனபாகுபாட்டை. இது எல்லா சமுதாயத்திற்கும் பொருந்தும் உண்மை. வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் நிறுவனங்களாகட்டும் அரசாங்கமாகட்டும் இன்னும் பெண்கள் சமளவில் அதிகாரமிக்க பதவிகளில் அமர முடியவில்லை. இத்தனைக்கும் பல்கலைக்கழகங்களில் பெண்கள் ஆண்களைக்காட்டிலும் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தாலும். தங்களுக்கான சொந்த வெளியை பொது சமுதாயத்தில் ஆண்களே உருவாக்கிக் கொண்டு, அங்கு பெண்களை நுழைய விடாமல் வீட்டில் வைத்துப் பூட்டினர். இதற்கு கண்ணுக்குத்தெயாத பண்பாட்டுப் பூட்டும் வளர்ப்புமுறையுமே துணைசெய்தன. ஆயினும் இந்த வெளிகளை பெணகள் கைக்கொண்டு நிரப்ப வரும்போது, அதற்கு அவர்கள் இருமடங்கு அல்லது மூன்று மடங்கு உழைப்பை விலையாகத் தந்து தங்களது தகுதியை நிரூபிக்க வேண்டியுள்ளது. தங்களது குடும்ப சுமையையும் தாங்க வேண்டியுள்ளது.
இதற்காக பெண்கள் சவாலான சூழல்களில் கூட உழைக்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஆண்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருப்பது, பெண்கள் செய்யும் வீட்டுப்பணிகளும் “உழைப்புதான்” என்ற தெளிவை! உண்மையில் பெண் கவிஞர்களையும் இது போன்ற கஷ்டங்கள் பாதிக்கின்றன. எழுதுதல் என்ற செயலோ நேரம் மற்றும் ஏகாந்தத்தை கோரி நிற்கும் ஒன்று. சமுதாயமோ இது போன்ற செயலில் ஈடுபடும் ஆண்களுக்கான நேரம் மற்றும் ஏகாந்தத்தை ஒப்புக்கொள்கிறது. அதுவே பெண்கள் என்றால் மிகவும் விமர்சிக்கப்படவும் அவர்களது வீட்டுக் கடமைகளை அக்கறையோடு சரிவர மேற்கொள்ளாதவர்கள் என்பதாகவும் குற்றம்சாட்டுகிறது. பெண்களை பைத்தியக்காரர்கள் என்றும் சமுதாயம் கருதுகிறது. ஒவ்வொரு பெண் எழுத்தாளர்களும் தங்களுக்கான இடத்தை போராடியே பெற்றுள்ளனர்.
இது போன்ற போக்குகளை எதிர்க்க வேண்டிய காரணம் எதனால் உருவாகிறதெனில் வரலாற்றின் சுமையும் அதில் தங்களை மட்டுமே பதிவு செய்து கொள்ள ஆண்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளும்தான். பெண்களது படைப்புகளால் உருவாக்கப்பட்ட பொருண்மையான வெளியை துடைத்தெறிய ஆண்கள் முயல்வதும் அதில் ஒன்று. சமீப காலங்களில் நாம் பெண் வரலாற்றை மீண்டும் அறிந்து கொள்ளவும் போதுமான திறன்களை பெறுவதற்கும் உரிய தகுதியை அடைவதற்கும் காரணமாய் இருப்பது ‘பெண்ணியமே’ ஆகும். இன்று வரையிலும் கூட நம்மால் அடைய முடியாமல் உள்ள பல விஷயங்களுக்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போராடிய பெண்களின் வரலாறே ‘பெண் வரலாறு’ என்பதை நாம் மீண்டும் அறிந்து கொள்ள வேண்டும். ஆணாதிக்க சமுதாய முறையினால் இது போன்ற பெண்களின் வரலாற்றை அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்புகளும் நினைவூட்டல்களையும் முற்றிலும் துடைத்தெறியவற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்களின் வரலாறுகளும் பிம்பங்களும் மொக்கையாக்கப்பட்டன, மழுங்கடிக்கப்பட்டன. (உதா. சசிதேஷ் பாண்டேயின் ‘குந்தி’யைப் பற்றிய மறுபடைப்பாக்கம்) இன்றும் கூட நம் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாட நூல்களில் பழங்காலத்தில் வாழ்ந்த எந்த ஒரு பெண் கணிதவியல் அறிஞரைப் பற்றியோ, பெண் கவிகளைப் பற்றியோ அல்லது அண்மையில் வாழ்ந்து மறைந்த இந்நிய நாட்டு விடுதலைக்காகப் போராடிய பெண்களைப் பற்றியோ, ஆக இவை போன்ற எதனைப் பற்றியும் எந்த ஒரு குறிப்பையும் நம்மால் காண முடியாது. கலீஷிய ஆணாதிக்க சமுதாயமானது இன்று வரை எங்களுக்குக் கிடைத்திருந்த மிக முக்கியமான பெண் எழுத்தாளராகிய ‘ரோசலியா தெ காஸ்ட்ரோ’ என்ற 19 ம் நூற்றாண்டின் புரட்சிகரமான பெண் எழுத்தாளரை, ஒரு பெண் துறவியாக உருவகித்து பெண்களின் வரலாற்று மெய்மையை அபகத்துக்கொண்டது.
சுமார் 4 நூற்றாண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த கலீஷிய மொழியில் முதன் முதலில் ரோசலியா தான் எழுதத் தொடங்கினார். அதுவரைக்கும் இலக்கியம் ஸ்பானிஷ் மொழியின் மேலாதிக்கத்தால் மூழ்கடிக்கப்பட்ட மௌனத்தில் கலீஷிய மொழி இருந்து வந்தது. அவரொரு வலுவான பெண்ணியத்தின் குரலாகவும் இருந்தார். பெண்கள் அடைந்த கொடுமைகளைப் பற்றி அவர் பேசினார். அக்காலத்தில் பெண் கல்வி குறித்த விவாதம் ஐரோப்பாவில் எழுந்தபோது அவர் பெண்களுக்காக வாதிட்டார். அக்காலத்தில் ஆண்கள் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்று சிந்தித்ததுகூட இல்லை. ஆணாதிக்க சமுதாயத்தால் எழுதப்பட்ட வரலாறோ அவன் தேசியம் சார்ந்த எழுத்துக்களும் மேற்கோள்களும் மட்டும் பாடத்திட்டங்களில் எடுத்தாளத் தொடங்கியது. ஆனால் அவன் பெண்ணியச் சிந்தனைகள் மறக்கடிக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக, அவன் படைப்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்திய பெண்ணியவாதிகளால் திரும்பவும் ஒரு பெண்ணியவாதியாக நமக்குக் கிடைத்துள்ளார்.
ஆண்கள், வரலாற்றின் பொருண்மைகளைத் தீர்மானிப்பவர்களாக இருந்தால் இப்படிப்பட்ட நிலைகள்தான் தோன்றும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஆனால் இதையும் கடந்த ஒன்றாக உள்ளது, இன்று தமிழ் மொழியில் ஆண்கள் மேற்கொள்ளும் “பாலின பெயர் மாற்ற’ உத்தியின் போக்கானது. இவர்கள் உண்மையிலேயே வரலாற்றிலும் கூட பெண் பெயர்களில் தான் இருக்கப் போகிறார்களா? பெண்களின் குரலோடு எவ்விதமான ஒட்டுறவு இல்லாத இவர்களின் எழுத்துக்களை வெறும் பார்வைக்காகத்தான் தங்களுக்குப்பின் விட்டுச் செல்லப்போகிறார்களா? இது போன்ற நடவடிக்கைகள், மீண்டும் பல பயங்கர பின்விளைவுகளை பெண் சமுதாயத்திற்கு உண்டாக்கும். நமக்கான ஓர் இடத்திற்காகவும் பெண் வரலாற்றுக்காகவும் நாம் போராடுகிறோம். அந்த இடத்தை இன்று பல ‘ஒட்டுண்ணிகள்’ கையகப்படுத்த அத்துமீறுவது மிகவும் நம்மை இழிவுப்படுத்துகின்ற செயல்.
ஏதோ ஒரு வகைப்பட்ட புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு, தங்களது குரல்களுக்கான கவனத்தை ஈர்க்கக்கூடிய தன்மையுடன் தமிழில் எழுதும் பெண் கவிஞர்கள் இருக்கின்றனர். ஒருவகையில் 90 களில் எங்கள் கலீஷிய மொழியில் நிகழ்ந்தவற்றுக்கு மிக நெருக்கமாய் இவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இது எந்த அளவிற்கு ஆண்களை அச்சுறுத்தியுள்ளது என்றால், அவர்கள் இன்று அடையாள அழிப்புமுறையான ‘பெண்பெயர்களை’ பூண்டு மிகவும் தந்திரமாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் பெண்களின் வெளியைக் கவர முயன்று வருகிறார்கள். தங்களது தீவிரமான அறிவிப்புகளாலும் கூற்றுகளுக்காகவும் பல பெண்கவிகள் – தமிழிலும் கலீஷியாவிலும் அதிக நெருக்கடிகளுக்கும் தாக்குதல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இலக்காயியுள்ளனர். இன்றோ, இப்பெண் படைப்பாளிகள் ஒரு நல்ல நிலையை எட்டியுள்ளனர். அதே நேரத்தில் ஆண்களும் இத்தகைய சூழ்நிலையை தங்களது ஆதாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவும் முயன்று வருகின்றனர்.
ஆண்கள் பெண்கள் பெயரில் எழுதினால் என்ன தவறென கேட்கும் வாதமே பிழையான ஒன்று. ஒருவன் அரசியல் தொனிப்புரைகளை துடைத்து எறிவதற்கான உத்தியாக, ஒருபோதும் ‘பின்நவீனத்துவம்’ நமக்கு வழங்கியுள்ள அடையாள நெகிழ்விப்பு உத்திகளை தவறாக கையாளப்படக்கூடாதென்று நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆண்கள் தங்கள் அடையாளங்களை அலசி ஆராய்ந்து அவற்றை நெகிழ்சியுடையதாய் ஒருபோதும் மாற்றிக்கொள்ள் மாட்டார்கள். உதாரணத்திற்கு இவர்கள் வீட்டுப்பணிகளையோ அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்டதாக கருதிக்கொள்ளும் சமுதாய பாத்திரத்தின் பணிகளைப் பற்றிய அலசல்களை இவர்கள் மேற்கொண்டு அவற்றின் மனோவியலை தங்கள் ஆண்பெயலேயே முயன்று பார்க்கட்டும். எழுதிப்பார்க்கட்டும். அவைகள் இன்னும் சுவாரஸ்யமான எழுத்துக்களாக இருக்கும்.
இது போன்ற ஆண் எழுத்தாளர்கள் முதலில் “ஸ்பீவகின் – விளிம்புநிலை மக்கள் பேசக் கூடுமோ? (Can the Subaltern Speak-Spivak) என்ற புத்தகத்தை கட்டாயமாக படிக்குமாறு கோருகிறேன். பின்நவீனத்துவத்தின் கோட்பாட்டு வல்லுநர்கள் தரும் எச்சக்கையான, “ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களில் பிறர் பேசுவது ஒரு அழிப்பாக்க செய்கையே” என்பதை இத்தகையோர் புரிந்து கொள்ள இந்நூல் துணைபுரியும். ஒடுக்கப்பட்டோரின் பெயர்களை மற்றவர்கள் சுவீகரித்துக் கொண்டால் அவர்கள் எவ்விதம் பேசக்கூடும். இது ஒரு நிரூபிக்கப்பட்ட கசப்பான சர்ச்சைகளை மேலைநாட்டில் உண்டாக்கியதை நாம் அறிவோம். வெள்ளையர்கள் கருப்பர்களின் பெயர்களையும் கதைகளையும் மரபுகளையும் குறிப்பாக அமெக்காவிலும் கனடாவிலும் எடுத்து கையாண்டதை, அமெக்க மண்ணின் மைந்தர்களின் இயக்கங்களும், கருப்பர்களும் லத்தீன் சிறுபான்மையோரும் வெள்ளையர்கள் தங்கள் குரலில் பேசியதையும் எழுதியதையும் தடுத்து நிறுத்தி, அவற்றுக்கு முடிவு கட்டினர்.
எனவே தமிழில் உள்ள எழுத்தாளர்களும் பிறரும் இதில் உள்ள படிப்பினைகளை உணர்ந்து உடனடியாக இதுபோல செய்யும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். பெண்களின் வெளியை அபகரிக்க எண்ணும் முயற்சிக்கு விடைகொடுக்க வேண்டும். ஒரு வெள்ளை நிறவெறியன் தன்னை கருப்பனாக மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு ஆண், பெண்ணாக மாற வசதியுள்ளது. பெண்ணின் பெயரில் எழுத விரும்பினால் பாலின மாற்றம் செய்துகொண்டு பெண் பெயரில் எழுதலாம். இல்லையேல் தனது பெயரிலேயே அவர்கள் பேசட்டும். இன்று ஆண் தங்களது சமுதாய பங்களிப்பை குறித்து சிந்திக்க வேண்டிய ஒரு தேவையில் இருப்பதையே அவர்களின் இது போன்ற நடத்தைகள் காட்டுகின்றன. அவற்றை அவர்கள் பேசட்டும்.பெண்களுக்காக நாங்கள் பேசிக்கொள்கிறோம்.
பேரா. பத்மாவதி விவேகானந்தன்
ஆண்கள் பெண்களின் பெயரை வைத்துக் கொண்டு எழுதினால் என்ன தவறு? என்று ஒரு சிலர் கேட்கக்கூடும். “பெருமையும் உரனும் ஆடவர்க்கு” என பேசும் ஆண்கள் இப்படி பெண்களின் பெயரில் எழுதுவது எதன் அடிப்படையில் என்று பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சிலர் தங்களின் தாய், மனைவி, குழந்தைகளின் பெயர்களைப் புனை பெயராகக் கொண்டு எழுதி வருகிறார்கள். சிலர் தங்களுக்கு விருப்பமான பெண்பெயரில் எழுதுகிறார்கள். இப்படி எழுத வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. எல்லா விஷயங்களிலும் பெண்கள் தங்களுக்கு பின் நிற்க வேண்டும் என்று விரும்பும் ஆண்கள், அவர்கள் எழுதும் சொந்த எழுத்தை ஏன் பெண்கள் பெயரில் எழுத வேண்டும். இதற்கு ஏதோ காரணம் இருந்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.
மனித சமூகத்தில் பெரும்பான்மையான ஆண்கள், பெண்களை வெறும் உடமைப் பொருளாகவும் போகப் பொருளாகவுமே காண்கிறார்கள். பெயர்கள் மட்டுமே கூட ஆண்களின் ஆர்வத்தைத் தூண்டிவிடக்கூடும் என்றும் கருதுகிறார்கள். இதழ்களின் அட்டைப்படங்களிலும், விளம்பரங்களிலும், திரைப்படங்களிலும் கவர்ச்சிப் பொருளாகப் பயன்படுத்தப்படும் பெண், ஆண்கள் எழுதும் எழுத்திலும் இதே விதமாகத்தான் பயன்படுத்தப்படுகிறாள் என்று தோன்றுகிறது. பெண்களின் பெயர்களில் ஒளிந்துகொண்டு ஆபாசமான, கீழ்தரமான வருணனைகளையும் நிகழ்ச்சிகளையும் எழுத முடிகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண்களை வெறும் நுகர்வுப் பண்டமாகக் கருதி எழுதுபவர்கள் மட்டுமே இப்படி பெரும்பாலும் பெண்களின் பெயர்களை வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள். ஓரிருவர் விலக்காக இருக்கலாம். ஆனாலும் அவர்களும் கூட எந்தவித குழப்பத்தையும் தராமல் தங்களின் சொந்த பெயரிலோ ஆணின் புனை பெயரிலோ எழுதலாம்தான்.
பெண்கள் பெயர்கள்கூட வாசிப்பவன் மனதில் பெரும் கிறுகிறுப்பை ஏற்படுத்திவிடும் என்று நினைத்து எழுதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அந்தந்த பாலுக்குரிய பெயரில் எழுதுவது ஆராய்ச்சியாளர்களுக்கும் கூட உதவியாக இருக்கும். பிற்காலத்தில் பெண் படைப்புகளில் ஆய்வு செய்பவர்கள் ஒரு சில ஆண் படைப்பாளிகளை பெண் படைப்பாளிகளாக குறிப்பிட்டுவிடும் அபாயமும் இருக்கிறது. இப்படி சில தொகுப்புகளில் குறிப்பிட்டும் இருக்கிறார்கள். எனவே அந்தந்த பாலினத்திற்குய பெயர்களில் எழுதுவதே சரியானது. நாகரீகமானது. ஆய்வுலகத்திற்கும் உதவக்கூடியது.
கவிஞர். கலாப்ரியா
பெண் பெயர், ஆண் பெயர் என்ற வகைமை மொழியின் நீண்ட பயணத்தில் ஏற்பட்ட ஒன்று. புனைவின் பரிணாமத்தில் பெயற் சொல்லின் தோற்றம் மற்றும் புழக்கம் பற்றி மொழியியல் வல்லுநர்கள் சொல்ல முடிவது போல் எனக்கு முடியுமா, தெரியவில்லை. “பாம்புக்கு அது / பெயராகாதிருந்தால் / அதன் அழகு இன்னும் பயமின்றி / வரையப்பட்டிருக்கும்” என்று கவிதைதான் எனக்கு முடியும். பெயர்ச்சொல், உரிச்சொல் இன்ன பிற சொற்களின் கட்டமைப்பில், கட்டமைப்பின் சுயத்தன்மை – ஆதித்தன்மை அரசியல் இணைந்து, மீறப்பட்டு இதுவரை ஆணாதிக்கமே இருக்கிறது என்பதில் எனக்கு மாறுபாடு இல்லை. அந்த (கட்டமைப்பின்) அரசியல் உடைபடுவதில் எனக்கு உடன்பாடுதான் உண்டு.
ஆண்கள், பெண்கள் பெயரில் எழுதக்கூடாது என்ற கட்டுப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. இருதரப்புக்கும் பொதுவான நேர்மறையான (positive) யாரும் யாருக்கும் கருணையின் பாற்பட்டு, கசனத்தின் பாற்பட்டுத் தராத, இரு கட்சியும் அவரவர் உரிமையுடன் எடுத்துக் கொள்ளும் புது நியமங்களை உருவாக்கிக் கொள்வதே சரியானதும் நியாயமானதுமாகும் என்று நினைக்கிறேன்.
கவிஞர். அ. வெண்ணிலா
தமிழ்ப் பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணமாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நூலகங்களில் என் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்த காலமது. மங்கை, கலைமகள் போன்ற இதழ்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் புரட்டினேன். கண்ணில்பட்ட பெண்களின் பெயர்களை எல்லாம் குறித்துக்கொண்டு, அவர்களுடைய சிறுகதைத் தொகுப்புகள், வாழ்க்கைக் குறிப்புகள் என தகவல்களை ஒழுங்குபடுத்தினேன். 1927 முதல் 2000 வரையிலான காலக்கட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களை என்னால் கண்டெடுக்க முடிந்தது.
பட்டியலுடன் ஒரு நாள் மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை சந்தித்தேன். பட்டியலை படிக்கத் துவங்கியவுடன் விறுவிறுவென்று பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை அடித்துவிட்டார். உடன் “இவர் தன் மனைவியின் பெயரில் எழுதியவர், இவர் தன் தாயின் பெயரில் எழுதியவர்” என்று பெயர் பின்னிணிகளையும் ஒப்பித்தார். அதிர்ந்து போயிருந்தேன் நான். காரணம் அவர்களின் பலரின் கதைகள் சிறந்த சிறுகதைகளாக இருந்ததோடு, பெண் பார்வையையும் கொண்டிருந்ததுதான். வல்லிக்கண்ணன் போன்ற அக்காலத்தின் சமகால எழுத்தாளன் வழிகாட்டல் இல்லையென்றால், என் தொகுப்பில் அடிப்படை பிழை நேர்ந்திருக்கும். பெயர் தேர்வும், புனைபெயரும் படைப்பாளியின் சுதந்திரமே. ஆனால் இன்றைக்கு பொதுமையான இலக்கிய குரலில் இருந்து தனித்துவ குரல்களையும் ஒடுக்கப்பட்ட, கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பால்வேறுபாட்டை/இன வேறுபாட்டை அடையாளப்படுத்தும் குரல்களும் ஒலிக்கத் துவங்கியுள்ள காலத்தில் எழுதுபவன் சுயம் பற்றிய அடையாளமும் தேவைப்படுகிறது. படைப்பின் குரல் உண்டாக்கும் புரிதலுடன் படைப்பின் குரலை உண்டாக்குபவன் இருப்பும் படைப்பின் வலிமையை முன்னிறுத்துகிறது.
மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவுகளின் காலம் போய், இன்று கீழிருந்து, வரலாறு எழுதுதல் செழுமைப்பட்டிருக்கிறது. கீழிருந்து எழுதுகின்ற வரலாற்றில் பெண்களின் குரலும், தலித்துகளின் குரலும் திருநங்கையர்களின் குரலும், விளிம்புநிலை மக்களின் குரலும் தனித்த அடையாளங்களைக் கொண்டவை. வரலாற்றை மீள்பார்வை செய்பவை. வரலாற்றுக்கு யதார்த்த நிலையை தருபவை. இதில் பால் வேறுபட்டு புனை பெயரைச் சூடுதல் வரலாற்றுத் திரிபாக்கும் சூழல் எழும். ஆவணப்படுத்துதலிலும் சிக்கல்கள் தொடரும். ஆண் வேறொரு ஆண் பெயரிலோ, பெண் வேறொரு பெண் பெயரிலோ எழுதுதலை ஏற்க முடியுமே தவிர, ஆண், பெண் பெயரில் எழுதுவது வரலாற்றைத் திரிக்கும் பணியாகும்.
கவிஞர். சுனந்தா பிரகாஷகடவெ
யாருடைய துணையுமில்லாமல் சுதந்திரமாக பெண்களே தன்னைப்பற்றி எழுதத் தொடங்கி ஆழமாக வேரூன்றிவிட்ட இந்தக் காலத்தில் பெண்ணின் பெயரைப் புனைபெயராகக் கொண்டு ஓர் ஆண் எழுதுவதற்கு எவ்விதமான அவசியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வெகு காலத்துக்கு முன்னர தன் தனிப்பட்ட அனுபவங்களை முன்னிலைப்படுத்தி பெண் எழுதத் தயங்கிய தொடக்கக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு தேவை இருந்திருக்குமோ என்னமோ. இப்போது இல்லை என்பதே என் எண்ணம்.
டாக்டர் விஜயா சுப்பராஜ், விமர்சகர், கவிஞர்
பெண்களின் பெயர்களைப் புனைபெயராகக் கொண்டு இன்னொரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எழுதும் சம்பவங்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு கேளிக்கை அம்சம் அல்லது விளையாட்டு அம்சம் மட்டுமே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. கன்னடத்தில் தேஜஸ்வி, லங்கேஷ், நாடிக் ஆகிய படைப்பாளிகள் அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட சில முயற்சிகளில் இறங்கி எழுதியதுண்டு. இன்று, தேஜஸ்வி, லங்கேஷ் இருவருமே நம்மிடையே இல்லை. நாடிக் இருக்கிறார். ஆனால் அவரைக்கேட்டால் “லீலாராவ்” என்கிற பெயரில் தானே அக்காலத்தில் எழுதியதாக ஏற்றுக்கொள்வாரோ மாட்டாரோ தெயவில்லை. ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகளுக்குப் பின்னால் ஆழமான அல்லது உயர்வான எண்ணம் எதுவும் இல்லை என்பதே என் கருத்து.
கவிஞர். எஸ்.வி. பிரபாவதி
நான் திரௌபதையைப் பற்றிய ஆய்வு நூல்களை எழுதியபோது சில நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலும் பெயரை மாற்றிக்கொண்டு எழுத எனக்கு விருப்பமில்லை. ஓர் ஆண் ஒரு பெண்ணின் பெயரை வைத்துக்கொண்டு எழுதுவது மட்டுமல்ல, புனை பெயரை வைத்துக்கொண்டு எழுதுவதுகூட எனக்கு உடன்பாடான விஷயமில்லை.
டாக்டர். எம். ஆர். கமலா, கவிஞர்
பெண்ணின் பெயரில் ஆண் எழுதும் விஷயம் எனக்குள் ஒருவித ஆர்வத்தை எழுப்புகிறது. சில எழுத்தாளர்களுக்கு தொழில்சார்ந்த நெருக்கடிகளால் இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். அப்படிப்பட்ட தனிப்பட்ட காரணங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. லங்கேஷ் எழுதிய நீலு கவிதைகள் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளன. ஒரு ஆண் ஒரு பெண்ணாக யோசிக்கத் தொடங்குகிறபோது ஒரு புதிய பார்வையை முன்வைக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட அனுபவ உலகத்துக்குள் நுழைந்து பார்க்க விரும்பும் இப்படிப்பட்ட முயற்சிகளை ஒட்டி எனக்குப் பாராட்டுணர்வே எழுகிறது.
கதைசொல்லி முரியல் ப்ளாக் (Muriel Bloch)
முரியல் ப்ளாக்: கதைசொல்லி மற்றும் சிறுவர்களுக்கான நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடந்த கதை சொல்லிகள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர் – இந்தியா வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இங்குள்ள புதுவை அலையன்ஸ் பிரான்சேஸில் சிறுவர்களுக்கு கதைகள் சொன்னார். தனி நடிப்புப்பாணியில் இவர் கதையை நிகழ்த்தினார்.)
தற்போது நான் இந்தியா முழுதும் பயணம் செய்துவிட்டு வருகிறேன். நீங்கள் சொல்வது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இங்கு ஆண்கள் தங்களை உயர்வானவன் என்று வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவதைத்தான் நான் பார்க்கிறேன். பிரான்சில் ஒரு ஆண் பெண் பெயரில் எழுதுவதாக நினைக்கிறேன். அவரும் முழுமையான பிரெஞ்சுக்காரர் இல்லை. அவர் ஒரு அயல்நாட்டுக்காரர். ஆனால் பிரான்சில் இதுபோல் ஒரு பெருங்கூட்டம் பெண் பெயரில் எழுதுவது ஒருபோதும் நடக்காது. இது பற்றி நான் முழுமையாக அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
எழுத்தாளர் போல் கான்ஸ்டான்ட் (Paule Constant)
போல் கான்ஸ்டான்ட்: பிரெஞ்ச் நாவலாசிரியர். இவரின் நாவல்கள் 27 மொழிகளில் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மலையாளத்தில் இவர் நாவல் வெளிவர இருக்கிறது. புதுவை அலையான்ஸ் பிரான்சேஸில் எழுத்தாளர் சந்திப்பில் உரை நிகழ்த்தினார்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் ஆரம்பக் காலக்கட்டத்தில் பிரான்சில் ஒரு பெண் ஆண் பெரியல் எழுதினார். அதற்கான தேவை அப்போது இருந்தது என்று நினைக்கிறேன். அதன் பிறகு யாரும் இப்படி இல்லை. 60 களில் பெனுவா க்ரூல்ட் போன்றவர்களால் பெண்ணியம், பெண் எழுத்து, பெண் அடையாளம் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு எழுச்சி இருந்தது. இப்போது பாலின வேறுபாட்டை கடந்து பிரெஞ்ச் சமூகம் சென்று கொண்டிருக்கிறது. தற்போதுள்ள இளம் பெண்கள் தங்களை பெண்ணியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. அதற்கான தேவையும் இப்பொழுது அங்கே இல்லை என்று கருதுகிறார்கள். தற்போது பிரெஞ்ச் பெண்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்வதாக உணர்கிறார்கள். பிரெஞ்ச் சமூகமும் அரசும் பெண்களுக்காக தங்களை மாற்றி அமைத்துக்கொண்டன. எழுத்தில் பால் அடையாளம் இருக்கக்கூடாது என்பது என் கருத்து. ஆனால் பிரெஞ்ச் ஆண்கள் இப்படி பெயரை மாற்றிக்கொண்டு எழுத அவசியமில்லை. ஆனால் இந்தியாவில் பாலின பாகுபாடு கடைபிடிக்கப்படுவது உண்மை. இது ஒரு விளையாட்டுப்போல் தோன்றுகிறது. இதன் சாதக பாதகங்களை முறையாக ஆராய வேண்டும்.
கவிஞர் அனிதா தம்பி
கேரளா
தமிழில் 30க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களின் பெயரில் எழுதி வருவதாக அறிகிறேன். இது கவனத்திற்குரியது. மலையாளத்திலும் கூட சில ஆண் எழுத்தாளர்கள் பெண் பெயரில் எழுதுகிறார்கள். ஆனால் இவர்கள் ஆண் என்பது ஊடகங்களுக்கும் வாசகர்களுக்கும் வெளிப்படையாகத் தெந்திருக்கிறது. தமிழில் இந்த பிரச்சினை எழுப்படுவதற்குக் காரணம் பல ஆண்கள் ஆபாசமாக பெண்கள் பெயரில் எழுதி வருவதுதான் என்று நான் நினைக்கிறேன். இதன் மூலம் பெண்களின் எழுத்தின் மீது தவறான தாக்குதல்கள் எழுகின்றன. அடையாளக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. மேலும் பெண் எழுத்துகளை ஆவணப்படுத்தும் போது சிக்கல் ஏற்படுத்துகிறது.
பிற்போக்குத்தனம் நிறைந்த தமிழிலக்கியச் சூழலில் பெண் எழுத்தாளர்கள் தமக்கென இடத்தையும் அடையாளத்தையும் பெற போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இது சிக்கலை ஏற்படுத்தும்.
பெண்கள் பெயரில் ஆபாச எழுத்து எழுதுவது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. ஆணாதிக்க சமூகத்தில் ஆபாசம் என்பது பெண்களின் உருவத்துடன் பிணைக்கப்பட்டுவிட்டது. ஆண்கள் பயன்படுத்தும் ஆபாசச் சொற்கள், வசைச் சொற்கள் எல்லாம் தாய் மற்றும் சகோதரிகள் பற்றியதாகவே உள்ளது. எழுத்துத் துறையில் ஆண் ஆதிக்கத்தை உடைத்து சுதந்திரமாக இயங்கும் முயற்சி தமிழில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற இடையூறுகள் வருவது இயல்பு. இதற்கான அரசியலை பெண் எழுத்தாளர்கள் புலப்படுத்த வேண்டும். இதுபற்றி அஞ்சத் தேவையில்லை.
பெண் பெயரைப் பயன்படுத்தி பெண்ணுக்கான எழுத்து வெளியை ஆண்கள் எடுத்துக்கொள்வது என்பது உடனடியாக செயல்பட வேண்டிய பிரச்சனை. கலாச்சார, அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக அறிவித்துக்கொள்ளும் மலையாளச் சூழலில் இதை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் பெண் எழுத்துகளைப் பற்றிய வதந்திகளையும் இழிவான செய்திகளையும் பரப்புவதன் மூலம், பெண் எழுத்துக்களை ஒதுக்கி வைப்பதன் மூலமும் பெண் எழுத்துக்களுக்கு எதிரான வேலையைச் சிலர் மறைமுகமாகவும் தந்திரமாகவும் செய்து வருகிறார்கள். மேலும் அறிந்து கண்டிப்பது கடினமாக உள்ளது. தமிழில் பெண் பெயரைப் பயன்படுத்தி ஆண்கள் எழுதும் போது உடனடியாக அது வெளித்தெருயும்படி அறிவிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆண் பெயரில் பெண்கள் யாராவது தமிழில் எழுதகிறார்களா? தற்போது உள்ள சூழலில் அப்படி எழுவது வசதியாகக் கூட இருக்கலாம், அதற்கான நியாமும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இருக்கவே செய்யும்.

எழுதியவர் : மரியா ரெய்மோன்தெஸ் (20-May-18, 10:14 pm)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 228

சிறந்த கட்டுரைகள்

மேலே