173 பரத்தையர் அழகுண்டார் பதங்கம் போல் மாள்வர் – பரத்தமை 17

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

விட்டமின் னோடாங் கெய்தும்
..வெடியெனத் தீமை செய்யுங்
கட்டழ கினைய வாவிக்
..காமசா கரத்தி னாழ்வோர்
கிட்டருஞ் சுடரை மேவிக்
..கேடுறும் பதங்கம் போலும்
தொட்டகொப் பத்து வீழ்மா
..வென்னவுந் துயர்சார் வாரால். 17

– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”வெளிப்படும் மின்னலோடு உடன் வரும் இடியும் போன்று தீமை செய்யும் கட்டான அழகு உடைய பெண்களின் மேல் ஆசைப்பட்டுக் காமக்கடலினுள் ஆழ்பவர்கள், நெருங்குவதற்கு அரிய விளக் கொளியை விரும்பி அதனில் வீழ்ந்து மாளும் விட்டிலைப் போலவும், தோண்டப்பட்ட யானை பிடிக்கும் பெருங்குழியில் விழுந்த யானையைப் போலவும் துன்புறுவார்கள்” என்று எச்சரிக்கிறார் இப்பாடலாசிரியர்.

வெடி - இடி. சாகரம் - கடல். பதங்கம் - விட்டில்,
கொப்பம் - யானை பிடிக்கும் பெருங்குழி.
தொட்ட - தோண்டிய,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-18, 9:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே