172 பரத்தைமைச் செயல்கள் பலவாம் எனப்படும் – பரத்தமை 16
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
விதவையைக் கன்னி தன்னை
..வேசையைப் பிறனில் லாளை
இதமொடு சேர்தல் சேர
..இச்சித்தல் ஆண்பு ணர்ச்சி
மதனநூ லாதி கேட்டல்
..வாசித்தல் தகாத செய்கை
விதவிதந் தானே செய்தல்
..விபசார வினைக ளாமே. 16
– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
“கணவனை இழந்த பெண், மணமாகாத கன்னிப் பெண், பரத்தை, அயலானின் மனைவி ஆகியோரை அன்புடன் சேரவும், சேர விரும்புவதும், ஆண் சேர்க்கையும் (Homosexuality, Sodomy), காமநூலைக் கேட்பதும், வாசிப்பதும் ஆகிய செய்யத் தகாத செயல்களைப் பலவகையாகச் செய்வது பரத்தைமைச் செயல்களாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
விதவை - கைம்பெண், கணவனை இழந்த பெண். வேசை - பரத்தை. மதன நூல் - காமநூல்.
விபச்சாரம் - பரத்தைமை. வினைகள் - செயல்கள்.