“ஹெர்லக் ஹோம்ஸ்” ஒரு கலந்தாய்வு

“ஹெர்லக் ஹோம்ஸ்” ஒரு கலந்தாய்வு

‘அச்சக உலகமாகட்டும்’, ‘கணிணி ஊடக உலகமாட்டும்’ அல்லது வேறு எந்த ‘ஊடகபிரிவு’ சாதனமாகட்டும் அதில் வெளியாகும் கதை, கட்டுரை, மற்றும் பல பல இலக்கியங்களில் பெரும்பான்மை மக்களை கவர்ந்திழுப்பது காதல், மர்மம், திகில், துப்பறிதல் போன்ற களங்கள்தான்.
அதனால், இதே இலக்கிய உலகத்துக்குள் மற்ற களங்களின் மனித வாழ்க்கையில் உணர்வுகள், செயல்பாடுகள், இதை விட அதிகமாக இருந்தாலும், வாசிக்கும் மக்கள் என்னவோ அதை பற்றி அதிகமாக அலட்டி கொள்வதில்லையோ என்னவோ?
அதையும் மீறி பாசம், நேசம், நட்பு, தியாகம், உழைப்பு, போராட்டம், தீவிரம், இன்னும் பல கதை களங்கள் வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இல்லையென்று மறுப்பதற்கில்லை. இன்னொரு வேடிக்கை கூட உண்டு “காமத்தை” அதிகமாக வெளிப்படுத்தும் ‘கதை களங்களை’ கூட மக்கள் சலிப்புற்று தாண்டி சென்றாலும் இந்த “காதல்” களத்தை கை விட மாட்டார்கள். அதிலும் காதலுக்காக தியாகம், காதலுக்காக…. இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
அடுத்து சொன்ன மர்மம், திகில், சஸ்பென்ஸ், துப்பறிவது, இதை போன்ற களங்கள் அதிகமாக வெளி வந்து கொண்டிருக்கிறது, காதலுக்கு அடுத்து இதைத்தான் மக்கள் ரசனையுடனே அணுகுகிறார்கள்.
இலக்கியம் நம் தமிழ்நாட்டை பொறுத்தவரை ‘காதலையும், காமத்தையும்’ கூட சேர்த்து கொள்கிறதே தவிர மர்மம், திகில், துப்பறிவது போன்ற படைப்புக்களை சற்று தள்ளித்தான் வைத்திருக்கிறதோ? என்னும் சந்தேகம் வரத்தான் செய்கிறது.
அதையும் மீறி இலக்கியத்திற்குள் இப்படிப்பட்ட கதைகளும் மற்ற படைப்புக்களும் வெளி வந்து சாதித்தும் காட்டியிருக்கிறது. அந்த காலத்தில் வெளிவந்த திகம்பரசாமியார் போன்றோர் முதல் இன்று வரை கோலோச்சி கொண்டிருக்கும் ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர் இன்னும் பலர் சாதித்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் காலத்தில் கூட தமிழ்வாணனின் “சங்கர்லால்” மற்றும் காமிக்ஸ் படைப்புக்கள் சிறு வயதில் இருந்து மகிழ்வித்து கொண்டுதான் இருந்தது.
ஏன் “சுஜாதா” இந்த பெயர் அச்சக உலகிலும், “ஆன் லைன் உலகிலும் ஏராளமானவர்களை கட்டி போடவில்லையா? அவரின் ‘சயின்ஸ் பிக்க்ஷனாகட்டும்’, சங்க இலக்கியமாகட்டும், அடேயப்பா… அது சாதிக்காத விசயமா? ஆனால் ஒன்று அவரால் இந்த ‘காதல்’ சமாச்சாரத்தை மட்டும் “அறிவியல்” பூர்வமாகத்தான் அணுகினார் என்பதை அவரது ஒரு சில பேட்டிகளில் கண்டிருக்கிறோம்.
இத்தனை பீடிகையுடன் இந்த கட்டுரை உங்களுடன் பேசுகிறது என்றால் காரணம் இருக்கிறது நேற்று “ஹெர்லாக்ஹோம்ஸ்” துப்பறிகிறார் என்னும் நூலகத்தில் இருந்து சிறு கதை தொகுப்பு, எடுத்து வந்து வாசித்தேன்.
ஆசிரியர். மு.அ.ஆடலழகன், பதிப்பு: 2002, ஓவியா பதிப்பகம், சென்னை-14.
அதில் ஒரு கதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
கிறிஸ்துமசுக்கு மறு நாள்..! ஹெர்லாக் ஹோம்ஸ் வீட்டிற்கு சென்றேன்.
ஹோம்ஸ் ஏதோ சோதனை செய்து கொண்டிருக்கும் நிலையில் உட்கார்ந்திருந்தார். கையில் பழைய தொப்பி ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
நீங்கள் ஏதோ வேலையில் இருப்பதாக தெரிகிறது இது நான்
ஒன்றுமில்லை, இந்த தொப்பியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். இது “பீட்டர்சன்” என்னும் காவல் அதிகாரி நண்பருக்கு வெற்றி பொருளாக கிடைத்திருக்கிறது.கூடவே ஒரு “கொழுத்த வாத்தும்” அவருக்கு கிடைத்திருக்கிறது. அதன் காலில் “அன்பான ஹெ. பேக்கருக்கு” என்று எழுதி வைத்து கட்டிப்பட்டிருந்தது. ‘வாத்து’ இந்நேரம் பீட்டர்சன் வீட்டு அடுப்பில் வறுபட்டுகொண்டிருக்கும்.
இந்த பழைய தொப்பியும் வாத்தும் அவருக்கு எப்படி கிடைத்தது?
கிறிஸ்துமஸ் விடிகாலையில் ஒருவர் நீண்ட கழுத்தை உடைய “வாத்தை” தோளில் தொங்க வைத்தபடி, தலையில் இந்த தொப்பியுடன் தள்ளாடி நடந்து கொண்டிருந்திருக்கிறார். திடீரென இரண்டு மூன்று முரடர்கள் அவரை தாக்கி “வாத்தை” பறிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அவரும் கையில் இருந்த தடியால் அவர்களை தாக்கி உள்ளார். அதில் அடுத்த வீட்டு கண்ணாடி ஜன்னல் உடைபட்டு “சிலீர்” என உடையும் சத்தம் பீட்டர்சன் காவல்துறையை சேர்ந்தவராதாலால், உடனே அவரை முரடர்களிடமிருந்து காப்பற்ற சென்றிருக்கிறார். முரடர்கள் அதற்குள் ஓடிவிட்டனர், அடுத்த வீட்டு கண்ணாடி உடைந்து விட்ட பயத்தில் முரடர்களால் தாக்கப்பட்ட அந்த மனிதரும் இந்த தொப்பியையும், வாத்தையும் விட்டு விட்டு ஓடிவிட்டார். பீட்டர்சன் அதை என்னிடம் கொடுத்து விட்டு “கிடைத்த வாத்தை” வறுக்க அவர் வீட்டுக்கு சென்று விட்டார்.
ஓடியவர் யாரென தெரிந்ததா?
இல்லை, அவர் விளம்பரபடுத்த இதுவரை முயற்சிக்கவில்லை என்று தெரிகிறது.
அவரை பற்றி எப்படி அறிந்து கொள்வது? இது நான்.
இந்த தொப்பியிய வைத்துத்தான். என்ன சொல்கிறீர்கள்?
இந்தாருங்கள் தொப்பி, இதில் அவரை பற்றிய ஏதாவது தெரிகிறதா பாருங்கள்?
நான் வாங்கி உற்று பார்த்தேன், அதன் ஒரு பக்கத்தில் பெயரின் இனிஷியல் ‘ஹெ.பெ’ மட்டும் இருக்க, அதன் இழுப்பு கயிறும் இல்லாமல், தூசு படிந்து, பல இடங்களில் புள்ளிகளை மறைக்க மை தடவப்பட்டு,தூசு படிந்து கிடந்தது. அதை கையில் வைத்து பார்த்து விட்டு எனக்கு ஒன்றும் புரிபடவில்லை என்று ஹோம்சிடமே கொடுத்தேன்.
ஹோம்ஸ் புன்சிரிப்புடன் அதை வாங்கி உங்களுக்கு சிலது புரியலாம், அதை சொல்ல தயக்கம்.நான் இந்த தொப்பியை அணிந்தவன் எப்படி இருந்திருக்க வேண்டும்” என்று யூகிக்கிறேன்.
1. இதை அணிந்தவர் அறிவுடையவராக இருந்திருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் நல்ல நிலைமையில் இருந்திருக்கிறார், ஆனால் இப்பொழுது வறுமையில் இருக்கிறார்.
2. அவருக்கு முன்ன்றிவு உண்டு, ஆனால் முன்பிருந்ததை போல இப்பொழுது இல்லை.
3. பொருளாதார வீழ்ச்சியால் மனமுடைந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். அவரது மனைவி அதனால் அவரை நேசிப்பதை குறைத்து கொண்டு விட்டார்.
4. அடுத்து அவர் எங்கும் அதிகமாக வெளியே போகாதவராக இருக்க வேண்டும்.
5. நடுத்தர வயதினர், நரைத்த முடியினை ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் வெட்டி கொண்டுள்ளார்.
6. முடிக்கு ‘எலுமிச்சை’ பசை தடவுகிறார்.. நிச்சயமாக அவர் வீட்டில் கேஸ் விளக்கு கிடையாது.
நான் நீங்கள் நிச்சயமாக கேலி செய்கிறீர்கள் ஹோம்ஸ்.
இல்லை காரணமாகத்தான் யூகிக்கிறேன், பாருங்கள், அந்த தொப்பியை தலையில் அழுத்தி அணிந்தார்.அது நெற்றியை அழுத்தி மூக்கின் மேல் அமர்ந்தது. இவ்வளவு கொள்முதல் கொண்ட தொப்பி அணிபவன் கொஞ்சம் மூளை அதிகமாக கொண்டிருக்க வேண்டும்.
அவருடைய பொருளாதாரம் பற்றி….?
இந்த தொப்பி மூன்றாண்டு பழமை கொண்டது, தட்டையான விளிம்பு அப்பொழுதுதான் சுருங்கும், இது உயர்தரமானது, எடுப்பாக பட்டு துணிகளை பொதித்துள்ளது, இவ்வளவு உயர்ந்த தரமான தொப்பியை வாங்கியவர், இத்தனை நாள் கழிந்து இது நைந்து போனபின்னாலும் வேறு ஒரு தொப்பி வாங்காமல் உள்ளார் என்றால் அவர் பொருளாதாரம் “நைந்த” நிலையில் இருக்க வேண்டும்.
முன்னறிவு..?
இப்படித்தான்.. தொப்பியை கெட்டியாக பிடித்து கொள்ள சிறிய தகடு, தொய்வு கொண்ட கயற்று பட்டை, இவைகள் எப்பொழுதும் தொப்பியுடன் இருப்பதில்லை, இவற்றை வைத்து தைத்து தரும்படி கேட்டு அதிய மாட்டி கொண்டிருப்பதால் கண்டிப்பாய் முன்னறிவு உடையவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர் தொப்பியில் ஏற்பாடு செய்திருந்த அனைத்தும் இன்று நைந்து போன நிலையில் வேறு ஏற்பாடுகள் செய்யாத நிலைமையில் இருப்பதால் அவர் ஏழ்மை நிலையில் இருக்கிறார் என்பது தெரிகிறது.
நடுத்தர வயது..? நரைத்த தலைமுடி, எலுமிச்சை பசை..?
தொப்பியின் உள்பாகத்தில் அவரது துண்டித்த நரை முடிகள், அவர் சமீபத்தில் முடி வெட்டியிருக்க வேண்டும். அதனுள் எலுமிச்சை பசையின் மணம்.
அவர் வெளியில் எங்கும் செல்வதில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?
இதில் படிந்துள்ள ‘தூசி’ வெளிப்புறத்தில் காணப்படும் தூசு அல்ல, வீட்டிலே படியும் ‘கபில நிற தூசி’, பெரும்பாலான நேரங்களில் வீட்டிலேயே தொங்க விடப்பட்டிருக்கிறது. அதை அணிபவர் விரைவில் வியர்வைக்குள் ளாகிறார். அப்படியானால் அவர் பயிற்சி செய்வதில்லிய என்று தெரிகிறது.
அவர் மனைவி ‘நேசிப்பதை’ நிறுத்திகொண்டாள் என்று சொன்னீர்கள்?
வாரக்கணக்காக இது “பிரஷ்” செய்யப்படவில்லை, இந்த தொப்பியை அணிந்து அவரது மனைவி அவரை வெளியே அனுமதிக்கிறார் என்றால்…..!
அவர் பிரம்மசாரியாக இருக்கலாம்..?
இல்லை, அவர் மனைவிக்கு சமாதான பரிசாக வாத்தின் காலில் “அன்பான திருமதி ஹெ.பேக்கர்” என்று எழுதிய அட்டையை ஒட்டி
கொண்டு வந்துள்ளார் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
ஒவ்வொன்றிற்கும் உங்களிடம் பதில் இருக்கிரது. “காஸ் லைட்’ இல்லை என்று எப்படி யூகித்தீர்கள்?
ஒன்று அல்லது இரண்டு கறைகள் தொப்பியின் மீது எதிர்பாராமல் ஏற்படலாம், ஆனால் இதன் மீது ‘மிருக கொழுப்பிலான’ மெழுகுவர்த்தி கறை தொப்பியில் காணப்படுகிறது. இரவில் அடிக்கடி மெழுகுவர்த்தியை பற்றியபடி அங்கும் இங்கும் நடப்பதால் இது போன்று தொப்பியில் ஏற்படும். அதனால் “காஸ்லைட்” இல்லை என்று சொன்னேன்.
“பீட்டர்சன்” கொண்டு சென்ற அந்த வாத்தை அறுத்து சமைக்க ஆரம்பிக்கும் முன் தான் கதை சுவரசியமாய் செல்கிறது, என்றாலும் இதை எழுத்தில் நீட்டிப்பது சாத்தியமல்ல, என்பதால் இத்துடன் நமது கருத்தை மட்டும் சொல்லி கட்டுரையை முடித்து கொள்ளலாம்.
இலக்கிய உலகம் இது போன்ற மர்மம், திகில், துப்பறியும் கதைகளை பற்றி சொல்லும் போது இப்படிப்பட்ட இலக்கியங்களில் “புத்திசாலித்தனம்” மட்டுமே காட்டப்படுகிறது. இதை படிப்பவர்க்கு சுவாரசியமாக இருக்கலாம். மகிழ்ச்சி இருக்கலாம். எல்லாம் இருந்தும்…?
இலக்கியம் “மனித பண்பாட்டையும்”, அந்தந்த காலத்தின் “இயல்பு களையும்” காட்டி கொண்டிருக்கிறது. அதில் வரும் காதலும் ஏனைய களங்களும் அத்தகைய சூழ்நிலைகளை வாசகர்களுக்கும், உலகத்திற்கும் பிரதிபலிப்பாக காட்டிக்கொண்டிருக்கிறது, ஆனால் இப்படிப்பட்ட கதைகள், எழுத்தாளர்களின் “புத்திசாலித்தனத்தை” மட்டும் காட்டுவதால் இவைகளை “இலக்கியம்” சற்று தள்ளி வைத்திருக்கிறதோ? தெரியவில்லை.
ஆனால் வாசகர்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை சுவாரசியம் கொடுத்து கொண்டுதானிருக்கிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Dec-24, 11:42 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 6

சிறந்த கட்டுரைகள்

மேலே