நானும் பொய்யன்

நானும் பொய்யன்

இந்த கட்டுரையை ஒரு பேட்டியின் மூலமாகவே கொண்டு செல்லலாம்.
நமது ஊடகத்திற்கு வந்திருக்கும் நடிகரும், மனிதாபிமான மிக்கவர் என்று மக்களால் போற்றப்படும் திரு…………!, அவர்கள் நமது நேயர்களுக்காக நம்முடன் கலந்துரையாட வந்துள்ளார். அவரை வருக வருக என் வரவேற்போம்.
அதற்கு முன் அவரது சிறப்புக்கள், அவரால் இந்த சமூகத்தில் வாழும் அவரது கோடானு கோடி இரசிகர்களும், பொதுமக்களும் இவரால் எனெனென்ன சாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் சேகரித்து வைத்துள்ளோம், அந்த சாதனைகள் என்ன என்னவென்று நமது நேயர்களுக்கு சொல்லியும் காணொலிகளை காண்பித்து விட்டு, அவருடன் ‘நமது பேட்டிக்கு’ செல்லலாம்.
உங்களது பெயரே…..தானா?
ஆம், தலையசைத்தான்.
திரைப்படத்துக்காக பெயர் மாற்றம் செய்ய சொல்லவில்லையா உங்கள் டைரக்டர்?
இல்லை என்பது போல் தலையசைத்தான்.
இதன் காரணத்தை நேரடியாக உங்கள் வாயால் எங்கள் நேயருக்கு சொல்லுங்களேன்.
நான் வாய்ப்புக்காக அவரிடம் சென்றபோது,….ஆரம்பித்து பேசி முடித்தான்.
கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் இவனது ‘சினிமா உலகை’ பற்றியே சுற்றி வந்த பேச்சு அடுத்து சொந்த வாழ்க்கைக்கு திரும்பியது.
அதுவும் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் கடந்ததும், அடுத்து உங்களுக்கு சிக்கலான கேள்வியை கேட்கலாம் என நினைக்கிறோம். இந்த உலகத்திலேயே மிகவும் ‘பொய்யர்’ என்று யாரை நினைக்கிறீர்கள்?
நான்தான்…
எங்கே மறுபடி சொல்லுங்கள், நீங்களா?
இதிலென்ன சந்தேகம், நான் பூரணமாய் நம்புகிறேன், நான் ஒரு பொய்யான சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் பொய்களை பேசி எனது சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கேள்வி கேட்டவர் சற்று திணறி..சார்.. நீங்கள் உங்களை தாழ்த்தி கொள்வதற்காக அப்படி சொல்கிறீர்கள்.
நடிகன் சிரித்தான். சார் உங்களை ஒன்று கேட்பேன். உண்மையிலேயே என்னை பற்றி உங்கள் நேயர்களுக்கு சொல்லி கொண்டு வந்தீர்களே அதுவெல்லாம் உண்மைதானா? உங்களுக்கு நன்கு தெரிந்த விசயம்தானா?
பேட்டி எடுத்தவர் தயங்கி இல்லை சார், நிர்வாகம் உங்களை பற்றிய குறிப்புக்களை கொடுத்துவிடும், அதை பார்த்து, புரிந்து கொண்டு…
சரி அவர்களுக்கு இவையெல்லாம் எப்படி தெரிந்திருக்கும்?
அங்கங்கு தகவல் சேகரித்து, அல்லது ‘கூகுள் மூலம்’ விவரங்களை எடுத்து,,!
இப்பொழுது சொல்லுங்கள், என்னை பற்றிய அறிமுகம் நீங்கள் தருகிறீர்கள், ஆனால் உங்களுக்கு என்னை பற்றி முழுவதுமாக தெரியாது, நீங்கள் நிர்வாகம் கொடுத்த தகவல்களை நம்புகிறீர்கள், அவர்கள் “கூகுளை நம்புகிறார்கள்”.கூகுளுக்கு தகவல் தருவது யார்? நான் அல்லது என் நலம் விரும்பிகள். அப்படித்தானே
ஆம், தலையசத்தான்.
அப்படியானால் என்னால் அல்லது என்னை போன்ற நண்பர்களால் சேகரித்து, கூகுளுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள், இவைகள் எல்லாமே உண்மையா? என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ளவைகளை நான் ஏற்று கொண்டிருக்கிறேன்.
சார் பெரும்பாலும் நடந்தவைகளைத்தான் கூகுள் பதிவு செய்யும், அதன் விவரங்களும் சரி பார்க்கப்படும்.
நான் இல்லை என்று சொல்லவில்லையே, ஆனால் அப்படி சொல்லப் பட்டவைகள் எல்லாம் ‘நான்’ அல்லது ‘என்னால் செய்யப்பட்டதுதான்’ என்பது எனக்கு மட்டும்தானே தெரியும்.
பேட்டி எடுத்தவன் திணறினான், சார் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்று புரியவில்லை.
அப்படி கேளுங்கள், நாம் எல்லாருமே உண்மைகளை ஏற்று கொள்ள தயங்குகிறோம், அல்லது மறுக்கிறோம். காரணம் ‘உண்மைகள்’ நம்மை பாதுகாக்காது என்று மனதுக்குள் ஒரு எண்ணத்தை வைத்து கொண்டிருக்கிறோம். ஒரு சில நபர்களுக்கு இது இல்லாமல் இருக்கலாம். அல்லது இந்த உண்மை தெரியும்போது நமக்கோ, அல்லது நம்மை சார்ந்தவர்களுக்கோ உயிருக்கோ, பதவிக்கோ ‘ஆபத்து’ என நம் மனம் எச்சரிக்கிறது, நாம் அதை ஒரு சிலவார்த்தைகளால் சொல்ல வந்த விசயத்தை அழகு படுத்தி ‘உண்மைபோல’ ‘பொய்யை’ நுழைத்து நம்மை தப்பிவித்து கொள்கிறோம்.
பேட்டி எடுத்தவர் சார் ‘தலையை சுற்றுகிறது’, உங்கள் கருத்துதான் என்ன?
ஒன்றுமில்லை, நான் நீங்கள் என்னை பற்றி சொன்ன அத்தனையும் ஏற்று கொண்டுள்ளேன். ஒரு சில மறுப்புக்கள் அதுவும் என் புகழுக்கு ‘இடைஞ்சலோ’ என சந்தேகித்தால், அதை ‘இட்டு கட்டி’ சமாளித்து கொள்கிறேன்.
நான் மட்டுமல்ல, நீங்கள், நாம் எல்லோரும், ஏன் இந்த உலகத்தில் வாழும் முக்கால் பாகத்து மனிதர்களிடையே “பொய்” மட்டுமே உலாவ முடியும். அதற்கு உருவங்கள், கொடுத்தோ அல்லது நாமே கதாபாத்திரங்களாக இருந்து கொண்டோ, அதற்காக மற்றவர்களிடம் பேசுவது, இது எப்படி வேண்டுமானால் இருக்கலாம், பெயர்களும் மாறலாம். புகழ்ச்சி, பாராட்டு, தாராளம், இன்னும் எத்தனையோ.
ஆனாலும் இவைகள் தான் நமக்கு சந்தோசத்தையும் நிம்மதியையும், பாதுகாப்பையையும் தருகிறது எனும்போது நான் ‘பொய்யன்’ என்பதில் எந்த் மாற்று கருத்தும் இல்லையே.
என்ன ஒன்று? நான் “பொய்யன்” என்று உண்மையை பேசிவிட்டதால் நீங்கள் என்னை “சத்திய வேந்தன்” என்று நினைத்து கொண்டால், அது கூட பொய்தானே..!
பேட்டி எடுத்தவன் மயக்கத்திற்கு சென்றிருந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-Dec-24, 10:41 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 19

மேலே