நிராகரிப்பு

நிராகரிப்பு

‘இந்த சொல்’ நம் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் தவழ்ந்து கொண்டே இருக்கும். இந்த சொல் நமக்கு தரும் மன வேதனையை வார்த்தைகளால் குறிப்பிடவே முடியாது. ஆனாலும் இந்த வார்த்தைகளை நம்மால் தவிர்த்து விட்டு முன்னோக்கி செல்லவும் முடியாது.
ஆனால் இந்த வார்த்தை நம்மை பக்குவப்படுத்தி கொண்டு செல்கிறது என்பதுதான் உண்மை. நம்மால் அப்போது அதை உணரமுடியாது. நம்மில் எழும் கோபம் உச்சமாகி எதனால்? என்னும் கேள்வியில் சிதைந்து போகிறோம். அல்லது நம்மை நிராகரித்தவர்களை சிதைக்க முயற்சி செய்கிறோம்.
கிடைத்த பலன் ‘நிராகரிப்பு’ என்பது மறைந்து நம்மை ஒழுக்கமற்றவன், கோபக்காரன், மற்றும் பல பெயர்களை கொடுத்து விட்டு சமூகத்தில் நம்மை ஒதுக்கி வைக்கும் முயற்சிகள் நடைபெற்று விடும். இது பயமுறுத்துவதற்காக சொல்லப்படுவது அல்ல நம் மனதை தூண்டவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் நிறைய உண்டு. அவர்கள் நம்மின் ‘தோல்வியை’ எதிர்பார்த்து காத்திருப்பவர்கள்.
‘நிராகரிப்பு’ அல்லது ‘தோல்வி’ எதை எடுத்து கொண்டாலும், அதை சந்தித்த பின்பு, அடுத்த கட்டத்து செயல்பாட்டுக்குள் சென்று விடுபவன் புத்திசாலி. அதை விட ‘அடுத்த கட்டத்திலும்’ “நிராகரிப்பு” வருமெனில் அதையும் தாண்டி செல்பவன், மன வைராக்கியமானவன் என்றே சொல்லலாம்.
நாம் சிறு வயதில் “இராபர்ட்புரூஸ்” கதையை பாடபுத்தகத்தில் படித்திருக்கிறோம். அது ஒவ்வொரு முயற்சியின் தோல்விக்கும் அடுத்த கட்ட முயற்சியை நமக்கு சொல்லித்தரும் பாடமாகும்.
நிராகரிப்பு என்பது “தோல்வி” என்பதில் இருந்து சற்று மாறுபடுகிறது. காரணம் ஒரு செய்ல்பாட்டின் இறுதி முடிவு “தோல்வி” என முடித்து வைக்கப்படும். ஆனால் ‘நிராகரிப்பு’ என்பது, ஒரு கேள்வியை நம்மிடம் உருவாக்கும். ஏன் நிராகரிப்பு, தகுதியா,திறமையா? அல்லது வேறெதுவா? தனி மனிதனுக்கு நேர்ந்தாலும், அல்லது அவனது ‘யோசனை’ பிறரால் ஒதுக்கி வைக்கப்பட்டாலும், இன்னும் நிறைய காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். விளையாட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, பணி வாய்ப்பு, ஏன் காதல், திருமண பொருத்தம், இன்னும் எத்தனையோ செயல்பாடுகள் கொண்ட சமூக இயக்கங்களில் “நிராகரிப்பு” என்னும் சொல் தனி மனிதனையோ, அல்லது குழுவையோ இம்சைப்படுத்தி செல்கிறது.
ஆனால் நிராகரிப்பு என்பது எதனால்? என்னும் கேள்வியை புதிதாக முளைக்க வைப்பதால், அது முயற்சியில் கொண்டு போய் நிறுத்துகிறது. இது நம் வாழ்க்கையில் கண் கூடாக கண்டு கொண்டு இருக்கும் நிகழ்வு.
நம்முடைய ‘யோசனை’ எங்காவது நிராகரிக்கப்பட்டிருக்குமாயின், நாம் எதனால் நிராகரிக்கப்பட்டது? என காண விழைகிறோம், அதற்கான புதிய யோசனைகளை நாம் சொன்ன கருத்துக்களில் நுழைக்கிறோம். இப்பொழுது நம் யோசனையை எதனால் நிராகரித்திருக்கிறார்கள்? என்பதை நாம் சரி செய்து அல்லது ‘பூர்த்தி’ செய்து அவர்களிடம் தெரிவிக்கிறோம். அவைகள் ஏற்று கொள்ளப்பட்டால், ‘வெற்றி’ என முடிவு செய்து கொள்கிறோம்.
நிராகரிக்கப்பட்டால் “தோல்வி” என்று முடிவு வந்தாலும் அதை ஏற்று கொள்ளாமல் மீண்டும் நம்முடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்த முயற்சிக்கிறோம்.
ஒவ்வொரு படைப்புக்களும், அல்லது கண்டு பிடிப்புக்களும் பல வேளைகளில் உலகத்தால் ‘நிராகரிக்கப்பட்டே’ பிற்காலத்தில் ஏற்று கொள்ள கூடியதாக இருந்திருக்கிறது.
‘பூமி உருண்டை’ என்று சொன்ன அறிவியலாரின் கொள்கையே ஏற்று கொள்ள முடியாமல், அவரை விமர்சித்து தண்டனை அளித்த உலகம். அதனால் ஒன்றும் கெட்டு போய்விடவில்லை, மீண்டும் அவர் சொன்னதுதான் உண்மை என்று உலகம் உணர்ந்து கொண்டது.
‘நிராகரிப்பு’ என்பது ஏதோ சொல்ல கூடாத வார்த்தை அல்ல, உண்மையை சொல்லப்போனால் நாம் எத்தனை முறை இந்த வார்த்தைகள் கொண்ட சிக்கல்களை சந்திக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்மை பக்குவப்படுத்தி கொண்டே போகிறோம் என்று நிச்சயமாக முடிவு சொல்ல முடியும்.
பல தோல்விகளை கண்டவனுக்குத்தான் “வெற்றியின்” ருசி தெரியும். அது போல பல ‘நிராகரிப்புக்களை’ கடந்து கடைசியில் ‘அவனை அல்லது அவளை அல்லது அவர்களின் சிந்தனைகளை, ஏற்று கொள்ளும் உலகம் உண்மையிலேயே அலாதியானது. ரசிக்கதகுந்தது எனலாம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-Jan-25, 1:00 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : niragarippu
பார்வை : 17

மேலே