மண்ணாளும் மன்னனாய் மற்று – ஏலாதி 35

நேரிசை வெண்பா

துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்றா
திறந்தாரீ டற்றார் இளையர் - சிறந்தவர்க்கும்
பண்ணாளுஞ் சொல்லாய் பழியிலூண் பாற்படுத்தான்
மண்ணாளும் மன்னனாய் மற்று 35

- ஏலாதி

பொருளுரை:

பண்ணிசையைப் போன்ற சொல்லையுடைய பெண்ணே! கைவிடப் பட்டவர்களுக்கும், விருந்தினர்க்கும், வறியவர்க்கும், காணப்படாத தென்புலத்தார்க்கும், தனக்கொப்பில்லாத ஏழைகட்கும், துணையற்ற சிறுவர்கட்கும், சான்றோர்க்கும் பழிக்கப்படுதலில்லாத உணவை பகுத்துக் கொடுத்தவன் மறுமையில் அரசனாய் உலகத்தை ஆள்வான்!

பொழிப்புரை:

பண்ணின் இனிமையை வென்ற சொல்லையுடையவளே! துறந்தவர்க்கும், துறவாதவராகிய பிரம்மச்சாரி வானப்பிரத்தனிவர்க்கும், வறியார்க்கும், தென்புலத்தார்க்கும், பலமற்றவர்க்கும், இவர்போல்வ ராகிய மற்றுஞ் சிறந்த தக்கார்க்கும் நல்வழியிலீட்டிய உணவை யளித்து அன்புசெய்தவன் மறு பிறப்பில் பூமண்டலத்தையாளும் மன்னனாவான்.

கருத்து:

துறந்தார் முதலானவர்கட்கு ஊண் கொடுப்பவன் மறுமையில் அரசனாவான்.

இல்வாழ்வுடையவரே ஒரோவொருகால் பிறர் மனைக்கண் துறந்தார்போல் விருந்தினராய் வரலின், அவரை அத்துறவறத்தாரினின்றும் பிரித்தல் கருதித் ‘துறவா' ரென்றார்;

பழியில் ஊண், அன்பொடு இடும் ஊண்;

செல்வம் பெருகுமென்றற்கு ‘மண்ணாளு மன்னனாய்' என்றார்.

பண் ஆளும் என்பதற்கு இசையைக் கீழ்ப்படுத்தும் எனலுமாம்.

துப்பு- ஐம்பொறிகளால் நுகரும் இனிய பொருள்களுக்குத் தொழிலாகு பெயர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-25, 4:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே