அனுபவங்கள்

அனுபவங்கள்

இயற்கை எந்தவொரு உயிரினத்துக்கும், பிறப்பிக்கும் முன் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை, அதற்கான திறமைகளை அதனுள் அடக்கி வைக்கப் பட்டே படைக்கப்பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட திறமைகள் தேவைப்படும்போது வெளிப்பட்டு அவைகள் தன்னை தாக்க வரும் மற்ற உயிரினங்களிடமிருந்து எப்படி தன்னை பாதுகாத்து கொள்வது, என்பதையும், அடுத்து இயற்கையின் கால நடைமுறைகளை உயிரினங்களின் உடல்கள் சந்திக்கும்போது அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் அந்த உயிரினங்களின் தாயோ, அல்லது தகப்பனின் மூலமோ அவர்களுடைய இளம் உயிர்களுக்கு கடத்துகின்றன.
இதைத்தான் “அனுபவம்” என்கிறோம். இப்படி எல்லா உயிர்களுக்கும் ‘மூத்தோர்கள் மூலமாக’ கடத்தும் திறன் மனித உயிர்களுக்கும் உண்டு. அதை அனுபவித்தோ, அல்லது அந்த சிக்கலில் இருந்து தப்பித்தோ இருப்பின் அதை வரும் தலைமுறைக்கு கொண்டு செல்வார்கள்.
இது வழி வழியாக வந்து கொண்டிருக்கும் வரைமுறை.
மனிதர்களிடையே இந்த அனுபவங்கள் எப்படி செயல்படுகிறது? என்பதை பார்த்தோமென்றால், கால சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு மற்ற உயிரினங்களை போல, உருவ அமைப்புகளின் தோற்றங்களை மாற்றுவதற்கோ, அல்லது அதற்கான பாதுகாப்பு வசதிகளோ, மனிதனுக்கு கிடையாது, அதனால் காலசூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை வாழ தகுந்தவனாக ஆக்கி கொள்ள முன்னோர்கள் கடை பிடித்த வழியை கடைபிடிக்கிறான். இப்படித்தான் குளிர், வெப்பம், மழை, மற்றும் பல இயற்கையின் செயல்பாட்டை சமாளித்து வாழ தன்னை அனுபவங்களின் மூலம் பெற்று கொள்கிறான்.
காலப்போக்கில் இயற்கையை எதிர்த்து அதன் தாக்கத்துக்கு எதிர்நிலையை கொண்டு வந்து தன்னை காப்பாற்றி கொள்கிறான். குளிர் காலத்தில் தீயை உருவாக்கி வெப்பாக்கியும், வெயில் காலத்தில் வாழும் இடங்களில் குளுமையை உருவாக்கி வாழவும் வழி செய்து கொள்கிறான். இப்படி இயற்கை தாக்குதல்களை சமாளிக்கும் வித்தைகளை அனுபவத்தில் கணடறிந்து, அதை வழி முறைகளுக்கு கடத்துகிறான்.
இப்படித்தான் மனித வாழ்க்கை தங்களுக்கான வாழ்க்கையை அனுபவங்கள் மூலமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது.
நாட்கள் செல்ல இவனே இயற்கையில் கால சூழ்நிலைகளை
உருவாக்க கூடிய திறமைகளை பெற்று கொண்டான். இப்படியாக பல்லாயிரம் வருடங்களை கடந்து இன்று இந்த அனுபவத்தை இவனது சமூக வாழ்க் கையில் கொண்டு வந்து, சாதாரண வாழ்க்கை வாழவே பிரயாசைப் பட்டு வாழுகின்ற அளவிற்கு சென்று விட்டான்.
இந்த வாக்கியம் வாசகர்களுக்கு சற்று நெருடலை தரலாம். பிரயாசைபட்டா? என்னும் கேள்வி எழலாம். உண்மையில் மனிதன் வாழ்வதற்கு,தோன்றிய முன் காலத்தில் இயற்கையோடு ஒத்தும் போராடியும் வாழ ஒற்றுமையாகத்தான் செயல்பட்டு கொண்டிருந்தான்.
அதில் ஓரளவுக்கு நிலை பெற்றபின் அவனது சமுதாய வாழ்க்கையை நோக்கி திரும்பி பார்க்க ஆரம்பித்தான். அதிலிருந்து ஆரம்பித்தது ஏழை, பணக்காரன்,உயர்ந்தவன், தாழ்ந்தவன், இன்னும் மதம், சாதி சார்ந்த கூட்டம், இப்படி பிரிய, பிரிய அவன் எதை மேற்கொண்டானே அதனை சார்ந்து வாழ ஆரம்பித்தான். அவனது வழியை ஒட்டி வந்தவர்களுக்கும் இவனது அனுபவத்தை அதாவது அவனை இப்படி நடத்து, இவனை இப்படி நடத்து, அப்பொழுதுதான் நமக்கு அடங்கி நடப்பான், என்னும் அவன் கற்று கொண்ட, அல்லது தெரிந்து கொண்ட வழிமுறைகளை போதித்து விட்டு போய் விட்டான்.
அதன் பலன் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும், மற்ற மனிதர்களால், அவர்களால் உருவாக்கப்படும் இந்த துன்பங்களை ஏற்று அதனில் இருந்து விலகி, அல்லது தப்பித்து வாழ்ந்தால் போதும் என்னும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது அந்த வாக்கியத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள்.
உதாரணமாக தண்ணீர் வரும் பாதையில் வீடு கட்டாதீர்கள் என்று அனுபவம் சொல்கிறது, ஆனால் வேறு வழியில்லை என்றிருப்பவனிடம் ஒரு கூட்டம் நீ கட்டு, அதற்காக சில சித்து வேலைகளை செய்ய ஏற்பாடுகள் செய்து அவர்களுக்கு வசிக்க ஏற்பாடு செய்கிறார்கள்.
வசிக்கும் இவன் இயற்கையான தண்ணீரை எதிர்ப்பது எப்பொழுதோ ஒரு முறை, ஆனால் அந்த இடத்தில் வசிக்க கொடுக்கும் மாமூல், அல்லது கையூட்டு போன்ற வழிகளால் ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கிறது. அவன் வாழ்க்கையை முடிக்கும்போது பின்னால் வரும் தன் வரும் வாரிசுகளுக்கு இத்தகியய அனுபவத்தையே சொல்லி கொடுத்து செல்கிறான். தண்ணீர் வரும் பாதையில் வீடு கட்டாதே என்னும் உண்மை சுத்தமாக மறக்கப்பட்டு விடுகிறது.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் வந்தது இப்பொழுது நீங்கள் எந்த தொழிலை செய்வதாக இருந்தாலும் (அது தவறான) இதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அனுபவத்தின் மூலம் முன்னர் இருந்தவன் சொல்லி கொடுத்து விடுகிறான்.
இந்த அனுபவங்கள் மனிதனுக்கு சமுதாயத்தில் வாழ பல தந்திரங்களை சொல்லி கொடுத்து கொண்டே இருக்கிறது.
ஒரு அரசு சான்றிதழ் வேண்டுமென்றாலும் அலுவலகத்துக்கு சென்றால் என்னென்ன செய்ய வேண்டும், யாரையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று வழிமுறையை அனுபவத்தின் மூலம் மற்றவனுக்கு தெரியப்படுத்தி விடுகிறான்.
அனுபவம் மனிதனுக்கு கற்று தருபவை நல்லவையாக இருப்பின் சிறப்பானவனாக இருக்கிறான். அல்லது அனுபவம் அவனை தீயவனாக ஆக்குவது என்றால் கண்டிப்பாக அடுத்தவர்க்கு தீமையைத்தான் கொண்டு வர ஏற்பாடு செய்கிறான்.
உங்களது அனுபவத்தின் மூலம் “ஓரு விலங்கு” என்ன செய்யும் என்று உங்களுக்கு தெரியும். காரணம் எல்லா விலங்குகளுக்கும் மனிதனிடமிருந்து அல்லது மற்ற எதிரிகளிடமிருந்து தன்னை காத்து கொள்ள என்ன செய்யும்? என்னும் அனுபவ அறிவு, அல்லது சொல்லி தெரியும் அறிவு நமக்கு முன்னரே நம்மிடம் இருக்கும் அனுபவம் அல்லது சொல்லி, கற்றவைகள் மூலம் காட்சிபடுத்தி விடும்.
ஆனால் ஒரு மனிதன் அவன் நண்பனோ, விரோதியோ, உறவினனோ, என்ன செய்வான் என்பதை இவன் அனுபவத்தால் தெரிந்து கொள்ள முடியாமல் ஏமாந்து போகிறான். அந்தளவுக்கு மனிதர்களின் மனம், செயல்பாடுகள், சமூகத்தில் நிலையற்று இருக்கின்றன. நேரத்துக்கு நேரம் அவனது குணங்கள், செயல்பாடுகள் மாறி கொண்டேதான் இருக்கிறது.
இதையும் தாண்டி அவன் பெரும்,அனுபவங்கள் ஒரு மனிதனை நாட்கள் செல்ல, செல்ல பக்குவப் படுத்துகிறது. வாழ்நாளின் இரகசியங்களை அறிகிறான். அந்தந்த வயதில் அதற்கு தகுந்தாற்போல செயல்படுகிறான்.
அல்லது இப்படி வைத்து கொள்ளுங்கள் அனுபவம் அவனது கர்வத்தை தட்டி வைத்து கொண்டே இருக்கிறது. தான் தான் பெரியவன் எனும் நினைப்பில் வாழ்பவனின் சூழ்நிலை ‘நொடி நிமிடத்தில்’ தரைமட்டமாக்கி விட்டு சென்று விடுகிறதே எதோவொரு இடர்பாடு காரணமாக.
நாம் என்றைக்கு குழுவாக, தகுந்த வசதிகளுடன், மற்ற எல்லா சுகங் களையும் அனுபவித்து வாழ முற்படும் போதே ஒவ்வொரு மனிதனுக்குள் குறுக்கு எண்ணங்கள் நுழைந்து விட்டது.
இது காலப்போக்கில் வளர்ந்து ‘பாசி படலமாய்’ ஒவ்வொருவரிடமும் பரவி அதை அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி பரப்புகிறார்கள் என்று எதிர்பார்த்து அவர்களது சிறுமைகளில் இருந்து எப்படி தப்பித்து வாழ்கிறார்கள் என்பதை இந்த அனுபவங்கள் தான் கற்று கொடுக்கிறது.
இன்று ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவத்தை கற்று கொள்ளும் மனிதன், இல்லை இல்லை ஒவ்வொரு நொடியும் அனுபவம் என்னும் பேரறிவு அவனை எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்தியபடியேதான் இருக்கிறது.
ஆனாலும் மனிதன் இந்த அறிவை தகுந்த நேரத்தில் பயன்படுத்த மறந்து அல்லது தவறி வேறொரு புதை குழியில் சிக்கி கொள்கிறான். என்றாலும் அதுவும் அவனுக்கு பாடமாக பதிந்து அவனுக்கு பின்னால் வருபவனை எச்சரிக்கையுடன் வாழ சொல்கிறது.
அனுபவம் நம்மை தட்டி வைப்பதல்ல, தலை தாழ்த்தியபடி இருக்க சொல்கிறது அவ்வளவுதான். ஏனென்றால் ‘நிமிர்ந்த தலை’ ஏதொவொரு இடத்தில் அடிபடலாம். அவ்வப்போது தாழ்ந்து எழும் தலை இந்த சமுதாயத்தில், சமயத்திற்கு தக்கவாறு வாழமுடியும் என்று சொல்லாமல் சொல்கிறது.
கடைசியாக சொல்ல வரும் செய்தியாக “அனுபவங்கள்” நம் உள்ளத்தில் பதியப்பட்டு வாழ்க்கையை அமைதியான முறையில் கொண்டு செல்ல உதவுகிறது. என்றாலும் அந்த அனுபவத்தை வரும் தலைமுறையினர் ஏற்று கொள்ள காட்டும், அலட்சியம், கண்டு கொள்ளாமை, இவைகளெல்லாம் அந்த தலைமுறையினருக்கு கிடைக்கும் அனுபவம் மற்றொரு தலைமுறைக்கு சொல்லும் அளவுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Jan-25, 10:26 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : anubavangal
பார்வை : 4

சிறந்த கட்டுரைகள்

மேலே