சாலவும் ஆழப்படும் ஊணமைத்தார் இமையவரால் வீழப்படுவார் – ஏலாதி 36
நேரிசை வெண்பா
காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்
பாலில்லார் பற்றிய நூலில்லார் - சாலவும்
ஆழப் படும்ஊ ணமைத்தார் இமையவரால்
வீழப் படுவார் விரைந்து! 36
- ஏலாதி
பொருளுரை:
முடவர்கள், பார்வையற்றோர், ஊமைகள், தாம் சார்ந்து கொள்ள ஒருவரையும் இல்லாதவர்கள், பதிந்த நூலறிவு இல்லாதவர்கள் ஆகிய இத்தன்மையர்களுக்கு மிகவும் உண்டபின் வயிற்றில் தங்குதற்குரிய உணவைப் படைத்தவர் தேவர்களால் விரைவாக விரும்பப்படுவார்.
கருத்து:
முடவர் முதலாயினாருக்கு வயிறு நிறைய உணவு படைத்தல் வேண்டும்.
காலில்லார் என்பதற்கு இனம்பற்றிக் கையில்லார் முதலியோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் - பக்கம், சார்பு.
ஆழப்படும் ஊண் - கண்ணுக்கு அருவருக்கத் தக்கதும், மூக்குக்கு நறுமண மில்லதும், நாவுக்குச் சுவையில்லது மல்லாமையால் உண்டபின் வயிற்றில் தங்குதற்குரிய ஊண், இனி வயிற்றின் ஆழத்தில் நிறையும் ஊணென்பதுமாம்.