கட்டுச்சோற்றில் இருந்து டிபன் கேரியர் வரை

கட்டுச்சோற்றில் இருந்து டியன் கேரியர் வரை

“கட்டுச்சோறு” இன்றைய தலைமுறை அல்லது போன,அதற்கு முந்திய தலைமுறை வரைக்கும் அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் “டிபன் கேரியர்” அல்லது “போசி” போன்றவைகள், அந்த காலகட்டங்களில் நமது பயன்பாட்டிற்கு வந்து விட்டிருந்தன.
“போசி” நடைமுறை மிகவும் சுலபமாக கிராமப்புறங்களிலும், குடிசை பகுதிகளிலும் அதிகமாக புழங்கி வந்தன. அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு “களி உருண்டையோ அல்லது சோற்று உருண்டையோ “போசியில்” எடுத்து போட்டு அது தண்ணீரில், மிதக்க, மிதக்க எடுத்து வைத்து ஊறுகாயுடனோ அல்லது தயிர், கிடைக்கும் குழம்பு போன்றவைகளில் கலந்து சாப்பிட்டு விட்டு வேலையை பார்க்க சென்று விடுவர். பெரும்பாலும் இத்தகைய உணவை எடுத்து கொள்பவர்கள் விவசாயம், மூட்டை தூக்குதல் போன்ற கடின உழைப்பை கொண்டவர்களால் பழக்கமாக்கி கொள்ளப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் நகரத்தில் வசிப்போர், ஓரளவு எழுத்து பணி, கொஞ்சம் உடல் உழைப்பை விட ‘மூளை’ உழைப்பை பயன்படுத்துபவர்கள், இதே பாணியில் உணவை எடுத்து கொள்வார்கள் என்றாலும், “டிபன் கேரியர்” கொண்டு வந்து அதில் குழம்பு, ரசம், தயிர் என்று பிரித்து கொண்டு வந்து உண்டு விட்டு, வந்த பணியை கவனித்து கொள்வோரும் உண்டு.
“கட்டுச்சோறு” முதலில் நம் மனித கூட்டங்கள் நாகரிக வாழ்க்கையை தொடங்கும்போதே வந்து விட்டிருந்தது. இந்த “கட்டுச்சோறு” அவர்கள் பயணத்தின் போது வழியில் உண்ண எடுத்து செல்வதாகும்.கட்டுச்சோற்றுக்கு “கட்டமுதம், வழிநடை உணவு, வழிச்சோறு, பொதிச்சோறு இப்படி பல பெயர்கள் உண்டு.
கட்டுச்சோற்றின் வரலாற்றை அறிய “சிந்தாமணி நிகண்டில்” தோட்கோப்பு என்னும் சொல் கட்டுச்சோறு என்ற பொருளில் கையாளப்பட் டுள்ளது. திருப்பைஞ்ஞீலி ஞீனிவலேசுவரர் கோயிலுக்கு பயணம் மேற் கொண்ட திருநாவுக்கரச நாயனாருக்கு அந்தணர் வடிவில் வந்த ‘சிவன்’ அவருக்கு கட்டு சோற்றை அளித்ததாக கதை உள்ளது.
அரிசி பெருமளவுக்கு பயன்பாட்டுக்கு வருமுன் “சிறு தானியத்தை” உணவாக பதன்படுத்தி அதனை துணியில் மூட்டை கட்டி பயணத்தில் உணவாக கொள்ள எடுத்து செல்லப்பட்டது.
அப்போதைய கட்டுச்சோறு தயாரிக்கும் முறையானது பயணம் செய்வதற்கு முதல் நாள் “சம்பா அரிசி” நன்கு தண்ணீரை உறிந்து விடும் என்பதால், அதனை அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்த சோற்றில் ஊற்றும் குழம்புக்கு “புளிக்காய்ச்சல், புலியானம், புளித்தண்ணி” போன்ற பெயர்கள் வழங்கப்பட்டது. மிளகாய் வற்றலை வறுத்து, அதில் புளித்தண்ணீரில் பிசைந்து அதனுடன் பூண்டு, மிளகு கறிவேப்பிலை போன்றவைகளை தட்டி போட்டு கொதி வந்தும், வாராத போது இறக்கி வைத்து அதனுடன் சோற்றை போட்டு பிசைந்து கட்டுச்சோறாக்கி எடுத்து கொண்டு பயணம் கிளம்புவார்கள். இடையில் “காத்து கருப்பு” அண்டாமல் இருக்க அந்த கட்டு சோற்றில் அடுப்பு கரி, அல்லது காய்ந்த மிளகாய் வைத்து கொள்வார்கள்.
அடுத்து வந்த காலகட்டங்களில் நாகரிகம் கொஞ்சம் அதிகரித்திருந்தது.
கட்டுச்சோற்றை கட்டி கொண்டு போவதற்கு பதிலாக அப்போதைய புழக்கத்தில் இருந்த “செம்பு பாத்திரங்கள்’ பயன்பாட்டுக்கு வந்தன. அவைகளில் உணவை தயாரிக்கும் முறையும் வந்திருந்தது. அதனால் தயாரிக்கப்படும் உணவை ஒறே மாதிரி பிசைந்து எடுத்து செல்லும் கட்டுச்சோற்று முறைக்கு பதிலாக தனித்தனியாக பிரித்து அதே நேரத்தில் அதனை ஒரு அடுக்காக கொண்டு செல்லும் “டிபன் கேரியரை” வழக்கத்திற்கு கொண்டு வந்தார்கள்.
இவைகள் மிக சுலபமாகவும், அதே நேரத்தில் செய்யப்பட்ட பக்குவத்திலேயே, இதிலிருந்து உணவை எடுத்து சாப்பிட சுலபமாகவும் இருந்தது. இதனால் இந்த “டிபன் கேரியர்” வழி முறை இங்கு மட்டுமல்ல உலகம் முழுக்க பரவியது.
இந்த டிபன் கேரியரை எடுத்து செல்வதற்கென்றே தனிப்பட்ட “டப்பா வாலாக்கள்” மும்பையில் அதிகமாக இருக்கிறார்கள். குடும்ப தலைவர் காலையில் பணிக்கு சென்று விட்டாலும், இந்த ‘டப்பாவாலாக்களால்’ அந்தந்த குடும்ப தலைவர்களின் வீடுகளில் “அவர்களின் “டிபன் கேரியர்” பெறப்பட்டு அவர் உண்ணும் நேரத்திற்கு, அலுவலகத்தில் அவரிடம் சேர்ப்பித்து விடுவார்கள். அந்த தலைவர் சாப்பிட்டு விட்டு வைக்கும் டிபன் பாத்திரம் மீண்டும் அங்கிருந்து பெறப்பட்டு அவரவர்கள் வீடு போய் சேர்ந்து விடும். இது மிகப்பெரிய “வலை பின்னல்” வேலையாக சிறப்பாக மும்பையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த “டிபன் கேரியர்” முறை பெரிய பெரிய செம்பு பித்தளை போன்ற மூல தயாரிப்புகளில் இருந்து மிக சுலபமாக உபயோகப்படுத்தும் வண்ணம் “எவர் சில்வர்” தகட்டின் மூலம் தயாரிப்புக்கு வந்தது. இந்த ‘எவர்சில்வர்’ பாத்திரங்கள் வெகு சீக்கிரம் மக்களின் புழக்கத்திற்கு வந்தன. அதனால் இந்த எவர்சில்வர் டிபன் பாத்திரங்கள் முன்னர் இருந்த செம்பு, அல்லது பித்தனையை விட கையாள மிக மிக சுலபமாக இருந்தது.
அடுத்த கட்ட வளர்ச்சியாக “பிளாஸ்டிக்” என்னும் நெகிழ்வு இழையின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் புழக்கத்திற்கு வந்தன. இவைகளை பாத்திரங்களாக அடுப்பில் வைத்து உணவுகள் தயாரிக்க முடியாது என்றாலும், தயாரித்த உணவு பண்டங்களை எடுத்து செல்வதற்கு அதிக அளவில் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர்.
இத்தகைய ‘பிளாஸ்டிக்’ பொருட்களை பயன்படுத்த வேண்டி உணவு முறைகளை கூட மாற்றி கொள்ளும் முறைகள் கூட மக்களிடையே வந்து விட்டன. இவர்கள் மதியமோ அல்லது இடைவேளைகளிலோ உணவாக கொள்ள அதிகபட்சமாக ரொட்டி, சப்பாத்தி, மற்றும் மாவு பொருட்களை வைத்து உணவு தயாரித்து அதனை “பிளாஸ்டிக் டப்பாக்களில்” வைத்து கொண்டு பணிக்கு செல்வோரும் அதிகரித்து விட்டார்கள்.
இன்று மதியம் டிபன் கேரியர் எடுத்து வந்து உணவை மேற் கொள்ளும் நடை முறை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. காரணம் வீதிக்கு வீதி “பாஸ்ட் புட்’ கடைகள், அல்லது சிறியது முதல் பெரிய பெரிய ஹோட்டல்கள் வரை பணி செய்யும் அலுவலகம் அருகிலேயே இருப்பதும், அல்லது அங்கங்கு உணவுகள் தயாரிக்கப்பட்டு அவர்களே கொண்டு வந்து இவர்களுக்கு கொடுத்து செல்வதும், நடைமுறைக்கு வந்து விட்டதால், டிபன் கேரியரை எடுத்து கொண்டு செல்வோரும் கணிசமாக குறைந்து போய் விட்டனர். அதை விட பணி புரியும் இடங்களிலேயே “காண்டீன்” இருப்பதாலும், அல்லது பணி செய்யும் நிர்வகமே மதிய உணவு வழங்கும் வசதியும் கொடுத்திருப்பதாலும், இன்று உணவு வேளையில் உணவு உண்ண வேண்டும் என்று காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் பல வகையான வழிகளில் உணவை அளிக்க பல வகைப்பாடுகள் பெருகி விட்டது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Jan-25, 1:30 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே