முத்தொள்ளாயிரம் - சேரன் 3 - நேரிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர்
மாமையை அன்றோ இழப்பது – மாமையிற்
பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு! 3
பொருளுரை:
சேரன் கோதை தாவும் போர்க்குதிரை பூட்டிய தேரில் செல்பவன். அவன் இப்போது மெதுவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரில் உலா வருகிறான்,
அவனைக் கண்ட மகளிர் தன் மேனியிலிருந்த மாந்தளிர் போன்ற மாமை நிறத்தை இழந்து விட்டனர். நானோ என் மேனியில் பொன்னிறம் ஊறிக் கிடப்பது போன்ற பசப்பு நிறத்தைப் பெற்றிருக்கிறேன். இது பழுதாகுமா? ஆகாது.
'மாமை நிறத்தைக் காட்டிலும் பொன்னிறம் பல நூறு மடங்கு எனக்கு மேன்மையானது. காரணம் அவனுக்காக ஏங்கிக் கிடைத்த பேறு ஆயிற்றே' என்கிறாள் ஒரு தலைவி.