நாடுவர் விண்ணோர் நயந்து - ஏலாதி 34

இன்னிசை வெண்பா

சிதையுரையான் செற்ற முரையான்,சீ றில்லான்
இயல்புரையா னீன முரையான் - நசையவர்க்குக்
கூடுவ தீவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து! 34

- ஏலாதி

பொருளுரை:

கோவைக்கனியைப் போன்ற சிவந்த வாயையுடைய பெண்ணே! கீழ்மை பேசாமலும், பகைமை பேசாமலும், பிறர்மேற் சினத்தல் இல்லாமலும், தனது நல்லியல்பினைப் புகழாமலும், குற்றஞ் சொல்லாமலும் தன்னை விரும்பி வந்தவர்கட்கு இயல்வது கொடுத்துதவுவா னொருவனை தேவர்கள் விரும்பி மகிழ்வார்.

கருத்து:

கீழ்மை பேசாமை முதலியன உடையானைத் தேவரும் விரும்புவார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Dec-24, 1:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே