எதிர்கொள்ள தயாராகு

அணைகளிட்டு தனக்கென்று தேக்கிட, அணைகள் நிரம்பினால் தேக்கி வைக்க இயலுமா?
ஆறுகள் நிரப்பிட கரைகள் உடையும் காலம் வந்தே தீரும்.

தீர்க்கப்படாத மனித குழப்பங்களுக்கு பழி ஏற்பது யார்?
மனிதர்களா? இயற்கையா?
கடவுளா?
விஷமங்களின் ஆளுமையால் மூளைச்சாவு அடைந்த நடைபிணங்களின் கதறல்கள்.

கதறல்களால் துன்பங்களைத் தீர்க்க இயலுமா?
மூடமான மனங்களே முடங்கிவிடாதீர்கள்.
எழுந்து கடக்க வேண்டிய போராட்டமான வாழ்வை தேர்ந்தெடுத்த நீங்கள் போராடி தான் ஆக வேண்டும்.

வேண்டும் போராடியே ஆக வேண்டும்,
யாரை எதிர்த்து?
சக மனிதர்களை எதிர்த்தா?
இல்லை, உங்களை எதிர்த்து நீங்களே போராடியாக வேண்டும்.

வேண்டும் என்கிறது வேண்டாதவையாக இருந்தால் துன்பம் என்பது நிரந்தரமான ஒன்றாகி விடுகிறது,
விடுவதை விடுத்து பெறுவதை பெற்று இயற்கையின் அன்னை மடியில் வாழ விரும்பாது செயற்கையில் உருளுவோரே வாழும் வாழ்க்கையில் உள்ளழங்கை புறங்கையாக புரளும் காலம் வருகிறது.

வருகிறதை எதிர் கொண்டால் வாழும் வல்லமையை இயற்கை தரும்.
தருவதை உணர்ந்து பெற தகுதி வாய்ந்தவர்களாக மாற, ஆழம் கண்டு பயந்தால் முத்தை எடுப்பதும் இயலாதே,
இயலாமை எண்ணி எண்ணி பயப்படுவதில் மரணம் நெருங்கி முத்தமிடுகிறது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Aug-18, 9:15 pm)
பார்வை : 2170

மேலே