ஆட்கொண்டு அருள்புரிய வருவாய் கண்ணா

ஆட்கொண்டு அருள்புரிய வருவாய் கண்ணா...!

காடெல்லாம் அலைந்து ஆவினங்கள் மேய்த்து
ஓடாகத் தேய்ந்து பெண்டீர் பாலைக் கடைந்து
எட்டாது உறியில் வெண்ணையை வைத்தால்
தட்டாது பதுங்கி அதை திருடி உண்டாய்
அன்று ஆடிப்பாடி உனைப் புகழ்ந்தார் ஆயர்குலத்தார்
இன்று கூட்டாக பிடித்து உனைக் காவலில் வைப்பார்....

யமுனையிலே நீராடும் கோபியர் ஆடையை
அபகரித்து அறியாமல் மறைத்து வைத்தாய்
வேணுகானக் குழலாலே இளம்பெண்களை மயக்கி
கூடிக் குலாவிட மாயம்பிம்பம் கொண்டாய்
அன்றதை லீலையென்று பாகவதம் சொல்லும்
இன்று செய்தால் சட்டம் உனை உள்ளே தள்ளும்

பிருந்தாவன ராதையிடம் காதல் விளையாடி
ருக்மணிக்கு முதல்முதலாய் மாலையிட்டாய்
பதினாறாயிரம் மங்கையரை சுதேசிகளாய் மணந்தாய்
அன்று ஆண்டாள் உன்பால் ஒருதலையாய் உழன்று
திருப்பாவையும் திருமொழியும் உனக்காய் படைத்தாள்
இன்றோ பெண்ணியம் உனை வசைபாடிக் கொல்லும்

தர்மனை பொய்யனாக்கி துரோணரை வதைத்தாய்
பீமனுக்கு சாடை காட்டி துரியோதனனைக் கொன்றாய்
சிகன்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்தினாய்
சத்தியத்தை மீறி சக்ராயுதம் ஏந்தினாய்
சூரியனை மறைத்து இயற்கையை ஏமாற்றானியாய்
கௌரவர் படுகொலையில் முதல் குற்றவாளி நீயே....

அத்தனையும் செய்த உன்னை இதயம் தொழுகிறது
உன் பிள்ளைப் பிராயக் குறும்புகளை மனமோ ரசிக்கிறது
கோவர்த்தன மலையாகி கையில் தவழ ஏங்குது
ஆயர்குல மங்கையாகி வேணுகானம் கேட்குது
மீராவாய் மாறி உன்னைத் துதிப்பாடுது
ஆட்கொண்டு அருள்புரிய வருவாய் கண்ணா!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (8-Sep-18, 9:12 am)
பார்வை : 37

மேலே