செல்வர்க்கு அணிசெருக்குச் சேராமை – அணியறுபது 45
நேரிசை வெண்பா
செல்வர்க்(கு) அணிசெருக்குச் சேராமை; தேர்ந்துநின்ற
கல்விக்(கு) அணியிழுக்கம் காணாமை; - செல்வழிக்குச்
செய்ய அறமே சிறந்தவணி; சீர்மைக்கு
மெய்யே உயர்ந்த அணி. 45
-அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
செருக்கு உறாமை செல்வர்க்கு அழகு: இழுக்கு உறாமை கல்விக்கு அழகு; மறுமைக்கு அறமே அழகு: சீர்மைக்குச் சத்தியமே சிறந்த அழகு எனப்படுகிறது.
சிறுமைக்கு அடையாளம் செருக்கு. செல்வரிடம் இது இயல்பாகச் சேரும். அவ்வாறு சேராமல் செய்து கொள்ளின் அவர்க்கு மிக்க நன்மையாம்.
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
இடையிற்கோ வணமு மின்றி
..இங்குதித் தோமவ் வாறே
கடையில்வெ றுங்கை யோடுங்
..கழிகுவ நடுவிற் சேரும்
உடைமையாற் பெருமை யென்னோ
..ஊர்க்கெலாம் பொதிசு மக்கும்
விடைதருக் குற்ற தென்ன
..வீண்செருக் குற்றாய் நெஞ்சே. 3
- செல்வச் செருக்கு
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
உள்ளம் செருக்கடைய நேர்ந்த போது இவ்வாறு சிந்தித்து அதனை எவ்வழியும் ஒழித்து ஒழுக வேண்டும்.