நேர்மை செறிந்தொழுகல் சீர்மைக்கு அணி – அணியறுபது 47

நேரிசை வெண்பா

காலங் கருதல் கருமத்துக் கானவணி;
சீலம் புரிதலுயர் சீவனணி; - ஞாலம்
அறிந்தொழுகல் வாழ்வுக்(கு) அரியவணி; நேர்மை
செறிந்தொழுகல் சீர்மைக்(கு) அணி. 47

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

காலம் கருதி முயல்வதே கருமத்துக்கு அழகு; சீலம் படிந்து ஒழுகுவதே சீவனுக்கு அழகு; உலகம் அறிந்து நடப்பதே வாழ்வுக்கு அழகு; நெஞ்சம் நேர்மையாய் ஒழுகலே சீரிய மேன்மைக்கு அழகு ஆகும்.

மனிதன் கருதிச் செய்கிற காரியங்கள் இனிது நிறைவேறி வருதற்கு உரிய பருவத்தை உணர்ந்து உரிமையாகக் கொள்ள வேண்டும். இதனையே பருவத்தே பயிர்செய்! என்றார் ஒளவையார்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு. – 482 காலம் அறிதல்

காலத்தோடு பொருந்தி முயன்றுவரின் செல்வம் நிறைந்துவரும் என வள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார். உரிய பருவமே பெரிய திரு ஆகும்.

காலம் அறிந்தாங்(கு) இடமறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும். 52 நீதிநெறி விளக்கம்

ஒரு காரியத்தைச் செய்தற்குரிய காலத்தினை அறிந்து, அக்காரியத்தைச் செய்து முடித்தற்கேற்ற இடத்தினையும் அறிந்து, செய்யும் அக்காரியத்தின் காரணத்தையும் அறிந்து, அதைச் செய்து முடித்த பின் அதனாலேற்படும் பயனையும் அறிந்து பின்னும் ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து அக்காரியம் செய்து முடித்தற்குத் துணை செய்ய இருப்போர் வலிமையுந் தெரிந்துகொண்டு பின்னர் செய்யும் செயலின் முயற்சி செய்யப்படும்.

கருமங்களைச் செய்ய உரிய மருமங்களை இது நன்கு விளக்கியுளது. வினையாளன் முதலில் உரிமையோடு கருத வேண்டியது காலமே என்பதை இதில் தலைமையான நிலைமையால் அறிந்து கொள்கிறோம்.

நெறிமுறையே ஒழுகி வருகிற ஒழுக்கம் சீவனைத் தேவன் ஆக்கி அருளுகிறது. ஆகவே சீலம் சீவனுக்கு அணி என வந்தது. நேர்மை சீர்மையை அருளுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-18, 3:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

மேலே