வாழ்க்கையில் வெற்றி எது

💗💗💗💗💗💗
*‘சக்ஸஸ்*் *ஆகுறதுன்னா என்னப்பா?’’* *கேட்டாள் குழந்தை..

‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுடா செல்லம்!'' என்றார் அப்பா..

‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா? ஸ்கூல் மாதிரி அங்கேயும் யாராவது நாம ஜெயிக்க மார்க் போடுவாங்களாப்பா?'' என்று விடாமல் கேட்டாள் சிறுமி..

‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா, வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்கிறதுடா செல்லம்... அப்பா மாதிரி நல்லாப் படிச்சு பெரிய பெரிய புரமோஷன் எல்லாம் வாங்கி பெரிய பதவிக்குப் போயோ, அல்லது பிஸினஸ் பண்ணியோ நிறைய பணம் சம்பாதிக்கிறது..

அப்படி நிறையப் பணம் சம்பாதிச்சா நல்லா பெரிய வீட்ல எல்லா வசதிகளோடவும் வாழலாம் இல்லையா?'' அப்பா பதில் சொன்னார்..

‘‘ஓ!'' என்று யோசித்தாள் சிறுமி.

‘‘பணம் மட்டுமில்லை.. நாலு பேருக்கு நம்ம முகம் தெரியறது மாதிரி பேரு வாங்கறது..

பெரிய அளவில் ரஜினி, கமல், தனுஷ் மாதிரி சினிமாவிலோ டி.வி.யிலோ பேர் வாங்கிறது, சூப்பர் சிங்கர் மாதிரி நிகழ்ச்சிகள்ல ஜெயிச்சு பேர் வாங்குறது, அரசியல்ல சக்ஸஸ்ஃபுல்லா வர்றது எல்லாம்கூட வாழ்க்கையில் ஜெயிக்கிறதுதான்..

இப்படி சம்பாதிக்கிற புகழ் மூலமும் நிறையப் பணம் சம்பாதிக்க முடியும் இல்லையா?'' எடுத்துச் சொன்னார் அப்பா.

‘‘ஓ.. அப்போ, எது செஞ்சாலும் அது மூலம் நிறைய பணம் சம்பாதிச்சாதான் வெற்றி பெற்றதா அர்த்தம் இல்லையாப்பா?'' சந்தேகம் கேட்டாள் சிறுமி..

‘‘ஆமாண்டா!'' உறுதியாக பதில் சொன்னார் அப்பா.

சிறுமி எதையோ ஆழமாக யோசித்தாள்.. பின்பு கேட்டாள்.. ‘‘அப்பா, நிறையப் பணம் சம்பாதிக்கிறதுதான் வாழ்க்கையில் ஜெயிக்கிறதுன்னா, அப்புறம் ஏம்ப்பா எதிர் வீட்டு அங்கிள் தற்கொலை பண்ணிகிட்டார்?..

அவர் பெரிய கோட்டீஸ்வரர், பெரிய பிஸினஸ்ல நிறைய நிறைய சம்பாதிக்கிறவர்னு நீங்க சொல்லியிருக்கீங்களே?

அப்போ அந்த அங்கிள் நிறைய பணம் சம்பாதிச்சும் வாழ்க்கையில் ஜெயிக்கலையா? அந்த அப்பாவுக்கு இதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை..

யோசிக்க ஆரம்பித்தார்.

நம்மில் பலர் இந்த அப்பா போலத்தான் ‘சக்ஸஸ் ஆவது‘ என்பதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்கிறோம். ஆஃபீஸ் என்றால் பெரிய பெரிய புரமோஷன்கள் வாங்கு வது, நிறைய சம்பளம் வாங்குவது, பிஸினஸ் என்றால்,

பலரை முந்திக் கொண்டு முன்னே வருவது, நிறைய பணம் சம்பாதிப்பது என்பதாகத்தான் அர்த்தம் கொள்கிறோம்..

புரமோஷன் வாங்கத் தெரியாதவன், வாழ்க்கையில் ஜெயிக்கத் தெரியாதவன்!.

சம்பளம் அதிகம் வாங்கத் தெரியாதவன், ஜெயிக்கத் தெரியாதவன்!..

பேர் சம்பாதித்தாலும் அதை வைத்து பணம் பண்ணத் தெரியவில்லையா? ஏமாளி, வாழ்க்கையில் பிழைக்கத் தெரியாதவன்! உருப்படத் தெரியாதவன்!
பணம் சம்பாதிப்பதே சக்ஸஸ் எனில், பணம் வைத்திருப்ப வர்கள் எல்லோரும் ஏன் சந்தோஷமாக இல்லை? சிறுமி கேட்டதுபோல, அத்தனை கோடிகள் சம்பாதித்தும் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்?

புகழ் சம்பாதிப்பதே சக்ஸஸ் எனில், புகழ் வெளிச்சத்தில் இருந்த எத்தனையோ நடிகர், நடிகைகள் ஏன் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்?

செல்வாக்குதான் வாழ்க்கையில் ஜெயிப்பது என்றால், மனசுக்கு நிம்மதியில்லை என்று கோயில் கோயிலாக, சாமியார் சாமியாராகப் போய் ஆரூடம் பார்க்கும் அரசியல்வாதிகள் பற்றி என்ன சொல்வது?

அப்போது எதுதான் சக்ஸஸ்? எதுதான் ‘வாழ்க்கையில் வெற்றி பெறுவது‘?
நான் மகிழ்ச்சியாக_வாழ்கிறேன்’ என்ற நம் மனசின் சந்தோஷக் குரல்தான் சக்ஸஸ்!.. என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாத ஒரு விஷயம் அது! நம் இயல்புகளால் மட்டுமே அமையும் ஒரு மன நிம்மதி அது!

யோசித்துப் பாருங்கள்..

அதிக பணம் சம்பாதித்து பெரிய வீடும், வசதியான வாழ்க்கையும் பெற முனைவது எதற்காக? நாம் மகிழ்ச்சியான ஒரு மனநிலையைப் பெறுவதற்காகத் தானே?

பெரிய பதவியும், அதிக செல்வாக்கும் பெற்று மக்கள் மதிக்கும் ஒரு நிலைக்கு நாம் வர நினைப்பது எதற்காக? நாம் மகிழ்ச்சியான மனநிலையைப் பெறுவதற்காகத் தானே?

கடலைத் தேடித் தான் உலகின் அத்தனை நதியும் போகிறது என்பதுபோல, நம் திருப்தியான, மகிழ்ச்சியான மனநிலையைத் தேடித்தான் உலகின் அத்தனை சுகங்களையும் நாம் பெற முயற்சிக்கிறோம்..

ஆனால், அந்த மனநிலையை உலகின் எவ்வளவு பெரிய பணத்தையும், எவ்வளவு பெரிய செல்வாக்கையும் கொண்டு நாம் பெற முடிவதில்லை என்பதுதான் நிஜம்..
சரி, எப்போது அந்த மகிழ்ச்சியான மனநிலையை நாம் பெற முடியும்?

செய்வதை முழு மனநிறைவுடன் சிறப்பாகச் செய்யும்போது!
ஆமாம், ‘*சக்ஸஸ்’* என்பது அதுதான்!

நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் முழு மனநிறைவுடன் செய்வது..

அதன் மூலம் மன நிறைவும் மகிழ்ச்சியும் அடைவதுதான் வாழ்வின் இறுதி இலக்கு !..
*வாழ்க நலமாக*

எழுதியவர் : உமாபாரதி (25-Nov-18, 3:03 pm)
பார்வை : 346

சிறந்த கட்டுரைகள்

மேலே