கரும்பலகையும் சாக்பீசும்
கரும்பலகையும் சாக்பீசும்
கருப்பு வயலில்
வெள்ளை விதைகளை
வெண்மை நிற
குச்சிகொண்டு
தூவி தூவுகிறார்
ஆசிரியர்
அவைகள் மேலிருந்து
கீழாக
வளர்ந்து கொண்டே வந்தன
வெண்மை நிற பயிர்களாகவே
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
விதமாய்
வளைந்தும்
நிமிர்ந்தும் காட்சி
தந்தாலும்
இவைகளை கையில் எடுக்க
முடியாது தான்
என்றாலும்
பார்ப்பவர் மனதில்
இவைகள் சொல்லி
கொடுத்தன
ஆயிரம் விதமான பாட
அர்த்தங்களையும் விளக்கங்களையும்
அங்கு அமர்ந்திருந்த
மாணாக்கர்க்கு
ஞாபகமிருக்கிறதா? கரும்பலகை என்பது நம் வகுப்பின் முக்கியமான ஓர் அங்கமாக இருந்ததே..!
வகுப்பில் தலைவனாக மாணவனையோ, மாணவியையோ தேர்ந்தெடுத்து விட்டால் அவர்களுக்கு முதலில் தரப்படும் பணி, கரும்பலகையை தினமும் ஊமத்தை இலையால் அல்லது கரி தூண்டுகளால் கசக்கி அல்லது உடைத்து, கரும்பலகையில் நன்கு பூசி வலது மேல் புறம் மாணவ மாணவிகளின் இருப்பு, இன்று வருகை இத்தனை பேர் என்று இவைகளை கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும்.
இன்னும் கொஞ்சம் அதிகமாக சொல்லும் ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பு தொடங்கும் போதும் நடுப்பகுதியின் மேல்புறம் என்ன பாடம் (வகுப்பு) என்று குறிப்பிட சொல்வார்கள். ஆங்கிலம் என்றால் அதனை குறிப்பிடல் வேண்டும், கணிதம் என்றால் அதை குறிப்பிட வேண்டும்.
இப்படி மாணவ மாணவ மானவிகளின் கண் பார்வையின் நேர் நின்று ஆசிரியரே எதிரில் இல்லாவிட்டாலும் “நான் இருக்கிறேன்” என்று நம்மிடம் உணர்த்தி கொண்டிருப்பது இந்த கரும்பலகைதான்.
இதே கரும்பலகை உயிரற்றதாய் இருந்தாலும் தினந்தோறும் அதற்கு தண்ணீர் விட்டு கழுவி பத்திரமாய் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறோம். அதற்கு காரணம் என்ன? மாணவ மானவிகளின் மனதுக்குள் ஆசிரியரின் கருத்துக்களை அவரது கையால் கரும்பலகையில் எழுதப்பட்டு அது நம் கண் பார்வை வழியாக மனதுக்குள் போய் ஓட்டிக்கொண்டதே. இந்த மாயம் எப்படி நிகழ்கிறது?
பொதுவாக ஒரு கருத்து உண்டு, “காதால் கேட்பதை விட கண்ணால் பார்ப்பதே மெய்” இது உண்மை என்று நமக்கு விளங்க சொல்வது இந்த கரும்பலகையும், சாக்பீசும்தான். என்னதான் ஆசிரியர் வாய்மொழி வழியாக நமக்கு பாடங்களை போதித்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டால் அவை காலப்போக்கில் மறைந்து போகிறது. ஆனால் அவரால் கரும்பலகையில் எழுதப்பட்டு அவைகள் நம் கண் முன்னால் காண்பிக்கப்பட்டவுடன் நம் மனதுக்குள் அவை சட்டென்று வந்து ஒட்டிக்கொள்கிறது.
பாடரீதியாக கரும்பலகையும் சாக்பீசும் நமக்கு உதவுவது மட்டுமல்ல, மாணவ மாணவிகளின் சில விபரீத எண்ணங்களையும் இந்த கரும்பலகை வெளிப்படுத்தி அந்த வகுப்பு மட்டுமல்லாமல் பள்ளி முழுக்க சிக்கலகளையும் தோற்றுவித்து விடுகிறது. இது எப்படி என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுமானால்.?
நீங்கள் யோசித்து பாருங்கள் வகுப்பில் அடுத்து வரப்போகும் ஆசிரியர் அல்லது ஆசிரியை “கமெண்ட்” அதவாது விபரீதமாக கருத்து சொல்ல விரும்பும் மாணவ மாணவிகள் யாரும் இல்லாதபோது, அல்லது சில தைரியசாலி மாணவ மாணவிகள் அடுத்து வரப்போகும் ஆசிரியரை பற்றி அதே கரும்பலகையில் எழுதி வைத்து விடுவார்கள்.
வந்து பார்க்கும் ஆசிரியர், அல்லது ஆசிரியைகளில் ஒரு சிலர் இதை பெரிய விசயமாக்கி தலைமையாசிரியர் வரை கொண்டு போய் சிக்கலாக்கியதும் உண்டு. ஒரு சிலர் இதை கண்டு கொள்ளாமல் “டஸ்டர்” கொண்டு அழித்து விட்டு பாடங்களை தொடர்ந்ததும் உண்டு.
ஒரு வகுப்பின் கம்பீரமே அனைவருக்கும் முன்னால் மத்தியில் குறிப்பிட்ட தூர உயரத்தில் அமைந்திருக்கும் கரும்பலகையே காரணமாக இருக்க முடியும்.
அந்த கரும்பலகையின் அருகில் நிற்கும் ஆசிரிய ஆசிரியைகள் தரும் தெளிவான பாடவிளக்கங்களுடன் உதாரணங்களையும் நம் கண் முன்னால் கரும்பலகையில் தன் கையில் இருக்கும் சாக்பீசால் விளக்கி கொண்டே எழுதுவார்கள். அந்த ரசனை இன்று காலம் போன பின்பு நினைத்து பார்க்கும்போது மனசு கிலேசமாகிறது.
அன்று அந்த கரும்பலகை கருமை பூசி அலங்கரித்து வைக்க ஆசைப்பட்டதாக இருந்தாலும், இன்று அதன் அருகில் நின்று நம் முகங்களை பார்த்து பின் கரும்பலகையில் பாடவிளக்கங்களை எழுதி நம் பார்வைக்கு கொண்டு வந்ததை இன்று நினைக்கும்போது..!
இன்று எத்தனையோ வசதிகளுடன் வகுப்புக்கள் வந்து விட்டன. “ஸ்மார்ட் வகுப்பு” என்றும் அழைக்கப்படுகின்றன. ஏன் உங்கள் ‘தொலைபேசி செயலி’ வழியாக பாடங்களை விளக்கும் முறைகள் கூட வந்து விட்டன. என்றாலும்…!
“சிலேட்டு குச்சியால் எழுதி “எச்சிலைதொட்டு” அழித்ததை நம்மால் மறக்க முடியாதது போல நம் கண் முன்னால் அன்று வகுப்பில் ஆசிரிய ஆசிரியைகள் கரும்பலகையில் எழுதி நமக்கு பாடங்களை விளக்கியதை நம்மால் என்றும் மறக்கத்தான் முடியவில்லை.

