நூலின் பெயர் மின்னல் ஹைக்கூ நூலாசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், எல்டாம்சாஸ், சென்னை-18
நூலின் பெயர் : மின்னல் ஹைக்கூ
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : வசீகரன்,
ஆசிரியர், பொதிகை மின்னல், எல்டாம்சாஸ், சென்னை-18.
வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீன. தயாளு தெரு,தியாகராயர் நகர்.சென்னை.17.பக்கங்கள் 84 விலை ரூபாய் 80.
தொலைபேசி எண்கள் 044 24342810./ 24310769
கவிச்செம்மல், தூங்காத்தேனீ, நற்றமிழ் ஊற்று, நன்முகச் செம்மல், அய்க்கூ அருவி, கட்டுரைக் கணினி, சொற்பொழிவுத் தென்றல், சொல்லின் சுடர், நற்கொடை நாயகர் இரா.இரவி அவர்கள் நலமும் வளமும் சூழ்க. வானதி பதிப்பகம் உயர்வெளியீடு, மின்னல் ஹைக்கூ நூல் கண்டேன், வியந்தேன், அயர்ந்தேன், பறந்தேன், மகிழ்ந்தேன். 84 பக்கங்களில் அட்டை கட்டுடன் வெறும் 80-தே ரூபாயில் வியக்க வைக்கிறது. சுட்டும் விழி நூலின் தனித்தனி ஹைக்கூக்களுக்கு தோழி இர. ஜெயப்பிரியங்கா அவர்களின் படம் தாங்கிய வடிவமைப்பையே மீண்டும் நூலாக்கி இருக்கின்றீர்கள். முதல் வாழ்த்து ஜெ.பி.-வுக்கு, அடுத்தது தங்களுக்கு. எத்தகைய ஈடுபாடு தங்களுக்கு. மின்னல் கலைக்கூடம் சுட்டும் விழி நூலில் மறுபதிப்பு செய்யவில்லை என்பது வருந்தத்தக்கதே. சூழ்நிலை மீது காரணம் சொல்லி நான் தப்பிக்க விரும்பவில்லை. அதுவும் நல்லது தானோ என்னவோ. எமக்கு மறுவாய்ப்பு போனாலும். பதிப்புலகச் சக்கரவர்த்தி வானதி ராமநாதன் அவர்களால் புதுமையாகவும். வலிமையாகவும். புதிய பெயரிலும் நூலாக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு பெருமை சேர்க்கிறது என்பதை எண்ணும் போது நெஞ்சம் உவக்கிறது. காலம் கடந்தும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தங்கள் கவிதைகள் வாழும்.
இனி சில கவிதைகள் :
நீளமான கூந்தல் / எங்கு பார்த்தாலும் / அவள் நினைவு
அவளே தெரியாத அளவுக்கு நீளமான மட்டுமல்ல. அகலமான கூந்தல் படம் நயம்.
சுறுசுறுப்பாய் / பறக்கச் சலிப்பதில்லை / தேனீ
தேனீ தேன் நுகுரும் படம் உழைப்பின் அம்சம். மனிதர்களுக்கு மட்டுமே சலிப்பு உண்டு. பிற உயிரினங்களுக்கு பெரும்பாலும் சலிப்பு கிடையாது. தேனீயின் படத்துக்குப் பதிலாக. தங்களது படம் வைத்திருந்தாலும் பொருந்தும். சலிப்பு என்பது உங்கள் அகராதியில் இல்லையே.
கோலத்தை விட / கொள்ளையழகு / கோலமிட்டவள்
நீங்கள் படிக்கும் காலத்தில் எழுதிய ஹைக்கூ இது என நினைக்கிறேன். அழகுமங்கையின் படமும் அழகு.
ஈடில்லாத வேகம் / இணையில்லாத பரசவம் / மலரும் நினைவுகள்.
சிறுவர்கால நினைவுகள் பெரியவர்களுக்கு என்றும் ஏக்கமே. சிறார் டயர் வண்டி ஓட்டும் படம் மிகப்பொருத்தம்.
பிணமான பின்னும் / காசு மீது ஆசை / நெற்றியில் நாணயம்
நெற்றி நாணயம் வைப்பது ஒரு (தேவையற்ற) சடங்கு தான். என்றாலும் அது பிணத்தின் ஆடை எனக் குறிப்பிட்ட கற்பனையில் கவிஞரின் கொடி பறக்கிறது. படமும் பொருத்தம்.
மதங்களை விட / உயர்வானது / மனிதம்
மிகப் பொருத்தமான உதவிக்கர படம். மதங்கள் என்றும் உயர்வானது அல்ல. அவை முதலில் கொய்வது மனிதத்தைத் தான் என்பதை சுவையாகச் சுட்டுகிறது.
உங்கள் கொடி என்றும் உயர்ந்து பறக்கும். இது திண்ணம். நன்றி. வாழ்க, வளர்க, வெல்க.

