இளவேனிற் காலம்
இளந்தளிர் இலைகள் மரமெங்கும் துளிர்விடும்,
பட்ட மரமாய் பட்ட துயரத்தில் இருந்து மரங்கள் விடுபடும்!
பூமியின் மேனியெங்கும் பசுமை நிறமே..
ஓவியமான பூமியை கண்டு மனமும் நிறையுமே!
வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குதே..
ரசித்த என் உள்ளமும் கொள்ளை போனதே!
பூக்கள் தூது விட்டதோ காற்றை, தன் மகரந்தம் விற்று..
வண்டும் தேனீக்களும் சுற்றுமே பூவின் அழைப்பை ஏற்று!
ஆதவன் கூட இதமாய் தீண்டுவான்..
பூமி தேகத்தை காணாது ஆழமாய் வாடுவான்!
காற்று தென்றலாய் மேனியை தழுவும்,
காற்றை நாம் தழுவ சட்டென்று நழுவும்!
இயற்கையே பேரழகியாய் மாறி மனதை மயக்கும்,
வான்வழி ஊர்வலம் சென்று ரசித்த மேகமும் வியக்கும்!
இளவேனிற் காலமே.. பூமியின் வசந்தமே..
கண்கள் இமைக்க மறந்த மனதில் ஏகாந்தமே!!

