கனகாம்பரக் காவியம்

இந்த பிரபஞ்சம்
எவ்வளவு அழகானது.

எத்தனை எத்தனை
ஆசிகளை அளவுகோலின்றி
பிறந்தும், திரிந்தும், பறந்தும்
கிடக்கும் ஆன்மாக்களின் மேல்
அரிதாரமாய் பூசி உள்ளது.

இந்தப் புரிதலை,
வாஞ்சையோடு அடிமனதில்
வார்த்துவிட்டால் - வானம் கூட
வசப்பட மறுத்து நம்மை -
வஞ்சிக்குமா என்ன?

...என்ற யோசனை எத்தனிக்க,
விழி - மூடிய இமைக்குள் இருக்க
எதிர்த்து எட்டிப் பார்த்தது..

அப்போது,
சிவந்திருந்த காது மடல்கள்
மதர்க்கும் படி, கேட்க்கலானேன்....

புல்லாங்குழல் - இசைவிக்கும்
நாதம்,

பட்சிகள் - கூட்டை விட்டு
வெளியேறும் ஓசை,

சூரிய ஒளி - அங்குலம் அங்குலமாக
திரை விரிப்பதால் - மண்ணில்
புதையுண்டு கிடக்கும் முற்செடிமேல் - பதட்டத்துடன்
அமர்ந்திருந்த பனி துளிகள் - பட்
பட்டென வெடிக்கும் சத்தம் - பொழுது விடிந்ததை
தம் சிந்தையின் செம்மையால் உணர்த்தியது
கபிலனுக்கு!!

கவிழ்த்திருந்த மண்கலத்தை
கையிலெடுத்து,
நீர் நிரப்பி.

தலை கவிழ்ந்து,
நடை தாண்டி,
இடது கை குறுக்கி,
உள்ளங்கை சுருக்கி,
அகப்பையாய் மாறிப்போன கைகளால்,
நீர் மொண்டு,
நண்கலம் கழுவினேன்.

கடம் சுத்தமானபின்,
வெண்கலத்தில் புதுப் புனலிட்டு
மனச்சுத்தம் பெற்றுவிட,
கனகாம்பரச் செடியை நாடினேன்.

மூன்று விதமான கனகாம்பரச் செடிகள்
என் கொல்லைத் தோட்டத்தில்.

செடியிடம்,
அடியேன் அளவாட துணிந்தேன்...

அடியே மஞ்சபுள்ள,
கொத்து கொத்தாய் பூத்து நின்னா - இந்த
கபிலனின் எண்ணப்படி எப்போது
புத்தனாவேனடி?

உன்னை தொட்டு தொட்டு,
காம்பு கிள்ளி,
கை நோகி,
கூடையை கவிழ்த்துப்பார்த்தா - ஆசை திரிந்து
பேராசையாய் மாறுதடி?

மா கந்தம் இல்லாததுபோல்,
மகரந்தமும் இல்லாமல் செய்வாயடி!
என்றவுடன் - செடியும் தலையாட்ட
நீரூற்றி நகர்ந்தேன்...

அடியே சிவப்பி,
உன் வண்ணம்,
என் கண்ணில் பல்லாயிரம்
திரியிட்ட அழல் போல் எரியுதடடி?

பிறர் இடர் விளைவித்தாலும்
கண்ணீர் மல்கி, அவர் திருந்த
கசிந்த மனதோடு ஆலயம் செல்வேனடி!

உன் நிறமென்னை,
அங்கமுழுதும் அக்னி தடவி
சீற்றங் கொள்ளச்செய்யுதடி!
நானூற்றும் நீரால்,
உன் செவ்விதலோனின்
சாயத்தை கொஞ்சம் தளர்ப்பாயடி சிவப்பி !

இதைக்கேட்ட காவி கனகாம்பரம்,
கண் சிமிட்டியபடி,
வாழ்வாதார சூத்திரத்தை
சூளுரைத்தது....

எற்றொன்றும் பயம் வேண்டாம் கபிலா !
இளம் பிராயத்தில்
அத்தனைக்கும் ஆசைப்படு,
ஆசை பட்டதை அனுபவிக்க
அளவுகோலோடு மதகிலிடு,
அனுபவித்து முடி.

அகவை கூடிய பின்,
காவி தரித்த வளவன்போல்
வாழ்ந்துமுடி என்றது.....!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (23-Dec-18, 7:12 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 324

மேலே